Monday, December 5, 2011

கவிதை

அறியப்படாத கதவுகளுக்கு
அப்பால் காத்திருக்கிறது
பேய் மழை

வாசித்த பக்கங்களின்
வலிகளை
பிரதி எடுக்கிறேன்

தேங்கிய தென்றல்
தெருவில் வழிய
தேகம் உலர்கிறது

மீதமிருக்கின்றன
சில
முற்றுப்புள்ளிகள்

கவிதை

விழிக்கும்போதெல்லாம்
விழித்துக்கொள்கிறது
விரக்தி

ஆழ்ந்து சுவாசித்து
அக்கறையின்மையை
நிரப்பிக்கொள்கிறேன்

நிகழ்தகவு விதிகள்
தலைகீழாய்
எழுதப்படுகிற

வெளியில்

கண்கள் கட்டப்பட்டு
சுற்றி விடப்பட்டிருக்கிறார்கள்
திவாலாகிப்போன
தீர்க்கதரிசிகள்

Sunday, November 13, 2011

கவிதை.

ஒளியால் நடுங்கும்
ஒரு கிணற்றின் விளிம்பில்
அன்புடன் மட்டுமிருப்பது
காணாமல் அடித்துகொள்வதாக
மட்டுமே இருக்க முடியும்


தவிர்க்கவியலா
அபூர்வ கணங்களும்
ஓய்வெடுக்க சென்றுவிட்டன
நிரந்தர விடுமுறையில்


ஒற்றை புன்னகையால்
ஓடும் உயிர் நதி
தனிக்குரல் பறவையின்
தாகம் தீர்ப்பதில்லை

Tuesday, November 8, 2011

கவிதை

வலி
அச்சமேற்றும்
ஊளைச் சத்தங்கள்
சுடலைக் காற்றில்
சுவாசம் திணறினாலும்
வழிகாட்டிகள் வாழ்ந்துகொள்ள
வாழ்வை தருவதாயில்லை


எனக்கானவை அல்லாத
எல்லா மையங்களையும்
அழித்தபின்
அடைவதென்ன


புறவாசல் இல்லாத
புதிய சொர்க்கம்
இருக்குமெங்காவது

Friday, November 4, 2011

கவிதை

உறைந்த
மேகமற்ற வானில்
ஆடையின்றி
அன்பின்
தாந்த்ரீக நடனங்கள்


மெல்லிய தூறல் விழும்
காத்திருப்புகளின்
காலங்களில்
ஊடறுத்துச் செல்லும்
மயானங்களின் அமைதி


புறக்கணிக்கப்பட்ட
உவமையற்ற
அழகான சோகங்களின்
சுடரனையும்
தூர தூரங்களின்
தீபங்களில்

Friday, October 21, 2011

கவிதை

அது தீண்டுகிறது

வழி நடத்த
முயன்று தோற்கிறது

காத்திருக்கிறது

மென்று தீர்த்தாலும்
அதுவாவதில்லை
நானென்பதை
அறியுமது

விதிமீறலென்றாலும்
கருப்பு சீட்டு
வாங்கியேனும்
கம்யூனிஸ்டிடம்
கைகுலுக்க
விருப்பம்

Tuesday, October 18, 2011

மே 17 க்கு சில கேள்விகளும் ஒரு எதிர்வினையும்

திருமுருகன் காந்தி மற்றும் சார்லஸ் அன்ரனி ஈழம் ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம் என்று கீற்றில் எழுதியிருக்கும் கட்டுரையில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகளும் ஒரு எதிவினையும் இங்கே

பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின்மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் தமது தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள விரும்புகிறது.//

இப்படி முடிகிறது அந்த கட்டுரை

இந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து சில கேள்விகளை எழுப்பி நானே விவாதிக்கொண்ட விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.சில மாதங்களுக்கு முன் தனது முகப்பு புத்தகத்தில் ஈழத்தின் இனபடுகொலை நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிங்கள அதிகாரிகள் மூவருடன் இந்திய அதிகாரிகள் மூன்று பேர் நடத்திய பேச்சுகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதை வைத்து இந்தியாவை தங்கள் நலன் பக்கம் வைத்துகொள்வதாகவும் எழுதி இருந்தார் திருமுருகன் காந்தி.தங்கள் கட்டளைகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்கிற அளவுக்கு விடுகிற முட்டாள்கள அல்ல இந்திய அதிகார வர்க்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.தன வசம் இருக்கிற அந்த பதிவுகளை திருமுருகனே வெளியிடுவார் என்று நினைத்து காத்திருந்தால் இந்த கட்டுரைதான் வந்திருக்கிறது.ஒருவேளை அவர் வசம் உள்ள அந்த ஆவணங்களை சூலியன் அசாஞ்சோ விக்கிலீக்சோ வருங்காலத்தில் கண்டுபிடித்து வெளிடுவார்கள் என்று நம்புவோம்.மேலும் இந்த கட்டுரை வந்திருக்கிற நேரம் கவனிக்கத்தக்கது.இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த அன்னிய நாடுகள் சதி செய்துகொண்டிருபதாக பிரதமர் பேசிக்கொண்டிருக்கிறார் சமீப காலங்களில் .....

