Saturday, April 3, 2010

இந்தியாவைக் கையாள்வதைப்பற்றி..

இணையத்தில் செலவிடும் குறைவான நேரத்தையும் கூட ஈழம் தொடர்பான வலைத்தளங்களை வாசிப்பதற்கே செலவிட்டு வந்திருக்கிறேன்.இருந்தபோதிலும் சமீப நாட்களாக ஈழ இணையங்களை வாசிப்பதற்கான ஆவல்குறைந்து வருகிறது.ஈழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஆக்கப்பூர்வமான விசயங்களை பரிசீலிப்பதை விடுத்து குழுச்சண்டைகளில் நிறைந்து கிடக்கும் இணையத்ததளங்களை பார்க்கநேர்வது வருத்தத்தை தருகிறது.குழு அரசியலும்,குழப்பங்களும் நிறைந்து கிடக்கும் தமிழக அரசியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவன் என்றாலும் ஒரு கொடூரமான இன அழிப்புக்கு உள்ளான,உள்ளாகிக் கொண்டிருக்கும் சமூகத்திலும்,தமிழக பாணியிலான அரசியலின் அடையாளங்களை பார்க்க முடிவது வேதனையளிக்கிறது.புலிகள் எவ்வளவு சிரமங்களுக்குஇடையில் ஈழ விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது முன்னைவிட இப்போதே அதிகமாக புரிகிறது.உள் அரசியலுக்குள் சென்று நானும் குட்டையை குழப்ப விரும்பவில்லை.அதற்கான திறமையோ தகுதியோ எனக்கு இல்லை என்பதையும் நான் நன்கறிவேன்.ஈழ இணையங்களில் சமீப நாட்களில் பிரதானமாக பேசப்படும் விசயமாக இருப்பது இந்தியாவை எப்படிக் கையாளுவது,அல்லது இந்தியாவை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேறுவது என்பதைப் பற்றித்தான்.அது பற்றிய என்கருத்துக்களை முன் வைக்கவே இந்த பதிவினை எழுதுகிறேன்.


இந்தியாவைத் தாண்டி எதையும் செய்ய முடியாது என்றொரு தரப்பும்,ஈழத் தமிழர்களுக்கு இத்துணை அவலங்களையும் கொடுத்த இந்திய அரசை நம்பாமல் மேற்கத்திய நாடுகளின் வழியாகவே போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும் என்கிற மற்றொரு தரப்புமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சில தரவுகளையும் பார்வைகளையும் முன் வைப்பதன் மூலம் அந்த விவாதத்தை முன்நகர்த்த உதவ வேண்டும் என்பதே என் நோக்கம்.பொருளாதார,ராணுவரீதியாக பலம் பெற்று வரும் சீனாவுக்கு எதிராக ஒரு சக்தியாக இந்தியாவை வளர்த்துவிடும் நோக்கில் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக ஒரு கருத்து இன்றைக்கும் முன்வைக்கப்படுகிறது.இந்த கருத்தை முன்வைப்பவர்கள் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல்சூழலில் இருந்தே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,நடைமுறையில் இல்லை என்பதே என் கருத்து.


அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்குமான உரசல் துவங்கி பல மாதங்களாகி விட்டது.மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட அமெரிக்க இந்திய அனுசக்தி ஒப்பந்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதே இதற்கான மிகச் சிறந்த உதாரணம்.உலக அனுசக்தி நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இந்தியாவுக்கு,அணுசக்தி செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை வழங்குவதை அமெரிக்க அரசு தடுத்துவைத்திருக்கிறது.மேலும்,அணு உலைகளில் ஏற்படும்விபத்துக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பானமசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இந்தியஅரசை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.அதேநேரம் 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அமெரிக்கப் பொருளாதாரவீழ்ச்சியினைத் தொடர்ந்து தனது பேரம் பேசும் திறனைஉயர்த்திக்கொள்ளும் சாத்தியத்தில் இருக்கும் இந்திய அரசு தனது பாரம்பரிய நண்பனான ரஸ்யாவுடன் ஆறு அணு உலைகளை இந்தியாவில் அமைக்க உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறது.


ரஸ்யாவுடனான இந்தியாவின் அணுஉலைகள் அமைக்கும்ஒப்பந்தம் என்பது,அமெரிக்காவுடன் செய்துகொண்டதுபோன்ற ஒன்று அல்லஎன்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.எந்த விதமான அடிமைத்தனமான நிபந்தனைகளையும் ரஸ்யா இந்திய அரசுக்கு விதிக்கவில்லைஎன்பதோடு,அமெரிக்க அரசை புறக்கணித்துவிட்டு இந்தியாவுடன் அணுசக்தி வியாபாரத்தை நடத்தும் திறனும்,அதற்கான ராணுவமேலாதிக்க நிலையும் ரஸ்யாவுக்கு இருக்கிறது என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.


இந்தியாவுடன் செய்து கொண்டது போன்று பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ள அமெரிக்கா தயாராகிறது என்று ஒரு செய்தி சில நாட்களுக்கு முன்னால் ஊடகங்களில் கசிய விடப்பட்டது.அணு உலைகள் விபத்து மசோதாவை விரைந்து நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தும் விதமாகவும்,ரஸ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையாகவுமே அந்த செய்தி கிளப்பி விடப்பட்டது.இருந்தபோதிலும் அந்த செய்தி எதிர்ப்பார்த்தபலனைக் கொடுத்ததாக கூற முடியாது.அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தால் மேற்கத்திய நாடுகளுக்கு நான்கைந்து ஆண்டுகளில் கிடைக்கும் வருமானம் முப்பதுஇலட்சம் கோடிகளைத் தொட்டு நிற்கிறது.இது ஏறக்குறைய இந்தியாவின் ஒரு வருடத்துக்குகான மொத்த உற்பத்தியில் (GDP)ஐந்தில் மூன்று பங்காகும்.(இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி கடந்த ஆண்டில் ஐம்பது இலட்சம் கோடியாக இருந்தது) சராசரியாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து ஏகாதிபத்திய நாடுகளின் வணிக நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தொகைக்கு இணையானது இது.இத்தகைய ஒரு பிரமாண்டமான வாய்ப்பை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு கொடுக்க முனையும் இந்தியஅரசு அல்லது முதலாளிவர்க்கம் தனக்கான தரகுத்தொகையை உயர்த்திக்கொள்ள விரும்பும் என்பது புரிந்துகொள்ளப்பட கூடிய ஒன்றுதான்.இந்திய அதிகாரவர்க்கம் விரும்பும் அத்தகைய பங்கை கொடுக்கும் நிலையில் அமெரிக்காவின்தலைமையிலான நாடுகள் இல்லை என்பதே உண்மை.


ரஸ்யாவின் ராணுவ மேலாதிக்கநிலையும்,பொருளாதார,ராணுவ ரீதியிலான பலத்தில் எழுச்சியடைந்திருக்கும் சீனாவும்,சர்வதேச அரசியலில் வகிக்கும் ஆதிக்கத்துக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளைக் கூட எடுக்க இயலாத நிலையிலேயே மேற்குலக நாடுகள் இருக்கின்றன.ஈரான்,வடகொரியாவெனிசுலா என்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுக்கு எதிராக எந்த ஒரு ராணுவ நடவடிக்கையையும் சமீப வருடங்களில்,அமெரிக்கா எடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.ஈராக்கின் அணு உலைகளைத் தாக்கிய இஸ்ரேலும் கூடஈரானைத் தாக்க இயலாத நிலையிலேயே இருந்து வருகிறது.அமெரிக்க,இஸ்ரேலின் ஈரான் மீதான விமானப்படைத் தாக்குதலை செல்லாக்காசாக்கும் திறன் கொண்ட S 300 என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்வதாக ரஸ்யா அறிவித்திருப்பதோடு,S 10 என்கிறவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்கனவே விற்பனை செய்தும் விட்டது.ரஸ்யாவின் S 10 ஏவுகணைகளே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து வருகிறது.சர்வதே அரசியலின் இந்தத் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவர விரும்பும் பொருளாதாரத் தடையால்பாதிக்கப்படுகிற நிறுவனமாக இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வரும்அம்பானியின் ரிலையன்சே இருக்கும் என்பதையும் கவனிக்க முடிகிறது.


அடிப்படையில் இந்திய அதிகாரவர்க்கதின்,நேரடியாக கூறினால்இந்திய உளவுத்துறையின் நோக்கங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதை ஆய்வு செய்தால் இரண்டு விசயங்களைக் கூற முடியும்.ஒன்று இந்திய முதலாளிவர்க்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டறிவதும்அதற்கு நிலவும் தடைகளை அகற்றுவதும்,அடுத்ததாக சர்வதேச அரங்கில் வல்லரசு பட்டம் பெற்று புளங்காங்கிதம் அடைய வேண்டும் என்கிற விசயங்களையே கூற முடியும்.தங்களுடைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே தினறிக்கொண்டிருக்கும் சூழலில் இந்திய முதலாளிவர்க்கத்தின் பங்கை அதிகரித்துக்கொடுக்கும் நிலையிலோ அல்லது இந்திய அதிகாரவர்க்கத்தின் வல்லரசுக் கனவுக்கு ஒத்துழைக்கும் நிலையிலோ அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.அதேசமயம் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கீழான நிலையில் இருக்கும் அரசு என்பதாக அல்லாமல்,உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார பலம் கொண்ட நாடுகள் என்று சீனாவோடு தன்னை இணைத்துபேசுவதை இந்திய அதிகாரவர்க்கம் விரும்பும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ராணுவரீதியாகவோ பொருளாதாரரீதியாகவோ இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுவது நகைப்புக்குறிய விசயம் என்பது வேறுவிசயம்.


