Tuesday, July 7, 2009

ஈழ போராட்டத்தின் திசை வழி அறிவோம்

உலக நாடுகளின் வணிக சுரண்டலுக்கும் ராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக தலைமிமிர்ந்து நின்ற தமிழீழத்தின் பகுதிகள்,மக்களை பின்தள சக்தியாக கொண்டு நடத்தப்பட்ட ஆயுத போராட்டத்துக்கு ஏற்ப்பட்ட பின்னடைவினால் இன்று சிங்கள ராணுவத்தால் முழுமையாக ஆக்கிரமிக்கபட்டுவிட்டன.

வேறு வழியின்று ராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களில் மீள போராட சக்தியுள்ளவர்கள் என்று கருதுபவர்களை எல்லாம் வயது,பால் வேறுபாடுகளின்றி கொலை செய்வதன் மூலமாகவும்,மனிததன்மையற்ற சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் மிகுதியுள்ளவர்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஊனப்படுத்திவிடவும் முயன்று கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.


சிங்கள ராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைக்கபட்டிருக்கும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி வெளியாகும் தகவல்களால் மனம் வெதும்பிக்கொண்டிருக்கும் உலக தமிழர்கள் விடுதலை போராட்ட தலைமை பற்றி வெளியாகும் தகவல்களால் மேலும் மனசோர்வின் பிடியில் விழுந்திருக்கும் நிலையில்,கிடைத்துக்கொண்டிருக்கும் முரண்பட்ட தகவல்களை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பொழுது ஏற்ப்பட்டிருக்கும் பின்னடைவுகளில் இருந்து நம்மை நம்மை விடுவித்துக்கொண்டு அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி நம்மால் நகர முடியும்.


தன்னைத்தானே தமிழின தலைவராக அறிவித்துக்கொண்டுள்ள கருணாநிதியை போலவே தங்களை தாங்களே புரட்சிகர அமைப்பினராக அடையாளப்படுத்திக்கொள்ளும் மக இக வினர் கூறுவது போல சிங்கள இனவெறி அரசின் பாசிச இன அழிப்பு போருக்கு எதிராக போராடி விடுதலைபுலிகளின் போராளிகளும் தளபதிகளும் வீரமரணமடைந்தாக நாமும் கூறிக்கொண்டிராமல்,


ஈழ தேசிய இன விடுதலை போரின் அடிநாதமாக இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பில் தங்கள் கடைசி மூச்சுவரை உறுதியாக இருந்து போராடியே போராளிகள் வீழ்ந்தனர் என்கிற உண்மையை நேர்மையாக முன்வைப்பதன் மூலமே தேசிய இன விடுதலை போராட்டங்களின் மூலம் மக்களின் சமூக அரசியல் விடுதலையையை அடைய முயற்சிக்கும் முற்போக்கு சக்திகளுக்கு நாம் உதவ முடியும்.

இன்றைக்கு இன உணர்வு கொண்ட தமிழர்களிடையே மிக பெரிய கேள்வியாக முளைத்து நிற்ப்பது இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் சொல்வது போல விடுதலை புலிகளின் தலைமை அழிகப்பட்டுவிட்டதா என்பதுதான்.


ஒரு முறையான பின்வாங்கலுக்கான எல்லா அடையாளங்களுடனுமே நகர்ந்துகொண்டிருந்த போரில் தங்கள் ஆயுத வளங்களையும் ஆளணிகளையும் களத்திற்கு வெளியில் இருந்து அந்நிய சக்திகளால் தரப்படும் உறுதி மொழிகளை நம்பி ஒரே இடத்தில் குவித்துவைக்கும் வேலையை ஒரு விடுதலை போராட்ட அமைப்பு மேற்க்கொள்ளும் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.


அதே நேரம் நீண்ட கால அரசியல் ராணுவ திட்டங்களின் அடிப்படையில் ஈழ விடுதலை போராட்டத்தை ஒடுக்க முனைந்த சர்வதேச இந்திய இலங்கை அதிகார வர்க்கங்களின் பலத்தையும் நாம் குறைத்து மதிப்ட முடியாது.


