Saturday, July 4, 2009

வாய்க்கரிசி திருடும் மக இக வும் வர்க்கப்பார்வையும்

ஏகாதிபத்திய சூழலில் இறையாண்மையுள்ள ஒரு முதலாளித்துவ நாட்டில்,வாழ்வியல்,அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட அந்த அரசின் எல்லைக்குள் வாழும் தேசிய இனம் நடத்தும் விடுதலை போராட்டத்துக்கு ஒரு பக்கத்து நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி என்கிற முறையில் ஆதரவை மட்டுமே வழங்க முடியும் தீர்வுகளை அல்ல என்று முழங்கிய மக இக வினர்,ஒட்டுமொத்த இலங்கைக்குள் புரட்சி நடத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வை முன்வைப்பதன் மூலம் தங்கள் கருத்தோடு தாங்களே முரண்படும் கேலிக்கூத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகையில் இன்னொரு கேள்வியும் எழுகிறது.


இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்து சென்றாலொழிய இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் தன்னுணர்வு பெறுவதோ வர்க்க போராட்டத்தில் ஈடுபடுவதோ சாத்தியமற்றது என்பதால் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்தார் மார்க்ஸ்.

இலங்கையில் இன்றைய சூழலும் இதுவாகத்தான் இருக்கிறது.

மார்க்சுக்கே மார்க்சியம் தெரியாது போல இருக்கிறது இவர்களின் கூற்றுப்படி.

ஏகாதிபத்திய சூழல் பற்றியும் ஈழ தேசிய விடுதலையின் இயல்பு பற்றியும் நாம் தொடர்சியாக இவர்களின் கருத்துகளுக்கு காத்திரமான எதிர்வினைகளை அளித்துவிட்டதால் அதனுள் மீண்டும் போக தேவையில்லை.

பேரழிவு - பின்னடைவு ஏன் ? என்கிற பெயரில் தங்கள் இதழான புதிய ஜனநாயகத்தில் இவர்கள் கட்டுரை என்கிற பெயரில் எழுதியிருக்கும் அபத்த களஞ்சியத்தின் மீதான எதிர்வினையூடாக நாம் நமது ஈழ தேசிய விடுதலை போராட்டம் பற்றிய புரிதலை விரிவுபடுத்திக்கொள்ள முயலலாம்.

கடந்த சில மாதங்களாக உலக ஏகாதிபத்திய சக்திகளும், பிராந்திய துணை வல்லரசாக தன்னை நிறுவிக்கொள்ள துடித்துகொண்டிருக்கும் இந்தியாவும்,ஈழ தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ஈவு இரக்கமற்ற படுகொலைகளை கண்டிக்கும் முகமாக ஆரம்பிக்கும் கட்டுரை, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் புலிகளுக்கு ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்பதாக ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திருக்கிறது.


மூன்று சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில் தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட நிலையிலும் "துப்பாக்கிகளை மவுனிக்க செய்வது" என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பதாக அடுத்த கண்டுபிடிப்பையும் முன்வைக்கிறது.


அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விடுத்த போர்நிறுத்த கோரிக்கையை ராஜபக்சே அரசு நிராகரித்துவிட்டு கொத்துகொத்தாக மக்களையும் புலிகளையும் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வரும் நிலையிலும், டெல்லியில் ஏற்ப்படும் ஆட்சி மாற்றம் போர் நிறுத்தத்தை மறுகணமே கொண்டுவந்துவிடும் என்று அவர்கள் நம்பியதாக சொல்லி செல்கிறது.


தமிழினவாதிகள் எதிர்பார்த்ததுபோல தேர்தலில் ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா என்றொரு அதிபுத்திசாலித்தனமான கேள்வியையும் முன்வைக்கிறது கட்டுரை.


சில நாட்களுக்கு முன்னால் பிரபாகரன் அவர்கள் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அவர்களுக்கு ஈழ விடுதலை போர் தீவிரமான காலகட்டத்தில் இருந்தபோது அளித்த நேர்காணலை மீள்வாசிப்பு செய்ய நேர்ந்தது.


இன்றைக்கு இந்திய உதவிகளையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டாலும் இந்தியாவுடன் நாங்கள் என்றைக்காவது மோதித்தான் ஆக வேண்டும் என்று குறிபிட்டிருக்கிறார் பிரபாகரன் அந்த நேர்காணலில்.


ஈழ தமிழர்கள் விவகாரத்தில் தனது ராணுவ பொருளியல் நலனை முன்வைத்து இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் தங்கள் விடுதலை போருக்கும் முரண்பாடுகள் விளைந்தே தீரும் என்பதையும்,மட்டுமல்லாமல் தங்கள் விடுதலை போராட்டம் தாய் தமிழக மக்களிடம் தேசிய இன உணர்வை விதைத்துவருவதை இந்தியா விரும்பாது என்பதையும் அன்றைக்கே மிக தெளிவாக புரிந்துகொண்ட புலிகளின் தலைமையை ஏதோ அரசியல் அறிவே இல்லாத சிறுபிள்ளைகள் போல சித்தரிபதன் மூலம்


ஈழ விடுதலை போர் தமிழகத்தில் கிளப்பிவிட்டிருக்கும் தேசிய இன தன்னுணர்வின் மீதான தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொண்டிருக்கின்றனர் இந்த அற்பவாதிகள்.கிளிநொச்சி போர் காலகட்டத்திலேயே தங்கள் மரபு ரீதியான படையணிகளை புலிகள் கலைத்துவிட்டனர் என்கிற விசயததை வசதியாக மறைத்துவிட்டு,மூன்று இலட்சம் மக்களை தங்களுக்கான கேடயமாக பயன்படுத்திக்கொண்டு, இந்திய தேர்தல் முடிவுகள் தங்களை காப்பாற்றும் என்று நம்பி தேர்தல் முடிவுகள் வரை போரிட்டதன் மூலம்,மக்களுக்கும் தங்களுக்கும் பேரழிவுகளை விடுதலைப்புலிகள் விளைவித்துகொண்டதாக சொல்லி செல்கிறது கட்டுரையின் பின்பகுதி.ஒரு நேர்மையான விமர்சனத்திற்கான எந்த அடையாளத்தையும் ஆரம்பித்திலிருந்தே கொண்டிராத இந்த கட்டுரையில்,தமிழகத்தில் இருக்கும் சரியான அரசியல் புரிதலற்ற ஈழ விடுதலை ஆதரவாளர்கள் சிலர் ஜெயலலிதாவை முன்னிறுத்தி செயல்பட்டதை மட்டுமே முன்னிறுத்தி,


கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக ஈழ ஆதரவாளர்களால் தொடர்சியாக நிகழ்த்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக எழுந்த உணர்வை பணத்தின் மூலம் முறியடித்து தேர்தல் வெற்றியை சாதித்துகொண்டவர்கள் பற்றி சாதிக்கும் சதிதனமிக்க மௌனத்தையும்,


போரில் இறுதி நாட்களில் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களையே இலங்கை ராணுவத்தினர் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் மனித கேடயங்களாக பயன்படுத்தியதை இவர்கள் மறைப்பதையும்,


இலங்கை ராணுவத்தின் கட்டுபாட்டு பகுதிக்குள் இன்றைக்கு வந்திருக்கும் தமிழர்கள் மீது, இளைஞர்களை கடத்தி கொல்வது,பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பசியிலும்,பட்டினியிலும், அவலத்திலும் மக்களை தவிக்க விடுவதன் மூலம் அவர்களை அடிமைகளாக மாற்ற முயற்சிப்பது என்று சிங்கள் இனவாத அரசின் செயல்களை அறியவருபவர்களுக்கு புலிகள்தான் மக்களுக்கு கேடயமாக இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளவும் உலக மேலாதிக்க சக்திகளின் நலன்களையே இந்த கட்டுரை முன்வைத்து செல்கிறது என்பதையும் அறிந்துகொள்வதில் சிரமிருக்க போவதில்லை.


புலிகள் இயக்க தளபதிகளும் தலைவர்களும் கொல்லபட்டுவிட்டதால் ஈழ விடுதலை போராட்டம் தலைமையின்றி தவிப்பதாக இலங்கை இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் பரப்பும் வதந்தியையே வாந்தி எடுத்து,
ஈழ விடுதலை போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணிகளை ஆராய புகுகிறது கட்டுரை.

தங்கள் ராணுவ பொருளியல் நலன்களின் அடிப்படையில் ஈழ விடுதலை போரையும்,விடுதலை புலிகளையும் ஒடுக்க சாத்தியமான எல்லா வகைகளிலும் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்த இந்தியா உள்ளிட்ட உலக ஏகாதிபத்திய சக்திகள் போரில் நிகழ்த்திய தீர்மானகரமான தாக்கத்தை புறங்கையால் ஒதுக்கிவிட்டு


இந்த பின்னடைவுக்கு காரணம் புலிகள் மேற்கொண்ட அரசியல் பிழைகள்தான் என்று ஒட்டுமொத்த பழியையும் புலிகள் மீது சுமத்தும் இந்த அதிமேதாவிகள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அரசுடன் பகைத்துகொள்ளாமல் தாஜா செய்து இந்திய உளவுபிரிவினரான ராவிடம் ஆயுதங்களும் பயிற்சியும் பெற்று,இஸ்லாமியர்களை விரட்டியும்,அப்பாவி சிங்கள மக்களை கொன்றும்,இதர போராளிக்குழுக்களை அழித்தும் புலிகள் தங்களை ஏகபோக சர்வாதிகாரிகளாக நிருவிகொண்டதாக குற்றம் சுமத்துகிறது.


மிக இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.


கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் நடத்தும் பயங்கரவாத புலிகளுக்கு எதிரான போர் எங்களுக்கு மட்டுமானதல்ல, இந்தியாவுக்காகவும்தான் என்கிற ராஜபக்சேவின் கருத்தை வெளியிட்டிருக்கும் இவர்கள்,இந்தியாவின் உதவிகளை பெற்று இந்திய நலன்களின் அடிப்படையிலேயே போராட்டத்தை நடத்தியதாக இவர்களால் சித்தரிக்கப்பட்ட புலிகளை இந்தியா ஏன் அழித்தொழிக்க விரும்பியது என்பதற்கான காரணத்தை ஆராய புகாமல் கம்பிநீட்டியதன் காரணம் நமக்கு புரியவே செய்கிறது.


பேச்சளவில் ஏகாதிபத்தியங்களோடு சமரச போக்கை வைத்துக்கொண்டு செயலளவில் எந்த விட்டுகொடுப்புகளுக்கும் புலிகள் தயாராக இல்லை என்பதாலேயே அமெரிக்க,ஐரோப்பிய,ஜப்பான்,இந்திய,பாகிஸ்தான்,சீனா, போன்ற நாடுகள் புலிகளை ஒழிக்க முனைந்தன என்பதை பேச்சளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் செயலில் ஏகாதிபத்திய ஆதரவையும் கடைப்பிடிக்கும்,புலிகளை அரசியல் மூடர்கள் என்று விளிக்கும் இந்த மூடர்களின் நேர்மை பற்றி நமக்கு சந்தேகங்கள் எழும்புவது தவிர்க்கப்பட முடியாதது.

இலங்கையின் புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் விரமபாகு கருணாரத்ன தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபிறகு புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய அரசியல் ஒருங்கிணைவு நிகழ்வில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதை குறிப்பிட்டு, வெறும் ஆயிரம் ரெண்டாயிரம் பேரைத்தான் தலையாட்டிகளாக மாற்ற முடியும் இத்தனை மக்களை தலையாட்டிகளாக அணிதிரட்டுவது என்பது சாத்தியமில்லை என்றதையும்,மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் இல்லை என்கிற பஜனை பாடும் இவர்கள் அவரின் இந்த கருத்தை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு புரிந்துதான்.


இது புலிகள் தங்கள் போராட்டத்தின் திசைவழிகளை தொடர்ந்து மீள் ஆய்வு செய்வதையும் இனி அவர்களின் வருங்கால போராட்ட முறைகள் பற்றிய ஒரு முன்னறிவப்பையும் நமக்கு அளிக்கிறது.

இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் ஈழம் தொடர்பான அரசியலை அவதானிக்கிற எல்லாராலும் புரிந்துகொள்ளப்பட கூடிய விசயமாகத்தான் இது இருக்கிறது.

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்த காலத்திலும் உணர்ந்ததில்லை என்று கூறும் இவர்கள் ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் கட்டிய மக்கள் இயக்கங்களையும் அதன் மூலம் விளைந்த தாக்கத்தையும் நமக்கு சொன்னால் நல்லது.


சந்தர்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொன்டதாக புலிகளை சித்தரித்து புலிகளின் அர்பணிப்பு மிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் பற்றியும் ஈழ விடுதலையின் முற்போக்கு அம்சம் பற்றியும் தமிழகத்தில் இருக்கும் பரவலான ஈழ ஆதரவாளர்களிடமும் முற்போக்கு சக்திகளிடமும் சந்தேகங்களையும் சலனங்களையும் ஏற்படுத்த முனையும் மார்க்சியத்தின் பின்னால் நின்றுகொண்டிருக்கும் சக்திகளை அம்பலபடுத்தாமல் ஈழ விடுதலை சாத்தியமில்லை.

2 comments:

தமிழ்வலை said...

ஈழ விடுதலையின் எதிரிகளும், துரோகிகளும் ஈழ மக்களை ஆதரிக்கிறோம், விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், காரணம் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார்கள்.