தான் நடத்திய கருத்தரங்கத்தில் அரபுலகில் நடந்துகொண்டிருக்கிற எழுச்சிகளின் பின்னணியாக அமெரிக்கா செயல்படுகிறது அதன் தொடர்ச்சியாகவே அன்னா ஹசாரேவை நாம் பார்க்க வேண்டும் என்கிற பொருள்படும்படி பேசியிருந்தார்.தனது முழு விசுவாசியான இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிராக அன்னா மூலமாக தொல்லை கொடுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழவே செய்கிறது.இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலைகளை அமைக்கிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் பொறுபேற்க வேண்டும் என்கிற சட்டத்தை சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு நிறைவேற்றியது பாராளுமன்றத்தில்.தரகு முதலாளிகளின் தேசத்துக்கு தானாகவே முதுகெலும்பு முளைப்பது சாத்தியமாகாதது என்று நாம் அறிவோம்.ரஷ்ய சீன முதுகெலும்புகளை கடன் வாங்கி பொருத்திகொள்கிற சாத்தியம் தனக்கு இருக்கிறது.என்பதை காட்டி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கை அதிகரித்துகொள்கிற இந்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அந்த அமெரிக்க.மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சட்டத்தை கூற முடியும்

அந்த கட்டுரையின் இறுதியில் சொல்லியுள்ள விஷயம் பொய் என்பது இப்போது எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

சில மாதங்களுக்கு முன் ஓட்ட கூத்தன் http://www.facebook.com/profile.php?id=100000162949157என்கிற அலாவுதினிடம் பேசிய பொது ஒரு விஷயத்தை சொன்னார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எரித்ரியா போராளிகளுக்கு புலிகள் பயிற்சி அளித்தார்கள் என்று.புலிகளுக்கு எதிராக ரூம் போட்டு யோசிக்கும் மருதையர் கலை இலக்கிய கும்பலுக்கு கூட இப்படி ஒரு அவதூறை கிளப்ப முடியுமா என்று தெரியவில்லை.மாங்குளத்தில் வைத்து அமெரிக்க green beret களை புலிகள் மண் கவ்வ வைத்து ஓட்டிய வரலாறு இருக்கிறது.சொன்னது சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.இருக்கிறவர் என்பதும் கவனிக்கத்தக்கது.மட்டுமல்லாம சீனாவின் முற்றுகையில் இந்தியா என்கிற உதவாக்கரை புத்தகத்தை உருவாக்கியவர் குழுவில் அவரும் இருந்திருக்கிறார்.

ஈழத்தில் நிகழ்ந்த இனபடுகொலையில் சர்வதேச நாடுகளின் பங்கு எவ்வளவு உள்ளதோ அவ்வளவு தூரம் புலத்து வாழ் அமெரிக்க சமரசத்துக்கு தயாராகிவிட்ட வலதுசாரிகளுக்கும் இருக்கவே செய்கிறது.களத்தில் இருந்த இடதுசாரி சமரசமற்ற தலைமைக்கு எதிராக புலத்து வலதுசாரிகள் நிகழ்த்திய கழுத்தறுப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து சேரமான் எழுதிக்கொண்டிருக்கிறார்.

புலத்தில் இருந்த துரோகிகள் மட்டுமே ஓட்ட கூத்தர் சொன்னதுபோன்ற புரளிகளுக்கு பின்னணியாக இருந்திருக்க கூடும்.

இப்போது இனபடுகொலை உச்சம் தொட்ட காலத்தை பார்க்கலாம்.

அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. //

என்று அந்த கட்டுரையில் வருகிற வரிகள் இது.தான் விலைக்கு வாங்கிய புலத்து மனிதர்கள் அவர்கள் விலைக்கு வாங்கிய களத்தில் இருந்த சில துரோகிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.புலிகளின் தலைமை தப்பி வெளியேறினாலும் தாங்கள் திணிக்கிற துரோக தலைமைக்கு எதிராக பிற்காலத்தில் அவர்கள் போராட கூடாது என்பதற்காகவே மக்கள் மீது தாங்கள் வாங்கிய துரோகிகள் மூலம் தாக்குதல் நிகழ்திருக்க கூடும் என்று புரிந்துகொள்வதில் தவறு இருக்க முடியாது.ஆக தன வசம் இருக்கிற புலத்து நபர்கள்.மூலம் வருங்கால போராட்டத்தை சிதைக்கிற வல்லமையில் இருந்த அமெரிக்கா அந்த இறுதிபடுகொலைகள் நிகழ்ந்த காலத்திலேயே தலையிடுவதை யார் தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டும்.அந்த பதில் இந்திய அரசு என்பதாகத்தான் இருக்க முடியும்.சீன,ரஷ்ய பூச்சாண்டிகளை காட்டை அமெரிக்காவை தள்ளி நிறுத்தி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கையும்,பிராந்திய வல்லரசு நோக்கத்தையும் நிறைவேற்றிகொள்ள முயல்கிற இந்திய அரசு வெறுமனே ஏவலாள் என்கிற அளவுக்கு குறுக்குகிற கட்டுரையின் நோக்கம் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது.


தொடர்புடைய விஷயங்கள்



அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று பிரதமார் பதவிக்கு யாத்திரை துவக்குகிறார் அத்வானி. ஆட்சி மாற்றம் நிகழும் வரை கூடங்குளம் நிறுத்தி வைக்கப்படட்டும் என்று கருதுகிறார் அம்மையார்.அன்னா ஹசாரேவும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்.அமெரி.க்க இந்திய முரண்பாடுகளால் ஆட்சி மாற்றம் நிகழ்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஏதோ பாரதிய ஜனதா ஆட்சி வந்தால் இந்தா பிடி ஈழம் என்று தந்துவிடுவது போல கருதிக்கொண்டு மடத்தனமகா சீமானும் பேசிக் கொண்டிருபதுதான் வேடிக்கையாய் இருக்கிறது.அயலுறவு கொள்கையை தீர்மானிப்பது அதிகாரவர்க்கமும் முதலாளிகளின் நலனுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்பது கூட தெரியவில்லை மனிதருக்கு...தன்னை சுற்றி யார் இருக்கிறார்கள் தன்னை எந்த திசைக்கு நடத்துகிறார்கள் என்பது கூட புரியாமல் முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களையும் போராளிகளையும் கழுத்தறுத்த ,அமெரிக்க இந்திய கூலிகளான புலத்து துரோகிகள் வழிகாட்டுதலில் நடப்பது போராட்டத்துக்கு எந்தவிதத்தில் லாபம் என்பது அவருக்கே வெளிச்சம்...
நீடித்த நிலையான போராட்டங்களுக்கு தமிழக மக்களை தயாரிப்பது தனக்கு சாத்தியமில்லை என்றால் சீமான் பேசாமல் சும்மா இருப்பது நல்லது....


தங்களிடம் இருக்கிற இந்திய அதிகாரிகளின் பேச்சுகளை வைத்து இந்தியாவை மிரட்டுகிறது சிங்கள அதிகார வர்க்கம் என்று சொன்ன திருமுருகன்,இப்போது ராஜபக்சேவும் கூட்டாளிகளும் தண்டிக்கப்படலாம் என்று பேசுவதன் அர்த்தம் என்ன? ஒருவேளை இந்திய அதிகார வர்க்கம் அந்த உரையாடல் பதிவுகளை களவாடிக்கொண்டு வந்து விட்டதோ?


உண்மையில் பங்காளி அமெரிக்காதான் தனது பங்கை கூட பெற முடியாமல் போகிற நிலை வந்துவிட்டதே என்கிற கடும் எரிச்சலில் இருக்கிறது.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடியும் தனது விரிவாதிக்க கனவை இந்தியாவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்கிற நிலையில் தனது பேரம் பேசும் திறனை விட்டுகொடுத்து அடியாள் வேலை மட்டுமே பார்க்கும் என்று கருதிக்கொண்டிருப்பது அடிமுட்டாள்தனம்.

தனது கைவசம் ஒரு துரோக தலைமையை போர் துவங்கிய காலத்திலிருந்த உருவாகிக்கொண்டிருந்தது அமெரிக்கா என்பதை ஈழ இணையங்களில் தொடர்ச்சியாக அமெரிக்கா தங்களுக்கு ஆதரவாக தலையிடும் என்ற கருதுபரப்பலில் இருந்த...ு புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.தனது கைவசம் ஒரு தலைமையை வைத்திருந்ததோடு,களத்தில் சிங்கள ராணுவம் நிகழ்த்துகிற போர் குற்றங்களோடு புலிகளும் போர்குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்க தனது ஆட்கள் மூலம் களத்தில் மக்களின் மீது தாக்குதலையும் நடத்தியிருந்தது அமெரிக்கா என்று புரிந்துகொள்ள முடியும் மார்ச் மாத துவக்கத்தில் ஐந்தாயிரம் ஆறாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் சிங்கள ராணுவமும் புலிகள் இருவர் மீதும் குற்றம் சுமத்துவதற்க்கான ஆதாரங்களை தங்கள் கைகளில் அமெரிக்காவும் மேற்குலகமும் வைத்துக்கொண்ட பிறகு பிரான்ஸ் ஒரு படையிறக்கத்துக்கு தயாராக இருந்தது.அதை இந்தியா தடுத்தது.மே மாத துவக்கத்தில் அமெரிக்க நிகழ்த்த விரும்பிய படையிறக்கத்தையும் இந்தியாவே தடுத்தது.அமெரிக்க படைகள் இறங்கிருந்தால் அந்த இறுதி படுகொலைகள் தடுக்கபட்டிருக்கும்.மக்கள் சிங்களர்களின் முகாம்களுக்கல்ல ஐநா அல்லது அமெரிக்க முகாம்களுக்கு சென்றிருப்பார்கள்.தனது கைவசம் இருந்த தலைமைகள் மூல புலிகளின் சமரசமற்ற தலைமையை ஆயுதங்களை கீழே போட சொல்லி நிர்பந்திப்பது அல்லது அந்த தலைமையை அழிக்கும் வேலையை அமெரிக்க படைகளே செய்வது என்கிற வேலை மட்டுமே நடந்திருக்கும்.அமெரிக்காவின் பிராந்திய நலன் நோக்கங்களின்படி அதன் ராணுவமும் இலங்கையில் கால் ஊன்றியிருக்கும்.தனது சந்தைகளை அமெரிக்காவுக்கு தர மாட்டேன் என்னை அழுத்தினால் சீனா பக்கம் சாய்வேன் என்று அமெரிக்காவை மிரட்டி இறுதிபடுகொலைகளை நிகழ்த்தியது இந்திய அரசு.



Friday, October 14, 2011

கவிதை

ஏன் எதிர்மறை
என்பவர்களிடம்
என்டோமார்பின் சுரக்காதது
என் தவறல்ல
என்றிருக்கலாம்


மறைகளுக்கு எதிராயிருப்பது
மனிதத்துக்கு
நெருக்கமானது என்றேன்


அல்லாவும்
புத்தனும்
கர்த்தரும்
காவிகளும்


காவு கொண்டு
களவெடுக்கிறார்கள்


கோவில் மணியை
கொள்ளையிட்டவனை
கோவில் எல்லை
தாண்டவும்
விட்டதில்லையாம்
கருப்பணசாமி

Thursday, October 13, 2011

கவிதை

இருக்கிறேன்
இல்லாமல்
இருக்கிறேன்


வினோத கோமாளிகள்
விரித்து செல்கிற
மழை மறைவு
பிரதேசங்களில்


அழுக்கு தொப்பிகளில்
ஆயுதங்களின்
அறுவடை
நிரந்தரமாய்


ஈட்டியில் மீன்
வேட்டையாட செல்கிறேன்
குகையோவியங்களில்

Monday, October 10, 2011

கவிதை

அன்பின்
ஆற்றாமையில்
இசை
ஈன சுருதியில்
உலவுகிறது
ஊரெல்லைகளில்
என்ன
ஏதேன்றேன்
ஐயோ
ஒன்றுமில்லை
ஓடி
ஔவையிடம்

வாங்கி வர
சொன்னாள்
என் தோழி
என்றது

கவிதை ...

