Wednesday, March 31, 2010

வாதப்பிரதிவாதக் கலை

எதிராளியின் வாதத்திலுள்ள விசயத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கமோ இயல்போ அல்லாத பொதுப்படையான கருத்தாக எடுத்துக்காட்ட வேண்டும்.அதே சமயம் நம்முடைய வாதத்தின் கருத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குகளுக்குட்பட்டதாகவும்,ஏதேனுமொருசில நோக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் வாதத்தில் ஒரு விசயம் எவ்வளவுக்கெவ்வளவு பொதுப்படையானதாகவும்,விசாலமானதாகவும் இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அதற்குஆணித்தரமான எதிர்வினைகள் கிளம்பும்.வாதத்தில் நமது கருத்தையே சரியானதென்று நிரூபிக்க ஒரு சிறந்த உபாயம் கேள்வி கேட்டுக் கொண்டேபோவதாகும்.வாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களையும் பற்றிக் கேள்வி மேல் கேள்விகேட்டு எதிராளியிடம் பதிலை வரவைக்க வேண்டும்.இதனால் எதிராளியுடைய சிந்தனை திசை மாறும்நம்முடைய வாதத்திலுள்ள பலவீனங்களைமறைத்துவிடுவதும் நமக்கு சாத்தியமாகும்.


வாதப்பிரதிவாதக் கலையில் எளிதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு மார்க்கம்,எதிராளிக்கு ஆத்திரமூட்டுவதாகும்.சினம் மிகுந்தால் சிந்தனையின் போக்கு தடுமாறும்.கோபம் வந்துவிட்டால் நியான அநியாயங்களைப் பாகுபாடு செய்துபார்க்கும் மனத்தெளிவு அகன்றுவிடும்.அதன் காரணமாகத் தனக்கு சாதகமான கருத்துக்கள்ளை தேடிக்கண்டு பிடித்து விவாதம் செய்யும் சாதுரியத்தைஎதிராளி இழந்து விடுவான்.நாம் வலியுறுத்த வேண்டிய கருத்துக்கு மாறுபட்டதும் வேறுபட்டதுமானபிரச்சனைகளைப் பற்றி பேசுவதாலும்,கேள்வி எழுப்புவதாலும்,எதிராளி நாம் எந்தக் கருத்தை வலியுறுத்தப் போகிறோம் என்று புரியாமல் மனம்குழம்பிப்போவான்.அடிப்படைக் கருத்துக்குகந்த மறுப்புகளைக் கூறத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை தவற விடுவான்.அந்த நேரம் பார்த்து நமது கருத்தை திடீரென வலியுறுத்தினால் நாம் வெற்றிய்டையலாம்.


நமது கேள்விகளில் எதிராளியிடமிருந்து எந்த கேள்விகளுக்கு ஆமாம் என்கிற ஒப்புதலை எதிர்பார்க்கிறோமோ,அப்போதெல்லாம் இல்லை என்று பதில் வந்து கொண்டிருந்தால், உடனே நாம் கேள்விகளைநேர் மாறாக திருப்பிப்போட ஆரம்பித்துவிட வேண்டும்.நம்கருத்துக்குச் சாதகமான பதிலை வேண்டுவது போல,நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இதன் மூலம் எதிராளியின் வாதங்களில் இருந்தே நமது வாதத்துக்கான ஆதாரங்களைப் பெற்று நாம் வெற்றியடைந்து விடலாம்.நமது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில்களைச் சொல்லிக்கொண்டே வந்த பின்னரும்,நமது கருத்தை வலியுறுத்துவதற்க்கான வாய்ப்பை எதிராளி தராமலே இருந்தாலுங்கூட,திடீரென நமது வாதம் வெற்றியடைந்து விட்டமாதிரி நமது கருத்தை வெளியிட்டு விடலாம்.எதிரி சங்கோஜியாகவோ,மந்தப்புத்தி உள்ளவனாகவோ இருந்து விட்டால் இந்த யுக்தி உடனுக்குடன் பலித்துவிடும்.


எதிராளி வலியுறுத்தும் கருத்துக்கு எதிரிடையான கருத்தை,எதிராளியின் செயல்களையும்,அவன் தன் கருத்துக்குச் சாதகமாக கையாண்ட எடுத்துக்காட்டுகளின் இதர அம்சங்களையும் வெளியிட்டு மடக்குவதாலும் நாம் வெற்றியடையலாம்.உதாரணமாக எதிராளிதற்கொலை புரிந்து கொள்வது நியாயமானதென்றோ, அதில் தவறில்லையென்றொ வலியுறுத்துவானேயானால்நாம் தொடுக்க வேண்டிய கேள்வி அப்படியானால்நீங்கள் ஏன் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது?பெர்லின் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நகரம் என்று எதிராளி கூறினால்,உடனே நாம் நாளைக்கே முதல் வண்டி பிடித்து வேறெங்கேயாவது போய்ச்சேருவதுதானே என்று கேட்க வேண்டும்.


வாதத்தில் தோல்வியுண்டாகும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம்உடனே பேச்சைச் திசைமாற்றிவிட வேண்டும்.நமது வாதத்துக்கு தொடர்புடைய விசயத்தை பேசுவதுபோலவக்கனையாகவும்,விரிவாகவும்,நமது வாததிற்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத விவாகாரங்களைப் பற்றி பேசஆரம்பித்துவிட வேண்டும்.


வாதத்தில் நம் தரப்புக்குச் சாதகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களின் வாக்குக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த கருத்தானாலும்,அதன் உட்பொருளை நோக்காமல் அந்த கருத்தை வெளியிட்டவரின் தகுதியையும்,திறமையையும்,பார்த்தே மேற்படி கருத்துக்கு மதிப்பளிப்பது மனித சுபாவம்.ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துச் சொல்லி,சாக்ரடீஸே இதை வலியுறுத்திஇருக்கிறார் என்றோ,புத்தரின் போதனைகளின் முக்கியஅம்சமே இதுதான் என்றோ பெரியவர்களை துணைக்கு கூப்பிட்டால் எதிராளி அடங்கி போய்விடுவான்.எதிராளி எந்த அளவுக்கு சாத்திர அறிவு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு இந்த உபாயம் நமக்கு வெற்றி கொடுக்கும்.


