Saturday, July 4, 2009

காலச்சுவடின் கதாகலாட்சேபம்

தமிழக சிற்றிதழ்கள் ஈழத்தமிழர்கள் மீது உலக மேலாதிக்க சக்திகளும்,பிராந்திய துணை வல்லரசாக முயன்றுகொண்டிருக்கும் இந்தியாவும் கட்டவிழ்த்துவிட்ட இனபடுகொலையை அரசியலற்ற விதத்தில் மனித அவலங்களாக முன்வைக்கும் போக்குக்கும்,புலிகளை தவிர்த்துவிட்டே ஈழ அரசியல் பேசப்பட வேண்டும் என்கிற இந்திய அதிகார வர்க்கத்தின் நோக்கங்களை அறிவுஜீவித்தன மேட்டிமைத்தனத்திலும்,ஈழ மக்கள் மீதான குரூரங்கள் ஒரு சராசரி மனித உயிரியின் மீது ஏற்படுத்தும் குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல்,ஆனால் அந்த அவலங்களால் தங்கள் மனிதம் காயப்படுத்தப்பட்டு,மானுட வாழ்வில் அந்நியமாதலை உணர்வதாக நடிப்பவர்களின் போக்குக்கும் அடையாளமாக விளங்கிய உயிர்மை இதழை வாங்குவதை சென்ற மாதத்தோடு நிறுத்திகொண்டபின் அந்த இதழுக்கு செலவு செய்த குறுந்தொகையை என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு காலச்சுவடு இதழை வாங்கிக்கொண்டு வந்தேன்.


அப்படியே இதழின் பக்கங்களை புரட்டிக்கொண்டு வந்ததில் தமிழக சிற்றிதழ்களில் சற்று அதிகமாகவே பக்கங்களை ஈழ பிரச்னைக்கு ஒதுக்கி இருந்ததை காண முடிந்தது ஆறுதலாக இருந்தது.


தலையங்கத்தில் துவங்கி படிக்க ஆரம்பித்ததும் ஆறுதல் துவக்கத்திலேயே வடிய ஆரம்பித்துவிட்டது.


குருதி தோய்ந்த ஒரு கொடி என்று ஆரம்பித்திருக்கும் தலையங்கம் விடுதலைப்புலிகளை முறியடித்துவிட்டதாக சிங்கள ஆளும் கும்பலும்,இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள காடையர் கூட்டமும் தென்னிலங்கையில் வாழும்,சிங்கள அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாத தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளையும்,சிங்கள அரசின் இனக்கொலை யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையும் மேலும் ஆயிரக்கணக்கானோர் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் ஊணபடுத்தபட்டதையும் குறிப்பிட்டுவிட்டு, சர்வதேச சமூகங்களின் உதட்டளவு கண்டனங்களையும் கோரிக்கைகளையும் முற்றாக புறக்கணித்துவிட்டு இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் இந்த படுகொலையை சிங்கள அரசு நடத்தி முடித்திருப்பதாக முடித்துகொள்கிறது.


இந்தியாவையும் சீனாவையும் குறித்துவிட்டு இதே அளவுக்கு ஈழ போராட்டத்தை ஒடுக்குவதில் துணை நின்ற பாகிஸ்தானை பெயரோடு குறிக்காமல் தவிர்த்தது ஏன் என்கிற கேள்வி எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.


காலம் காலமாக இந்திய அதிகாரவர்க்கத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் பார்ப்பன பனியா சக்தியினர் தாங்கள் இந்திய மக்கள் மத்தியில் கட்டமைத்த பாகிஸ்தானின் மீதான் வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசபக்தியை பெயரளவுக்கு கூட கேள்வி கேட்க விரும்பாத மனநிலையையும்,ஈழ விடுதலை போராட்டம் தமிழக மக்களிடம் கிளப்பிவிட்டிருக்கும் தமிழ் தேசிய இன அடையாளம் பற்றிய விழிப்புணர்வை கூர்மைப்படுத்த விரும்பாத இவர்களின் தந்திரத்தையும், அதன் பின்னால் இருக்கும் அவர்களின் சொந்த வாழ்வியல் மற்றும் அரசியல் நலன்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய,மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மக்களை கொன்று குவித்த பாகிஸ்தானோடு சேர்ந்துகொண்டு ஈழ தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இந்தியாவை பற்றி குறிப்பிட்டுவிட்டு,அப்படியானால் பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்றா என்ற கேள்வியை எழுபிவிட்டு சென்ற தோழன் முத்துகுமாரின் கடித வாசகங்கள் மனதில் நிழலாடி சென்றது.

