Tuesday, July 28, 2009

இரட்டை மைய உலகில் தேசிய இன போராட்டங்கள்இரட்டை மைய உலகில் ஈழப்போராட்டம் என்று தலைப்பிடலாம்
என்று கருதினாலும் ஈழவிடுதலை போராட்டத்துக்கு இன்றைக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவின் பின்னனியில்,உலகமெங்கும்
நிகழு வேண்டிய தேசிய இனங்களை அடிப்படையாக கொண்ட
வர்க்கப்போராட்டங்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டிய
தேவை இருப்பதால் இந்த தலைப்பு.

இந்திய மாவோயிஸ்ட்டுகள்,விடுதலைப்புலிகளுக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தெற்கு ஆசிய தேசிய
விடுதலை இயக்கங்கள் மற்றும் புரட்சிகர
இயக்கங்களின் ஆயுதபோராட்ட முன்னெடுப்புகள் மீது
எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட
சில தினங்களிளேயே இந்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரத்தின், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில்
செயல்படும் தேசியவிடுதலை இயக்கங்கள் பற்றிய
கருத்து வெளியாகி இருக்கிறது.

அதில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் ஆயுதமேந்திய
குழுக்கள் இந்தியாவின் வளர்சிக்கு மிகப்பெரிய இடையூறாக
விளங்குவதாகவும் அவைகளுக்கு எதிராக அரசு கடுமையான
நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும்
அறிவித்திருக்கிறார்.

இந்திய காங்கிரசு அரசும்,மகிந்தவின் இலங்கை அரசும்
கடைபிடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் வணிக சூறையாடலுக்கு
ஆதரவான பொருளாதார கொள்கைகளை தனது கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளில் நிகழ்த்த அனுமதி அளித்திருக்கும் முன்னால்
புலி கருணா அமைச்சராகியிருப்பதையும் அந்த வணிக
சூறையாடலுக்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளை
திறந்துவிட மறுத்த புலிகள் இந்தியா தலைமையில்
முன்னெடுக்கபட்ட போரில் பின்னடைவை சந்திருப்பதையும்
இன்று காண்கிறோம் நாம்.

உலகில் கடைசி ஒரு மனிதனே இருந்தாலும் அவனிடமும்
லாபம் பெற ஏதேனும் வழி தேடும் முதலாளித்துவம் என்கிற
கூற்று இன்றைக்கு,தாங்கள் புகாத ஒரு பிடி நிலமும்
இருக்ககூடாது என்று வரிந்துகட்டிகொண்டு செயல்படும்
ஏகாதிபத்திய அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.அதன் தொடர்சியாகவே
சிதம்பரத்தின் கருத்துக்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைக்கு மாறியிருக்கும் உலக ஒழுங்கை
பரிசீலனைக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே உலகின்
ஒடுக்கபட்ட மக்களுக்கான விடுதலை போராட்டங்களை
சரியான திசையில் முன்னெடுக்க வழிகள் காணப்பட முடியும்.

டெங் சியாவோ பிங் தலைமையில் முதலாளித்துவபாதைக்கு
திருப்பபட்ட சீனாவில் சற்று காலம் காணப்பட்ட வளர்ச்சியை
புலிகளின் அறிவுதுறையை சேர்ந்தவர்களே பாராட்டுகிற
மனப்போக்கை கண்டுவந்திருக்கிறோம் நாம்.அதே சீனாதான்
தனது ஏகாதிபத்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஈழ
விடுதலை போராட்டத்தை ஒடுக்குவதில் முன்னால் நின்றது
என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது இன்று.


சோசலிச நிர்மாணத்தில் ஈடுபட்ட நாடுகளில் நிகழ்ந்த
தவறுகள்பற்றியும்,அதிகாரத்துவத்தால் ஏற்பட்ட
பின்னடைவுகள்,தனிமனித உரிமைகள் மீறபட்டது பற்றிய
புலிகளின் விமர்சனங்களையும் கண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்களின் அந்த விமர்சனங்கள் ஏகாதிபத்திய
நாடுகளிடமிருந்து எந்த பலனையும் அவர்களுக்கு
பெற்றுக்கொடுக்கவில்லை.ஏகாதிபத்திய கட்டத்துக்கு
வளர்ந்துவிட்ட முதலாளித்துவத்துக்கு எந்த புரட்சிகர
பாத்திரமும்இல்லை என்பதையும்,தனிமனித ஊக்குவிப்புகள்
மூலம் சாதிக்கப்படும்முதலாளித்துவ வெற்றிகள் சிறிது காலம்
மட்டுமே நிலைக்கும் என்பதையும் புலிகள் இனிமேலாவது
உணர்ந்துகொண்டால் நல்லது.

மேலும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் தொடர்பாக
ஈழ ஆதரவாளர்களிடையே நிலவிவரும் குழப்பத்தை பற்றியும்
இங்கே நாம் சற்று குறிப்பிட வேண்டியிருக்கிறது.நமது
நண்பர்கள்சிலர் சொல்லிக்கொண்டிருந்ததுபோல முழு
அமெரிக்க சார்புநிலையிலேயே இந்தியா இருந்தது என்பது ஒரு
தவறான அவதானிப்பாகும்.சீன,ரஸ்ய,தலைமையில்
உருவாகியிருக்கும் அணியின் பக்கம் சாய்வதா அல்லது
அமெரிக்க சார்பு நிலையிலேயே தொடர்வதா என்கிற கேள்விக்கு
எந்த முடிவையும் எடுக்காமல் தாமதிப்பதன் தனது பேரம்
பேசும் திறனைஉயர்த்திக்கொள்வதிலேயே காலங்களை
(குறிப்பிட்டுச் சொன்னால் கடந்த பத்துமாதங்களாக)
செலவிட்டுக்கொண்டிருந்து இந்தியா.