எதிராளியின் கை ஓங்கும்போது தனிப்பட்ட முறையில் நேரடியானதாக்குதலில் இறங்குவதால் எதிராளியின் கவனத்தை திசைமாற்றி விடலாம்.இந்த யுகதியைகடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.விவாதத்துக்குறிய விசயத்தை விட்டு விட்டுஎதிராளியின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஏளன விமர்சனத்தை மேற்கொள்ளும் இந்த உத்தி கீழ்த்தரமானது.ஆனால் இதுதான் மிக எளிதில் கைவரக் கூடியது.பெரும்பாலும் அனைவராலும் கையாளப்பட்டுவருவதும் இந்த உத்திதான்.இந்தத் தாக்குதலை ஜாடை மாடையாகவும் நகைச்சுவை வெளிப்படுபடியாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்பொழுது பதிவுக்குள் வரலாம்.எதையாவது படிக்கலாம் என்றுபுத்தகங்களை புரட்டினேன்.நீண்ட காலத்துக்கு முன்பாகவே வந்து விட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களில் ஷோபன்ஹேர் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் கிடைத்தது. நீட்ஷேயின் குரு என்று கேள்விபட்டது நினைவுக்கு வந்தது.படிக்க ஆரம்பித்தேன்.The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்பது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதால் உடனே பதிவாக எழுதி பகிர்ந்துகொண்டு விட்டேன்.


மேலும் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.ஷோபன்ஹேர் சொல்லிஇருக்கிற முறைகேடான விவாத முறைகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி விவாதிக்கிறவர்களை நாம் அடிக்கடி சந்தித்து இருக்கிறோமே என்று பட்சி சொல்லியது.இனியும் பீடிகை வேண்டுமா என்ன ? மக்கள் கலை இலக்க்கிய கழகம் என்று அறியப்படுகிற மக இக வின் இணையப் புரட்சியாளர்களோடுவிவாதிக்க நேர்ந்திருக்கிற ஒவ்வொருவரும்,மேலே சொல்லப்பட்டு இருக்கிற விவாத முறைகேடுகளை அவர்கள் பயன்படுத்துவதை ஒரு முறையாவதுஉணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.அடுத்தது நம்ம ஷோபாசக்தியையும் இந்தக் கலையில்யாரும் மிஞச முடியாது.தன்மீதான விமர்சனங்களுக்குபதில் அளிப்பதாகக் கூறி பதில்களே இல்லாமல்,ஷோபாசக்தி எழுதியிருக்கும் கட்டுரைகள் எல்லாம்இந்த விவாத முறையை நமக்கு நினைவூட்டுவதாகஉள்ளன.பொதுவாகவே ஈழம் தொடர்பான அ.மார்க்ஸின் எழுத்துகளிலும்,குறிப்பாக அரசு.இறையானமை. ஆயுதப்போராட்டங்கள் என்கிற கட்டுரையிலும் இதே பாணிதான் இழையோடி இருந்தது.பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருக்கும் கனவான் இரயாகரன் கூட இந்த பாணியை கடைபிடித்திருப்பதை அவரது எழுத்துக்களை வாசித்தவர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.


வெளிப்படையாகவே மக இக வினரின் அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை என்னுடைய பல பதிவுகளின் வழியாக அமபலப்படுத்திஇருந்தாலும்,விவாத முறை பற்றிய இந்த பதிவின் ஊடாகவும் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.கட்சியில் அங்கம்வகிப்பதாலோ,துண்டறிக்கைகளை விநியோகிப்பதாலோ அடையாள எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்வதாலோ தன்னை புனிதன் என்றும்,மக்களை உய்விக்க வந்த தேவதூதன் என்றும் கருதிக் கொள்கிற யாரும் மார்க்சியர்களாக இருக்க முடியாது.


மார்க்சிய நூல்களைப் படித்துவிட்டதால் அறிவுஜீவி திமிரோடு சக மனிதர்களுக்கும்,மக்களுக்கும் மேலானவர்களாக தங்களை வைத்துப் பார்க்கும் குணமும் மார்க்சியர்களுக்கு உரியதல்ல.மக்களுக்கும்,மனிதர்களுக்கும் மேலாக தன்னை நிறுத்திக்கொண்டு அதிகாரம் செலுத்துவது அரசின் குணம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.இவர்களின் எந்த ஒரு பதிவும் சுரண்டலுக்கு எதிராக போராடுவதன் தேவையை,தோழமையோடு அருகே அமர்ந்து சொல்லிக்கொடுக்கும் பாணியில் அமைந்தது கிடையாது.இது ஒன்றே போதும் இவர்கள் மார்க்சியர்கள் அல்ல என்பதை அடையாளம் காண்பதற்கு.சற்று உன்னிப்பாக கவனித்தால் இவர்களின் விழுந்து பிடுங்கும் பாணியால் மார்க்சியத்தின் மீதான ஆர்வத்தையே மக்களுக்காக செயல்பட விரும்புவர்கள் இழந்து விடுவார்கள் என்பதையும் உணரலாம்.மார்க்சியர்கள் என்றாலே இப்படித்தான் என்று எண்ணத் தூண்டுவதன் மூலம் அவர்களை எதிர்நிலைக்கு ஓட வைக்கிற வேலையையும் கூடதெளிவாகவே செய்து கொண்டிருக்கிறார்கள் நம் இணையப் புரட்சியாளர்கள்.மீண்டும் மீண்டும்நினைவூட்ட விரும்புவது பேராசான் மார்க்சின்இந்த வரிகளைத்தான்.
எல்லாவற்றையும் சந்தேகி .......

