Thursday, July 23, 2009

தோழர் பொன்னம்பலனாருக்கு பெரியார் எழுதிய கடிதம்

தோழர் பொன்னம்பலனார் எழுதியிருக்கும் இவ்வாரக்
கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில்
ஈடுபட்டிருந்த பார்ப்பனீயத்தை ஒழிக்கும் முயற்சியிலும்
பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சியிலும்
இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதைவிட்டுவிட்டு
வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடைமை
என்கிற வழியில் பிரவேசித்தது தப்பு என்றும்
அதனால் பழையபடி பார்ப்பனீயம் துளிர்த்து வருவதாகவும்,
பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுவதாகவும்
குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாயையில் சிக்கி
இருப்பதாக பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல
விசயங்களை கொட்டியிருக்கிறார்.அதற்கு சிறிதாவது
சமாதானம் கூற வேண்டும் என்றே கருதுகின்றோம்.


முன்போல பார்ப்பனீயத்தின் கொடுமைகளை
வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை
ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும்
இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம்.
ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியமெல்லாம்
அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள
முடியவில்லை.


பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் காரணமாயிருப்பது
மதம் என்பதை தோழர் பொன்னம்பலனார் உணர்ந்திருப்பார்.
அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னைவிட இப்போது
பன்மடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும்
தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்கள்.



பார்ப்பனீயத்தையும்,பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க
வேண்டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது?
பார்ப்பனீயத்தின் பேராலோ,பார்ப்பனர் பேரிலோ,ஏற்பட்ட
துவேசமா? வெறுப்பா? வஞ்சகமா? என்பதை யோசித்துப்
பார்க்க விரும்புகிறோம்.


ஒரு நாளுமல்ல,மற்றென்னவென்றால்,பார்ப்பனீயமும்
பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை,தாழ்த்தப்பட்ட
மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல்
அழுத்தி நசுக்கி வருவற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும்,
தாங்களே என்றென்றும் மேன்மையாயும் ஆதிக்கமாயும்
இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே
அதனுடன் போர் புரிந்துவந்தோம்


ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று
பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில
குறைவுபட்டது.அரசியல் துறையில் பார்ப்பன
ஆதிக்கத்திற்குச் சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும்
ஓரளவுக்கு ஏற்பட்டது.ஆனால் இதனால் ஏற்ப்பட்ட பயன்
என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார்
பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள்.

பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள்,ஏழைகளையும்,
தாழ்த்தப்பட்டவர்களையும் தலைதூக்கவிடாமல் இருக்க
பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து
வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாக தெரிகின்றது.


உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால்
பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக்கொண்டு
பெரிய மனிதனாகிய,மந்திரி பதவியையும்,
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பதவியையும் பெற்ற
தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் பதவிக்கு வந்தவுடன்
பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,
பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே தோழர் முத்தையா
முதலியார் அவர்களால் உத்தியோகங்கள், வகுப்புவாரி
பிரதிநித்துவப்படி விநியோக்கிப்பட வேண்டும் என்று
செய்யப்படிருந்த விதியை ஒழிக்க வேண்டும் என்று
பாடுபட்டதோடு சுயமரியாதை இயக்கம் என்பதாக
ஒரு இயக்கம் இருக்கின்றதா என்று அறியாதவர்
போலும் பல தடவைகளில் அதை அலட்சியமாய்ப்
பேசியும் நடந்தும் வந்தார்.