உறைந்த
உன்னதங்களின்
சுனை
தேடி களைத்தபின்

அருந்துகிறேன்


அலைவரிசைகளின்
ஆபாசங்ககளை


இருப்புக்கும்
விருப்புக்குமான
இடைவெளிகளில்
அன்பின்றி
அடித்துக்கொண்டே
இருக்கிறது அபத்தம்

தன வாழ்வு போதா
தந்தை தோளில் தோற்ற

ஊர் கிழித்த பக்கங்கள்
போக எஞ்சியதில் எழுத
எனக்கும் இருக்கிறது


சில
வார்த்தைகளும்

சிறிய வாழ்வும்....

Sunday, October 9, 2011

கவிதை

அரண்மனையை பார்வையிட்டு
அறிவித்தார்
பில்லி சூனியம்
ஏவல் ஏதுமில்லை


அடுத்தடுத்து பெண் பிள்ளை
பெறுபனுக்கு அடுத்தது
ஆண் என்றும் தன் பெயர்
வைக்க சொல்லி
அன்பு கட்டளையிட்டார்


அந்த கரைக்கும் இந்த கரைக்கும்
ஓடும் சாமியோடு ஓடி
அடிக்கிற பறை நிறுத்தி
அவன் கேட்டிருக்கலாம்


எப்போது நீக்குவாய்
என் ஜாதி இழிவையென்று


அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்

நாத்திகனாகிறேன்

புதிய கடவுளாகவும்

Friday, October 7, 2011

கவிதை

நீல வெளிச்சத்தில்
நீந்தும் இரவு மீன்களின்
சாளரங்களுக்கு
அப்பால்


உடையும்
நீர்க்குமிழிகளின்
மௌனங்கள்
இசை
நெய்தலில்
மணல் மலரும்

Tuesday, October 4, 2011

கவிதை


என் வீட்டு மாடியில்
குடி வைத்திருக்கிறேன்
ஏழைப் பிசாசொன்றை

அந்தியொளி வீழ்ந்தபின்
அழிந்த நகரங்களின்
அருவங்கள்
கதை சொல்லிகளாவார்கள்

கட்டி வைத்திருக்கிறேன்
கடவுளை மட்டும்

அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து

அறுத்தெரிகிறார்கள்

பிரபஞ்சத்தின்
பிழையை

Monday, October 3, 2011

கவிதை


தலைக்கு மேல்
ரயிலோடினாலும்
தலை கீழாய்
வளர்வதில்லை
தண்டவாள
சிறு பூக்கள்

Wednesday, September 28, 2011

கவிதை

கையெதிரே
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்


எனதல்லாதவை
எல்லாம்


வன்மங்களின்
மாயை களத்தில்

அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....


உபேக்சா
என்றான்
புத்தன்


உதவாக்கரை
என்கிறது
ஊர்

கவிதை

எட்டவே இருக்க
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்


எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை


வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்


உலகின்
முதல்
போதையை

கவிதை

புளிப்பு மிட்டாய்கள்


ஆற்ற ஆற்ற வரும்
பால் நுரை


ஒரு அழுமூஞ்சி
பொம்மை


கொஞ்சம்
கோப்பி


ஒரு ரூபாய்
அல்வா


ஜங்கிள் புக்
மோக்ளிக்கு


சாக்காடுகள்
சமீபமாகின்றன

கவிதை

இன்னும் சில
கவிதைகள் எழுதலாம்



இருபத்தியோராம் நூற்றாண்டு
புரட்சிக்கு செயல்திட்டம்
வகுக்கலாம்



நிலையான புள்ளியொன்று
கிடைத்தால்
உலகை பிடித்தும்
ஆட்டலாம்



அடுத்தவேளை உணவு
மட்டுமல்ல
அந்நியமாதலும்
அவரின்
தயவுதான்

Monday, September 26, 2011

முரண் கவிதைகளில் இருந்து

விளையாட்டாய்
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்



பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி


இமை களைந்து



சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்

கவிதை

அருந்தக
அரவங்களின் சீறலில்
நடுக்குறும்
காலிக்குவளையில்
நிறையும் ஓர்
நீண்ட துயர்



வெண்
மஞ்சள் திட்டுக்கள்
மிதக்கும் நச்சுப்பொய்கையில்
படரும் எழுச்சியுற்ற
தீக்குறி



முடிவற்ற இரவில்
எறியப்பட்ட குவளை
சிந்தும்
வசந்தத்தின்
பனி நீர்

Saturday, September 24, 2011

கவிதை

விதிக்கப்பட்ட
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை



தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்



வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......

Monday, September 5, 2011

கவிதை

அழி ரப்பரால்
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
உடலை
அனாவசிய சிறுமிகள்


கையிருப்பின்
செயற்கை கன்னித்திரைகளை
மறுத்து
நிற்கும்
நீலப்பறவை

கவிதை




இரவில்
முன்னால் விழும்
நிழலில் மட்டுமே
நிகழ்கிறது என்
முன்னேற்றம்


அதனாலென்ன


எங்களுக்கும் இதயமிருக்கிறது
என்பவர்களில் இல்லை
நான்

கவிதை




தவிர்க்க விரும்பிய
வழியில்
இலக்கை சந்திக்கலாம்


தவறான நிலையத்தில்
இறக்கிவிடப்பட்ட
பயணி

Saturday, September 3, 2011

கவிதை



என் இருத்தலுக்கான
சான்றிதழில்
கையொப்பமிட்டுத் தந்தது
காற்று

கழுதைகள் கால்களிடையே
கை நழுவி வீழ்ந்தது
அது



முன்பக்கம் சென்றால்
கடிக்கின்றன
பின்பக்கம் சென்றால்
உதைக்கின்றன


அதை அவைகளே
வைத்துக்கொள்ளட்டும்

அடுத்த நூற்றாண்டு
வரை

Friday, September 2, 2011

கவிதை




கனவில் வரும்
பிணம்
காசைக்
கொண்டுவரும்
என்றது ஆருடம்


என் கனவில்
என்
பிணம்

கவிதை


ஏன் எப்போதும்
திறந்திருக்கின்றன
எங்களுக்கான
வதைகூடங்கள்


ஏன் இன்னும்
எரிக்கப்படுகின்றது
எங்கள்
நிலமும்
உடலும்


எப்போதோ
நிறைந்துவிட்டது
எஜமானர்களின்
ஏழாவது ஜாடியிலும்
தங்கம்..