Saturday, March 27, 2010

புரட்சிகர மனுவாதிகள்

நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதாமல் இருந்து விட்டால்
பதிவர் உலகம் மறந்து விடுமே என்கிற கவலை சில
நாட்களாகவே வந்து கொண்டிருந்தது.சரி இனியேனும்
எதையாவது உருப்படியாக :) எழுத முயற்சிக்கலாம்
என்று பார்த்தால் விட மாட்டார்கள் போல இருக்கிறது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணையப்
புரட்சியாளர்கள.புலிகள் மீது வைக்கப்பட்ட
விமர்சனங்கள்,இறுதி போர்க்காலகட்டத்தில் நிகழ்ந்த
விசயங்களை எல்லாம் தர்க்கரீதியாக அலசி ஒரு
பதிவிடலாம் என்று நீண்ட நாட்களாக எண்ணம்
இருந்தாலும்,அது மருதையரின் நேர்காணலைப்
படித்த பிறகே சாத்தியமானது.நம்ம ராசி அப்படி
போல.பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள்
என்று இரண்டு பகுதிகளாக அந்த இடுகையை
பதிவிட்டிருந்தேன்.இப்பொழுதும் அப்படியே
இவர்களுக்கான எதிர்வினையூடாகவே சில
விசயங்களை முன் வைக்க முயலுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் டோண்டு
ராகவன்களின் மேட்டிமைத் திமிர் என்றோரு பதிவு
வந்திருந்தது வினவு இணையத்தில்.அப்படியே
வாசித்துக்கொண்டு வந்தபோது நரம்புகள் எல்லாம்
சிலிர்த்தன.வர்க்க உணர்வு பொங்கியது.ஏதோ
என்னுடைய அடிப்படை மார்க்சிய அறிவைக்
கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையே சமூக
மாற்றத்துக்கான வழி என்கிற முடிவுக்கு
வந்திருந்தாலும்,அடிப்படையில் நானும் ஒரு
மார்க்சியன்.இந்திய தேசிய இனங்களுக்கு
இடையிலான தோழமையை நேசிப்பவன்
என்பதால் சேட்டன்களின் உபசரிப்பைப் பற்றி
படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தபோது வழக்கம்
போலவே பூணூல் நிரடியது.இந்திய அதிகாரவர்க்க
ஆதரவு அரசியல் பல்லிளித்தது.குறைந்த கூலிக்கு
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மக்களை
இறக்குமதி செய்வதை கேரள ஓட்டல்களில்
இருக்கும் தொழிலாளர்களின் சங்கங்கள்
தடுத்து வருகின்றன என்று எழுதி இருக்கிறார்கள்.
வாயைக் கொடுத்து வாயில் புண்ணோடுதான்
ஊர்போய்ச் சேருவேன் என்று வடிவேலு போல்
அடம் பிடித்தால் நான் என்ன செய்ய?

மறுகாலனியத்தின் விளைவு என்றாலும் உழைக்கும்
மக்கள் தங்கள் தேசிய இன அடையாளங்களைக்
கடந்து இணைவதை நாம் கொண்டாட வேண்டும்.
இனிய ராகம் பாட வேண்டும் என்றெல்லாம்
போதிக்கும் இந்த புரட்சியாளர்களுக்கு,உழைத்துப்
பிழைக்க வந்த வடகிழக்கு மக்களை,கேரள
தொழிற்சங்கங்கள் துரத்துவது ஏன் இனவாதமாக
தெரியவில்லை? தமிழர்கள் செய்தால் இனவாதம்.
மலையாளிகள் செய்தால் புரட்சியா?சாதிக்கொரு
நீதிதானே மனுதர்மம்,இனத்துக்கொரு நீதி
வழங்கி சாதனையே படைக்கிறார்கள் நம்
புரட்சிக்காரகள் அடடா ! மேலும் இதனை
வெறுமனே தற்செயல் கருத்து என்று கருத
முடியும் என்று தோன்றவில்லை.எந்த இசத்தின்
லேபிளைக் கொண்டு மூடினாலும் இந்திய
ஒருமைப்பாடு என்பதை பார்ப்பன
ஒருமைப்பாட்டிலிருந்தும்,இந்திய தேசபக்தியை
பார்ப்பன பக்தியிலிருந்தும் பிரித்துப் பார்ப்பது
சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய தேசபக்தியிலும்,இந்திய ஒருமைப்பாட்டிலும்
மட்டுமே சாத்தியமாகக் கூடிய பார்ப்பன
மேலாதிக்கத்தை எதிர்த்து மூன்று தசாப்தங்களாக
அஸ்ஸாம்,நாகாலாந்து,மணிப்பூர் உள்ளிட்ட
வடகிழக்கு தேசிய இனங்களின் மக்கள்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தங்களின்
தேசிய இன அடையாளத்தை தக்கவைத்து,
இந்திய அடையாளத்துக்குள் கரைந்து போக
மறுப்பதால்,இந்திய அரச பயஙகரவாதத்தின்
கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டையும்,இந்திய தேச
பக்தியையும் நிராகரிக்கும் வடகிழக்கு தேசிய
இனங்களின் மீது பார்ப்பனர்களுக்கும்,இந்திய
அதிகாரவர்க்கத்துக்கும் இருக்கும் வன்மமும்,
கோபமும்தான் இவர்களின் எழுத்திலும்
வெளிப்படுகிறது என்று புரிந்துகொள்வது
தவறாக இருக்காது.அப்பட்டமான பார்ப்பன
வன்மத்தை வடகிழக்கு தேசிய இனங்கள்
மீது காட்டும் இவர்கள் நெடுமாறனும்,
வைகோவும் அந்த மக்களுக்காக குரல்
கொடுக்கவில்லை நாங்கள்தான் குரல்
கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று
படம் காட்டுகிற கொடுமையை என்னவென்பது?
உண்மையில் இவர்களின் இருபத்தைதாண்டு
கால புதிய ஜனநாயக இதழ்களில் தேடினால்
அதிகபட்சம் பத்து கட்டுரைகள் கூட வட
கிழக்கு தேசிய இன மக்களின் பிரச்சனைகளை
பேசியதாக இருக்காது என்பதே உண்மை.

மேம்போக்கான அரசியல் பார்வைகளை தவிர்த்துவிட்டு
பார்த்தால் தமிழர்கள் மீது சத்தமில்லாமல் ஒரு
உளவியல் போரையே இந்திய அதிகாரவர்க்கம்
நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
காஷ்மீரையும்,வடகிழக்கு மாநிலங்களையும் தவிர
இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கத்துக்கு சிக்கல்
தரும் இனங்களாக தமிழர்களும்,சீக்கியர்களுமே
இருக்கிறார்கள்.இரண்டு தரப்பையும் உளவியல்
ரீதியாக ஊனப்படுத்திக்கொண்டே இருக்க
முயற்சி செய்து வருகிறது இந்திய அரசு.சீக்கிய
மக்களுக்கு எதிராக சர்தார்ஜி ஜோக்குகள் என்கிற
பெயரில் கழிசடைத்தனமான கலாச்சாரம் ஒன்று
கட்டமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
மேலும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்வையும் இங்கே மறுபடியும் நினைவு
படுத்த வேண்டி இருக்கிறது.