தொகுத்துக் கூறலாம்.இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தற்போதைய நிலையில் ரஸ்ய,சீனச் சார்புடனும் ஓரளவுசுயாதீனமாகவும் இயங்குகிறது என்கிற முடிவுக்கு வரலாம்.BRIC என்று அழைக்கப்படுகிற பிரேசில்,ரஸ்யா,இந்தியா,சீனாஆகிய நாடுகளின் கூட்டமைப்பு தங்களுக்குள் பொருளாதார ரீதியாக உறவுகளை வளர்த்துக்கொண்டு வருவதை சமீப நாட்களில் அவதானிக்க முடிகிறது.சுருக்கமாக, தன்னுடைய சந்தையையும்,வளங்களையும் மேற்குலக நாடுகளுக்கு திறந்து விடுவதற்கு,அந்த நாடுகள் கொடுக்க முனையும் பங்குத்தொகையை அதிகரிக்க,ரஸ்ய,சீன சார்பு நிலையையும்,அந்த நாடுகளின் பொருளாதார ராணுவ மேலாதிக்கத்தையும் பயன்படுத்திக் கொள்கிறதுஇந்திய அதிகாரவர்க்கம்.பாகிஸ்தானுடனான தனது நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவின் இந்த நடவடிக்கையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.


தந்திரோபாயரீதியாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளை சீனாவும் மேற்கொண்டு வருகிறது.மிகப்பெரிய இந்தியாவின் சந்தையில் தனக்கான பங்கை இழக்க சீனா விரும்பாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியாவுடனான தற்காலிக கூட்டைப் பேணும் அதே வேளையில் நீண்ட கால நோக்கில் மேற்கத்திய நாடுகளால் தனக்கு எதிராக வளர்த்துவிடப்படக் கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான திட்டங்களையும் சீனா மேற்கொண்டு வருகிறது.சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இந்த டிலெமா(Dilemma)தொடர்ந்து கொண்டிருக்கும்.ரசிய,சீன சார்புநிலைக்குள் முழுமையாக இந்தியா செல்வதை தடுத்து தங்கள் முகாமைச் சார்ந்து நிற்க வைப்பதிலும்,தங்களின் பொருளாதார தேக்கதைச் சரிசெய்துகொள்ள இந்திய சந்தையையும்,வளங்களையும் பயன்படுத்த முனையும்,அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான டிலெமா ( Dilemma) வும் தொடர்ந்து கொண்டிருக்கும்.


ஒரு மூன்றாம் உலக நாடான இந்தியாவின் இறையான்மை என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு சந்தையையும்,வளங்களையும் திறந்து விடுவதற்கான உரிமையே அன்றிவேறல்ல.அந்த உரிமையால் மட்டுமே ஓரளவு சுயாதீனமாக வெளியுறவுகொள்கை வகுக்கப்படுகிறது.இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்,இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் தற்காலிக நீண்டகால மாறுதல்களை சரியாக மதிப்பிட்டு போராடும் முறைகளை வகுத்துக்கொள்வதன் மூலமாகவேஈழ விடுதலைப்போராட்டம் அடுத்த கட்டதுக்கு நகர முடியும்.அதே நேரம் இந்தியாவின் அரைகுறையானஇறையான்மையில் தங்களுக்கான பங்கைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் தற்போதுதான் ரஸ்ய,சீன அரசுகள் இறங்கி இருக்கின்றன்.ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பாகவே இந்திய இறையானமையின் பெரும்பகுதியை மேற்குலக நாடுகள் கைப்பற்றி விட்டனஎன்பதை மறுக்க முடியாது.


ஒரு சிறு உதாரணம் மூலம் இதை உறுதிபடுத்தலாம்.2009 ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி துவங்கியபோது இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியைசந்தித்தன.நான்கிலிருந்து ஆறு இலட்சம் கோடிகள் வரை சிறு,நடுத்தர முதலீட்டாளர்களின் பணத்தை பன்னாட்டு நிதி மூலதன கும்பல்கள் திருடிக்கொண்டு சென்றார்கள்.தோற்றத்தில் குழப்பமாக இருந்தாலும் பங்குச்சந்தைகளில்ஆதிக்கம் செலுத்தும் நிதிமூலதன கும்பல்கள் தங்களுக்கான திட்டவட்ட தேசிய அடையாளங்களையும்,நோக்கங்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகும் இது.இந்திய அனுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த கட்சித்தாவல்களையும்,குதிரை பேரங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய கடற்படையின் போர் அறை (WAR ROOM) இல் இருந்து போர்திட்டங்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வுத்துறையால் நடத்தபட்டுக்கொண்டிருந்தது,இன்றைக்கு அது என்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை.மனுவின் நாட்டில் திருட்டுக்குற்றத்துக்கு பார்ப்பன அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பினால் நாம் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.ஆக இந்தியாவின் FUSE ஐ பிடுங்கும்வாய்ப்புகளை மேற்கத்திய நாடுகளே அதிகமாகக் கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தமாக இருக்கிறது


இந்தியாவை தவிர்த்துவிட்டு மேற்கத்திய நாடுகள் வழியாக ஈழம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுப்பது என்பதுசரியான விசயமாகவே தோன்றுகிறது.புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வரும் தொடர்சியான ராஜதந்திரநடவடிக்கைகளால் சில மாற்றங்களை மேற்கத்திய நாடுகளின் ஆளும்வர்க்கங்கள் எடுத்து வருவதைஅவதானிக்க முடிகிறது.தமிழ்நெட் இணையத்தில் வெளியான Why welcome and caution to Transnational Government என்ற கட்டுரையை இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.புலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர நடவடிக்கைகளும்,உருவாக்கப்படும் அமைப்புகளும் தமிழீழம் பற்றிய அடிப்படைக் கொள்கைகளில் இருந்தும்,ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்தும் விலகாமல் கண்காணிக்க்கும் கடமை ஊடகவியலாளர்களுக்கே இருக்கிறது.அதைச் சரியாகச் செய்வதன் மூலமாகவே தமிழீழ மக்களுக்கான தங்கள் கடமைகளை ஊடகவியலாளர்கள் சரியாக நிறைவேற்ற முடியும்.


மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகிவரும்,இருத்தலுக்கே போராடிக்கொண்டிருக்கும் உலகத்தின் உழைக்கும் வர்க்க மக்களோடு இணைந்து போராடுவதா அல்லது மேற்கத்திய ஆளும் வர்க்கங்களோடு மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவே முன்னேறுவதாஎன்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டி இருக்கிறது.நடந்துமுடிந்த போரில் சர்வதேச உழைக்கும் வர்க்கத்துக்கான தங்கள் கடமைகளை புலிகள் சரியாகவே நிறைவேற்றினர்.சர்வதேச உழைக்கும் வர்க்க அரசியல் பேசுபவர்கள் ஈழத்த்துக்கும்,புலிகளுக்குமான தங்கள் கடமைகளை நிறைவேற்றினார்களா என்கிற கேள்வியை அவர்களின் சுயவிமர்சனத்துக்கே விட்டுவிடலாம்.எரிகிறவீட்டுக்குள் இருப்பவன் உதவி கேட்டுக் கூக்குரல் இடவில்லை அதனால்தான் நாங்கள் உதவிக்குப் போகவில்லை என்கிற சாக்குப்போக்கு சொல்லும் மனநிலைதான் பெரும்பாலும் வெளிப்பட்டது.


மொத்தத்தில்,சர்வதேச புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் வரையறைக்குட்பட்ட பலத்தை நம்பி முழுக்கஅவர்களை நம்பியே ஈழப்போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்தலாம் என்பதும்,முழுக்கமேற்கத்திய நாடுகளின் வழியாகவே முன்னேறலாம் என்பதும் சரியான பார்வையாக இருக்கமுடியாது.இரண்டு தரப்புகளோடும் தொடர்புகளைப் பேணுவதும்,அவைகளின் பலத்தை சரியாகமதிப்பிட்டு செயல்படுவதும் மட்டுமே ஈழ விடுதலையை சாத்தியமாக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html
http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html
http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html
http://stalinguru.blogspot.com/2009/12/1.html
http://stalinguru.blogspot.com/2010/02/2.html
http://stalinguru.blogspot.com/2009/12/2.html
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2010/02/blog-post_25.html