,கவிதை,

முன்நிலா பொழுதுகளில்
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்


ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி


சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...

Thursday, September 1, 2011

கவிதை


மழை நேர வாசிப்பின்
பக்கங்களில் எரியுமென்
யாக்கை


உதிரும்
சிகரெட் சாம்பலில்


தணிந்து தவழ்ந்து
தார்சாலை திவலைகளில்
தக்கை மீது தவிக்கும்


ஓர் துளி
நெருப்பு

Saturday, August 27, 2011

கவிதை



தியான பெருநிலம்
தழுவி பிரியும்
அமைதியின்மையின்
அலைகள்


கண் எதிரே
கடவுள்


கையருகே
காமம்


நகரத்து வீதிகளில்
ஆண்குறி காட்டி
திரிபவனின்
உள்ளங்கைக்குள்
ஒளிர்ந்தது


தவறி விழுந்த
தாரகை


கவிதை

நீங்கள்
புனிதர்கள்


நீங்கள்
புத்திசாலிகள்


நீங்கள்
வெற்றியாளர்கள்


நீங்கள்
கலகக்காரர்கள்

பிறகும்
நீங்கள்
பிக்குகளாய்

நீங்கள்
நான்
ஒன்றுதான்



அம்மணத்தில்

Friday, August 5, 2011

கவிதை


கைவிடப்பட்டவர்களின்
மரணங்கள் நிகழும்
பிரதேசங்களின்
நிறமிழந்த
வன்னத்த்துப்பூச்சிகள்
சிறகுகள் விரிக்கின்றன
ஊழிக்காலம் கடக்க

இரவு
வரும் பாதையில்
சிதைந்த கைகளால்
பித்தனொருவன்
இழுத்துச் சென்ற
அரைச்சாக்கில்
உலகமிருந்தது

Tuesday, August 2, 2011

கவிதை

பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்

எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்

உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்

பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்

எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை

Monday, July 25, 2011

கவிதை

என் பொம்மைகுட்டியை
தொலைத்துவிட்டேன்

பத்தாவது எருதின்
ஓவியத்தை
கிழித்துவிட்டேன்

சாம்பல் மேடுகளில்
எறும்புகள்
பசித்திருக்கின்றன

Wednesday, May 25, 2011

கவிதை

மௌனமாக பேசிக்

கொண்டிருக்கிறேன்

என் இரண்டாவது

காதல் கடிதத்திடம்

அழ மட்டுமே

தெரிந்த குழந்தையின்

மொழியில்

மொழிகிறாள்

என்

யட்சியுமானவள்

கவிதை

அறிமுகம்

அம்பானிக்கு

மேலே

அப்பிராணிக்கு

கீழே

Wednesday, May 18, 2011

கவிதை

பாதங்கள் தழுவும்
தூரத்தில்தான
இருக்கிறது


சாவும்
சமரசங்களின்
சமுத்திரமும்


காத்திருக்கிறேன்


பாக்கெட்டில் பத்திரமாக
இருக்கிறது
காகிதக் கப்பல்

கவிதை

பஞ்சக் குடி
பதினேழு ரூபாயில்

சிறப்புக் குடி
முப்பத்தெட்டு ரூபாய்க்கு

என்ன எழுதிக்கொண்டிருக்கும்
இந் நாட்களில்
என் வானமும்
அதன்
தனிமையும்

கவிதை.,

என்னவாகலாம் நான்

விமர்சகன்

புரட்சியாளன்

கவிஞன்

எழுத்தாளன்

இயக்குனர்

யாதொன்றும்
தேவையில்லை

பெயர் மாற்றம்
போதுமானது

யெவ்கெனி வசீலிச் பஷாரவ்

Saturday, May 7, 2011

கவிதை......




எரியும் பாதையொன்றில்
படிந்த பாசிகளில்
நிறமின்றி வழிந்துகொண்டிருக்கிறது
காலம்


கழுதை மீதமர்ந்து கடக்க
நினைத்த நதியில்
கவிழ்ந்தான்
இரகசிய புத்தன்

Wednesday, March 30, 2011

கவிதை ;'




வற்றிப்போய் உயிரற்றவையாய்
நேர்த்தியான சடக்கூடுகள்
என்நேரமும் நனைந்து
பொய் சொட்டிக்கொண்டிருந்தன
சுவாசம் எங்கணும்
இளைப்பு கண்டு தவித்து
களைப்பேறி

பிச்சைகாரனின் தட்டில் காசு பொறுக்கி
புகை பிடித்து
சள்ளை பிடித்த
தத்துவங்களை உமிழ்ந்துவிட்டு
அருகிலேயே மரித்துப்போயின

சலனங்களற்று தேங்கிக்கிடக்கும்
யாவும் நேசமற்ற தூரிகையின்
மங்கலான வெளிச்சத்தில்

பரிதாபத்துக்குரிய அசட்டு
சிறுமியின் கிறுக்கல்களாய்
வெடுக்கென பிடுங்கி
எறியப்பட்டு விடும்

வீதிகள் எங்கிலும் மலர்களை தின்று செரித்த
கூட்டம் கள்ள விழிகளில் ஏளனம் சுமந்து
காற்றைப் புணர்ந்து
உப்பித்திரியும்

வார்த்தைகளில் முற்றுப்பெறாத
ஏதோ ஒன்று தனித்து
இனிவரும் நாட்களை
புதுப்பிக்க காத்திருக்கும்

அடர்த்தியான இருள்போர்வை கிழித்து
புவியின் மீள் விடியல் துவங்கும்.

