Monday, July 20, 2009

ஷோபாசக்தி ஜீவிக்கிறார்



தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கோர்வையான பத்திகளோடு வன்மத்தையும் தனது அரசியல் அறியாமையையும் கலந்து பிரபாகரன் ஜீவிக்கிறார் என்றொரு கட்டுரையை தீராநதி இதழில் தீட்டியிருக்கிறார ஷோபாசக்தி.

பெரியாரிய,மார்க்சிய,பிறகான நவீனத்துவவாதியான அவரின் எழுத்துக்களில் மிளிரும் மேதமை உடனடியாக அதற்கு ஒரு எதிர்வினையை முன்வைக்கும் தேவையை உணர்த்தியதால் இந்த மறுமொழி முயற்சி.


எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமான சோசலிச தமிழீழம் அடைய என்பதாய் துவங்கும் புலிகள் இயக்கத்தின் உறுதிமொழியின் முதல் வாசகம் வெறும் புரட்சிகரமான வாய்ச்சொல் என்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குபிறகு கண்டுபிடித்து அறிவிக்க முனைந்திருக்கும் அவரை இடைமறித்து ஒரு விசயத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.


சர்வதேச நாடுகளின் வணிக சுரண்டல்,ராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக,உலக புரட்சியில் மாளாத காதல் கொண்ட உங்களுக்கு புரியும் வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவில் மாவோயிச புரட்சியாளர்களின் கட்டுபாட்டில்இருக்கும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை போல,தமிழீழத்தின் பகுதிகளை பாதுகாத்து வைத்திருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான்.


தாடிக்கார கிழவன் மார்க்ஸின் பணிப்பெண்ணுக்கு புத்தகத்தை சமர்ப்பிக்கும் அளவுக்கு வரலாற்று உணர்வு கொண்ட உங்களுக்கு இந்த விசயத்தை நினைவூட்ட வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளிவிட்டது நியாயமா
ஷோபா சக்தி?

இரக்கத்துக்குறியவராக மட்டுமே கருதப்படக்கூடிய,நாயகனாக கொண்டாடப்படவோ,தலைவராகபின்பற்றக்கூடியவராகவோ இல்லாமல் போய்விட்ட உங்கள் முன்னால் தலைவர்,மதம்,சாதி,கட்சி,அமைப்புகள்,தாண்டி உலக தமிழர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பெற்று வெகுகாலமாகிவிட்டது என்கிற யதார்த்த உண்மை உங்கள் மதிப்பீட்டால் மாறப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறீர்களா ஷோபாசக்தி?

விளிம்புநிலையினரின் கலகக்குரல் அல்லவா நீங்கள் !!
உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட கூடியதுதான்.

கடந்த இருபத்தைந்தாண்டுகளாக ஈழத்தமிழர்களின் அரசியல்,சமூக வாழ்வில் முதன்மை சக்தியாகவும்,மாபெரும் அமைப்பு பலத்தை பெற்றதாகவும்,எண்ணற்ற போரியல் சாதனைகளை செய்ததுமான விடுதலைப்புலிகளின் தலைமைக்குழு இலங்கை அரசால் ஒட்டுமொத்தமாக அழிக்கபட்ட வினாடியே,விடுதலைப்புலிகள் அமைப்பு மண்ணோடு மண்ணாய் சரிந்துபோனதாக கூறிவிட்டு அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறீர்கள் ஷோபா சக்தி?


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்,தங்களுக்குள் பகைகொண்ட நாடுகளாக அறியப்பட்டிருந்த சீனா,இந்தியா,பாகிஸ்தான் போன்றவைகளின் ஆதரவோடு சிங்கள அரசு தமிழர் பகுதிகளை கைப்றறிய பிறகு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் அங்கு அனுமதிக்க ஆரம்பித்திருக்கும் அந்நிய முதலீடுகளை,இத்துணை காலமும் தடுத்துக்கொண்டிருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான் என்பதை ஏகாதிபத்திய எதிர்ப்புபோராளியான நீங்கள் மறந்தது ஏனோ? செலக்டிவ் அம்னீசியாவா?


அதிவலதுசாரிய இயக்கமாக உருவெடுத்து சோசலிச சொல்லாடல்களை தனது குறுந்தேசியத்தை நியாயபடுத்த பயன்படுத்திகொண்ட ஒரு இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் சீனா என்று வலதுசாரி நாடுகளே இலங்கை அரசின் பின்னால் அணிவகுத்து நின்றதன் முரண்பாட்டை நீங்களே கொஞ்சம் விளக்குங்களேன்.


