Monday, August 24, 2009

சான்டினிஸ்டுகளும் விடுதலைப்புலிகளும் பகுதி - 1

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும்
தமிழர்களும்,தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு சக்திகளும்
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு முடங்கி
போய்விடுவார்கள் என்று கருதியவர்களுக்கு இன்று
ஏமாற்றமே பதிலாக கிடைத்திருக்கிறது.சிங்கள அரசின்
தடுப்பு முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி
மிக மோசமான மனித உரிமை மீறல்களின் மத்தியில்
இருத்தப்பட்டிருக்கும் மக்களை அவர்களின் சொந்த
வாழ்விடங்களில் மீள் குடியேற்ற உலக நாடுகளை
வலியுறுத்துவது.மகிந்த ராஜபக்ஸேவையும் அவரது
கும்பலை சேர்ந்தவர்களையும் போர்க்குற்றவாளிகளாக
அறிவிக்க கோருவது என்று தங்கள் செயல்பாடுகளை ஈழ
ஆதரவாளர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


இது ஒருபுறம் இருந்தாலும் ஈழவிடுதலைக் கோரிக்கை எழக்
காரணமான சூழல் இன்றுவரை மாற்றப்படாத நிலையில்
விடுதலைப்புலிகளின் மேலான விமர்சனம் என்கிற பேரில்
விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையே சிதைக்க
முனைபவர்களால் இணையத்தள விவாத மேடைகள்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.இதுபோன்ற
கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு நாம் தொடர்ந்த
எதிர்வினைகள் செய்துகொண்டிருப்பது மட்டுமே
கருத்தியல் ரீதியாக அவர்களை அம்பலப்படுத்த உதவும்.


இந்த விமர்சனப் போக்குகளில் பின்நவீனத்துவ,இடதுசாரிய
அடையாளங்களை முன்நிருத்தி பேசுபவர்களை மட்டும் நாம்
கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.


மாவட்டத்துக்கு பத்து பேர் படிக்கிற இதழை வெளியிட்டு
முப்பது பேருடன் மாபெரும் ஆர்பாட்டங்களை நடத்தி
இந்திய அதிகாரவர்க்கத்தை நடுங்க வைக்கும் தங்களை
சார்ந்திராமல் இந்திய ஆளும்வர்க்கத்தோடு புலிகள்
சமரசப்போக்கை கடைபிடித்ததால்தான் இந்த பேரழிவு
நிகழ்ந்ததாக கூறும் மக்கள கலை இலக்கிய கழகத்தினர்
அவர்களில் முக்கியமானவர்கள்.இதில் குறிப்பிடத்தக்க
விசயம் வேறு ஒன்றும் உள்ளது.இந்த இந்திய புரட்சிக்
கட்சிக்கு தமிழ்நாட்டை தாண்டி வேறு மாநிலங்களில்
ஒரு கிளை கூட இலலை என்பதுதான் அது.


தமிழகத்தில் மட்டும் கட்சி கட்ட முப்பத்தைந்து ஆண்டுகள்
ஆகியிருக்கிறது இவர்களுக்கு.இந்தியா முழுவதும் கட்சி
கட்ட எப்படியும் இவர்களுக்கு ஒரு முன்னூறு ஆண்டுகள்
தேவைப்படும்.இவர்கள் இந்தியாவில் புரட்சி நடத்தி
ஆட்சியை பிடிக்கும்வரை புலிகள் தங்கள் போராட்டத்தை
தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா
தெரியவில்லை.


ஒன்றே கால் கோடி சிங்களர்களில் ஒற்றைப் பெயரைக்
கூறி, அந்த நபருடன் ஐக்கிய முன்னனி கட்டி சிங்கள
பாஸிஸ்டுகளை எதிர்த்துப் போராடும் வாய்ப்பை புலிகள்
தவற விட்டதால்தான்இந்த பேரழிவு நிகழ்ந்ததாக பஜனை
பாடும் இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் என்றே
கருத வேண்டியிருக்கிறது.


இந்திய அமைதிப்படை ஈழத்தைவிட்டு வெளியேறுகையில்
நாற்பது இலட்சம் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து
கொண்டிருந்தார்கள்என்று கூறியது.இன்றைக்கு முப்பது
இலட்சம் பேராவதுஇருப்பார்களா தெரியவில்லை.தமிழ்
மக்களை படுகொலை செய்வது,உள்நாட்டுக்குள்ளும்
வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயரச் செய்வது,
சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலங்களை
ஆக்கிரமிப்பது என்ற தனது நீண்ட கால இன அழிப்பு
திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் சிங்கள அரசு,புலிகள் இல்லாமல்
இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்று ஒரு
இனம் இருந்தது என்பதற்கான அடையாளம் கூட
இல்லாது அழித்திருக்கும் என்பது போன்ற விசயங்கள்
இவர்களுக்கு பரிசீலிக்க தேவையற்ற விசயங்களாக
தெரிவது நம்மால் இன்றுவரை புரிந்துகொள்ள
இயலாததாவே உள்ளது.


ஈழத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் சந்தையை
கைப்பற்றவும் கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடத்திக்
கொண்டிருந்த இந்தியாவை களத்தில் எதிர்த்து நின்றது
புலிகள்தான் என்பது போன்ற எளிய உண்மையைக் கூட
காணச் சக்தியற்ற இவர்களின் கண்களுக்கு புலிகள் இந்திய ஆளும்வர்க்கத்துடன் கடைபிடித்த பெயரளவிலான
சமரசப்போக்கை காணும்போது மட்டும் நெற்றிக்கண்ணும்
திறந்துகொள்கிற மர்மம் இன்றுவரை விளங்கவில்லை நமக்கு.


இவர்களைப் பொறுத்தவரை இயங்கியல் என்பது மனிதனில்
இருந்து குரங்கு தோன்ற வேண்டும் என்பதுதான் போல.நாம்
அறிந்தவரை குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணமித்தான்.
ஒரு தாழ்நிலை வடிவத்திலிருந்துதான் உயர்நிலைக்கு
முன்னேற்றம் நிகழ முடியுமே ஒழியே துவக்கத்திலேயே எந்த
தவறுகளும் பிழைகளும் இல்லாமல் ஒரு அமைப்பு
கட்டப்படுவது எந்த விதத்திலும் சாத்தியமில்லை.இது
புலிகளுக்கும் பொருந்தும்.


சாத்தியமான அளவுக்கு தர்க்கரீதியா அலசி ஆராய்ந்தாலும்
தற்போதைய பின்னடைவுக்கு புலிகளின் அரசியல்ரீதியான
மிகச் சில தவறுகளை மட்டுமே பொறுப்பாக்க முடியாது
என்கிற முடிவுக்குத்தான் நம்மால் வர முடிகிறது.


மார்க்சிய முன்னோடிகளின் எழுத்துக்களை அகராதியாக
பயன்படுத்துவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பைபிளாக கருதுபவர்களாக மட்டுமே இவர்களை கருதிக்
கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.சர்வதேச நாடுகள்
குறிப்பாக இந்தியா ஈழத்தின் இனபடுகொலையில் வகித்த
பாத்திரத்தை எளிமைப்படுத்துகிற போக்குக்கு உதவி
செய்கிற எழுத்துக்களுக்கு இடதுசாரிய சாயம் பூச
முயலுகிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.