இந்தக் காரியம் சுயமரியாதை இயக்கம் பார்ப்பன
ஆதிக்கத்தை ஒழிக்கப்பாடுபட்டதற்கும்,தோழர்
முனிசாமி நாயுடு முதல் மந்திரியாவதற்கும்
ஓரளவாது காரணமாய் இருந்ததற்கு ஏற்பட்ட பலனாகும்.
இது மாத்திரமல்ல,மற்ற மந்திரிகள் நிலைமையை
யோசித்தால் இனியும் வெட்க்ககேடாகும்.ஒரு மந்திரியார்
ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின்
நிழலில்தான் நாங்கள் இன்று மனிதர்களாய் வாழ்கிறோம்
என்றுகோஷம் செய்தார்,அவர் கண்களுக்கு இன்று
ரூபாயைத் தவிர வேறு வஸ்துவே உலகத்தில்
இருப்பதாகத் தெரியவில்லை.மற்றும் இப்போது பார்ப்பனரல்லாதார்
தலைவர் என்று சொல்லிக்கொள்ளுகின்ற பணக்காரர்களின்
யோக்கியதையும் முன்சொன்ன மந்திரி போலவும்
பார்ப்பனர்களையே தூதாட்க்களாகவும் தங்கள்
பதவி வேட்டைக்கு ஒற்றர்களாகவும் வைத்துப் பார்ப்பனீய
ஆதிக்கத்தைவிட மோசமான ஆதிக்கம் செலுத்தி
வருகின்றவர்களாவார்கள்.



பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை
வாங்கிக் கொடுக்கசுயமரியாதை இயக்கம் இருக்கின்றது
என்று சொல்லுவதானால் கஷ்ட்டப்படும் மனித
சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்வித பலனும்
ஏற்படாதென்பதே நமது அபிபிராயம்.


ஆதலால் சமதர்மத்தையும் பொதுவுடைமை
கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும்,பார்ப்பன
ஆதிக்க அழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள
முடியாமைக்கு வருந்துகிறோம்.



இந்து,சுதேசமித்திரன் பத்திரிக்கைகளுக்கு நாட்டில்
செல்வாக்கு இருக்கும்வரை,இந்தியாவுக்கு வெள்ளைக்கார
முதலாளிகளின் ஆட்சிதான் மேலானது என்பதுதான்
நமது அபிப்பிராயமாக இருந்து வருகிறது.


ஏனெனில் தங்களை இழிவுபடுத்தி தங்கள் சமூகத்தை,
அடிமையாக்கி வாழ்ந்துவரும் ஸ்தாபனத்தை மக்கள்
ஆதரிகின்றார்கள் என்றால் அந்த மக்கள் விடுதலை பெற
யோக்கியதை உடையவர்கள் என்று எந்த மூடனாவது
ஒப்புக்கொள்ள முடியுமா? இதையெல்லாம் பார்த்துதான்
இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும்
பொதுவுடைமையும் என்ற முடிவுக்கு வந்தோமேழொழிய
வேறில்லை.

பார்பனரல்லாத மக்கள்,அறிவோடு மானத்தோடு
நடந்துகொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால்,
பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார்
ஆதிக்கத்தை ஏற்ப்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு:

அப்படிக்கில்லாமல் பார்பனீயத்தை அழித்து பார்ப்பன
அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்பதற்கு
பாடுபடுவதென்றால்,அது கொள்ளிக் கட்டையை
எடுத்துத் தலையைச்சொறிந்து கொள்வதேயாகும்.

என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில்
செய்கின்ற முயற்சியில்தான் நாம்
இருக்கின்றோமேயொழிய,அவற்றை அடியுடன்
விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


குடி அரசு
பக்கம் 10.11.12.
22.10.1993


தோழர் பெரியாரின் இந்த கட்டுரையில் தேவையற்றவை
என்று கருதிய சில பத்திகளை சேர்க்காமல் விட்டிருக்கிறேன்.

அரசு அதிகாரத்தில் இருப்பவர்களோடு பிற்ப்படுத்தப்பட,
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை முன்நிறுத்தி
செய்துகொண்ட சமரசங்களையும் தாண்டி, பெரியாருக்கு
இருந்த வர்க்க கண்ணோட்டத்தையும் பிறப்பின்
அடிப்படையை வைத்து மட்டுமே பார்ப்பனர்களை,
பார்ப்பனீயத்தை தீர்மானிக்கும் போக்குக்கு எதிரான
அவரது மிகச்சரியான பார்வையையும்
இந்த கடிதத்தில் நம்மால் காண முடிகிறது.

