Friday, July 31, 2009

சில களங்கள் - ஒரு பார்வை

ஈழத்தமிழர்களின் தாயக விடுதலை கோரிக்கைகையை
சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும்
குறையாத இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிகளின்
பாலஸ்தீன தாயக ஆக்கிரமிப்போடு ஒப்பிடும் சில
ஈழ ஆதரவாளர்களின் அவல அரசியல் சகிக்க
இயலாததாக இருக்கிறது.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதிராக போராடி
தங்கள் தேசிய விடுதலையை வென்றெடுத்த
நாடுகள் பட்டியலில் உதாரணமாகக் கொள்ள
வியட்னாம்,கினியா-பிஸோ,அல்ஜீரியா,
என்று முன்னுதாரனமாகக் கொள்ள எத்தனையோ
நாடுகள் இருக்க,சிங்கள இனவாதிகளை போலவே
பாலஸ்தீன மண்ணை,யூத குடியேற்றங்கள் வழியே
ஆக்கிரமித்து,பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச
பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை
இன்றுவரை படுகொலை செய்துகொண்டு இருக்கும்
இஸ்ரேலை உதாரணமாகக் கொள்ளும் எண்ணம்
எத்துனை இழிவானது என்பதையும்,இஸ்ரேலை
போற்றுவது என்பது சிங்கள் இனவெறியர்களை
போற்றுவதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல
என்பதை இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்
உணர மறுப்பது ஏன்?

ஈழவிடுதலை போரின் தொடக்க காலத்தில்
பாலஸ்தீன விடுதலை கோரி போராடிக்கொண்டிருந்த
அமைப்புகளோடு ஈழ விடுதலை அமைப்புகளுக்கு
இருந்த உறவுகள்,சமகாலத்தில் போராட்டத்தில்
இறங்கிய இரண்டு தேசங்களின் இன்றைய நிலை
ஆகியவைகளை ஆய்வு செய்து பாடம் கற்பதையும்
தோழமை உணர்வை வளர்த்தெடுப்பதையும் தவிர்த்துவிட்டு
யூதர்கள் பாலஸ்தீன மன்னை ஆக்கிரமித்ததை
தேச மீட்பாக சித்தரிக்கும் இவர்களின் அறியாமையை
என்னவென்று சொல்ல ?

யூதர்கள் தங்கள் தேசம் என்று கருதியதை மீட்டார்கள்
என்று இவர்கள் கருதுவார்களேயானால் சிங்களர்கள்
தங்கள் தேசம் என்று கருதுவதை தமிழர்களிடமிருந்து
மீட்கும் செயலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று கொள்ள வேண்டி வரும்.அவ்வாறு கொள்வதில்
சம்மதமா இவர்களுக்கு?

அறத்தின் அடிப்படையில் நிகழ்ந்த தேசிய விடுதலை
போர்களை பின் தள்ளி,இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை
முன்னிறுத்துவதன் மூலம் ஈழ விடுதலை கோரிக்கையை
அவமதிக்கும் செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்
இந்த ஈழ ஆதரவாளர்கள்.


அதே சமயம்,இஸ்ரேலை கண்டித்துக்கொண்டு சிங்கள
அரசின் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி
வாய் திறக்காமல் இருந்த சில தமிழக பிழைப்புவாத
இஸ்லாமிய அமைப்புகளின் தலைமைத்துவங்களை
நாம் கண்டிப்பதும் அவசியமாகிறது.

இரண்டு தேசிய விடுதலைபோராட்டங்களின் சமகால
நிலை பற்றி நாம் சற்று அலச முயலலாம்.முதலில்
இரு போராட்டங்களும் தங்கள் இறுதி இலக்கை எட்டும்
இலட்சியத்தில் வெற்றி பெறவில்லை என்கிற உண்மையை
ஒப்புக்கொண்டாக வேண்டும்.புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு
பகுதிகளை முழுமையாக இழந்திருக்கின்றனர்,ஹமாஸ்
தனது கட்டுபாட்டு பகுதிகளில் தனது நிர்வாகத்தை
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே சிறு
வேறுபாடு.

