Monday, January 31, 2011

கவிதை




கதை சொல்லியின்
விரல்களை பற்றிகொண்டு
இருவருக்குமான வெளியில்
சுற்றி திரிந்த சிறுமி
தோளில் சாய்ந்து
துயில்கொள்வாள்


இமைகள் பிரியாத‌
க‌ன‌வுக‌ளின் முக‌த்தில்
கவிதைகள் மலரும்


மெல்லிய சோகம் ததும்பி
பற்றிகொள்ள பரவும் கரங்கள்
தயங்கி அலைவுற‌

மௌனத்தின் வலியை
அடர்த்தியான இரவு
மதி நிழல் தந்து கூட்டும்

ரகசிய உயிர்ப்பு

இருவரின்
உயிரோசை
காற்றுகொண்டு சென்ற
மழை மேகமாய்

வெற்று வெளியில்
அலைக்கழிக்கப்பட்ட யாச‌க‌ன்
கைகளில் இரு துளிகளாகும்

இன்ன‌மும் தீராத
இரவின்
மிச்சங்களில்


தோழி
துயில் நீங்கி
பிரிவாள்

தனிமை
சப்தித்திருக்கும்

Saturday, January 22, 2011

கவிதை



ஏக்கம் ததும்பி

வழியும்போதே

வற்றிவிடுகிறது

என் இருப்பு


சேமிப்பில் இருந்த‌

முக‌ங்க‌ள்

உத‌டுக‌ள் திற‌ந்து

உள‌றி திரிகிற‌து

வாழ்வை


முகில் கலையும்

வெளிகள்தோறும்

நிறங்கள் எரிந்து

சாம்பல் குவித்து

துயில்கிறது

என் வானம்


அந்நிய மொழி

குழந்தையின்

பிஞ்சு விரல்கள்

பிடித்து

விழிகள் பார்த்து

துள்ளலோடு

துவஙகும்

மீள் உயிர்ப்பு



இந்த கவிதை

தொடரும்.

கவிதை



எப்பொழுது பார்க்கினும்

எட்டி நின்று

முறைத்துகொன்டிருக்கிறது

சூழலின் யதார்த்தம்


இடைக்கிடை ஓரிரு நொடிகள்

தணிந்து மீண்டும்

சூழ்ந்து பரவும்

வெயில்


ந‌ர‌ம்புக‌ள் ப‌ர‌வி

ம‌னித‌ கூட்டின்

ப‌ள்ள‌த்தில்

ம‌ரித்துபோகிற‌து


நெஞ்சுக்குள் கிள‌ர்ந்து

ச‌ர‌ச‌ர‌க்கும் ச‌ருகுக‌ள்

இனி உர‌க்க‌ பேசும்

மெலிதாய் தளிர்க்கும்

இனி வ‌ரும்

விடிய‌ல்க‌ள்

சிவ‌ந்திருக்கும்



இரு ப‌னிதுளிக‌ள்

தழுவிக்கொண்டு

புன்னகைக்கும்

Friday, January 21, 2011

கவிதை




திருத்தம் செய்வதற்கு

ஏதுமில்லை




கலைந்தே கிடக்கின்றன

அழகாய்

சிறகிழந்த

சிறுமைகள்




மெலிதாய் ஊடுருவி

நெஞ்சில் பரவும்

திகைப்பு

தவித்து அடங்கும்

முரண்களின் வெளி




புனிதங்களின் நிறம்

என்றும்

வெண்மையின்

மறுப்பாகவே



வீதிகள் தோறும்

விழிகளில்

வழிந்து

தெருக்கள்

நிறையும்

தேடல்கள்




விரல்கள் இடையில்

வழிந்து பாதங்கள்

தீண்டிமெதுவாய்

நழுவி செல்கிறது



நதி

துளிதுளியாய்

சலனங்களற்று

மடிகிறது



கவிதை...