1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்
படுகொலையில் தொடர்புடைய சஜ்ஜன் குமார்,
மற்றும் ஜகதீஸ் டைட்லருக்கு தேர்தலில் போட்டி
இட காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்ததை எதிர்த்து
சீக்கியர்கள் மிகத் தீவிரமாக போராடிக்கொண்டு
இருந்தனர்.ஏறக்குறைய மீண்டும் ஒரு தேசிய
எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது
பஞ்சாப்.அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட
சீக்கியர்களின் தேரா சச்சா செளதா பிரிவின்
தலைவர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்
வைத்துக் கொல்லப்பட்டார்.சீக்கியர்களின்
அந்த எழுச்சி முழுக்க திசை திருப்பபட்டது.
இணைந்து போராடிக்கொண்டிருந்த சீக்கியர்கள்
தங்களுக்குள் மோதிக்கொள்ளத் துவங்கினர்.


இவைகளை இங்கே பதிந்ததற்கு காரணமே தமிழர்கள்
தங்களின் மேம்போக்கான அரசியல் பார்வைகளை
மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஏற்கனவே பின்னூட்டத்தில் சொல்லி இருந்த ஒரு
விசயத்தையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
தினமும் பேருந்தில் இரண்டு,மூன்று குரல்களை
கேட்க முடிகிறது.150,200 ரூபாய் வாங்கிக்
கொண்டிருந்த இடத்தில் வட இந்தியாவில் இருந்து
வேலைக்கு ஆட்கள் வர ஆரம்பித்த பிறகு 90
ரூபாய்கும் 80ரூபாய்க்கும் வேலை செய்ய
வேண்டி இருக்கிறது என்கிற விசன குரல்களை.
கொத்தடிமை உழைப்புக்கு தயாராக இருக்கும்
வட இந்திய தொழிலாளர்களால் தமிழ் உதிரிப்
பாட்டாளிகள் குறை கூலிக்கு வேலை செய்ய
வேண்டிய நிலை தோன்றி இருக்கிறது.
மேலும் தமிழகத்தின் உதிரிப்பாட்டாளிகள்
யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை
பெரும்பாலும் சாதிய ஒடுக்குமுறை
தாங்காமல் கிராமங்களை விட்டு வெளியேறிய
தலித்துகள்.விவசாயத்தை அழிக்கும் அரசுகளின்
கொள்கையாலும்,தமிழகத்துக்கே உரிய
பிரத்தியேகமான நதிநீர் சிக்கலகளாலும்
வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் என்கிற
இரண்டு தரப்பினரே உதிரிப் பாட்டாளிகளாக
உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


வட இந்திய தொழிலாளர்களின் வருகையால் தமிழகத்தின்
உதிரிப்பாட்டாளிகள் சிக்கலை சந்திக்க துவங்கி
இருக்கின்றனர்.எந்த ஒரு தேசிய இனத்திலும்
பிற தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள சேர்ந்து
வசிப்பது இயல்பான ஒன்றுதான்.அதே நேரம்
சமீப காலங்களில் தமிழகத்துக்கு பிற தேசிய
இனத்தவரின் வருகை மிக அதிகமாகி இருக்கிறது
என்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
இவைகளெல்லாம் பிரச்சனைகள்தான்.ஆனால்
இவைகள் மட்டுமே முதன்மையான பிரச்சனைகள்
என்று கூறப்படுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை,வளங்களைச்
சூறையாடும் ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பது,
சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை எதிர்ப்பது
போன்ற கடைமைகளை புறக்கணித்துவிட்டு
தமிழ்த்தேசியர்களாக தங்களைக் கூறிகொள்பவர்கள்
இயங்குவது ஏற்க முடியாத விசயமாகும்.
வர்க்கப் பார்வையற்ற,பாசிச மற்றும் இனவாதப்
பண்புகளைக் கொண்டவர்கள் முன்நிறுத்தும்,
ராஜ்தாக்கரே பாணியிலான தேசியத்தை
முறியடிக்க வேண்டிய கடமையும் உண்மையான
தமிழ்த்தேசியவாதிகளின் தோள்களில்
சுமத்தப்பட்டிருக்கிறது.


மீண்டும் மக இக வினருக்கே வரலாம்.பலமுறை
இவர்களின் போலி வர்க்க அரசியலையும்,
பார்ப்பன விசமத்தையும் அம்பலப்படுத்தி எழுதி
விட்டேன்.இறுதியாக சொல்வது ஒன்றுதான்.
சமூகத்தில் சரியான விசயங்களுக்கான தேடல்
இருக்கும் போது,பல இடங்களில் இருந்தும்
சரியான கருத்துக்கள் வரவே செய்யும்.அந்தக்
கருத்துக்களை முன் வைப்பவர்கள் நேர்மையான
ஆட்களா என்பதை அவர்களின் செயல்களை
வைத்து மட்டுமே மதிப்பிட முடியும்.
தோற்றத்தில் என்னவாக காட்டிக்
கொள்கிறார்கள் என்பது அக்கறைக்குரியதல்ல.
கண்ணால் காண்பதும் பொய் காதால்
கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
என்கிற பழமொழியோடு இந்த பதிவை
நிறைவு செய்து விடலாம்.

Saturday, March 6, 2010

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2


ராஜிவ்காந்தியின் கொலைக்குப் பிறகு இவர்கள் கடும்
ஒடுக்குமுறையை சந்தித்து போராடினார்களாம்.அது
பற்றிய மேலதிக தகவல்கள் கைவசம் இல்லாத
நிலையில் விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால்
சில மாதங்களுக்கு முன் ராஜிவ் கொலையுண்ட
காலத்தில் வெளியான எங்கள் பொதுச்செயளரின்
கட்டுரை என்று ஒன்றை இவர்களின் அமைப்பைச்
சேர்ந்தவர் சுட்டி அளித்துப் படிக்கத் தந்தார்.படித்து
முடித்தபோது மனதில் எழுந்த கேள்வி இதுதான்.
இதில் எங்கே ஈழம் பற்றிய அரசியல் இருக்கிறது?
அதைத்தேட ஏதேனும் விசேச கண்ணாடி
அணிந்திருக்காமல் நாம்தான் தவறு செய்து
விட்டோமோ என்று குழப்பமே வந்துவிட்டது.