கவிதை .,




என் ஜன்னலுக்கு
வெளியே மட்டும்
இல்லை
மழை

Friday, March 18, 2011

-கவிதை -



கற்பிதங்களின்

புனிதத்தில்

என்னை வடிக்கும்

சிற்பியாய் என்

கவிதைகளின் கரு


நீர்க்குளத்தின்

சலனங்கள்

பார்க்கும்

சுட்டிக் குழந்தை


ஓரோர்

பொழுதுகளின்

நிராகரிப்பின்

தூண்டலும்

துவளலும்

எள்ளலும்

மீட்டலுமாய்

என்னில் நான்


மீண்டு(ம்) வந்து

கட்டிக்கொள்ளும்

என் கவிதை

அழுமூஞ்சியோடு

-கவிதை .



வெக்கை தாளாமல்

விழித்துக்கொள்கிறது

என் இரவு


இடைக்கிடை

அமிழ்ந்து எங்கோ

ஓர் குழந்தையின்

அழுகுரல் கேட்கும்


தனித்து வானத்தின் கீழ்

உயிர்ப்பை அறிவித்து

சலனங்களற்று என்

வேர்களும் நீளும்


முற்றத்தில் அமர்ந்து

தர்க்கித்தும்

விமர்சித்துமிருந்தவன்

இமைகளை உயர்த்தி

தாழ்த்திக்கொள்வான்


விழிகளின் விழிகளில்

புன்னகை மலரும்


வழிப்போக்கர்களின்

காலடியோசை

கேட்டு துவங்கும்

என் நாள்


துயில்கொண்டு

நீங்கிச் சென்ற

தென்றலின் சுவடு

தோள்களில்

இனியும் இனியும்

மிச்சமிருக்கும்

கவிதை



எல்லையற்ற வானத்தின் கீழ்

அந்தி பொழுதின் நிழல்களையும்

வண்ணங்களையும் தூரிகை கொண்டு

வரைந்திடும் கண்கள் விரிய திறந்து

தேம்பி அழுதவாறு நிற்கும்



நீல வானம் தூய காற்று

கூச்சப்பட்டு தழுவிக்கொள்ளும்



அர்த்தமற்ற சந்தடியையும்

பரபரப்பையும் கடந்து

மர நிழல்களில் ஒளிந்து

செல்லும் உருவங்கள் கதைகள்

சொல்லி செல்லும்



தனிமையாலும் சோர்வாலும்

முடங்கியிருக்கும் தருணங்கள்



நிலவுதல் இல்லாத நிலையின்

எஞ்சிய பரப்பெங்கும்

சோகம் கலந்த உள்ளன்பு

பரவும்



கதகதப்பான கைகளுக்குள்

புதைந்துகொண்டு

சிறுவிழிகள் சிமிட்டி

விரல்களால் உயிர்தொட்டு

நீங்கும் ஓர் குழந்தை



மெல்ல குளிராகி

இருள் சூழும்

Wednesday, March 9, 2011

!! கவிதை !!




அந்தகனின் விழிகளை
அணிந்திருந்தேன்

நண்பகல் வானில்
நட்சத்திரங்கள்
இறைந்திருந்தன

முன்னிரவின் துவக்கத்தில்
கைகளில் வழிந்த
துளிகளில் நின்றது
பேரிசையின் தொடரணி

தள்ளி வைக்கப்பட்டிருந்த
எனது தலையின்
இடப்பக்கம் ஹெராக்ளிடஸ்
வலப்பக்கம் பெர்மினியீட்ஸ்

நான்கு நாட்களுக்கொரு முறை
புதுப்பிக்கப்படும் கணினியை
உடைத்துவிட்டு நடந்தான்

லோகாயத
சித்தன்...

Friday, February 25, 2011

$கவிதை $



அகம்
பிரம்மாஸ்மி

ஆறாவது
வார்டு

இசங்கள்

அப்ப தீ
போ பவ

இன்மை

கி.எஸ்.ஜெ.

அனல்
ஹக்

ஹராஹிரி

கழுதை

மனிதன்

கவிதை **




ஆழ்கடலின்
அழுகுரல்
கேட்டது

இடியோசை
நகர்ந்தது

உதிரம்
உதிர்ந்தது
கடற்கரை
மணலெங்கும்

என்னை அரிந்து
எழுதினேன்

யோசப் க.

தூரத்து
சாலையில்
எழுந்தது
மீட்பர்களின்
கெக்கலி

இடியோசை
பிடித்து
நடந்த
பாதங்களின்

நிழலாகி
தொடர்ந்தேன்..

கவிதை ***




ஏதோ ஒரு மழைநாளின்
பற்றி படரும்
உணர்வுகளின்
பின்னலில்


மிரட்சியோடு
இரு விழிகள்
நிழலாடி செல்லும்


மௌனமாய் துள்ளலோடு
கடந்து சென்ற மழைத்துளி
வெம்மையை எழும்
உயிரின் ஆழங்களில்


மிச்சம் வைக்கப்பட்ட
குழந்தமை கனவுகள்
உயிரின் தேடலாய்
நீளும்


கட்டவிழ்க்கும்
பிஞ்சு விரல்களில்
விரியும்
மீட்சியின்
சிறகுகள்

Monday, February 14, 2011

கவிதை *


இலையுதிர் கால
மரம்

கைவிடப்பட்ட
இருப்புப் பாதை

சிறகை தொலைத்த
பறவை

புத்தகத்தின்
மயிலிறகு

இந்த
கவிதை

நான்

Monday, February 7, 2011

கவிதை .......