இலங்கையில் தமிழர்கள் சுந்திரமும், சம உரிமையும் உள்ள கௌரவமான வாழ்க்கையைப் பெறுவதற்கு தமிழீழக் குடியரசு அமைக்கப்பட வேண்டும் என்று 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே தமிழீழ மக்கள் ஆணை வழங்கி யிருக்கிறார்கள். ஈழ மக்கள் இட்ட ஆணையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு கடந்த 30 ஆண்டு காலமாக ஆயுதப் போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி தலைமையேற்று நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். அந்த மக்களிடம் இருந்தே தோன்றி, அந்த மக்களுக்காகவே அர்ப்பணித்து, வேறு எந்த நாட்டின் ஆதரவும் இன்றி அந்த மக்களின் ஆதரவுடன் மட்டுமே வலிமை மிக்க முப்படைகளை உருவாக்கி ஈழத் தேசத்தின் பெரும் பகுதியை ஏறத்தாழ 15,000 ச.கி.மீ. பகுதியை மீட்டவர்கள் விடுதலைப் புலிகள். சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்து மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி இருப்பவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளைக் காப்பவர்கள் மக்கள். மக்களைக் காப்பவர்கள் புலிகள். புலிகளும் மக்களும் பிரிக்க முடியாதவர்கள் என்றாலும் ஈழ மக்கள் வேறு, புலிகள் வேறு என்றும் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் ஈழத் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்கள் - ஈழ மக்கள் அடிமைப்பட்டு கிடக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் பொய்யாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காரணம் ஈழ விடுதலைக்கு சமரச மின்றி போராடி வரும் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தனிமைப் படுத்தி அழித்து விட்டால் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஈழவிடுதலையை எதிர்ப்பவர்கள் ஈழ மக்களை ஆதரிக்கிறோம் என்பது முற்றிலும் ஏமாற்றேயாகும். ஈழ மக்களை ஆதரிப்பது - அவர்களுக்கு உதவுவது என்பதன் பொருள் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தினின்றும் சிங்கள அரச பயங்கர வாதத்தினின்றும் விடுபட உதவுவதே ஆகும். தமிழீழமன்றி வேறு வழியில் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தி லிருந்தும், சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்தும் விடுபட முடியாது என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து தீர்மானித்துப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவுவதென்றால் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உதவுவதே யாகும். அதற்கு மாறாக ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதும் போராட்டத்தைக் கைவிடக் கோருவதும், போராடும் அமைப்பை பயங்கரவாதிகள் அமைப்பு என முத்திரை குத்துவதும் அவர்களுக்குச் செய்யும் துரோகமே யாகும். இப்படிப் பட்ட துரோகிகள் மக்களை மட்டுமே ஆதரிக்கிறோம், புலிகளை அல்ல என்று பசப்புகிறார்கள். சமரசமின்றி விடுதலைப் போராட்டத்தை நடத்தி வரும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.க.இ.க., பா.ஜ.க., முதலானவை இப்படித்தான் செயல் படுகின்றன. இத்தகைய துரோகிகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

by
malai

Anonymous said...

தோழர் ஸ்டாலின்குரு, இனியொரு(http://inioru.com/?p=7741) எனும் தளத்தில் சூப்பர்லிங்க்ஸ் என்ற ம.க.இ.க சூரரோடு விவாதிக்க நேர்ந்திருக்கிறது, அங்கு எப்படியும் நான் இடப்போகும் பின்னூட்டங்கள் தணிக்கை செய்தே வெளியிடப்படும், வெளியிடப்படுகிறது. எனவே என்னுடைய பின்னூட்டங்களின் ஒரு பிரதியை இங்கும் பதிகிறேன், இந்த இடுகையை படிப்பவர்களுக்கு அது பயனளிக்கும் என்ற காரணத்தால். அதற்கு அனுமதிக்கவும்.

தோழமையுடன்
ஈழ முத்துக்குமரன்

ஈழமுத்துக்குமரன்
Posted on 11/27/2009 at 11:55 am

கையில் எந்நேரமும் நாலைந்து லேபிள்களை வைத்துக் கொண்டு ‘இவர்கள் சந்தர்ப்பவாதிகள், அவர்கள் சாகசவாதிகள், குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள்’ என்று முத்திரை குத்தி தமிழகத்தில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் போராடுபவர்களை நோக்கி விரல் சுட்டுவதையே வழமையாகவும் கொண்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இது அவர்களுடைய வலது சந்தர்ப்பவாத சாய்வை தெளிவாக வெளிப்படுத்தாக தன்னுடைய விவாத்தின் வாயிலாக நிறுவியிருக்கும் தோழர். மக்கள் கருத்துவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்
Reply

Post a Comment