அ.மார்க்ஸ் மற்றும் ஷோபாசக்தி,சுகன் போன்றவர்களை
ஏற்க்கனவே அம்பலப்படுத்தி எழுதி விட்டதால் அது பற்றி
அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.ஆனாலும்
மார்க்சிய அரிச்சுவடி நூல்களை கூட புரட்டிப் பார்க்காத
இவர்களின் ரசிகர்கள் சோசலிசத்தின் மேல் திடீர் காதல்
கொண்டு புலிகளை விமர்சிக்க புகுந்திருப்பதைப் பார்க்க
வேடிக்கையாக இருக்கிறது.மனநெருக்கடிக்கு உள்ளான
மார்க்சியர்களின் எழுத்துக்களுக்கு நேரடியாகவே இவர்கள்
தாவிவிட்டதை இவர்கள் எழுத்துகளே நமக்கு காட்டிக்
கொடுக்கின்றன.


விளிம்பு,மையம்,பெருங்கதையாடல்களை நிராகரித்து விளிம்பு
நிலையினரின் அடையாள அரசியலை உயர்த்திப் பிடிப்பது
என்று பேசும் இவர்கள்,திருநங்கைகள்,உடல் ஊனமுற்றோர்,
தலித்திய அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் என்று சகல
விளிம்புநிலையினரும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பை
தடுத்து நிறுத்தும்படி கோரியும்,அந்த குரல்களை எல்லாம்
புறங்கையால் தள்ளிவிட்ட பாசிச இந்திய அரச கட்டமைப்பு
பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள்.?


தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றான நிகராகுவாவில்
அமெரிக்க கைப்பாவையாக ஆட்சியில் இருந்த
அனஸ்டாசியோ சோமோசாவுக்கு எதிராக வீரம்மிக்க
கொரில்லா போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்ற சான்டினிஸ்டாக்களின் ஆயுத போராட்டதோடு
விடுதலைப்புலிகளை ஒப்பிடுவதன் மூலம் நாம்
ஈழ விடுதலைப் போரை புரிந்துகொள்ள முயலலாம்.


மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலைப் புரட்சிக்கு
மார்க்சிய லெனினிய கட்சி கட்டுவதா அல்லது கொரில்லா
ராணுவ அமைப்பை கட்டுவதா என்கிற கேள்விக்கு புலிகள்
கொரில்லா அமைப்பைத் தேர்ந்தெடுத்தன் நியாயம் புரிந்து
கொள்ளத்தக்கதே.கட்சிகள் தலைமைதாங்கி முன்னெடுத்த
ஆயுத போராட்ட நடவடிக்கைளின் மூலம் அரசு அமைத்த
ரஸ்ய,சீன,வியட்நாமிய,நாடுகளில் இன்றைக்கு
முதலாளித்துவம் முற்றாக மீட்டமைக்கபட்டுள்ள நிலையில்
கொரில்லா அமைப்பாக துவங்கிய கியூபாவில் மட்டுமே
இன்றைக்கு சோசலிசம் சார்ந்த அரசு நிலவிக்
கொண்டிருக்கிறது.


சமீபத்தில் கீற்று இணையத்தில் புலிகளுக்கு ஆதரவான
கட்டுரை மீது எதிர்வினையாற்றிய நண்பர் கூறிய கருத்து
ஒன்றில் புலிகளும்,இந்திய மாவோயிஸ்டுகளும்
போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களை
தள்ளி வைக்கும் குட்டிமுதலாளித்துவ மனபான்மையில்
செயல்படுவதாக கூறி இருந்தார்.


அதற்கு பதில் அளிக்கும் முன் கொரில்லா யுத்தம் பற்றி
என்னும் தனது நூலில் சேகுவேரா சொல்லியிருக்கும்
கருத்தைப் பற்றி பார்ப்போம்.


அரசமைப்பு சார்ந்த சட்டத்தன்மை கொண்ட,முதலாளித்துவ
சுதந்திரங்களை பேணும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு
அரசுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்ட வழிவகைகள்
முற்றிலும் தீராத நிலையில் புரட்சிகர இயக்கம் ஆயுதப்
போராட்டத்தை தொடங்கக் கூடாது.இத்தகைய நிலையில்
கொரில்லா இயக்கம் வளர முடியாது.


அரசியல்ரீதியான போராடங்களை சிங்கள அரசு
மூர்க்கத்தனமாக ஒடுக்கிய பிறகே புலிகள் ஆயுதங்களை
எடுத்தனர்.சட்டபூர்வ போராட்ட முறைகளில் மக்கள்
நம்பிக்கை இழந்த இடங்களில் மட்டுமே இந்திய
மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்தி இருக்கின்றனர்.



நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்ற மாவோவின்
சிந்தனைக்கு ஒத்திசைவாக அரசு ஒடுக்குமுறை நிலவும்
பிற்பட்ட பகுதிகளில் தளங்கள் அமைத்து நகர்புறங்களை
நோக்கி முன்னேற துவங்கையில் அரசியல் போராட்ட
வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது,பிறகு ஆயுத
அரசியல் போராட்ட வடிவங்களை தக்க விதத்தில்
பயன்படுத்தி எதிரியை ஆட்சியில் இருந்து அகற்றுவது
என்கிற் வழிமுறைகளை கடைபிடிக்கும் இந்திய
மாவோயிஸ்ட்டுகளை குட்டிமுதலாளித்துவவாதிகள்
என்று எவ்வாறு கூற முடியும்.நல்வாய்ப்பாக
மாவோவையே குட்டிமுதலாளித்துவவாதி என்று
சொல்லாமல் போனதையிட்டு மகிழ்சி அடையலாம்

Tuesday, August 18, 2009

வன்னியில் நடந்தது என்ன?

வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் என்று பிரபாகரனே
சொல்வது போல நிகழ்சிகள் அமைந்துவிட்டதாகக் கூறி தனது
அவதூறுகளும் தர்க்க முரண்பாடுகளும் கொண்ட வன்னியில்
என்ன நடந்தது என்கிற கட்டுரையை நிறைவு செய்திருக்கிறது
இம்மாத காலச்சுவடு இதழ்.சரியாகவே சொல்லியிருக்கிறார்
பிரபாகரன் என்றே நமக்கும் தோன்றுகிறது.வென்றவர்கள்
எழுதுகிற சரித்திரத்தில் உண்மைகள் இருக்காது என்பதை
மிகத் தெளிவாக புரிய வைத்திருக்கிறது காலச்சுவடு.


நடைபெற்ற போரில் இருதரப்பும் செய்த செயல்களைப் பற்றிய
உண்மைகள் சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைசாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் மக்களிடமே தேங்கிக் கிடக்கின்றன,
இது வரையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை
படுகொலை செய்து,ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை நாட்டை
விட்டு வெளியேற வைத்திருக்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களையே மிக சாதாரணமாக சுட்டுக்
கொல்லும் அரசின் சிறைகளில் இருக்கும் மக்கள் வெள்ளை
வேன் பற்றிய பயம் இல்லாமல் இருப்பது அசாத்தியமானது.


உண்மைகளை அந்த மக்களிடம் இருந்து பெறுவது இன்றைய
சூழலில் எந்த விதத்திலும் சாத்தியமில்லாத நிலையில்
சிங்கள் அரசின் போர்க்குற்றங்களை பூசி மெழுகி முகாமில்
இருந்து எழுதப்பட்டதாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிற
கடிதம் கேலிக்குறியதாக இருக்கிறது.நாம் அறிந்தவரை
புலிகளை ஆதரித்து கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள்
தடுப்பு முகாம்களில் ஒட்டபட்ட தகவல்கள்தான் வருகின்றன.



இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள்,சிங்கள அரசின் மூலம்
நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நியாயம் வழங்கப்படுவது எந்த
விதத்திலும் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில்
உலக தமிழர்களின் மனதில் புலிகளை பற்றிய அவதூறுகளை
பரப்புவதன் மூலம் புலிகள் விதைத்துச் சென்றுள்ள விடுதலை
வேட்கையை ஒழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்குவது
மிக இயல்பான ஒன்றுதான்.அந்த வகையிலேயே காலச்சுவடு
தனது வேலையை செய்திருக்கிறது.அந்த நீண்ட கட்டுரையில்
காணப்படும் தர்க்க முரண்பாடுகளை மட்டும் நாம் வெளிக்
கொண்டு வர முயலலாம்.


விடுதலைப்புலிகளிடமிருந்து பிரதேசங்களை பகுதி பகுதியாக
கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,இந்தியாவின்
மின் திட்டத்துக்கு தேவையான சம்பூர் பகுதியை ஆக்கிரமிக்கும்
நோக்கில் போரை துவக்கியதே சிங்கள ராணுவம்தான் என்கிற
உண்மையை மறைத்து விடுதலைப்புலிகளே முதலில் போரைத்
துவக்கியதாக அப்பட்டமான பொய்யை மிக இயல்பாக கூறியே
தனது பத்தியை ஆரம்பித்திருக்கிறார் முகாமில் இருப்பதாகக்
கூறப்படும் அந்த முகமில்லாத பத்தியாளர்.


புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதை அப்போது
வன்னியில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும்,
ஐ.நா உள்ளிட்டசர்வதேச நிறுவனங்களும் கண்டு
கொள்ளாததால் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை
தீவிரப்படுத்தியதாகவும்,ஆனால் மக்கள் தாமாகவே வந்து
இணைகின்றனர் என்று முரண்பட்ட தகவவல்களை
புலிகள் பரப்பியதாகவும் அடுத்த குற்றசாட்டு.போர்நிறுத்தக்
காலத்தில் புலிகளுக்கு எதிராக சிங்கள அரசின் கரங்களை
வலிமைபடுத்தும் விதமாக,அமெரிக்கா தலைமையில்
முன்னெடுக்கபட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற
முழக்கத்தின் கீழ் புலிகளை தடைசெய்த மேற்குலக நாடுகள்,
புலிகளைமேலும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த இந்த
கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரத்தை ஏன் பயன்படுத்திக்
கொள்ளாமல் இருந்தார்கள் என்பது குறித்து பத்தியாளர்
என்ன பதிலை வைத்திருக்கிறார்.?


சிங்கள படையினரின் தாக்குதல் உத்திகளால் புலிகள் திணற
ஆரம்பித்ததாக கூறுகிற பத்தியாளரின் உற்சாகம் நமக்கு
புரிந்தாலும்,சிங்கள அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த
தமிழர்களில் புத்திளம் பருவத்தினரில் இருந்து இளைஞர்கள்
வரை இருபதாயிரம் பேரை சிங்கள ராணுவம் கடத்திசென்று
கொலை செய்ததான தகவல்கள் தான் பெரும்பாலும் நமக்கு
கிடைக்கின்றன,மேலும் ஒரு பதினைந்தாயிரம் பேர் சரணடைந்து
தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசே
அறிவித்திருக்கிறது.நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகளை
களமுனைக்கு அனுப்பாமல் புதிதாக இணைக்கபட்டவர்களை
போருக்கு அனுப்பி புலிகள் பலிகொடுத்தார்கள் என்கிற
பத்தியாளரின் அடுத்த குற்றசாட்டும் காலாவதியாகிவிடுகிறது.


ஆயுதம் ஏந்தாத இளைஞர்களையும் இளம்பெண்களையும்
ஆயிரக் கணக்கில் பிடித்துச் சென்று சிங்கள ராணுவம்
படுகொலை செய்த செயலை மூடி மறைத்து அந்த
உயிரிழப்புகளை புலிகளின் போர் முனைச் சாவுகளாக
சித்தரிப்பதன் மூலம் சிங்கள ராணுவத்தை பாதுகாக்கும்
பத்தியாளரின் நோக்கம்தான் இந்த நீண்ட கட்டுரை
முழுவதும் இழையோடுகிறது.





புலிகளின் ஆயுதங்களை மௌனித்து சரணடையும் முடிவுக்கு
புதிதாக படையணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின்
உயிர்களும் முக்கிய காரணமாக அமைந்தன என்பதை மிக
சுலபமாக மறைத்துவிட்டு புலிகள் மீது அவதூறுகளை அடுக்கிக்
கொண்டு செல்லும் அந்த முகமிலி புலிகளுக்கும் மக்களுக்கும்
மோதல்கள் நிகழ்ந்ததாக கூறுவது நம்பதகுந்ததாக இல்லை.


சிங்கள படையினர் நெருங்க நெருங்க மக்களிடம் அச்சத்தை
பரப்பும் விதமாக புலிகள் பரப்புரையை துவக்கியதாகவும்
சிங்கள் வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட போரிட்டு
மடிவதே மேல்,உயிரினும் மேலானது நாடு,எங்கள் குலத்தமிழ்
பெண்களே உங்கள் கற்பு சிங்களுக்கென்ன பரிசா என்றெல்லாம்
கூறி மக்கள் மத்தியில் கலவரத்தை புலிகள் கிளப்பியதாகவும் 

 எழுதும் பத்தியாளருக்கு இந்த கூற்றுகள் எல்லாம் புலிகளால்
புனையப்பட்ட பொய்கள் என்று தோன்றுகிறதா?





சிங்கள படைகள் கடந்த முப்பதாண்டுகளாக தமிழ் மக்களை
கொன்று வருவதும்,தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்ப்படுத்தி வருவதும் உலகத்துக்கே தெரிந்த விடயங்கள்.
தமிழ் இளைஞர்கள் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று

சிங்கள ராணுவத்திடம் கோத்தபையா ராஜபக்ஸேவே
அறிவித்தது கூட புலிகளால் பரப்பட்ட பொய் என்று
சொல்லாமல் விட்டாரே நம் முகமிலி அதற்காக
சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்




மாவீரர்கள் குடும்பங்கள் என்று பாராமல் ஆள்பிடிப்பில் புலிகள்
இறங்கியதை அடுத்து மக்கள் புலிகளை ஏசத்தொடங்கியதாக
அடுத்த குற்றச்சாட்டு,பிரபாகரனின் மகனும்,மகளும் கூட
அவ்வாறுதான் பிடிக்கப்பட்டார்களா தெரியவில்லை.தங்கள்
மக்களுக்காக மேலும் மேலும் இழக்க மாவீரர் குடும்பங்கள்
முன்வந்ததையே நிகழ்வுகள் காட்டுகிறது.





புதுக்குடியிருப்பை சிங்கள ராணுவம் நெருங்க ஆரம்பித்த
உடன் மக்களை புலிகள் கவசமாக பயன்படுத்தியதாக அடுத்த
குற்றசாட்டு,இது போன்ற குற்ற்ச்சாட்டை சுமத்துகிறவர்களுக்கு
நாம் முன்வைக்க வேண்டிய கேள்வி ஒன்றும் உள்ளது.1995
ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்கள ராணுவம்
முன்னேற ஆரம்பித்தபோது ஐந்து இலட்சம் மக்கள்

புலிகளோடு இடம் பெயர்ந்தார்களே அவர்களையும் புலிகள்
பணயக் கைதிகளாக கூட்டிச் சென்றார்கள் என்று சொல்லப்
போகிறீர்களா?





இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில் கிளிநொச்சியில் போர்
உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் புலிகள்
சீருடைகள் இல்லாமலேயே காணப்பட்டார்கள்,மேலும் சில
பதிவுகளில் சீருடையில் இருந்த நபர்கள் மக்களைத் தடுத்து
திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது.இதன் மூலம் புலிகள்
பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை தனது கேடயமாக
சிங்கள ராணுவம் பயன்படுத்த துவங்கியது என்கிற முடிவுக்கு
வருவதில் பெரிய சிரமங்கள் இல்லை.



புலிகள் பகுதிகளில் இருந்து கடைசிவரை மக்கள் உயிரைக்
காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த டாக்டர்கள் இந்த

கட்டுரையை நபருக்கு பொய்யர்களாக தெரிவது
ஆச்சரியமில்லை என்பதால் அதை தவிர்த்துவிட்டு
அவரின் மற்ற முரண்பாடுகளை அலச முயலலாம்.

வெளியேறும் குறுகிய தொகையினரான மக்களை மனித
கேடயங்களாக சிங்கள ராணுவம் பயன்படுத்துவதையும்,
கணக்கு வழக்கின்றி மக்களை கொல்லத்துவங்கியதையும்
அடுத்தே மாவீரர்கள் குடும்பங்களையும் தங்கள்
ஆதரவாளர்களையும் தவிர்த்த மக்களை இலட்சக்கணக்கில்
புலிகள் வெளியேற்றினர் என்கிற முடிவுக்கு வர முடிகிறது.






300 போர் வீரர்கள் என்கிற ஆங்கில திரைப்படத்தின்
தமிழாக்கத்தை தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு
போட்டுக் காண்பித்து தனது முடிவு இப்படி இருக்கும்
என்று பிரபாகரன் சொல்லியதாக கூறுகிறார் நம் முகமிலி.
புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களிடயே நிகழ்ந்த
ஒரு விசயத்தை இந்த நபர் எப்படி அறிந்தார் என்கிற
கேள்வி எழுகிறது.






மக்களை சந்திக்க தயாராக இல்லாத பிரபாகரன் தனது
இயக்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்தை போட்டுக்
காட்டி தனது முடிவை கூறியதை பக்கத்தில் இருந்து
பார்த்தது போல கூறுவது ஒரு சராசரி நபருக்கு எவ்வாறு
சாத்தியமானது என்கிற கேள்விக்கு கிடைகும் பதில்
போதும் பிரபாகரன் மக்களோடு கொண்டிருந்த
உறவுகளைக் காட்ட.






சிங்கள ராணுவத்தின் மிகமோசமான புதுக்குடியிருப்பு
மருத்துவமணை மீதான தாக்குதலை புலிகள் மீது சிங்கள
ராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதல் என்று சொல்லும்
ஈனத்தனமான செயலையும் எந்த கூச்ச நாச்சமுமில்லலாமல்
செய்யும் முகமிலி அமெரிக்காவால் வழங்கப்பட்ட உளவு
விமானம் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலை
கொண்டிருந்ததை பதிவு செய்த காட்சிகளை வெளியிட்டு
தனது தரப்பை அரசு நியாயப்படுத்திக்கொள்வதை எது

தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் அளிப்பாரா?





சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை மேற்குலகம்
எழுப்ப ஆரம்பித்த காலத்தில் மருத்துவமணையை தங்கள்
தளமாக புலிகள் பயன்படுத்துவது பற்றிய காட்சிபதிவுகள்
சிங்கள் அரசுக்கு கொடுக்கும் அரசியல்ரீதியான பலன்கள்
அபரிமிதமாக இருக்க வாய்ப்பிருந்தும் ஏன் சிங்கள அரசு
அது போன்ற செயலில் ஈடுபடவில்லை என்கிற
கேள்விக்கு இந்த பத்தியாளரின் பதில் என்ன?






மக்களின் மரணங்கள் அதிகரித்தால் மட்டுமே இந்தியாவும்
ஐ.நா சபையும் தலையிட்டு ஏதாவது நடவடிக்கை
எடுப்பார்கள் என்று கருதி சிங்கள ராணுவத்தை கோபமூட்டும்
வகையில் தாக்குதல் நடத்தியதோடு புலிகள் தாங்களும்
மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்ததாக அடுத்த
குற்றச்சாட்டு.அமைதிப்படை என்கிற பெயரில் சென்று
ஆறாயிரம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இந்திய அரசு
மக்களின் உயிரிழப்புகளை கருத்தில் எடுத்து தான்
நடத்திய யுத்தத்தை நிறுத்திக்கொள்ளும் என்று புலிகள்
அல்ல ஒரு சராசரி அரசியல் விழிப்புணர்வு உள்ள மனிதன்
கூட கருத மாட்டான் என்பதை மிக வசதியாக மறந்து
போவது இந்த முகமிலிக்கு மட்டுமே சாத்தியம்.






பாதுகாப்பு வளையம் என்று அறிவித்துவிட்டு அந்த
பகுதிக்கு வந்த மக்களை இலக்கு வைத்தே பெருமளவில்
தாக்குதல்நடத்தி தனது இனபடுகொலையை தீவிரப்படுத்தியது
சிங்களஅரசு என்பதை வசதியாக மறந்துவிடுகிற நம்
முகமிலிக்கு மக்களை புலிகள் பணயக் கைதிகளாக
வைத்திருந்ததாக தோன்றாமல் போனால்தான் ஆச்சரியம்.






மக்களின் உளச்சோர்வையும் பேரவலத்தையும் நீக்கும் விதமாக
புலிகளின் முன்னனித் தளபதிகள்,பிரிகேடியர் தீபன்,
ஆதவன்,விதுசா,துர்க்கா,மணிவண்ணன்,கேனல்
சேரலாதன்,கேனல் ராகேஸ் உட்பட பலருடன் புலிகள்
முன்னெடுத்த தீவிர எதிர்த்தாக்குதல் புலிகளின் வரலாற்றில்
பெரும் தோல்வியாகி பிரபாகரனை நிலையகுலைய வைத்தாக
கூறும் முகமிலி வசதியாக மறைத்துவிட்ட விசயத்தை நாம்
கவனிக்க வேண்டிஉள்ளது.






ஆனையிறவில் தங்கள் முற்றுகைக்குள் இருந்த இருபது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினரை
கொன்றொழிக்கிற வாய்ப்பு இருந்தும் உச்சபச்ச
மனிதாபிமானத்துடன் அவர்களை உயிரோடு வெளியேற
அனுமதித்தன் மூலம் தங்கள் அறவுணர்வையும் மனித
உயிர்களுக்கு மதிப்பளிக்கும் மாண்பையும் வெளிப்படுத்திய
புலிகளுக்கு எதிராக,இந்தியாவால் கையளிக்கப்பட்ட ரசாயன
ஆயுதங்களை பயன்படுத்தியே சிங்கள ராணுவம் எந்த
போரியல் அறமும் இல்லாமல் அந்த வெற்றியை பெற்றது
என்பது நம் முகமிலிக்கு மறந்து போனதில் ஆச்சரியமில்லை.






மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை தனது கட்டுரையின் போக்கில்
வெளிப்படுத்திச் செல்லும் முகமிலி சொல்லியிருக்கும் கருத்து
ஒன்று நம்மை புல்லரிக்க வைக்கிறது.புலிகளின் ஜனனாயக
உள்ளடக்கமற்ற போராட்டத்தின் காரணமாகவே புலிகளை
மேற்குலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையாம்,ஈராக்,
ஆப்கானிஸ்தான் என்று ஈவு இரக்கமற்ற படுகொலைளை
நடத்திக்கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள் புலிகளின்
ஜனனாயக மறுப்பின் காரணமாகவே தலையிடவில்லை என்று
முகமிலி சொல்வதை கேட்கையில் எதைக்கொண்டு சிரிப்பது
என்று தெரியவில்லை.