மேலும் இவர்கள் அடிக்கடிச் சொல்லும் நகைச்சுவைத்
துணுக்கு ஒன்று இந்தப் பதிவிலும் வந்திருக்கிறது.
புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு ராஜிவ்
கொலையை மக இக கூடச் செய்திருக்கலாம் என்று
காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்தார்
என்பது.நமது கோபமெல்லாம் இவர்களை இவ்வளவு
சீரியசாக எடுத்துக்கொண்டு கிட்டு பேசி விட்டாரே
என்பதுதான்.


நேர்காணலில் இறுதிப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள
அரசியலை சற்று விரிவாகவே அலச வேண்டி
இருக்கிறது.யாழ் கோட்டை புலிகளால் சுற்றி
வளைக்கப்பட்டபோது பா.ம.க. தி.மு.க.
ம.தி.மு.க அடங்கிய பாரதிய ஜனதா ஆட்சி
நடைபெற்றதாம்.அடங்கொக்காமக்கா ! 1985
காலகட்டங்களில் யாழ்கோட்டையில் இருந்த
சிங்களைப்படைகளை புலிகள் சுற்றி வளைத்த
போது பாரதிய ஜனதா எப்படி ஆட்சி அதிகாரத்தில்
இருந்திருக்க முடியும்.யாழ்ப்பாணத்தில்
டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை இருப்பதும்
அதுதான் யாழ்கோட்டை என அழைக்கப்படுகிறது
என்பதும் கூட தெரியாத ஒரு அமைப்பின்
பொதுச்செயலாளரை நம்பி இந்தியப் புரட்சியா !
இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்.


மேலும் இது இவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே.
ஈழத்தின் மூத்த மார்க்சியர் என்ற அறிமுகத்தோடு
தோழர் சிவசேகரத்தின் நேர்காணலை இரண்டு
பகுதிகளாக புதிய ஜனநாயகம் இதழில்
வெளியிட்டிருந்தார்கள்.எப்படியாவது புலிகளை
ஏகாதிபத்தியச்சார்பாளர்களாக சித்தரிக்க வேண்டிய
நிலையில் இருந்த அவர்,1995 களிலேயே
புலிகள் யாழ்ப்பாணத்தை இழந்து வெளியேறி
இருந்தனர் என்கிற உண்மையை மறைத்து 2002
போர் நிறுத்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்தில்
கோக்கை புலிகள் அனுமதித்தார்கள் என்று பச்சைப்
பொய் சொல்லி இருந்தார்.அதைக்கேட்டுக்கொண்டு
பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டு
வந்தவர்கள்தானே நம் புரட்ச்ச்ச்ச்ச்சீஈஈகாரர்கள்.


பிறகு இவர்கள் எந்த முற்றுகையைச் சொல்கிறார்கள்
என்று யோசித்தபோதுதான் புரிந்தது.உலகின் ராணுவ
ஆய்வாளர்களால் ஹோசி மின் வழிகாட்டுதலில்,
வியட்நாமின் வீரத்தளபதி ஜெனரல் கியாப்
தலைமையில்,அமெரிக்கப்படைகளுக்கு எதிராக
நடத்தப்பட்ட TET தாக்குதலுக்கு இணையானது
என்று பாராட்டப்பட்ட புலிகளின் யானையிறவு
முகாம மீதான தாக்குதலைத்தான் இவர்கள்
குறிப்பிடுகிறார்கள் என்று.இப்படி புலிகளை
புகழ்ந்தால் அவாள் சஙகடப்படுவா என்பதால்
இத்தோடு நிறுத்திக்கொண்டு பதிவுக்குள் போகலாம்.
ஆனையிறவு முகாமை தகர்த்துவிட்டு நாற்பதாயிரம்
சிங்கள ராணுவத்தினரை சுற்றி வளைத்து புலிகள்
நின்றிருந்தனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிடிக்க
புலிகள் முன்னேறிச் செல்லக் கூடாது என்பதே
இந்திய அரசின் மிரட்டலாக இருந்தது.


சில மணி நேரங்களுக்குள்ளாகவே ராணுவத்தினரை
கூண்டோடு புதைத்து விடுகிற இடத்தில் புலிகள்
இருந்தார்கள்.உலகின் எந்த ராணுவம் வந்தாலும்
அதைத் தடுக்க முடியாது என்பதே யதார்த்தமாக
இருந்தது. இந்திய அரசின் மிரட்டலுக்காக
அல்லாமல் மனித உயிர்களின் மதிப்பறிந்த
போராளிகளாக,உச்சபச்ச மனிதாபிமானதுடன்
இந்திய கடற்படை கப்பல்கள் வழியாக சிங்களப்
படையினர் வெளியேற புலிகள்
அனுமதித்திருந்தனர்.புலிகளுக்கு எதிரான
இந்திய அரசின் மிரட்டலை மிகப்பெரிய
வெற்றியாகநெடுமாறன் உள்ளிட்ட புலி
ஆதரவாளர்களாக சொல்லிக்கொண்ட கட்சிகள்
பேசினார்கள் என்று எழுதி இருக்கிறார்கள்.
நெடுமாறன் அமைப்புதான் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.ஓட்டுக்கட்சியை அல்ல என்பது
கூட தெரியாத இவர்களின் பொது அறிவை
என்னவென்பது?