ஒற்றை மைய உலக அரசியலில் தேசிய விடுதலை போராட்டத்துக்கு போராட முனைந்த அமைப்பு என்கிற முறையில்,தங்கள் நலன்களின் அடிப்படையிலேயே ஈழ போராட்டத்தை சர்வதேச நாடுகள் அணுகும் என்கிற அடிப்படையை உள்வாங்கிக்கொண்ட புலிகள் தங்கள் எதிரிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டனர் என்று கருத முடியாவிட்டாலும்,எதிரிகளின் ஊடுருவல் வேலைகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள தவறிவிட்டனர் என்றே கருத வேண்டியிருக்கிறது.


அதன் விளைவாகவே தங்கள் பலத்தில் குறிப்பிட்ட அளவை இழந்த பிறகே அவர்கள் தங்கள் தலைமையை காப்பாற்றி மறைத்து வைக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பதாக கருத வேண்டியிருக்கிறது.


எந்த சமரசத்துக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இல்லாத, மூன்றாம் உலகநாடுகளில் இருந்து மேற்குலக நாடுகளுக்கு வணிக சுரண்டல் மூலம் பணம் மட்டுமே ஏற்றுமதியாகவில்லை ஜனநாயகுமும் கூட ஏற்றுமதியாகிறது என்பதை புரிந்துகொள்ளாமல்,மேற்குலக நாடுகளின் மக்களின் மீதும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த தவறையும் புலிகள் இழைத்துள்ளனர்.


புலம் பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களால் அமெரிக்க ஐரோப்பிய மக்கள் தங்கள் அரசுகளை ஈழ தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்க நிர்பந்திப்பார்கள் என்றும் அந்த போராட்டங்களையே தமிழீழத்தின் இறையாண்மைக்கு பங்கம் வராதவகையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டை கோருவதற்கான முதன்மை கருவியாக பயன்படுத்தலாம் என்று கருதிய புலிகளின் எதிர்பார்ப்பு தவறாக போய்விட்டது என்பதையும் நாம் இன்று காண்கிறோம்.


தமிழீழத்தின் மக்களையும் வளங்களையும் பிரதேசங்களையும் எந்த அந்நிய சக்திகளுக்கும் திறந்துவிட சம்மதிக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் போரை நடத்திக்கொண்டு,மேற்குலக நாடுகளின் அரசுகளின் ராணுவ பொருளாதார நலன்களுக்கு எதிராக அந்த நாடுகளின் மக்களின் ஜனநாயக உணர்வையும் மனிதநேயத்தையும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட புலிகளுக்கு அந்த முயற்சியில் பின்னடைவே நிகழ்ந்திருக்கிறது இன்று.


உலகு முழுவதும் உள்ள இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் போராட்டத்தை முன்னெடுப்பது பற்றி புலிகளின் தலைமை யோசிக்க வேண்டிய நேரமிது.

தாங்கள் ஆயுத போராட்டத்தின் மூலம் பெற்ற வெற்றிகளை மக்களின் அரசியல் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் மட்டுமே தக்க வைக்க முடியும் என்கிற நிலைக்கு புலிகள் நகர்ந்திருந்ததையே 2002 இல போர்நிறுத்த உடன்படிக்கை மூலம் பெற்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணத்தில் அவர்கள் அறுபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் பங்கேற்ற கூட்டங்களை நடத்தியதையும் அரசியல் போராட்டத்தை ஒரு முக்கிய போராட்ட வடிவமாக அவர்கள் கருதியதையும் நாம் காண்கிறோம்.


தமிழீழத்தின் இதர பகுதிகளிலும் அந்த அரசியல் அணிதிரட்டல் வேலைகளை அவர்கள் மேற்கொண்டிருப்பதாக நாம் உணர முடிந்தாலும் போரின் ஊடாக அந்த மக்களின் பங்கேற்ப்பை அவர்களால் பெற முடியவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.


புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத தமிழீழப் பகுதிகளில் சிங்கள ஆளும்வர்க்கம் கட்டமைத்திருக்கிற முதலாளித்துவ தனிமனித வாழ்வியல் விழுமியங்கள் மற்றும் கலாசார பொருளாதார ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் விளைவாக ஏற்ப்பட்டிருக்கும் இந்த பின்னடைவை புரிந்துகொள்வதன் மூலமாகவே தங்கள் அரசியல் போராட்ட வழிமுறைகளை புலிகள் கட்டமைக்க வேண்டும்.


அரசியல் போராட்டம் என்பதை வெறும் ஐம்பது நூறு பேர்களை வைத்து நடத்துகிற ஆர்பாட்டமாகவோ ஒரு பேரணியாகவோ கருதாமல் தண்ணீர் மீதான தங்கள் உரிமையை பறித்து விற்பனை பொருளாக்க முயன்ற பெக்டெல் நிறுவனத்துக்கு எதிராக பொலிவிய மக்கள் நடத்திய போராட்டத்தை போலவும்,இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தின மக்களின் இன்டிபதா போராட்டங்கள் போலவும் வடிவமைக்க முயலுவதே இன்றைய காலத்தின் அவசியமாக இருக்கிறது.


அரசியல் போராட்ட வடிவங்களுக்கு புலிகள் மாறியிருப்பதன் தொடர்ச்சியாகவே புலம் பெயர் ஈழ அரசு அமைக்கும் நடவடிக்கைகளை கருத முடியுமா என்பதிலேயும் அந்த நடவடிக்கைகள் இதுவரை ஈழ விடுதலை போராட்டத்தில் ஏகாதிபத்தியங்களோடு இருந்த பெயரளவிலான சமரசமாக மட்டுமே தொடருமா என்பதிலும் நமக்கு ஐயங்கள் உள்ளன.

இந்த ஐயங்களை உடனடியாக தீர்த்துகொள்வதும் சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில் நாம் சற்று காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.


அரசியரீதியான போராட்டங்களை சிங்கள அரசு ஒடுக்கும்விதம் பற்றி வரலாற்று புரிதலும் இருப்பதால் முற்று முழுதாக அரசியல் போராட்டங்களை மட்டுமே மேற்கொள்வது என்பதும் சாத்தியமில்லை.

மக்களை பின்தள சக்தியாக் கொண்டிருந்த ஆயுதபோராட்ட வடிவத்தை மாற்றி,மக்களின் அரசியல் போராட்டங்களை முதன்மை கருவியாகவும்,கொரில்லா போராட்டத்தை பின்தள சக்தியாகவும் நடத்துவதன் மூலமாகவே பொருளாதார ராணுவ கலாசார தளங்களில் ஆக்கிரமிப்பை நிகழ்த்திருயிருக்கும் அந்நிய சக்திகளுக்கு எதிரான ஈழ தேசிய விடுதலை போர் வெற்றி ஈட்ட முடியும்.


சர்வதேச அரசியலில் ஏற்ப்பட்டிருக்கும் மாறுதல்களை சரியாக உள்வாங்கிக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய அரசாக உலகம் இனியும் இல்லை என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசியல் நகர்வுகளை மேற்கொண்டே சிங்கள ஆளும் வர்க்க ஈழ விடுதலை போருக்கு இந்த பின்னடைவை கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.


ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இலங்கை அரசுக்கு இருக்கும் இந்த சாதகம் புலிகளுக்கு இல்லை என்பதை ஒப்புக்க்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக் தங்களை மறுகட்டமைப்புக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் புலிகள் தங்கள் சர்வதேச அரசியல் நடவடிக்கைகளை மீள் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.


எவ்வாறாயினும், சிங்கள அரசின் உரிமைபறிப்புகளின் இன ஒடுக்குமுறைகளின் விளைவாக போராட எழுந்த ஈழ தமிழ் தேசிய இனம் தாங்கள் முப்பது ஆண்டுகளாக நடத்திய போரின் விளைவாக பெற வேண்டிய தேசிய உரிமைகளையும் வாழ்வியலையும் ஏகாதிபத்திய சுரண்டல் என்கிற இன்னொரு நுகத்தடிக்கு பலியிட்டுவிடாமல் போராடி வெற்றி ஈட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment