Wednesday, September 2, 2009

விடுதலைப்புலிகளும் சான்டினிஸ்ட்டுகளும் பகுதி - 2

புலிகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தை
நடத்தவில்லைஎன்று பஜனை பாடிக்கொண்டிருக்கும்
குழுக்களுக்கு எதிராக நாம் ஏற்கனவே பதில்
அளித்திருக்கிறோம்.2002 ஆண்டு அமலுக்கு
வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில்
அரசியல் பணிகளை புலிகள் முன்னெடுத்திருந்ததையும்,
பெருமளவிலான மக்கள் புலிகள் நடத்திய கூட்டங்களில்
பங்கெடுத்துக்கொண்டதையும் குறிப்பிட்ட புதிய
இடதுசாரிகள் கட்சித் தலைவர் விக்ரமபாகு
கருணாரத்ன புலிகளுக்கு பெரும்பான்மை தமிழர்களின்
ஆதரவு உள்ளது என்ற விசயத்தை
தெளிவுபடுத்தியிருந்தார்.


ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் செயல்பட்ட
புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர்களை சிங்கள
ராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் அச்சுறுத்தியதும்,
ஆயுதங்கள் இன்றி வந்த புலிகளின் அணிகள் மீது
கண்ணிவெடித்தாக்குதல்களை மேற்க்கொண்டு படுகொலை
செய்ததுமே,புலிகள் தங்கள் அரசியல் பிரிவு அலுவலகங்களை
மூடிவிட்டு வன்னிக்கு வெளியேற தூண்டியது என்பதை,
புலிகள் அரசியல் போராட்டம் நடத்த முயலவில்லை என்று
கூப்பாடு போடுபவர்கள் வசதியாக இன்றைக்கு
மறந்துவிடுகின்றனர்.


இவர்களுக்கு மேலும் சில விடயங்களை நாம் நினைவூட்ட
வேண்டியிருக்கிறது.நகர்ப்புற வெகுசன ஆயுதக் கிளர்ச்சி
அதில் தொழிலாளிவர்க்கம் தலைமை தாங்கி வழிநடத்தி
அதிகாரத்தை கைப்பற்றுதல்,அந்தப் போக்கில் கூட்டணி
சக்திகளை இணைத்துக்கொள்ளுதல் என்கிற வடிவத்தில்
நிகழ்ந்த ரஸ்ய புரட்சியில்,நாட்டின் மொத்த மக்கள்
தொகையில் வெறும் இரண்டு சதவிகிதத்தினரே பங்கு
பற்றினர்.இந்த வகையில் பார்த்தால் மக இக வினர்
ரஸ்ய புரட்சியை கூட நிராகரிக்க வேண்டி வரும்.
அதற்கு அவர்கள் தயாராக இருப்பார்களா?


மாவோவின் கூற்றுப்படியே சீன புரட்சியில் தொழிலாளி
வர்க்கமும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கமும் இணைந்து
முப்பது சதவிகித பங்கை அளித்தபோது எழுபது சதவிகிதம்
பங்களிப்பை விவசாயிகளே அளித்தனர்.கொரில்லாத்
தளங்களில் இருந்து நகர்புறங்களை நோக்கி முன்னேறுவது
என்கிற வடிவத்தில் நிகழ்ந்த சீன புரட்சியிலும் பெருமளவு
மக்கள் புரட்சிக்கு வெளியேதான் இருந்தனர்.


மக்கள் என்கிற வார்த்தையை மாவோ எந்த சூழலில்
பயன்படுத்தினார் என்பதையே மறந்ததுவிடுகிற
இவர்களுக்கு நாம் அதை நினைவூட்ட வேண்டி இருக்கிறது.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டில் இருக்கிற,
ஜப்பான் எதிர்ப்புச் சக்திகளை ஒன்றினைப்பதற்க்காகவும்,
புதிய ஜனநாயக புரட்சி நடவடிக்கையில் தேசிய
முதலாளித்துவ பிரிவினரின் ஆதரவை பெறும் பொருட்டும்
மட்டுமே வர்க்கம் என்கிற வார்த்தைக்கு பதிலாக மக்கள்
என்கிற வார்த்தையை மாவோ உபயோகப்படுத்தினார்.


வர்க்கம் என்கிற வகையில் புரட்சிக்கோ அல்லது
தேசிய விடுதலைப் போராட்டத்துக்கோ தலைமையை
அளிக்க முன்வருபவர்களைக் கொண்டுதான் போராட்டங்கள்
நிகழ்ந்திருக்கின்றவே தவிர,ஒரு நாட்டின் மொத்த
சனத்தொகையும் பங்கெடுத்ததாக ஒரு நிகழ்வைக் கூட
நம்மால் வரலாறு எங்கும் சுட்டிக்காட்ட இயலாது.மக்கள்
திரளில் பெரும்பங்கினரை தங்கள் அரசியல் நடவடிகைகளின்
கீழ் ஒருங்கிணைப்பது,அவர்களில் இருந்து பெறப்படும்
அரசியல் உணர்வு கொண்டவர்களை கொண்டு ஆயுத
போராட்டத்தை நோக்கி நகர்வது ஆகிய செயல்பாடுகளே
ஒரு மூன்றாம் உலக நாட்டின் தேசிய விடுதலைப்
போராட்டத்துக்கு சரியான வழிமுறையாக அமைய முடியும்.


கொடூரமான இன அழிப்பில் இருந்து மக்களைக் காக்க
ஆயுதம் ஏந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில்
ஆயுதப்போராட்டத்துக்கு முதன்மை கொடுத்த புலிகள்
அரசியல்ரீதியான போராட்டங்களுக்கு போதிய அழுத்தம்
கொடுக்கவில்லை என்றாலும் காலப்போக்கில்
அந்த தவறுகளை பெறுமளவில் சரி செய்து கொண்டிருந்தனர்.


மொன்னையாக புலிகள் அரசியல்போராட்டம் நடத்தவில்லை
என்று கூப்பாடு போடுபவர்கள் புலிகள் இந்த வகையில்
போராடி இருக்கலாம் என்று முன்வைக்கும் ஆலோசனைகளும்
கேலிக்குறிய விசயங்களாகவே இருக்கிறது.ஒவ்வொரு நாட்டின்
அரசியல்ரீதியான தனிதன்மைகளுக்கும் ஏற்ற விதத்தில்
நிகழ்ந்த புரட்சிகளை அப்படியே பிரதி எடுத்து புலிகள்
கடைபிடித்திருக்க வேண்டும் என்பது போன்ற
அரைவேக்காட்டுத்தனமான ஆலோசனைகளை மட்டுமே
இவர்களால் முன்வைக்க முடிகிறது.


போர்சுக்கீசிய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக கினியா-பிஸோ
வின் தேசிய விடுதலைப் போருக்கு தலைமைதாங்கி
வழிநடத்திய அமில்கர் கப்ராலின் வார்த்தைகள் ஈழவிடுதலை
போராட்டத்தை இளைஞர்கள் தங்கள் கைகளில்
எடுத்துக்கொண்டதற்கான நியாயத்தை புரிந்துகொள்ள
நமக்கு உதவும்.


தனது நாட்டின் சூழலை விவரித்துச் செல்லும் அமில்கர்
பெரிய அளவு தொழிற்சாலை பாட்டாளி வர்க்கமோ
அல்லது மிகப்பெரிய அளவில் விவசாய கூலித்தொழிலாளர்களோ
இல்லாத நிலையில்,இனக்குழு முறையில் வாழ்வியலை
மேற்கொண்டிருக்கும் மக்கள் பிரிவினரிடத்தில் உள்ள
ஏழைகளையும்,நகர்புறங்களில் உறவினர்களின் வீடுகளில்
விருந்தினர்களாக தங்கியிருக்கும் இளைஞர்களையும்,மிகச்
சிறிய குட்டிமுதலாளித்துவ பிரிவினரையும்,துறைமுக
தொழிலாளர்களையும் நம்பியே போராட்டத்தை துவக்கியதாக
கூறுகிறார்.பிற்போக்குத்தனமான ஒரு சமுதாயத்தில்
சாத்தியமான ஒரு வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுத்து
வெற்றியையும் ஈட்டுவது எப்படி என்பதை கினியா-பிஸோ
போராட்டக்காரர்களினதும்,அதன் தலைமையினதும்
செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.


ஈழத்தில் இடதுசாரிகள் என்பவர்கள் தேசிய ஒடுக்குமுறையை
எதிர்த்த போராட்டத்துக்கு தலைமை அளிக்கவோ அல்லது
வழிநடத்தவோ சகதியற்ற நிலையில் இருந்தனர் என்பதும்,
தேசிய ஐக்கியம் என்கிற பெயரில் தமிழ் மக்கள் மீதான
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதை தவிர்த்தனர்
என்பது நாம் அறிந்த விடயங்கள்தான்.பல்வேறு தரப்பு ஈழ்
ஓட்டுகட்சிகளாலும் தமிழர்களுக்காக உரிமைகளை பெற்றுத்
தருவது சாத்தியமில்லாத விடயமாக ஆனபோது
இளைஞர்களும்,மாணவர்களும்,கொரில்லாப் போராட்டத்தை
துவக்கியது மிகச்சரியான விடயமே.