நேர்காணலின் இறுதிப் பகுதியில் இவர்களே சொல்லிய
விசயத்தில் இருந்து ஒரு விசயம் தெளிவாகிறது
இந்திய அதிகாரவர்க்கத்துக்கு ஓரளவுக்கு மேல்
தமிழக அரசியல் கட்சிகளால் அழுத்தம் கொடுக்க
இயலாது என்பதை உணர்ந்திருந்த புலிகள்,அதை
மேலும் உறுதிபடுத்திக்கொள்ள அந்த நிகழ்வு
வாய்ப்பளித்திருக்கும்.ஆட்சியை வேண்டுமானாலும்
இழப்போமே தவிர ஈழத்தை அங்கீகரிக்க மாட்டோம்
என்பதே இந்திய பார்ப்பன பனியா அதிகாரவர்க்கத்தின்
முடிவாக இருந்து வந்திருக்கிறது.இந்திய அதிகார
வர்க்கத்தின் இயல்பை நன்கு அறிந்த புலிகள்
இந்தியாவை தவிர்த்துவிட்டு மேற்கத்திய நாடுகள்
வழியாகவே ஈழம் நோக்கிய நகர்வுகளை போர்நிறுத்த
காலங்களில் மேற்கொண்டிருந்தனர் என்பதும் நாம்
அறிந்த ஒன்றுதான்.தமிழக கட்சிகளின் பலத்தை
அடிப்படையாக வைத்து தங்களின் திட்டங்களை
வகுக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான
எண்ணங்களை கொண்டிருந்தவர்களாக புலிகளைக்
கருத வாய்ப்பேயில்லை.


எந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு தங்களை
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றக்கூடாது என்று
மிரட்டியதோ அதே பாரதிய ஜனதாவின்
ஆட்சி அமைந்தால் போர் நிறுத்தம் வந்து
விடும் என்று கருத புலிகள் ஒன்றும்
மக இக வினர் போன்ற அதிபுத்திசாலிகள்
அல்லவே.தமிழகத்தில் ஜெயலலிதாவின்
ஆட்சியும்,இந்தியாவில் பாரதியஜனதாவின்
ஆட்சியும் அமைந்தால் போர் நிறுத்தம்
வந்துவிடும என்று புலிகளின் தமிழக ஆதரவு
கட்சிகள் சொன்னதை நம்பி புலிகள்
ஏமாந்ததாக,இவர்கள் சித்தரிப்பதைக்
பார்க்கையில் கேட்பவன் கேனையன்
என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று
சொல்பவர்கள மக இக காரர்களைப்
போலத்தான் இருப்பார்கள் என்று புரிந்து
கொள்ள முடிகிறது.


ஈழத தமிழர்கள் மீதான உச்சபட்ச மனித அவலமும்
நிகழ்த்தி முடிக்கப்பட்ட பிறகு சாரு நிவேதிதாவும்,
ஜெயமோகனும்,கிளிநொச்சி போர்க்காலத்தில்
ஆயுதங்களைஒப்படைத்துவிட்டு சரணடையும்படி
புலிகளை,உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிய
போது அதை புலிகள் ஏற்றிருந்தால் இவ்வளவு
மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று
எழுதி அம்பலப்பட்டதை இணைய உலகில்
பார்த்தோம்.துரோகிகளின் மெனத்தில் துடிக்கும்
முள்ளிவாய்க்கால் என்று இவர்கள் ஒரு சிறு
வெளியீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கொடுக்கிற காசுக்கான மதிப்பைக் கூட
கொண்டிராத இவர்களின் வெளியீடுகளை வாங்கி
படிப்பதை நிறுத்த வேண்டும் என்கிற முடிவுக்கு
வந்திருப்பதால்,புதிய கலாசாரத்தில் வந்த
கட்டுரையை மட்டுமே வாசித்தேன்.


தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ வழியற்ற நிலையில்
ஆயுதங்களை மௌனிக்கச் செய்கிறோம் என்கிற
முடிவை சில நாட்களுக்கு முன்னால் புலிகள்
எடுத்திருந்தால் ஒருவேளை ஆயிரக்கணக்கான உயிர்கள்
காப்பாற்றப்பட்டிருக்கும் என்று எழுதி இருக்கிறார்கள்.
புலிகள்ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகும்,
உச்சபச்ச தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான
மக்களை சிங்கள ராணுவம் கொன்றொழித்தது
என்கிற உண்மையை இவர்கள் மறைப்பது ஒருபுறம்
இருக்கட்டும்.இந்திய ஆட்சி மாற்றமோ,தமிழக
ஆட்சி மாற்றமோ போர்க்களத்தில் எந்த விளைவையும்
ஏற்படுத்தாது என்கிற புரிதலுடனே புலிகள்
இயங்குவார்கள் என்பதை மேலே பார்த்திருக்கிறோம்.


இந்திய தமிழக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும்,தமிழக
கட்சித்தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பியும்
புலிகள் ஏமாந்து விட்டதாக ஒரு சித்தரிப்பை
உருவாக்குவதன் மூலம்,மக்களின் உயிரிழப்புகளுக்கு
புலிகள்தான் காரணம் என்ற தோற்றத்தை
உருவாக்குவதுதானே இவர்களின் திட்டம்.அப்பொழுதும்
கூட இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை
ஆயிரக்கணக்கில் கொன்றது இவர்களுக்கு இரண்டாம்
பட்சமாகத்தான் படுகிறது என்பதையும்
கவனிக்க முடிகிறது.


சிதம்பரம் புலிகளைச் சரணடையக் கோரியபோதே அதை
வழிமொழிந்தால் தங்களை துரோகிகள் என்று
அடையாளம் காண்பார்கள் என்பதால் சாருநிவேதிதாவும்
ஜெயமோகனும்,இனப்படுகொலை நிகழ்த்தி
முடிக்கப்பட்ட பிறகு பேசியதைத்தான் இவர்களும்
பேசி இருக்கிறார்கள். சிதம்பரத்தின் குரலோடு மக இக
வினரின் குரலையும் சேர்த்து அடையாளம் காண்பதில்
எந்த தவறும் இருக்க முடியாது.இந்திய
மாவோயிஸ்டுகளை பயஙகரவாதிகள் என்கிற
அடைமொழியோடு எழுதுபவர்கள்தானே இவர்கள்.
ஒரு ஐந்து பக்க கட்டுரைக்குள் இவ்வளவு ஆப்பைச்
செருகுகிறவர்கள் அந்த வெளியீடு முழுவதும்
எத்தனை மோசடிகள் செய்திருப்பார்கள்
என்று நினைத்தால் மயக்கமே வருகிறது.


