Sunday, November 13, 2011

கவிதை.

ஒளியால் நடுங்கும்
ஒரு கிணற்றின் விளிம்பில்
அன்புடன் மட்டுமிருப்பது
காணாமல் அடித்துகொள்வதாக
மட்டுமே இருக்க முடியும்


தவிர்க்கவியலா
அபூர்வ கணங்களும்
ஓய்வெடுக்க சென்றுவிட்டன
நிரந்தர விடுமுறையில்


ஒற்றை புன்னகையால்
ஓடும் உயிர் நதி
தனிக்குரல் பறவையின்
தாகம் தீர்ப்பதில்லை

Tuesday, November 8, 2011

கவிதை

வலி
அச்சமேற்றும்
ஊளைச் சத்தங்கள்
சுடலைக் காற்றில்
சுவாசம் திணறினாலும்
வழிகாட்டிகள் வாழ்ந்துகொள்ள
வாழ்வை தருவதாயில்லை


எனக்கானவை அல்லாத
எல்லா மையங்களையும்
அழித்தபின்
அடைவதென்ன


புறவாசல் இல்லாத
புதிய சொர்க்கம்
இருக்குமெங்காவது

Friday, November 4, 2011

கவிதை

உறைந்த
மேகமற்ற வானில்
ஆடையின்றி
அன்பின்
தாந்த்ரீக நடனங்கள்


மெல்லிய தூறல் விழும்
காத்திருப்புகளின்
காலங்களில்
ஊடறுத்துச் செல்லும்
மயானங்களின் அமைதி


புறக்கணிக்கப்பட்ட
உவமையற்ற
அழகான சோகங்களின்
சுடரனையும்
தூர தூரங்களின்
தீபங்களில்