எங்கே செல்வாய்

எவ்வளவு தூரம்
ஓடுவாய்

எதில் ஒளிந்து
கொள்வாய்

உன்னைப்போல
இன்னொருவன்
இல்லை என்றது
முகம் பார்த்த
கண்ணாடி

பிறகு உமிழ்ந்தது

குருதி சுவைத்து
ஓடின
ஓநாய்கள்

கானல்
நீர்க்குளத்தில்
கல்லெறிந்தேன்

எரிந்தேன்..

கவிதை




வெட்ட வெளியின்
வெளிச்ச புள்ளிகள்
பிடித்தேன்

வெற்றுத்தாள் ஒன்றில்
வைத்தேன்

ஒவ்வொன்றும்
ஓவியமாக
தன்னை
வரைந்துகொண்டது

தீராத என் கவிதையொன்றின்
வரிகளை எழுத துவங்கினேன்

வெளியில் கலந்து
மறைந்தன

உள்ளங்கையில்
மிச்சமிருந்தது
வெறுமை

கவிதை




தத்துவங்களின் தாகம்
பெருகி வழிய
தொண்டைக்குள் இறங்கி
இரை தேடிய
என் பாட்டனின் சோகம்
நரம்புகளில் பாய்ந்து
சிலிர்த்தது

உமிழப்பட்ட
வார்த்தைகளிலெல்லாம்
தனித்திருந்து
முடங்கியது


அதிமானுடன் தேடி
பயணம் நடந்த
பாதையில்
ஓர் ஓரமாய்
வீசப்படும் துண்டுகளுக்காய்
தானும் நாய்க்குட்டியுமாய்
பாடிக்கொண்டிருந்த
கிழவனின்
குரலில்

ஒழித்து தெரித்தது
கள்ளோடு
கொஞ்சம்
கம்யூனிசமும்..

Sunday, February 6, 2011

கவிதை



எள்ளி நகையாடி
என்னை தவிர்த்துவிட்டு
செல்லும்
சிறு விழிகள்

இரவுகள் தோறும்
அர்த்தம் தெரியாமல்
தவித்து
மனவெளியில்
திரிகையில்

பற்றவைத்துச் செல்கின்றன
இளமையின் வேர்களில்
துளி துளியாய்..

இனியும்
உணரப்படாமல்

காணலில் பரவி
பகல்களை
கொள்ளை கொண்டு

அழகான இரவுகளை
சற்றே முரட்டுத்தனமாய்
போதிய மென்மையுடன்
சூழும் என் காதல்

தணிந்து தணிந்து
தவழவே
துவங்கிவிடும்
விடியலில்

உள்ளங்கை சூட்டில்
முகம் புதைத்து
ஓர் கணம் சிலிர்த்து
மீண்டும் துவங்கும்
பயணம்

விழிகளின் செவ்வரி
திசைகள் படைக்கும்
உறுதியோடு
நிறம் மாறும்.

Thursday, February 3, 2011

கவிதை...




சலனமற்றிருந்த
விழிகள்
வெறிக்கும்


மிருகத்தின்
சாயல்


உயிர்ப்புமிக்க
நீரோட்டத்தின்
ஏக்கம்


எதிர்கொள்ள
துணிவில்லாமல்
அழுத்தமான
தனிமையில்
திசைகளற்று
தொடர்கிறது


துள்ளலோடு
உலவுகின்றன
மகிழ்வூட்டலின்
இருண்ட பக்கங்கள்



மேய்ச்சல் நிலத்தின்
இடையன் சுட்டுவிரல் பிடித்த
மென் விரல்கள் போய்
ஒற்றை ஆட்டுக்குட்டி மட்டும்
தோளில் சுமையாய்
துவண்டு படுத்திருக்கும்



இரவின் காரிருள்
மூண்டெழ



நாடோடிகள் நடனம்
வெறிகொண்டு
துவங்கும்..

Monday, January 31, 2011

கவிதை




கதை சொல்லியின்
விரல்களை பற்றிகொண்டு
இருவருக்குமான வெளியில்
சுற்றி திரிந்த சிறுமி
தோளில் சாய்ந்து
துயில்கொள்வாள்


இமைகள் பிரியாத‌
க‌ன‌வுக‌ளின் முக‌த்தில்
கவிதைகள் மலரும்


மெல்லிய சோகம் ததும்பி
பற்றிகொள்ள பரவும் கரங்கள்
தயங்கி அலைவுற‌

மௌனத்தின் வலியை
அடர்த்தியான இரவு
மதி நிழல் தந்து கூட்டும்

ரகசிய உயிர்ப்பு

இருவரின்
உயிரோசை
காற்றுகொண்டு சென்ற
மழை மேகமாய்

வெற்று வெளியில்
அலைக்கழிக்கப்பட்ட யாச‌க‌ன்
கைகளில் இரு துளிகளாகும்

இன்ன‌மும் தீராத
இரவின்
மிச்சங்களில்


தோழி
துயில் நீங்கி
பிரிவாள்

தனிமை
சப்தித்திருக்கும்

Saturday, January 22, 2011

கவிதை



ஏக்கம் ததும்பி

வழியும்போதே

வற்றிவிடுகிறது

என் இருப்பு


சேமிப்பில் இருந்த‌

முக‌ங்க‌ள்

உத‌டுக‌ள் திற‌ந்து

உள‌றி திரிகிற‌து

வாழ்வை


முகில் கலையும்

வெளிகள்தோறும்

நிறங்கள் எரிந்து

சாம்பல் குவித்து

துயில்கிறது

என் வானம்


அந்நிய மொழி

குழந்தையின்

பிஞ்சு விரல்கள்

பிடித்து

விழிகள் பார்த்து

துள்ளலோடு

துவஙகும்

மீள் உயிர்ப்பு



இந்த கவிதை

தொடரும்.