இறுதியாக (9.9.20009) அன்று தினமணி இதழில் வந்த
ஒரு கருத்துக்கணிப்பை அடிப்படையாக் கொண்டு ஒரு
பத்தி எழுதி இந்தப் பதிவை முடுத்து விடலாம்.
இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்கு காரணம்
யார் என்கிற கேள்விக்கு தமிழக மக்கள் கீழ்கண்டவாறு
பதில் அளித்திருக்கிறார்கள்.


விடுதலைப்புலிகள் - 19.8%
இலங்கை அரசு - 21.33%
இந்திய அரசு - 58.69%

ஒரு சாராசரியான நாளிதழ் வாசிக்கிற தமிழனுக்கு கூட
ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு காரணம் இந்திய
அரசுதான் என்பது தெரிந்திருக்கிறது என்பதை
இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.விடுதலைப்
புலிகள்தான் தமிழ் மக்களின் அவலங்களுக்கு
காரணம் என்கிற அந்த 19.8% சதவிகிதத்துக்குள்
யார் யார் எல்லாம் வருவார்கள் என்று பார்க்கலாம்.
அமைப்புகள்,கட்சிகள்,இயக்கங்கள் தாண்டி
பார்ப்பனர்கள் அணைவரும்,இந்திய அரசு,காங்கிரஸ்,
கருணாநிதி,ஜெயலலிதா,சி.பி.எம்,அ.மார்க்ஸ்,
ஷோபாசக்தி போன்ற அறிவுஜீவிகள்.புலிகளுக்கு
எதிரான இவர்களின் குரலோடு மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் குரலும் இணைந்தே ஒலிக்கிறது என்பதே
போதும் இவர்கள் அரசியல் யாருக்கானது
என்பதை அறிய.

முடிந்தது.

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 1


கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா,ச்சே ச்சே
மருதையன்(ர்)வெளியிட்ட அறிக்கையை இனியொரு
இணையத்தில் வாசிக்க நேர்ந்தது.
http://inioru.com/?p=4726
தொடர்ச்சியாக இவர்களின் கட்டுரைகளுக்கு பதில்
அளித்துக்கொண்டு இருப்பது சலிப்பை தருகிறது.
அதே நேரம் பதில் அளிக்காமல் விட்டுவிட்டால்
இவர்கள் தங்களுக்கு கட்டமைத்திருக்கும்
புரட்சிகர முகமூடி நிலைத்துவிடும் அபாயமும்
இருக்கிறது.வேறு வழியில்லை என்பதால்
இந்தப் பதிவு.


தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மக்கள்
ஆதரவு எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவு கட்சிகள்
விரும்பவில்லை என்று முரண்பட்ட பதிலோடு
துவங்கி இருக்கிறார் மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் பொதுச்செயலாளர்.தமிழ்நாட்டில்
ஏற்படும் மக்களின் எழுச்சியும்,போர்க்குணம்
கொண்ட போராட்டங்களும்தான் ஈழத் தமிழர்கள்
மீது நடந்துகொண்டு இருந்த இனப்படுகொலையை
தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில்,அந்த
எழுச்சியை தங்களின் தேர்தல் அரசியல்
இலாபங்களுக்காக தடுத்து நிறுத்தியவர்கள்
எப்படி புலி ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
மக இக வினரை புரட்சியாளர்கள் என்பது
எத்தகைய அபத்தமோ அத்தகையதுதான்,
தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களை
புலிகள் ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்காக
போராடுபவர்கள் என்பதும்.


தங்கள் போராட்டங்களின் நோக்கங்களாக இவர்கள்
சொல்லி இருக்கும் கருத்துக்கள் மீதான எதிர்
வினையை இதே பதிவில் வேறு ஒரு இடத்தில்
வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்னால்
தமிழகமெங்கும் இவர்கள் நடத்தியதாக கூறிக்
கொள்ளும் போராட்டங்களின் யோக்கியதையை
பார்க்க வேண்டி இருக்கிறது.நான்கு பேரை
வைத்துக்கொண்டு நாற்பது பிளாக்குகளில்
எழுதிக்கொண்டு இருப்பதாலேயே மக இக வினர்
ஏதோ தமிழகத்தின் மாபெரும் புரட்சிகர சக்திகள்
என்று ஒரு தோற்றம் இணைய உலகில்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அந்த மாயையையே
முதலில் கேள்விக்கு உள்ளாக்கி உடைக்க
வேண்டி இருக்கிறது.நாற்பது இலட்சம் மக்கள்
வசிக்கும் கோவை பகுதிகளில் இவர்கள் ஒரு
ஆர்ப்பாட்டம் நடத்தினால இருபதிலிருந்து
முப்பது பேர் மட்டுமே பங்கேற்பார்கள்
என்பதுதான் நிதர்சனமான் உண்மை.


அரசியல் உணர்வு கொண்ட மிகச்சிறிய பிரிவினரைத்
தவிர்த்து பெரும்பாலான மக்களுக்கு மக இக என்று
ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே தெரியாது.
அரசிடம் அனுமதி வாங்கி இவர்கள்,நகரங்களிலும்,
மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் செய்தது
உண்மையாக இருக்கலாம்.திருச்சியிலும்,
சென்னையிலும் ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின்
முன்பாக போராட்டம் நடத்தி கைதானதை
குறிப்பிடும் இவர்கள்.மாலை ஆறு மணிக்கு
மேல் விடுவிக்கப்பட்ட கதையையும்
சொல்லலாமே எது இவர்களைத் தடுக்கிறது?


ஏற்கனவே சொன்னது போல மக இக என்கிற அமைப்பு
இருப்பதே பலருக்கும் தெரியாது என்பதே உண்மையாக
இருக்க,இவர்களின் மாணவர் அமைப்புதான்
தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டிப்
போராடியது என்பது அப்பட்டமான மோசடியாகும்.
அணைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு என்று
ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமே மாணவர்கள்
போராடிக்கொண்டு இருந்தனர்.ஈழத்தையும்,
புலிகளையும் ஏற்றுக்கொண்ட பல்வேறு
அமைப்புகளிலும் அங்கம் வகித்த,வகிக்காத
மாணவர்கள் தங்களுக்குள் இணைந்து நின்றுதான்
போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.ஒரு
கட்டத்துக்கு மேல் சரியான வழிகாட்டல் அற்ற
நிலையிலேயே மாணவர்களின் போராட்டங்கள்
தேங்கிப்போயின.