வேறு வழியில்லாமல் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களை ராணுவத்தின் அழைப்பை ஏற்று வந்ததாக முரண்பாடுடன் துவங்கும் அடுத்த பகுதி இலட்சகணக்கான தமிழர்கள் முகாம்களில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதையும்,போரில் பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதையும், தன்னைத்தானே தமிழின தலைவராக அறிவித்துக்கொண்ட தமிழக முதல்வர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதையும் குறித்து செல்கிறது.


தாங்கள் நடத்திய போராட்டங்களில் புலிகொடியோடு பங்கேற்ற புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளின் அரசியலையும் வன்முறைகளையும் ஏற்காதவர்கள் என்கிற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சிங்கள ராணுவத்தின் கடும்போக்கு அவர்களை புலிகளின் ஆதரவாளர்களாக மாற்றியிருப்பதாக வெகு வினோதமான கருத்தை முன்வைத்து புலம் பெயர் தமிழர்கள் புலிகள் மீதும் ஈழ விடுதலை மீதும் வைத்திருந்த நம்பிக்கையை மிரட்டலின் மூலம் சாதிக்கப்பட்ட ஒன்றாக அவதூறு ஒன்றையும் அள்ளி வீசி செல்கிறது தலையங்கம்.

புலிகளின் தலைமையில் நடைபெற்றுவந்த போர் முடிவடைந்துவிட்ட நிலையில் தமிழர்களின் மனதில் உருவாகியுள்ள அச்ச உணர்வு இன சிக்கலை கூர்மைபடுத்துவதற்க்கே வழிவகுக்கும்,இலங்கையில் பயங்கரவாதம் யூகிக்க முடியாத வன்மையோடும் பழியோடும் மீட்டெடுக்கபடுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கின்றன.

மேலே உள்ள பத்தி அந்த தலையங்கத்தில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டது.

பயங்கரவாதம் என்கிற சொல்லை புலிகள் நடத்திய போராட்டத்தைத்தான் குறிக்க பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய பெரும் புத்திசாலித்தனம் தேவை இல்லை.

தங்கள் இராணுவ பொருளாதார நலன்களுக்காக ஈவு இரக்கமற்ற இனபடுகொலையை கட்டவிழ்த்துவிட்ட உலக மற்றும் இந்திய அரசுகளையே போர்குற்றம் இழைத்த சிங்கள ஆளும் வர்க்க கும்பலை தண்டிக்கவும்.ஈழ தமிழ் மக்களுக்கு உரிமைகள் அளிக்க கோரும் விண்ணப்பமாகவும் முடிந்து போகிறது அந்த அபத்த களஞ்சியமான தலையங்கம்.


ஓட்டுப் பண்ணை என்கிற பெயரில் கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரையில் திமுக மீதும் அதன் தலைவர் கருணாநிதி மீதும் வைக்கும் கடுமையான விமர்சனங்கள் மீது நமக்கு உடன்பாடுகள் உண்டென்றாலும் அந்த விமர்சனங்கள் அனைத்தும் இந்திய முதலாளிகளாக வளர்ந்துவிட்ட திமுக கம்பெனி பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாம் இருப்பது இந்திய தேசியம் பார்ப்பன தேசியம்தான் என்பதை முற்றுமுழுதாக புரிந்துகொண்ட அந்த தேசிய மாயையை சிறிதும் உடைக்க கூடாது என்கிற அவர்களின் அவஸ்தையை நமக்கு புரிய வைக்கிறது.