தென்னங்கீற்றுகள் தழுவி
தென்றலால் தணிந்து
மேனி தீண்டுகிறது
மாலை வெயில்


மென்மையாய்
இரு கரங்கள் நீண்டு
எடுத்து
ஒளித்து
வைத்துகொள்கின்றன‌


உயிரின் கதகதப்பில்
ஒடுங்கி
அற்றதாய்
த‌வித்து மீள்கிற‌து
ம‌ன‌ம்


விழிக‌ளில் செவ்வ‌ரி படரும்
தூக்க‌மிழந்த‌ இர‌வுக‌ளின்
ஊமை க‌ன‌வுக‌ள்
முன்போல
அட‌ங்கி கிட‌ந்திருக்க‌லாம்


இந்த‌ சோக‌ம்
எழத‌ப்ப‌ட்டிருக்காது

Thursday, January 20, 2011

கவிதை.

மௌனகூட்டின் சிறை திறந்து
உதிரும்போதெல்லாம்
கருவறையின் வெம்மை தேடி
உள்ளோடுகிறேன்


எதிரிடும் கண்களை
சந்தித்து மீளகையில்
மின்னல் தெறிக்கிறது
மெலிதாய் சாவின் நிழலும்


மொழிதலின் மறுப்பு
தொடர
சூழ்கொண்டு மேகமாய்
வேர் வரை தீண்டி
பற்றிகொள்ளும்



எரிதழல் எழும்
கற்பிதங்களின்
அறியாவெளிகள்தோறும்
உள்ளொடுங்கி
தளிர்க்கும்
எதிர் உயிர்கள்..


விட்டுசெல்லும்
யுகம் சுமந்த
கனவுகள்
நீளும்...

Wednesday, January 19, 2011

முகமற்ற கவிதைகள் - 4



போருக்கு அழைக்கின்றன‌
என் வனத்தின்
சில பட்டாம்பூச்சிகள்


அழகாய்த்தான் சிறகுகளும்
செயற்கை வண்ணங்களில்


நுகத்தடியின் நுன் கரங்களுக்குள்
சிதைந்துகொண்டே
புன்னகை பூக்கின்றன‌


பற்றி பிடித்த தளிர் கரம்
ஒன்றின் விரலிடுக்கில்
செழுமையாய் ஒரு துளி
இரத்தம்


அமைதியாய் மரணித்துபோகும்
வனம்


அதிகாலை நீல் இரவு
மெதுவாய் விடிய‌
துவங்கும்

முகமற்ற கவிதைகள் - 3

பாதங்கள் பதியாமல்
உலவினேன்
காட்டின்
தனிமையில்

வசவிய
குருவிகளுக்கும்
வாழ்த்துக்கள் தந்தேன்
வார்த்தைகளற்று

அதீதங்களின்
அரவமொன்றின்
வழியில்

தொலைந்தேன்

நனைந்த
நதியில்
நகர்ந்தது
நீலத்
தீ

ஈர நிலத்தின்
குடைகாளான்
தலை
கவிழ்ந்து
நின்றது.

முகமற்ற கவிதைகள் - 2




ஒரு துளி நீரெடுத்து
ஒவ்வொரு துளியாய்
வைத்தேன்


ஐந்து துளிகளில்
அணைந்தது
சூரியன்


உயர உயர
சென்றது
சிறகிழந்த
தும்பி.

முகமற்ற கவிதைகள் - 1







சின்ன சின்ன சிவப்பு
பூக்கள் கொஞ்சம்
கொஞ்சம் மஞ்சள் பூக்கள்
கொஞ்சமே கொஞ்சம்
வயலட் பூக்கள்



வயலன்சை தவிர்க்க
எந்த பூக்கள் தருவது



சிறிய குழப்பத்துடன்
சிறுமி
காத்திருந்தாள்...



கனத்த
காலணிகள்
சப்திக்க
நெருங்கியிருந்தவனின்

வீரம்
விறைத்திருந்தது..