தமிழகத்தில் முத்துக்குமாருக்கு பிறகும்,போர் உச்சடைந்தபோது
ஐரோப்பிய நாடுகளிலும்,அரசியல்வாதிகளில் தங்கி இராமல்
மக்கள் போராட்டங்களை கட்டமைப்பதிலேயே புலிகளும்
ஈழ ஆதரவாளர்களும் இறங்கினார்கள் என்பது வழக்கம்

போலவே நம் முகமிலிக்கு மறந்து போய்விட்டது நமக்கு
வியப்பைக் கொடுக்கவில்லை.





இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாக சில விசயங்களை
தொகுத்து சொல்லலாம்.





முதலாவது கடந்த இரண்டு தாசாப்தங்களாக மூன்றாந்தர
அரசியல் தலைவர்களையே கண்டிருந்த உலகத்தமிழர்கள்
மத்தியில் வீரத்தையும் அறத்தையும் நேர்மையையும்
கொண்டிருந்த ஒரு தலைமையும் அவரின் அமைப்பும்
மக்கள் மனங்களில் விதைத்துச் சென்ற பெருமித
உணர்வுகளை களைவது.





அரசியலற்ற ராணுவ அமைப்பாக புலிகளை சித்தரிப்பதன்
மூலம் புலிகள் முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்புபோரை
சிறுமைபடுத்துவது புலிகளின் பின்னடைவைக் காட்டி
தேசிய இன விடுதலைக் கோரிகைகளுக்கான
போராட்டங்களின் நியாயத்தை நிராகரிப்பது.






சிங்கள ராணுவம் நிகழ்த்திய ஆயுதமற்ற இளைஞர்கள்,
இளம் பெண்கள்,மற்றும் மக்களின் படுகொலைகளை
மூடி மறைப்பது.






ஐரோப்பிய நாடுகள்,இந்தியா,அமெரிக்கா,பாகிஸ்தான்,
சீனா,ஜப்பான், ரஸ்யா, என்று தங்களுக்குள்
முரண்பாடுகள் கொண்ட நாடுகளாக சித்தரிக்கப்பட்டவைகள்
அணைத்தும் அணிசேர்ந்து நிகழ்த்திய இனபடுகொலையின்
கோரத்தை புலிகளின் அரசியல் ரீதியான சில தவறுகள் மீது
சுமத்துவதன் மூலம் இந்த முதலாளித்துவ நாடுகளின் குற்றம்
பேசுபொருளாவதை தடுப்பது ஆகியவைகளே





ஒரு நேர்மையான அரசியல் விமர்சனத்துக்கு உதாரணமாக
இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும் என்கிற நூலில்
தோழர் இமயவரம்பனின் வார்த்தைகளைக் கிழே தருகிறேன்.






இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய
ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே
அதன்இரு தரப்பினரதும் செயல்பாடுகளையும்
நிலைப்பாடுகளையும்நாம் விமர்சிக்க முடியும்.ஜனனாயகம்.
மனித உரிமைகள் கோட்பாடுகளை ஒரு யுத்த சூழலில்
எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது.
ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும்
ஏற்காததும் தேசிய இனபிரச்சனைபற்றி அவரது மதிப்பீடு
சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.விடுதலைபுலிகளின்
நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக்
கூடாது என்ற கருத்து நியாயமற்றது.அது போலவே,
எவரும் விடுதலைப்புலிகளது அரசியலை நிராகரிப்பதால்
அவர்களைமுற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும்
நியாயமற்றது.






வடக்கு கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை
நாம்கருத்திற் கொள்ள வேண்டும்,அரச பயங்கரவாதத்தையும்
அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கரவாதத்தையும்
ஒரே விதமாக கணிப்பதன் ஆபத்தை நாம் உணர வேண்டும்.



தேசிய இனபிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில்
அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம்
நினைவிற் கொள்ள வேண்டும்.இதன் பின்னனியிலேயே
விடுதலை புலிகளது ஜனனாயக,மனித உரிமை மீறல்களையும்
அரசாங்கத்தின் மனித மீறல்களையும் நாம் ஒப்பிட
வேண்டியுள்ளது.வன்முறை அரசியல் தற்கொலை படைகள்,
அரசியற் கொலைகள் போன்றவற்றை அவை நிகழும் சூழலுக்கு
அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றை
சாத்தியமாக்கியது மட்டுமின்றி அவசியமாக்கியதுமான ஒரு
தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரண
கர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.






எந்த வித அடிப்படை நேர்மையும் இல்லாத,தர்க்க
முரண்பாடுகளால் நிரம்பியிருக்கும் இந்த கட்டுரை
காலச்சுவடின் பார்ப்பனியத்தை நாம் மீண்டும்
புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பை நமக்கு
அளித்திருக்கிறது.





இந்த கட்டுரையில் இருக்கும் தர்க்க முரண்களையும்,
முதலாளித்துவ உலகை நக்கிப் பிழைக்கும் அவல
வாழ்வில் நாடுகள்,இனங்கள்,தேசம்,தேசியங்கள்
கடந்து இணைந்து நிற்கிற மனித விரோத
கும்பல்களையும் அடையாளம் காண்கிற வேளையில்
அவர்களை எதிர்த்து நின்று வெல்வோம் என்பதிலும்
நம்பிக்கை கொள்வோம்.

Monday, August 17, 2009

நெருக்கடி நிலை உலகம்


ஒற்றைமைய அரசாக,உலகத்தின் போலிஸ்காரனாக கடந்த
இரு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த,
சோவியத் யூனியனின் சிதைவுக்கு பிறகு தான் உருவாக்கிய
இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற புனைவு எதிரியோடு
மோதல் என்கிற பெயரில் தனது பொருளாதார வல்லாதிக்க
திட்டங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்த அமெரிக்கா
இன்றைக்கு சர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர்
என்பதை தான் கைவிட்டுருப்பதாக அறிவித்திருக்கிறது.


சீன,ரஸ்ய கூட்டோடு உருவாகிவிட்ட உண்மையான
எதிரிகளுடனான தனது போரை ஒருமுகப்படுத்துவதில்
இனி தனது காலத்தை செலவிட வேண்டியிருப்பதால்
இயல்பாகவே இந்த முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கும்
அமெரிக்காவின் நிலையை ஒபாமாவின் முற்போக்கு
முகமாக சித்தரிக்கும் கருத்துக்களும் பரப்பட்டுக்
கொண்டிருக்கும் நிலையில் சாத்தியமான அளவுக்கு
ராணுவ,அரசியல் ரீதியாக இந்த இரு முகாம்களின்
பலம்,பலவீனம்,பற்றிய ஒரு ஆய்வை முன்வைப்பது
இடதுசாரிய,மற்றும் தேசிய விடுதலைப்போராட்டங்களை
முன்னெடுக்கும் குழுக்களுக்கு அவசியமாகி இருக்கிறது.


உலகில் அணு ஆயுத ஏவுகணை தாக்குதல்களிலிருந்தும்
பாதுகாப்பு பெற்ற இரண்டு நாடுகளாக அமெரிக்காவும்,
ரஸ்யாவும் மட்டுமே இருந்த சூழலில் அமெரிக்காவின்
அணு ஏவுகனை தாக்குதல் தடுப்பு பொறியமைவையும்
தாண்டி தாக்கக் கூடிய டோபோல் ஆர் எஸ் எம் 12
என்கிற ஏவுகணையை ரஸ்யா 2007 ஆம் ஆண்டு
வெற்றிகரமான சோதனை செய்து தனது ராணுவத்தில்
சேர்த்தில் இருந்தே அமெரிக்காவின் பலம் குறைய
துவங்கிவிட்டதை வழக்கம்போலவே பெரும்பாலும்
அமெரிக்க சார்புநிலையில் இருந்த ஊடகங்கள்
தொடர்ந்து இருட்டடிப்பு செய்துகொண்டே இருந்தன.