மேலும் பல சந்தேகங்களும் முரண்பாடுகளும் இன்னும் தீர்க்கப்படாத ராஜிவ்காந்தி கொலைக்கு புலிகளை பொறுப்பாக்கி அந்த படுகொலையை அவர்களின் அரசியல் மூடத்தனம் என்று விளிக்கும் கண்ணன் தமிழக மக்கள் அந்த நிகழ்வை மறந்துவிட்டதை வசதியாக தான் மறந்து திரும்ப இதை நினைவூட்டுவதன் மூலம் தமிழகத்தில் கடந்த எட்டுமாதங்களுக்கும் மேலாக நிலவிய ஈழ தமிழர் ஆதரவு போராட்டங்களைஎல்லாம் மாயை என்று ஒதுக்கி தமிழகத்தில் இன்னும் ஈழ ஆதரவு போராட்டங்ககளுகான தளம் முழுமையாய் உருவாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.


ஓட்டுக்கட்சிகளின் சந்தர்பவாதங்களையும்,எல்லாவிதமான அரசியல் தத்துவ போலித்தனங்களையும் அடையாளம் கண்டுகொண்டு எதிர்த்து போராட போகிற இளைய தலைமுறையின் ஒரு முன்னனியை தோழன் முத்துகுமார் உருவாக்கி சென்றிருப்பதை நாம் அவருக்கு நினைவூட்டுவோம்.


ஏறக்குறைய இந்திய தேசியத்தாலும் அதன் தமிழக அடிவருடியான தமிழக முதலமைச்சராலும் மறைமுகமான நெருக்கடி நிலையே தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டு போராட்டங்கள் நசுக்கப்பட்டதை மறைத்து, சட்டரீதியான தவறுகளை கொண்டிருந்ததால் சிறையிலிருந்து போராட்ட முன்னணியாளர்கள் சிலர் விடுவிக்கப்பட்டதை இந்திய ஜனநாயகத்தின் சாதனையாக வேறு காட்டிகொள்கிறார் கண்ணன்.


இதையே ஒரு முன்மாதிரி அமைப்பாக வைத்து தமிழ் தேசியம் என்கிற கருத்தியலே எப்போதும் பாசிசத்தின் சாயலுடன் செயல்படுவதாக அடுத்த அவதூறை முன்வைக்கிறார்.

இந்தியா முழுக்க இந்துத்துவ பாசிசம் எழுசியுற்றதன் நீட்சியாகவே தமிழ் தேசிய கோரிக்கை எழுப்பும் சிலரிடம் காணப்படும் பாசிச கூறுகளை நாம் பார்க்க முடியும் என்பதை இவர் வசதியாக மறந்துவிட்டதன் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏதோ தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் இந்திய அரசை சங்கடபடுத்தியதால்தான் ஈழ ஆதரவு போராட்டங்கள் பின்னடைவை சந்தித்து போலவும்,இந்திய தேசியமும் அந்த பாரிய நிலபரபுக்குள் வாழும் மக்களும் சனநாய உரிமையில் திளைத்துகொண்டிருபதாகவும் முழு பூசணிகாயை சோற்றி மறைக்கும் வேலையை திறம்பட செய்திருக்கிறார் கண்ணன்.


ஒட்டுமொத்தத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாக்கும் கடமையில் இருந்தும,இந்திய தேசிய கட்டமைப்பின் உள்ளுறையும் ஏகாதிபத்திய,பனியா,பார்ப்பன நலன்களை முன்னிறுத்தும் நடவடிக்கைகளில் இருந்தும் எள்ளளவும் விலகாமல்,அதே நேரத்தில் புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருக்கும் வணிக வாய்ப்பை கெடுத்துகொள்ளாமலும் கம்பியின் மேல் நடக்கும் மனிதனின் சாதுரியத்தோடு கதாகலாட்சேபத்தை நடத்தி முடித்திருக்கிறது காலச்சுவடு.

No comments:

Post a Comment