இரு போராட்டங்களுக்கும் இடையே இருக்கும் சில
ஆச்சரியமான ஒற்றுமைகள் நமக்கு புலப்படுகின்றன
ஆயுத போராட்டத்தில் துவங்கி,உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் தனது கனவு தனது கண்முன்னே
கலைந்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு மறைந்து
போனார் யாசர் அராபத்.அவரின் கட்சி இன்று
பிழைப்புவாத ஊழல் அரசியலில் மூழ்கி ஒரு சரியான
போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து
நிற்கையில் ஹமாஸ் அந்த பொறுப்பை முன்னெடுத்து
நகர்ந்துகொண்டிருக்கிறது.

இலங்கை பேரினவாத அரசுடன் சமரசத்தின் மூலம்
தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முயன்ற,
மற்றும் பிழைப்புவாத தமிழர் அரசியல் தலைமைத்துவங்களை
புறக்கனித்து ஆயுத போரட்டத்தை முன்னெடுத்த புலிகள்
தங்கள் தேசத்தின் பெரும்பகுதியை மீட்டு சில மாதங்கள்
முன்புவரை தங்களிடம் வைத்திருத்து உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் இன்றைக்கு அதனை இழந்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தில் பிழைப்புவாத ஏகாதிபத்திய ஆதரவாளர்கள்
ஒருகட்சியின் கீழ் எளிதில் அடையாளம் காணகூடியவர்களாக
இருக்கையில் ஈழத்தில் டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி
குழுக்களும் மேலும் இடதுசாரி,மனித உரிமை முகமூடிகளுடன்
பல குழுக்களும் உள்ளன.

புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைந்தது போல
ஹமாஸிடமிருந்து ஆயுதங்களை களைவதில்
இஸ்ரேல்,அமெரிக்க வட்டாரங்களுக்கு இருக்கும்
அரசியல் ரீதியான நிர்பந்தங்களால் ஹமாஸ்
ஆயுதங்களுடன் போராட்டத்தை தொடர்கிறது.

மக்களின் அரசியல்ரீதியான போராட்ட வழிமுறைகள்
மூலம் எதிரியை தோற்கடிப்பது என்பதற்கு மிகசிறந்த
உதாரணமாக பாலஸ்தீன மக்களின் இண்டிபதா
போராட்டங்கள் இடையில் நிகழ்ந்துகொண்டிருந்ததையும்
நாம் அறிவோம்.

ஆயுதபோராட்டத்தின் மூலமே தேசவிடுதலையை
வென்றெடுப்பதில் புலிகளுக்கு சாதகமான வாய்ப்புகள்
இருந்ததை நாம் மறுப்பதிற்கில்லை.ஆனால்
இன்றைக்கு மாறியிருக்கும் உலக சூழலில் அரசியல்
போராட்டங்களின் மூலமே தேசவிடுதலையை முன்நகர்த்த
வேண்டிய தேவை எழுந்திருக்கும் நிலையில் பாலஸ்தீன
மக்களின் அரசியல் போராட்ட வழிகளை அவர்கள்
கடைபிடிப்பதன் மூலமே தங்கள் மக்களுக்கான
கடமைகளை நிறைவேற்ற முடியும்.

தமிழீழத்தின் எல்லைகளில் ஆயுதங்களோடு நின்று
உலக நாடுகளின் வணிக சூறையாடல் மற்றும் ராணுவ
மேலாதிக்க நடவடிக்கைகளை தடுத்துக்கொண்டிருந்த
புலிகள் இனி மக்களோடு நின்று ஆயுதங்கள் இல்லாமல்
அந்த வேலையை செய்ய வேண்டியிருக்கும்.அந்த
வேலையில் காந்தி என்கிற கடைந்தெடுத்த பிற்போக்கு
அரசியல்வாதியின் வழியை கடைபிடிக்கபோகிறார்களா
இல்லை பாலஸ்தீனம்,பொலிவியா,லால்கார்,காஸ்மீர்
என்று மக்களின் அரசியல் போராட்டங்கள் தந்திருக்கும்
படிப்பினைகளை கற்றுக்கொண்டு இவ்வகையான
போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறார்களா
என்கிற கேள்விக்கான பதிலில்தான் ஈழவிடுதலையின்
சாரமே அடங்கியுள்ளது.