முன்னால் சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை
தனது ஏகாதிபத்திய பொருளாதார வளையத்துக்குள்
கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்
கொண்டிருந்த அமெரிக்காவுக்கு,தனது பதிலடியை
ஜார்ஜியாவின் மீதான தனது அதிரடி யுத்தம் மூலமும்
அஃப்காசியா,தெற்கு ஒசாட்டியா,ஆகிய சிறிய தேசிய
இனங்களை தேசங்களாக அங்கீகரித்ததன் மூலமாகவும்
வழங்கியது ரஸ்யா.வழக்கமான தனது பாணியில்
ஆயுத மோதலில் அமெரிக்கா இறங்குவதை தவிர்த்துக்
கொண்டத்ற்கு பின்னால் ரஸ்யாவின் ராணுவ மேலாதிக்க
வலிமையே இருந்தது என்பது மறுக்க முடியாத
உண்மையாகும்.


முன்னால் சோவியத நாடுகள்,தனது ஐரோப்பிய நட்பு
நாடுகள் வழியே போலந்தில் தனது அணு ஆயுத
ஏவுகணைளை நிறுவுவதன் மூலம் ரஸ்யாவை
முற்றுகையில் வைக்கும் திட்டத்தை அமெரிக்கா தள்ளி
வைக்கும் நிலைக்கு சென்றிருப்பதுவரை இந்த நிகழ்சிப்
போக்கே தொடர்கிறது.


உலக வர்த்தக கழகத்தில் தனது செயல்பாடுகளை தடை
செய்துகொண்டிருந்த அமெரிக்கா தனது கரங்களை மேலும்
நீட்டி முன்னால் சோவியத் ஒன்றிய நாடுகளின் மீதும் தனது
ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயன்றதற்கு எதிராக,தனது
வலிமையை சேகரித்துக்கொண்டு ஏகாதிபத்திய பாய்ச்சலுக்கு
தயாராக இருந்த ரஸ்யா கொடுத்த பதிலடியே ஜார்ஜிய
யுத்தத்தின் முலம் வெளிப்பட்டது.தற்போது ஏற்பட்டிருக்கும்
உலக பொருளாதார நெருக்கடி ரஸ்யாவின் மீது மிக அதிக
தாக்கத்தை விளைவிப்பதை,அமெரிக்கா உலக வர்த்தக
கழகத்தில் ரஸ்யாவின் செயல்பாடுகளுக்கு விதிதிருந்த
கட்டுப்பாடுகளே சாத்தியமாக்கின என்பதும் ஒரு
முரண்நகையான விசயம்.


மறுபுறத்தில் சத்தமில்லாமல் தனது ராணுவ,பொருளாதார
வலிமையை சீனா அதிகரித்துக்கொண்டு ஒரு ஏகாதிபத்திய
வல்லரசாக ஆசியாவில் வளர்ந்துகொண்டிருந்தையும் தடுக்க
இயலாத நிலையிலேயே அமெரிக்கா இருந்தது மட்டுமல்லாமல்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் சீனாவுக்கு
எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் தனது தள்ளாடிக்
கொண்டிருக்கிற பொருளாதாரத்தை மேலும் கீழே தள்ளி
விடும் என்பதை உணர்ந்திருந்ததாலேயே,ஈழப் பிரச்சனையில்
சீனாவின் நடவடிக்கைகள் தனது அரசியல் நலனுக்கு
குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும்
எந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுக்க இயலாத
நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருந்தது.

அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கே
தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிற கணிப்பில் புலிகள்
இருந்ததும்,முற்றுமுழுதாக அமெரிக்க அடிமைகளாக
இந்திய ஆளும்வர்க்கத்தை கருதியதுமே புலிகள் அரசியல்
ரீதியாக தவறான முடிவுகளுக்கு சென்றதற்கு காரணமாக
அமைந்துவிட்டன.



சமீபத்திய தனது பயணத்தின் போது,ராணுவ ஆயுதங்கள்
விற்பனை தொடர்பான இறுதி பயன்பாடு கண்காணிப்பு
ஒப்பந்தம(EUMA) மற்றும்,இந்திய அணு உலைகளுக்கு
தேவையான செறிவூட்டல் மற்றும் மறுபயன்பாட்டு
தொழில்நுட்ப்பங்களை (ENR)உலக அணு தொழில்நுட்பம்
வழங்கும் நாடுகள் இந்தியாவுக்கு வழங்குவதை தடுக்கும்
முயற்சிகள் மூலம் தனது முகாமிலேயே இந்தியாவை
தக்கவைக்க ஹிலாரி கிளிண்டன் முயற்சி செய்திருந்தாலும்
வழுவிழந்துவிட்ட அமெரிக்க கூட்டணிகளிடமிருந்து
தனது பங்கை அதிகரித்துக்கொள்வது இந்திய முதலாளித்துவ
வர்க்கத்துக்கு குறையும் என்பதால் ஓரளவு சுயசார்புடனும்
பெருமளவு ரஸ்ய,சீன முகாம்களை சார்ந்திருப்பதன்
வாயிலாகவும் மட்டுமே தனது செல்வ வளத்தை பெருக்க
இந்திய முதலாளித்துவ வர்க்கம் முயலும்.



ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தோடு உறவுகளைப் பேண
இந்திய அதிகாரவர்க்க மேற்கொணட நடவடிகைகளையும்
(BRIC) என்று அழைக்கபடும் ப்ரேசில்,ரசியா,சீனா,
இந்தியா நாடுகளின் கூட்டமைப்பை,இந்திய அதிகார வர்க்கம்
பெருமளவில் வரவற்றதையும் பார்க்கையில் நம்மால்
இந்த முடிவுக்கே வந்து சேரவே முடிகிறது.


மேலும் சில விடயங்களையும் நாம் கவனிக்க வேண்டி
உள்ளது.பொதுவாகவே அமெரிக்காவின் பொருளாதாரம்
என்பது போரியல் பொருளாதாரம்தான்,அந்த வகையில்
தனது நீண்டகால எதிரியான ஈரான் மீதான போரின் மூலம்
தனது பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் முயற்சியில்
அமெரிக்கா இறங்குவதை தடுத்துக்கொண்டிருப்பது ரஸ்ய,சீன
நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமைதான்
என்பது உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை
ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும்
சீனாவின் எண்ணத்தை நன்றாக அறிந்தாலும் கூட வடகொரியா
மீது தனது வழக்கமான பாணியில் ராணுவ நடவடிக்கை
எடுப்பதை அமெரிக்கா மேற்கொள்ள இயலாத நிலையும்
வடகொரியாவை தாஜா செய்கிற நிலைக்கு அமெரிக்கா
இறங்கியிருப்பதும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய
விசயங்களாகும்.



ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அமெரிக்க அல்லது
அமெரிக்க முகாமை சேர்ந்த நாடுகளின் ராணுவ,
பொருளாதார வலிமை குறைந்திருக்கின்றது என்பதே
யதார்த்தப்பூர்வமான உண்மையாகும்.இந்த
முகாமுக்கு உள்ளே உள்ள நாடுகளுக்குள் இருக்கும்
முரண்பாடுகளை பற்றி விரிவாக பேச வேண்டிய
தேவை இருந்தாலும் அது தற்போதைய நிலையில
அவசியமானதாக இல்லை.



மற்றொருபுறம் சீன,ரசிய முகாம்களின் வலிமை
அதிகரித்திருக்கிறது.அணு ஆயுதங்களை குவித்து
வைத்திருக்கும் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின்
பொருளாதார சுரண்டலுக்கும்,ஆதிக்கப் போட்டிகளுக்கும்
இடையில் மனித சமூகத்தின் இருத்தலே கேள்விக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளது.


இந்த முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகளை
சரியாக கையாண்டு ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு
உள்ளாக்கப்பட்டிருக்கும் மனித குலத்திற்கு
விடுதலை தேடிக்கொடுக்கும் பணியில் இடதுசாரிய
அமைப்புகளும்,தேசிய விடுதலை இயக்கங்களும்
சார்ந்திருக்க சோசலிசம் சார்ந்த மக்கள் நல அரசுகள்
என்கிற வடிவத்தில் நிலவிக்கொண்டிருக்கிற கியூபா,
வெனிசுலா,நிகராகுவா,பொலிவியா போன்ற லத்தீன்
அமெரிக்க நாடுகளே உள்ளன.


புலிகள் மேற்குலக நாடுகளுடன் கடைபிடித்தது
பெயரளவிலான சமரசமே என்பதை இந்த லத்தீன்
அமெரிக்க நாடுகளின் அரசுகளுக்கு கொண்டு
செல்வதில் கவனம் செலுத்தாத ஈழ ஆதரவாளர்கள்
இன்றைக்கு இந்த நாடுகள் மேல் மேற்கொள்ளபடும்
வலதுசாரிய தாக்குதல்களுக்கு தாங்களும் துணை
போய்க்கொண்டிருப்பது வெட்க்ககேடான விசயமாகும்.


நுகர்வோராக வாழ்வது அல்லது மனித உயிரிகளாக வாழ்வது
என்கிற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி நம்மை
கேட்கின்ற முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு நாம்
என்ன பதில் தரப்போகிறோம் ?

Wednesday, August 12, 2009

மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம்

தமிழக சிற்றிதழ் பரப்பில் சில மாதங்கள் முன்புவரை இருந்த புலிகளை தவிர்த்துவிட்டே ஈழ அரசியல் பேசவேண்டும் என்கிற போக்கும்,புலிகளின் போராட்ட முறையில் நிகழ்ந்த தவறுகளுக்கும் ஒரு விதத்தில் காரணியாக அமைந்த,சிங்கள அரச பயங்கரவாதம் உருவாக்கிய சூழலை விமர்சிப்பதை தவிர்க்கும் போக்கும் மறைந்து வெளிப்படையாகவே இன்று புலிகள் மீது அவதூறுகளை பரப்புவதன் மூலம்,சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம் இழைத்த குற்றங்களை மூடி மறைத்து பாதுகாக்கும் நிலை தோன்றி இருக்கிறது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய புறநிலை
மதிப்பீடுகளையோ நேர்மையான விமர்சனங்களையோ
கொண்டிராத நபர்களின் நேர்காணல்களை தமிழக
சிற்றிதழ்கள் தொடர்சியாக வெளியிட்டு வருவதைப்
பார்க்கையில் நம்மால் இந்த முடிவுக்குத்தான் வந்து
சேர முடிகிறது.அந்த வகையில் இம்மாத தீராநதி
இதழ் சுகனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய கேள்விக்கு
எல்லோரும் தமிழர்கள் என்று சொல்வது எவ்வாறு படு
அபத்தமோ,அவ்வாறே இன்று எல்லோருக்குமான
அரசியல் தீர்வு என்பதும்.மகிந்த எவற்றை முன்
வைக்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு
போவதுதான் மதி என்றும்,இயல்பு வாழ்க்கை அபிவிருத்தி
இதுவே இன்றைய அரசியலின் பிரதான சவால் என்றும்
கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியிலிருந்து தன்னை
புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருப்பதாகவும்
தனது மக்களைக் காக்க சரணடையும் மன்னனை பற்றிய
சூழ்நிலை ஒன்றை லா.சா.ரா தனது சிறுகதை
ஒன்றில் ஆழமாக சொல்லியிருப்பதாகவும் சுகன்
அளிக்கும் பதிலில் இருந்து பலவிடயங்களை
நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


வரிசையாக அந்த விடயங்களை பரிசீலிப்போம்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மே மாதம் இருபதாம்
தேதியோடு மகிந்த நிறைவு செய்து இரண்டு மாதங்களுக்கும்
மேலாகிவிட்டது.மகிந்த எந்த தீர்வுத்திட்டத்தையும் முன்
வைத்ததாக தெரியவில்லை.அறுபது ஆண்டுகளாக சிங்கள்
ஆளும்வர்க்கங்கள் முன்வைத்ததாகவோ அல்லது நடைமுறைப்
படுத்தியதாகவோ எந்த ஒரு தீர்வையும் சுட்டிக்காட்ட இயலாத
நிலைதான் இன்று வரை தொடர்கிறது.தவம் இயற்றி
மகிந்தவிடம் வரம் பெறுகிற வாய்பை தனக்கானதாக மட்டும்
சுகன் வைத்துக்கொள்வதில் நமக்கு ஆட்சேபனைகள் இல்லை.
எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிற வேலையை மட்டும்
அவர் நிறுத்திக்கொண்டால் நல்லது.

அமெரிக்கா,இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ஜப்பான்,ரஸ்யா
மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வணிக சூறையாடலுக்கும்,
ராணுவ மேலாதிக்க நடவடிகைகளுக்கும் ஈழ மண்ணை
திறந்துவிட்டு மகிந்த கொடுக்கப்போகும் இயல்பு வாழ்க்கை
பற்றியும் அபிவிருத்தி பற்றியும் முதலாளித்துவ
அடிவருடிகளின் மகிழ்சியை நம்மால் புரிந்துகொள்ள
முடியும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்கிற இடதுசாரிக் கண்ணோட்டம்
கொண்ட அமைப்பை சாதிய நோக்கில் புலிகள் அழித்ததாக
சரடு விடும்,கம்யூனிஸ காதலரான சுகனுக்கு மகிந்தவின்
ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் மகிழ்சியை
கொடுப்பதன் மர்மம்தான் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கிறது.

அந்த மர்மத்துக்கான பதிலை,மேலும் சில பத்திகளின் பின்
ஏகாதிபத்தியத்தின் குறியீடான செல்போன் விளம்பரத்தை
கண்டு ஒரு ஈழக்கவிஞன் கொள்ளும் நியாயமான கோபத்தை
அந்த கவிஞன் போருக்காகவும்,செம்மணிக்காகவும் ஏங்குவதாக
கூறி தான் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிதான்
என்று அவரே தந்துவிடுகிறார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியில் இருந்து தன்னை
விடுவித்துக்கொண்டிருப்பதாக கூறும் சுகனுக்கு,இந்திய
மற்றும் பிற நாடுகளின் வணிக நிறுவனங்கள்,மற்றும்
தமிழர் தாயகபரப்பின் தொடர்ச்சியை சிதைக்கும் நோக்கில்
சிங்கள் அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களின்
முற்றுகையில் கிழக்கு மாகாணம் கொண்டுவரப்பட்டிருப்பது
மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

இடதுசாரிய,தலித்திய,மனித உரிமை முகமூடிகளுடன்
புலி எதிர்ப்பில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ்
ஷோபசக்தி குழுவினை சேர்ந்தவர்களுக்கு இருக்கும்
செலக்டிவ் அம்னீசியா நாம் அறிந்த விடயம் என்பதால்
மற்ற விடயங்களை பரிசீலிக்கலாம்.

ஆயுதங்களை கைவிட்டு புலிகள் சரணடந்திருந்தால் இவ்வளவு
மக்களை படுகொலை செய்து புலிகளை பணிய வைக்கும்
நிலைக்கு ஏகாதிபத்திய நாடுகளும்,ராஜபக்ஸேவும்
இறங்கியிருக்க மாட்டார்கள் என்று வன்மத்தை சுகன்
வார்த்தைகளாக்கி இருப்பதைத்தான் மக்களைக் காக்க
சரணடைந்த மன்னன் பற்றிய அவரது கருத்து காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு முதல் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
இருக்கும் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த சாதிய
ஒடுக்குதல் நிகழ்வை சுட்டிக்காட்டியதன் மூலம்,புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சாதிய ஒதுக்கலுக்கு
எதிராக புலிகள் தீவிரமான நடவடிக்கைகளை
எடுத்துகொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு
மறைமுகமாகவேனும் உணர்த்தியதற்காக சுகனுக்கு
நன்றிகளை உரித்தாக்குவோம்.


ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஜாதி ஒழிப்பு பற்றி ஒரு
தேசிய விடுதலை அமைப்பின் திட்டமென்பது,அமைப்பில்
சாதியத்தை முற்றாக நிராகரிப்பது,சாதியத்துக்கு எதிரான
கருத்தியல் பரப்பலை சமூகத்தில் மேற்கொள்வது,நீண்டகால
பொருளாதார நிர்மாண திட்டங்களை மேற்கொண்டு
நிலபிரபுத்துவ உறவுகளை ஒழிப்பதன் மூலம் சாதிய
நிலவுதலுக்கான வெளியை ஒழிப்பது ஆகியவைகளாகத்தான்
இருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சாதி,மத,தாலி மறுப்புத்
திருமணங்களை அமைப்புக்குள்ளும் சமூகத்திலும்
நடத்திவைத்தும் ஊக்குவித்து வந்திருக்கிறார்கள்,கருத்துப்
பரப்பலை மேற்கொள்வதில் புலிகள் தீவிரமாக ஈடுபடவில்லை
என்பதும் அதில் போதாமைகள் நிலவின என்கிற குற்றசாட்டை
ஒப்புக்கொள்ளலாம்.

தேசப்பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ளும் நோக்கத்திலேயே கடைசிவரை புலிகள்
போராடிக்கொண்டிருந்தார்கள் என்பது மிக தெளிவாக
இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது.இது சாதிய ஒதுக்கலுக்கு
எதிரான விடயங்களில் பொருளாதாரக் கட்டுமானம் செலுத்தும்
பாத்திரம் பற்றிய புரிதல் புலிகளுக்கு இருந்ததையே
காட்டுகிறது.கட்டளையிட்டோ,சட்டங்கள் இயற்றியோ
உடனடியாக தீர்த்துவிடமுடியாத சாதிய ஒழிப்பில்,
சாத்தியமான ஒரு திட்டம் இத்தகைய கூறுகளையே
கொண்டிருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சரியான திசையில் சென்றதையும்
தனி ஈழம் தலித்துகளுக்கான சிறையாக மாற முடியும்
என்பது போன்ற கற்பனாவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு
எதிராக செயல்ரீதியான பதிலை அவர்கள் வழங்கிக்
கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

மாறாக கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சாதி எதிர்ப்பு
போராட்டங்கள் ஈழ விடுதலைப் போராலும் புலிகளாலும்
முடக்கப்பட்டதாக கூறும் சுகன் முன்வைக்கும் சாதி ஒழிப்பு
திட்டம் என்பது எவ்வாறு இருக்க முடியும் என்பதை அவரது
வார்த்தைகளில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மூன்றாம் உலக நாடுகளின் சாதிய நிலபிரபுத்துவ அமைப்பை
பேணிக்காப்பதன் மூலம் தங்கள் பொருளாதார சுரண்டலை
பாதுகாத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களுக்கு
வால் பிடிக்கும் மகிந்த அமல்படுத்தப்போகும் அபிவிருத்தி
திட்டங்கள் மூலம் சாதிய ஒழிப்பை முன்னெடுக்க முனையும்
சுகனின் திட்டம் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற அப்பட்டமான ஒட்டுண்ணி அரசியல் ஒன்றும்
நமக்கு புதியதல்ல,ஏகாதிபத்தியத்தை முதன்மை பகை
இலக்காக நிறுத்தாத பெரியார்,அம்பேத்கரின் மிக சிறிய
பகுதியை மட்டுமே முன்நிறுத்தி அவர்களின் வர்க்க,தேசிய
சார்பு கருத்துக்களை பின்னுக்கு தள்ளி,அப்பட்டமான
காலனித்துவ முகமூடியான காந்தியோடு அவர்களை
இணைத்து வைப்பதன் மூலம் நவகாலனித்துவ சுரண்டலுக்கு
தத்துவார்த்த தளத்தில் வேலை செய்யும் அ.மார்க்ஸின்
இலங்கை பிரதிநிதியான சுகனிடம் இது எதிர்பார்க்க
கூடிய விடயம்தான.

மலைய மக்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவர
புலிகள் மலையகத்தில் குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியதாக
அவதூறு செய்யும் சுகனுக்கு கலவரம் என்கிற பெயரில் சிங்கள
பேரினவாதிகள் மலையகத்தில் நிகழ்த்திய படுகொலைகள்
தெரியாமல் போவது,தமிழக அகதிகள் முகாமின் அவலத்தை
பேசும் அவருக்கு மூன்று இலட்சம் மக்கள் கைதிகளாக
அடைக்கப்பட்டிரும் ஈழத்தின் முகாம்களும் அங்கே நிகழ்ந்து
கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற மனித உரிமை மீறல்களும்
பேசப்பட கூடாத விசயமாக இருப்பது எல்லாம்
காட்டுவது ஒன்றைத்தான்.

நாம் வாசித்துக்கொண்டிருந்த நேர்காணல் ஒரு
தமிழனுடையதோ,தலித்தினுடையதோ ஒரு
சாரசரி சிங்களனுடையதோ கூட அல்ல மாறாக,
தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏகாதிபத்தியங்களுக்கு
நாட்டை அடகு வைத்துக்கொண்டு அதன் காரணமாக
சிங்கள உழைக்கும் மக்களிடம் ஏற்படும் கோபத்தை
தமிழர்கள் மேல் திருப்பிவிட்டு ரத்தப்பலியெடுத்த
ராஜபக்ஸேயின் சகோதரனுடையது என்ற முடிவுக்கே
வர முடிகிறது.

தமிழக மீனவர்களும் கட்சதீவு மீட்பர்களும் நிரந்தர
போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்தவில்லை என்று
கேள்வி கேட்கும் சுகனிடம் போர் நின்று இரண்டு
மாதங்கள் ஆகியும் இப்பொழுதும் ஏன் தமிழக மீனவர்கள்
தாக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு என்ன
பதில் இருக்கும்?

மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம் தமிழக,ஈழ அகதிகள்
முகாம்கள் மட்டுமல்ல,அடிப்படை நேர்மையும் குறைந்தபட்ச
மனிதத்துவமும் கூட இல்லாத சுகன் போன்றவர்களிடமே அது
மிக மோசமாக தோற்றுப்போகிறது.