கவிதை



எப்பொழுது பார்க்கினும்

எட்டி நின்று

முறைத்துகொன்டிருக்கிறது

சூழலின் யதார்த்தம்


இடைக்கிடை ஓரிரு நொடிகள்

தணிந்து மீண்டும்

சூழ்ந்து பரவும்

வெயில்


ந‌ர‌ம்புக‌ள் ப‌ர‌வி

ம‌னித‌ கூட்டின்

ப‌ள்ள‌த்தில்

ம‌ரித்துபோகிற‌து


நெஞ்சுக்குள் கிள‌ர்ந்து

ச‌ர‌ச‌ர‌க்கும் ச‌ருகுக‌ள்

இனி உர‌க்க‌ பேசும்

மெலிதாய் தளிர்க்கும்

இனி வ‌ரும்

விடிய‌ல்க‌ள்

சிவ‌ந்திருக்கும்



இரு ப‌னிதுளிக‌ள்

தழுவிக்கொண்டு

புன்னகைக்கும்

Friday, January 21, 2011

கவிதை




திருத்தம் செய்வதற்கு

ஏதுமில்லை




கலைந்தே கிடக்கின்றன

அழகாய்

சிறகிழந்த

சிறுமைகள்




மெலிதாய் ஊடுருவி

நெஞ்சில் பரவும்

திகைப்பு

தவித்து அடங்கும்

முரண்களின் வெளி




புனிதங்களின் நிறம்

என்றும்

வெண்மையின்

மறுப்பாகவே



வீதிகள் தோறும்

விழிகளில்

வழிந்து

தெருக்கள்

நிறையும்

தேடல்கள்




விரல்கள் இடையில்

வழிந்து பாதங்கள்

தீண்டிமெதுவாய்

நழுவி செல்கிறது



நதி

துளிதுளியாய்

சலனங்களற்று

மடிகிறது



கவிதை...




தென்னங்கீற்றுகள் தழுவி
தென்றலால் தணிந்து
மேனி தீண்டுகிறது
மாலை வெயில்


மென்மையாய்
இரு கரங்கள் நீண்டு
எடுத்து
ஒளித்து
வைத்துகொள்கின்றன‌


உயிரின் கதகதப்பில்
ஒடுங்கி
அற்றதாய்
த‌வித்து மீள்கிற‌து
ம‌ன‌ம்


விழிக‌ளில் செவ்வ‌ரி படரும்
தூக்க‌மிழந்த‌ இர‌வுக‌ளின்
ஊமை க‌ன‌வுக‌ள்
முன்போல
அட‌ங்கி கிட‌ந்திருக்க‌லாம்


இந்த‌ சோக‌ம்
எழத‌ப்ப‌ட்டிருக்காது

Thursday, January 20, 2011

கவிதை.

மௌனகூட்டின் சிறை திறந்து
உதிரும்போதெல்லாம்
கருவறையின் வெம்மை தேடி
உள்ளோடுகிறேன்


எதிரிடும் கண்களை
சந்தித்து மீளகையில்
மின்னல் தெறிக்கிறது
மெலிதாய் சாவின் நிழலும்


மொழிதலின் மறுப்பு
தொடர
சூழ்கொண்டு மேகமாய்
வேர் வரை தீண்டி
பற்றிகொள்ளும்



எரிதழல் எழும்
கற்பிதங்களின்
அறியாவெளிகள்தோறும்
உள்ளொடுங்கி
தளிர்க்கும்
எதிர் உயிர்கள்..


விட்டுசெல்லும்
யுகம் சுமந்த
கனவுகள்
நீளும்...

Wednesday, January 19, 2011

முகமற்ற கவிதைகள் - 4



போருக்கு அழைக்கின்றன‌
என் வனத்தின்
சில பட்டாம்பூச்சிகள்


அழகாய்த்தான் சிறகுகளும்
செயற்கை வண்ணங்களில்


நுகத்தடியின் நுன் கரங்களுக்குள்
சிதைந்துகொண்டே
புன்னகை பூக்கின்றன‌


பற்றி பிடித்த தளிர் கரம்
ஒன்றின் விரலிடுக்கில்
செழுமையாய் ஒரு துளி
இரத்தம்


அமைதியாய் மரணித்துபோகும்
வனம்


அதிகாலை நீல் இரவு
மெதுவாய் விடிய‌
துவங்கும்

முகமற்ற கவிதைகள் - 3

பாதங்கள் பதியாமல்
உலவினேன்
காட்டின்
தனிமையில்

வசவிய
குருவிகளுக்கும்
வாழ்த்துக்கள் தந்தேன்
வார்த்தைகளற்று

அதீதங்களின்
அரவமொன்றின்
வழியில்

தொலைந்தேன்

நனைந்த
நதியில்
நகர்ந்தது
நீலத்
தீ

ஈர நிலத்தின்
குடைகாளான்
தலை
கவிழ்ந்து
நின்றது.

முகமற்ற கவிதைகள் - 2




ஒரு துளி நீரெடுத்து
ஒவ்வொரு துளியாய்
வைத்தேன்


ஐந்து துளிகளில்
அணைந்தது
சூரியன்


உயர உயர
சென்றது
சிறகிழந்த
தும்பி.

முகமற்ற கவிதைகள் - 1







சின்ன சின்ன சிவப்பு
பூக்கள் கொஞ்சம்
கொஞ்சம் மஞ்சள் பூக்கள்
கொஞ்சமே கொஞ்சம்
வயலட் பூக்கள்



வயலன்சை தவிர்க்க
எந்த பூக்கள் தருவது



சிறிய குழப்பத்துடன்
சிறுமி
காத்திருந்தாள்...



கனத்த
காலணிகள்
சப்திக்க
நெருங்கியிருந்தவனின்

வீரம்
விறைத்திருந்தது..