அமெரிக்க சார்புநிலையிலேயே தொடர விரும்பிய பாராளுமன்ற
அதிகாரவர்க்கத்துக்கும் சீன சார்புநிலையை நோக்கி இழுக்க
முயன்றபாராளுமன்றம் தாண்டிய அதிகாரவர்க்கத்துக்கும்
(இந்து ராம்,சுப்பிரமணியசாமி,எம்.கே நாராயணன் வகையறாக்கள்)
இடையே நிகழ்ந்த பகை முரண்பாடு இல்லாத மோதல்களின்
காலம்தான் இந்த பத்துமாதங்கள்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிகரிக்கும் ராணுவ உதவிகளை
சுட்டிக்காட்டி கண்டிப்பது,ரிலையன்சின் ஈரானுடனான
வர்த்தகத்தை தடுக்கும் அமெரிக்காவை குறை கூறுவது ஆகிய
விடயங்கள் மூலம் சீனசார்பு நிலையை எடுக்க
தூண்டிக்கொண்டிருந்தனர் பாராளுமன்றம் தாண்டிய
அதிகார வர்க்கத்தினர்.

இந்திய முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும்
இந்திய வெளியுறவு கொள்கை முடிவுகளில் இருந்த இந்த நிலை
இன்றைக்கு உடைந்திருக்கிறது.

உலக அனுசக்தி கழக நாடுகள் Enrichment and reprocessing
தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு விற்பதை தடுக்கும்
மிரட்டல் மற்றும்அமெரிக்கா இந்தியாவுக்கு விற்கும்
ஆயுதங்களின் இறுதி பயன்பாட்டை சோதனை செய்துகொள்ள
இந்திய அரசு அமெரிக்காவை அனுமதிப்பது தொடர்பான
ஒப்பந்தம் மூலம் தனது முகாமைவிட்டு நகர முயன்ற
இந்தியாவை தட்டிவைத்துவிட்டு சென்றிருக்கிறார்
ஹிலாரி கிளிண்டன்.அதன் தொடர்சியாகவே
சீனபொருட்களுக்கான இறக்குமதி விதிகளை
கடுமையாக்கியிருக்கிறது இந்திய அரசு.

நடந்துகொண்டிருந்த அரசியல் நிகழ்வுகளை புலிகளும்
ஈழ ஆதரவாளர்கள் சரியான முறையில் உள்வாங்கவில்லை
என்பதை காட்ட மேலும் ஒரு விசயத்தை நாம்
காண வேண்டியிருக்கிறது.

பிரசந்தா தலைமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி சீன
சார்பு நிலையை எடுத்திருப்பதாக இன்றைக்கும் சில கருத்துக்கள்
ஈழ ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகின்றன.தனது
சார்புநிலை எடுத்திருந்த கட்சியை ஆட்சியை விட்டு இறக்குவதில்
தீவிரமாகஈடுபட்ட தனது பகைநாடான இந்தியாவை எதிர்த்து சீனா
எந்த நடவடிகையையும் ஏன் எடுக்கவில்லை,பிரசந்தாவின்
ஆட்சியை காப்பாற்ற முயலவில்லை என்பதற்கான பதிலை
பிரச்சனைகளை தட்டையாக யோசிக்கும் இவர்களிடமிருந்து
பெற முடியாது.

மக்களின் நலன்களை முன்வைத்து நேர்மையாக போராட
முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புலிகளாக
இருந்தாலும் நேபாள மாவோயிஸ்டுகளாக இருந்தாலும்
சரி சீன ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவுக்கும் பகைவர்கள்தான்.
அந்த வகையில்தான் இந்தியாவும் சீனாவும் நேபாளத்தில்
மாவோயிஸ்டுகளை ஆட்சி பொறுப்பில் இருந்து
அகற்றுவதிலும்,ஈழத்தில் புலிகளை ஒடுக்குவதிலும்
கைகோர்த்து செயல்பட்டன.

தங்கள் தேசங்களின் இறையான்மையையும்,மக்களின்
நல்வாழ்வையும்முன்நிறுத்தி,தங்களின் ராணுவ
நலன்களுக்கும் வணிக நலன்களுக்கும் இடையூறு
விளைவிப்பவர்களாக மாவோயிஸ்ட்டுகளையும்,
புலிகளையும் இந்திய,சீன அரசுகள் சரியாக
புரிந்துகொண்டதாலேயே அவர்களை ஒடுக்குவதில்
ஒன்றினைந்து நின்றன.


உருவாகிவிட்ட இரட்டை மைய உலக ஒழுங்கு,அமெரிக்க,
சீன ரஸ்யமுகாம்களில் உள்ள நாடுகளிடையே ஏற்படும்
தற்காலிக நீண்ட காலஅணிசேர்ப்புகள்,அந்தந்த நாடுகளின்
முதலாளித்துவ வர்க்கங்கள்பற்றி சரியான மதிப்பீடுகளை
தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே,தூய வடிவில்
நிகழும் புரட்சிகள் சாத்தியமில்லாத மூன்றாம் உலக நாடுகளில்
உள்ள தேசிய இன விடுதலைப்போராளிகள் தங்கள்
மக்களுக்கான கடமையை சரிவர ஆற்றமுடியும்.

3 comments:

ஆல் இன் ஆல் அழகுராஜா said...

நல்ல கட்டுரை அருமையான நடை இன்னும் விரிவாய் எழுதுங்கள் ஸ்டாலின்

ஸ்டாலின் குரு said...

நன்றி ஆல் இன் ஆல் அழகு ராஜா

Anonymous said...

மீண்டும் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பின்னூட்டம்

Post a Comment