Thursday, July 16, 2009

அ.மார்க்ஸ் என்றொரு தேசமறுப்பாளன்உறங்கிக்கொண்டிருக்கையில் கூட தேசிய இனம்,தேசம்.தேசியம் என்கிற வார்த்தைகளை கூறினால் எங்கோ தமிழ்த்தேசியம் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று விமர்சனம் என்கிற பெயரில் ஒழிக கோஷம் போட கிளம்பிவிடுவார் தோழர் அ.மார்க்ஸ்.

தேசியம் என்கிற கருத்தியலுக்கு எதிராக பேசிய எழுதிய சர்வதேசிய எழுத்தாளர்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் பணியில் கடந்த சில வருடங்களாகவே மிக தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரின் தேசிய எதிர்ப்பில் நமக்கும் உடன்பாடுகள் உண்டுதான்.

ஆனால் ஒரு சின்ன வருத்தமும் கூடவே வந்து தொலைகிறது.

அவரின் தேசிய எதிர்ப்பு கருத்துக்கள் எல்லாம் ஈழதேசியத்துக்கும்,தாய்தமிழக தமிழ்த்தேசியத்துக்கும் எதிராக மட்டுமே முன்னிருத்தப்படுகிறதே ஒழிய,இந்திய தேசியத்துக்கு எதிராகவோ அல்லது அவரின் பெருவிருப்புக்கு உரியதான காஸ்மீர தேசியத்துக்கு எதிராகவோ ஒரு பத்தியை கூட அவர் எழுதியதாக தெரியவில்லை.

இந்த இரண்டு தேசியங்களும் அக்மார்க் முத்திரை பெற்ற மனித சுரண்டல்களும் அவலங்களும் இல்லாத தேசியங்களாக இருக்கின்றன என்றும்,எந்த தவறுகளும் இல்லாமல் மிகசரியாக காஸ்மீர் தேசிய விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் கருதுகிறாரா அ.மார்க்ஸ்?

தோழர் அ.மார்க்ஸ் பதிலளிப்பார் என்றே நம்புவோம்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை பற்றி நாமும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கலாம் என்கிற நப்பாசையில் இலங்கையில் அடுத்து என்ன என்கிற பெயரில் தீராநதி இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையை புரட்டியபோது இப்பவே கண்ணை கட்டுதே என்கிற வடிவேலுவின் நிலைதான் நமக்கும் வந்தது.

புலிகள் செய்த கடைசிதவறு என்கிற பெயரில் சென்றமாதம் தான் எழுதிய கட்டுரைக்கு தீவிர புலிகள் ஆதரவாளர்களிடம் இருந்து கூட பாராட்டுகள் வந்ததாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.

தமிழகத்தின் மேன்மைதங்கிய சில அறிவுஜீவிகள் சித்தரிப்பதுபோல ரசிகர்மன்ற மனப்பான்மையோடு செயல்படாமல் வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு விமர்சிக்கும் அளவுக்கு பக்குவம் கொண்டவர்களே புலிகள் ஆதரவாளர்கள் என்று ஒப்புக்கொண்ட அ.மார்க்க்சுக்கு நமது நன்றிகளை கூறிக்கொள்வோம்.

மூன்று வேளை அறுசுவை உணவு,நேர்த்தியான இருப்பிடங்களோடு புலிகள்பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை வரவேற்க காத்திருந்த சிங்கள ராணுவத்தினரின் அழைப்பை மதிக்காமல் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பிடித்துவைத்திருபதாக இவரது உற்ற தோழன் சோபாசக்தி கூறியபோது மவுனித்திருந்த இவர் இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள் நிழற் சிறைகளில் அடைபட்டு கிடப்பதாக எழுதியிருந்ததை பார்க்கையில் புல்லரிப்பே வந்துவிட்டது.

இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்ட ஜனநாயகம்.மக்களை முகாம்களில் அடைத்துவைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலைகளை நடத்த முயற்சிக்கும்ராஜபக்சே கும்பலின் சதி ஆகியவைகளை பற்றி கூறிவிட்டு.தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த திஸ்ஸ விதாரண குழு அறிக்கை முடங்கி கிடப்பதாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.

கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக சிங்கள ஆளும்வர்க்கங்கள் அமைத்த தீர்வுத்திட்ட குழுக்களின் நிலை பற்றிய நினைவு வந்து போனது மனதில்.