காந்தியின் வழி என்பதும்,தன் மீது திணிக்கப்பட்ட
தீர்வுக்கு பணிந்த யாசர் அராபத்தின் வழியும்
அப்பட்டமான,ஏகாதிபத்திய நாடுகளின் நலன் காக்கும்
பிற்போக்குதனமான அரசியல் நடவடிக்கைகள் என்கிற
புரிதலோடு முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டங்கள்
மட்டுமே ஈழ விடுதலையையும் பொதுவாக ஒடுக்கப்படும்
எல்லா தேசிய இனங்களின் விடுதலையையும் சாதிக்க
இன்றிருக்கும் வழியாகும்.

அதிகரித்திருக்கும் ராணுவ தொழில்நுட்பங்கள் ஆயுத
போராட்டத்தின் சாத்தியங்களை உலகெங்கும் குறைத்துக்
கொண்டிருக்கிற வேலையில் எப்படி ஒடுக்கப்பட்ட
மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுப்பது என்பதை
நேபாளத்திடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.



மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவித்து,தங்களுக்கான
தளப்பிரதேசங்களை உருவாக்கிகொன்டு ஜனனாயக அரசில்
பங்கேற்கும் முடிவை எடுத்ததன் மூலம் அந்நிய நாடுகளின்
நேரடி மறைமுக படைநடவடிக்கைகளையும்,மக்களின்
உயிரிழப்புகளையும் தவிர்த்து,நிழல் தளபிரதேசங்களை
பாதுகாத்து நேபாள அரசியலில் தங்கள் புரட்சிகர இடத்தை
தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

வேறுபட்ட களநிலைமைகள் இருந்தாலும் நேபாளத்தின்
மாதிரியே இன்றைய காலகட்டத்துக்கு புரட்சிகர மற்றும்
தேசிய விடுதலை இயக்க முன்னெடுப்புகள் மீது தாக்கம்
செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

உலகையே பாசிசமயமாக்கிக்கொண்டிருக்கும்,பூமியின்
செல்வத்தையும்,அதிகாரத்தையும் தங்கள் கைகளில்
மேலும்,மேலும் குவித்துக்கொண்டிருக்கும் சிறிய மனித
விரோத குழுக்கள் இயற்கை வளங்களை சூறையாடி
புவிவெப்பத்தை அதிகரிப்பதன் மூலமும்,ஈவு இரக்கமற்ற
சுரண்டல் அரசியல் மூலமும் மனித சமூகத்தின்
இருத்தலையேகேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்
நிலையில்அதற்கு எதிராக சோசலிசம் சார்ந்த மக்கள் நல
அரசுகளின்வடிவத்திலேயே மனித இருத்தலுக்கான
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நம்
சமகாலம் உணர்த்துகிறது.

எதிர்கொள்ளும் யதார்த்தங்களை சரியாக மதிப்பிட்டு
அரசியல் போராட்டம் மற்றும் ஆயுத போரட்டம்
இரண்டில் எதை முன்னிறுத்துவது,இரண்டையும்
ஒருங்கிணைப்பது எப்படி?,மற்றும் மக்களின் உச்சபச்ச
நலன்களின் அடிப்படையில் போராட்டத்தை தக்கவைப்பது
எப்படி? ஆகிய கேள்விகளுக்கு உலக புரட்சிகர சக்திகளும்,
தேசிய விடுதலை இயக்கங்களும் அளிக்கும் செயல்பூர்வமான
பதிலில் மட்டுமே மனித விடுதலையும் இருத்தலும்
சாத்தியமாகும்.


தேசிய இன விடுதலை பற்றிய இந்த கட்டுரையை
ஒரு பாலஸ்தீன கவிதையுடன் நிறைவு செய்துகொள்ளலாம்.

எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எழுமிச்சை மரம்
ஒரு கிணறு,ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்,ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும்வரை

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள்,எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.

மஹ்மூட் தார்வீஷ்

1 comment:

ELKAY said...

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள்,எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.//

s.guru avl...thangaLin pala katturaikaL arivum nadaimurai saathiyamullathaakavum kangiren...

superbbbbbbb...nalla aaivu, thakka samaythl thanhthu irukkenga...

superbbbb....

Post a Comment