அவரது இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை
சமகால அரசியல் தலைவர்களோடும் நிகழ்வுகளோடும்
இணைத்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது இன்று.


பெரியார் சாடியிருக்கிற முனிசாமி நாயுடுவின் இடத்தில்
கருணாநிதியை வைத்துப்பார்க்க எல்லா அம்சங்களும்
பொருந்தி வருகின்றன.

கடலில் கட்டி தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான்
மிதப்பேன் அதில் நீங்கள் ஏறிபயணிக்கலாம் என்று
வசனம் பேசிக்கொண்டிருகிற மனிதரின் கண்களுக்கு
ரூபாய் என்கிற வஸ்துவை தவிர வேறு எதுவும்
தெரியாமல் போய்விட்டதையும்,பெண்கள்,குழந்தைகள்,
கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசு என்று
முப்பதாயிரம் ஈழத் தமிழ் உயிர்களை காப்பாற்றியிருக்க
கூடிய நிலையில் இருந்தும்,ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும்
அவர்கள் கொல்லப்பட, துணைபோகிற அளவுக்கு அவர்
சென்றதையும் கண்டிருகிறோம் நாம்.


முனிசாமி நாயுடு முதல்வர் பதவியை பெற்ற பிறகு
பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்.
இன்று அகில இந்திய முதலாளிகளாக வளர்ந்துவிட்ட
தனது குடும்பத்தினரின் நலன்களுக்காக பார்ப்பன இந்திய
தேசியத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறார் கருணாநிதி.

மத்திய அரசும் மாநில அரசும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டிய
இடங்களை நிரப்பாமல் விட்டிருப்பது பற்றிய விவாதங்களே
இன்னும் முடியாத நிலையில்,மத்திய அரசின் அலுவலர்கள்,
மற்றும் பயிற்சித்துறை தாழ்த்தபட்டோர்க்கும்,
பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இடஒதுக்கீடு
மசோதா 2008 என்ற ஒன்றை கொண்டுவந்து 47
கல்விநிறுவனங்களில் அவர்களின் இட ஒதுக்கீட்டு
உரிமையை பறித்திருப்பதை பற்றியும்,அந்த சட்டம்
செல்லுபடியாகும் நிறுவனங்களின் பட்டியலை மேலும்
விரிவுபடுத்திக்கொள்ள அனுமதித்திருப்பதையும்
எதிர்க்காமல் மௌனம் காத்த திமுக வினரின் நிலையும்
இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.



பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்
பார்ப்பனரல்லாத சிலர் பார்ப்பனர்களின் இடத்துக்கு வந்து
பார்ப்பனீய ஆதிக்கத்தை விட மோசமான ஆதிக்கத்தை
செலுத்திவருவதை ஈழ போராட்டத்துக்கு எதிரான
கருணாநிதியின் ஒடுக்குமுறைகள் வழியாகவும்,
எடுத்ததற்கெல்லாம்தேசிய பாதுகாப்பு வழக்கு போடும்
அவரது நடைமுறைகள் வழியாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.



பார்ப்பானை ஒழித்துப் பணக்காரன் கையில்
ஆதிக்கத்தை வாங்கிகொடுக்கவிரும்பாத,பெரியாரின்
இயக்கத்தில் இருந்து முறித்துகொண்டு வந்து,
பணக்காரர்களாகியிருக்கிற பார்ப்பன அடிமைகளால்
கஷ்ட்டப்படும் தமிழ் சமூகத்தை மீட்க வேண்டிய
தேவை எழுந்திருக்கிறது இன்று.


பெரியாரின் வழிகாட்டலின்படி சமதர்ம பொதுவுடைமை
கருத்துக்களை உயர்த்திப்பிடித்து பார்ப்பன,
கருப்பு(பணக்கார)பார்ப்பன, ஆதிக்கத்தை எதிர்த்து
ஏககாலத்தில் போராடுவது மட்டுமே நம்முன் உள்ள வழியாகும்.

No comments:

Post a Comment