தர்க்கரீதியாக வேறு ஒரு விசயத்தின் மூலமாக இதை
நிறுவலாம்.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்
பாதையை மக்களநடமாட்டம் இல்லாத பகுதிக்கு
விடுதலைச்சிறுத்தைகள் திருப்பிய போது
சத்தமேயில்லாமல் பின்னால் போனவர்கள் இவர்கள்.
திருமாவும்,வன்னியரசும்,வேல்முருகனும்,
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி இடுகாட்டுக்கு
எடுத்துச்சென்ற போது வேடிக்கை பார்த்தவர்கள்
இவர்கள்.இந்த நிகழ்வுகளை வைத்தே சொல்லி
விடலாம்.இவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்று.
ஈழத்தையும் ஏற்காத,புலிகளையும் ஏற்காத இந்த
வீரர்களின் மாணவர் அமைப்புதான் தமிழகத்தில்
மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின்
பின்னனியில் நின்றது என்று சொல்வதை
அயோக்கியத்தனம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கி விட முடியாது என்றே தோன்றுகிறது.


புரட்சிகர அரசியல் என்றால் நேபாள தோழர்களின்
முதுகுக்கு பின்னால் எப்படி ஒளிவார்களோ
அப்படியே முத்துக்குமார் விசயத்தில் இவர்கள்
மீது விமர்சனம் எழுப்பப்பட்டவுடன் இன்று
வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனின்
முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை எழுச்சி
மிக்கதாக்க இவர்கள் போராடினார்களாம்.எழுச்சி
மிக்கதாக நடைபெற வேண்டிய இறுதி
ஊர்வலம் சந்தர்ப்பவாதிகளால் சீர்குலைக்கைப்
படுகையில் எங்கே ஓடி ஒளிந்து கொண்டீர்கள்
என்பதுதானே கேள்வியே?அதற்கு கடைசிவரை
பதிலையே காணவில்லையே.


ஓட்டுக்கட்சி தலைவர்களின் அரசியலை இவர்கள்
விமர்சிப்பது ஒரு புறமிருக்கட்டும்.ஈழத்தமிழர்
மீதான படுகொலை பற்றிய செய்திகள் தமிழகம்
தழுவிய அளவில் ஒரு அரசியல் எழுச்சியை
ஏற்படுத்தியது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்று
அடுத்த பொய்.தமிழக அரசின் உளவுத்துறை
மாணவர்களின் மத்தியில் தோன்றக் கூடிய
எழுச்சியை சரியாக கணக்கிட்டுக் கூறி
இருந்ததாலேயே தமிழக அரசு,தமிழகம்
முழுவதும் கல்லூரிகளை காலவரையின்றி
மூட உத்தரவிட்டது.உண்மை இப்படி இருக்க
தமிழகம் தழுவிய எழுச்சி ஏற்பட்டதாக கருத
முடியாது என்று கூறுவதை என்னவென்பது ?
மேலும் முத்துக்குமாரை தொடர்ந்து
தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காக
தங்களின் உயிரை பலரும் ஈகையாக தந்து
கொண்டிருந்த காலமது என்பதை எவ்வளவு
சாமர்த்தியமாக மறைக்கிறார்கள்.எப்படா
கல்லூரிகளைச் சாத்துவார்கள் என்று பார்த்துக்
கொண்டு இருந்துவிட்டு,மூடிய
கல்லூரிகளுக்கு மாணவர்களைத் திரட்டப்
போனால் மாணவர்களை திரட்ட
முடியாமல்தான் போகும் வீரர்களே.


போகிற போக்கில் புலிகளுக்கு எதிராகச் சேறடிப்பதில்
தினமலர்,துகளக் சோ,இந்து ராமை மிஞ்சியவர்கள்
இவர்கள் என்பது நாம் அறிந்த விசயம்தான்.அதில்
ஒன்று புலிகள் இஸ்ரேலின் உளவுத்துறைக்காக
போதைப்பொருள் கடத்தினார்கள் என்பது.
அதற்கான ஆதாரங்களை முதுகில் செருகிக்
கொண்டே அலைகிறார்களா என்பது இன்றுவரை
சிதம்பர ரகசியமாக இருக்கிறது.ஆதாரப்பூர்வமான
குற்றசாட்டுகளையே கூறுவதாக சத்தியம் செய்யும்
இவர்களிடம் நாம் கேட்பது ஒன்றுதான்.2008
இல் இருந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
இவர்கள் நடத்திய போராட்டங்களில் கைதான
இவர்களின் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள்,
வழக்குரைஞர்கள்,ஆண்கள்,பெண்கள்,நிர்வாகிகள்
பற்றிய விவரம்,அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட
வழக்குகள்,வழக்குகளின் இன்றைய நிலை
பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை
வெளியிட்டு உங்களின் நேர்மையை
பறைசாற்றுங்கள் முதலில்.


ஈழத்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான
அங்கீகாரம் தமிழக மக்களிடம் இல்லை என
அடுத்த கண்டுபிடிப்பு.ஆனந்த விகடனில்
வந்த கருத்துக்கணிப்பு என்று நினைக்கிறேன்.
ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழமே
தீர்வு என்றுதான் பெரும்பாலான தமிழர்கள்
வாக்களித்திருந்தார்கள்.மேலும் புலிகள்தான்
ராஜீவ்காந்தியைக் கொன்றார்களா என்பது
இன்றளவும் விவாதத்துக்குறிய விசயமாக
நீடித்தாலும்,ராஜிவ்காந்தியின் கொலைக்காக
பிரபாகரனை தண்டிக்க வேண்டுமா என்கிற
கேள்விக்கு கூடாது என்றே பெரும்பாலான
தமிழர்கள் வாக்களித்திருந்தார்கள்.இந்த
நிகழ்வின் ஊடாக வெளிப்படும் ராஜிவ்காந்தி
கொலையை தமிழக மக்கள் மறந்து
விட்டார்கள் என்கிற விசயத்தோடு,
பெரியாருக்குப் பிறகு தமிழகத்தில் இந்திய
அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட
பார்ப்பன இந்தியதேச பக்தியையும் கூட
தமிழக மக்கள் கடந்து வர
துவங்கியுள்ளனர் என்பதும் புலப்படுகிறது.