ராஜபக்சே மீது போர்குற்ற விசாரணை நடத்தப்படுவதை தடுத்த,ஈழத்தின் தமிழினபடுகொலையில் பங்கேற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவோடு
முன்னால் சோசலிச நாடுகளான சீனா,ரஸ்யா,வியட்நாம் ஆகியவைகளை மறக்காமல் குறித்த அ.மார்க்ஸ் பாகிஸ்தானை கழட்டிவிட்டது ஏனோ?

ஆட்க்கொணர்வு மனுவை கூட அனுமதிக்காத ஸ்டாலினிய ரசியா பற்றி அதிகாரம் பற்றிய உரையாடல்களில் நீட்டி முழக்கும் அவருக்கு பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பத்வா வந்திருக்குமோ?

பேசாப் பொருளை பேச துணிந்த அவருக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

ஈழத்தமிழின படுகொலையில் ஒன்றிணைந்த இந்திய பாகிஸ்தானிய ஆளும்வர்க்கங்களை அம்பலபடுத்துவதில் பார்ப்பனிய இதழான காலசுவடுக்கு இருக்கும் சிரமத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்துத்துவ பாசிச எதிர்ப்புபோராளி அ.மார்க்சுக்கு அதில் என்ன சங்கடம்.

தமிழீழ தேசிய தலைமையின் அழிவு பற்றி தர்க்கரீதியான ஆய்வுகள் இன்றி இவர் சொல்லியிருக்கும் கருத்துகள் பரிசீலிக்க தகுதியற்றவையாக இருப்பதால் அதற்குள் நாம் போக தேவை இல்லை.

பிரபாகரனின் மரணத்தால் தங்கள் அரசியல்வாழ்வு அஸ்தமித்துபோய்விட்டதாக கருதும் ஈழ ஆதரவாளர்கள் பற்றி இவர் கூறும் கருத்து குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல ஈழவிடுதலைக்கு குரல் எழுப்பும் தமிழக அமைப்புகள் அனைத்தையும் பொதுமைப்படுத்தி குறை கூறுவதாக மட்டுமே அமைந்திருப்பதால் அவரின் கருத்தாழமிக்க அடுத்த சிந்தனையை பரிசீலிக்க முயலுவோம் நாம்.

உச்சபச்ச கோரிக்கைகள் கொள்கை இலட்சியங்களின் அடிப்படையிலான காலமல்ல இது என்றும் அறம் நீதி ஆகியவற்றை வறுபுறுத்தி மக்களின் துயரத்தை களைய நம்மாலானதை செய்ய வேண்டும் என்று போகும் இவரின் அடுத்த பத்தியை படிக்கையில் மேலும் சில கேள்விகள் தோன்றியது நமக்கு.

தங்கள் வணிக ராணுவ நலன்களுக்காக உச்சபச்ச மனித அவலத்தை ஈழத்தமிழர்களுக்கு இழைத்திருக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும்வர்க்கங்களோடு அறம் பற்றிய நீதி பற்றிய உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லும் இவர்,போராட்ட களத்தின் போக்கில் புலிகள் இழைத்த தவறுகளுக்கு எதிராக மட்டும் சாட்டையை சுழற்றிக்கொண்டு திரிந்தது ஏனோ?

மீண்டும் கேளிக்கை வரிவிதித்து அதன் மூல வசூலாகும் தொகையை ஈழத்தமிழர்களுக்கு அனுப்புவோம் என்றால் சினிமாக்காரர்கள் ஒத்துகொள்வார்களா?

பஸ் கட்டணத்தை பத்து ரூபாய் உயர்த்தி ஈழத்துக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் ஏற்ப்பார்களா ?

வாட் வரியை ஒரு சதம் உயர்த்த வணிகர்கள் சம்மதிப்பார்களா ?

என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமான் கேள்விகளை முன் வைக்கும் அ.மார்க்சுக்கு நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

குஜராத்தில் பூகம்பம் ஒரிசாவில் வெள்ளம் என்று எந்த பேரழிவு வந்தாலும் தனது கைகளில் இருக்கும் தான் உழைத்து சேர்த்த காசை கொடுக்க இயல்பாக முன்வந்த தமிழர்களுக்கு மனிதநேயத்தை பற்றி நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை.

அதற்கான தகுதியும் உங்களுக்கு இல்லை.


இந்துத்துவ எதிர்ப்பு என்பதை இந்திய தேசிய எதிர்ப்பிலிருந்து பிரித்து பார்க்க முடியாது என்கிற அடிப்படை உண்மையை மூடிமறைக்க முயலும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் தமிழக இளையதலைமுறை விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது இன்று.

No comments:

Post a Comment