ஒரு வலதுசாரிய அமைப்பை உடைப்பதற்காக தனது உளவுதுறையை இந்தியா பயன்படுத்தியதன் முரண்பாட்டைஎங்களுக்கு விளக்காமல்,வெறுமனே ராஜிவ்காந்தியின் நினைவுநாளோடு புலித்தலைமை அழிக்கபட்ட நாட்கள் என்று கூறப்படுபவைகளை இணைத்து பம்மாத்து காட்டும் உங்களுக்கு எதற்கு இடதுசாரிய முகமூடி?


விமர்சனங்களை அனுமதிக்காத மாற்று கருத்தாளர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்தது விடுதலைபுலிகள் இயக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

மேற்குலக நாடுகள் இந்திய,சிங்கள அரசுகள் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் விடுதலைபுலிகளின் அரசியல் ராணுவ அமைப்புகளில் ஊடுருவி வேலை செய்ததின் மூலமாகவே இன்றைக்கு புலிகளுக்கு இந்த பின்னடைவை கொடுத்திருக்கிறார்கள் என்கிற உண்மை இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது.


கருத்துக்களை அனுமதிக்காத,சனனாயகமற்ற ஒரு இயக்கத்துக்குள்,அரசியல்ரீதியாகவும் ராணுவரீதியாகவும் தவறான முடிவுகளை எடுக்கும்படியான வழிகாட்டல்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு செய்ய அந்நிய நாடுகளுக்கு எவ்வாறு சாத்தியமானது என்கிற கேள்விக்கான பதிலில் உங்கள் சனனாயகமின்மைக்கான புலம்பல்கள் எல்லாம் அர்த்தமற்று போய்விடுகின்றன.


இரண்டு இலட்சம் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்து அதில் இருபதாயிரம் மக்களை புலிகள் பலிகொடுத்ததாக வாய் கூசாமல் உங்களால் சொல்ல முடிவதில் எஙகளுக்கு ஆச்சரியமில்லைதான்.அந்த இருபதாயிரம் மக்களின் உயிர்களையும் தங்களோடு கடைசிவரை இருந்த போராளிகளின் உயிரையும் காக்க சரணடைதல் முடிவை மேற்க்கொண்டு,சரணடையவந்த நடேசனையும் மற்ற தளபதிகளையும் கொன்றுவிட்ட பிறகுதான் அந்த இனப்படுகொலையை சிங்கள ராணுவம் நிகழ்த்தியது என்கிற அடிப்படை மறைத்து,புலிகளின் தாக்குதலே இல்லாத நிலையில்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்தது என்பதையும் மூடி மறைத்து யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் நீஙகள்?


முகாமில் இருக்கும் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்ற சிங்கள ராணுவத்தினரின் துப்பாகிக்களை பிடிங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன இன்று,இந்த செய்திகள் போதுமே தமிழ் மக்களை புலிகள் பனையகைதிகளாக வைத்திருக்கவில்லை எனபதை உணர்த்த.

சிஙகள ராணுவ தளபதிகளே வெறும் ஆயிரம் புலிகள்தான் மீதமிருக்கிறார்கள் என்று அறிவித்திருந்த நிலையில் ஆயிரம் பேர் எழுபதாயிரம் மக்களை எப்படி தடுத்துவைத்திருக்க முடியும் என்பது போன்ற தர்க்கரீதியான கேள்விகளை எழுப்புகிற நேர்மையை எல்லாம்,

புலிகளின் வரித்தொல்லையோ புள்ளைபிடிப்போ இனிமேல் இருக்கப்போவதில்லை என்று எழுதி,முகாம்களில் இருந்து இதுவரை சிங்கள ராணுவம் பிடித்து சென்ற பதிமூன்றாயிரம் பிள்ளைகள் பற்றியும் அவர்களில் பாதிப்பேரை அவர்கள் கொன்றொழித்திருப்பதை பற்றியும் வாய்திறக்க மறுக்கிற உங்களிடம் எதிர்பார்க்கிற அளவுக்கு நாங்கள் ஏமாளிகள் இல்லை.

போகிற போக்கில் புலிகள் ப்ரேமதாசாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டது போலவே ராஜசபக்சேவோடும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டாதாக கூறும் நீங்கள் அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் உள்ளடக்கம் பற்றி எல்லாம் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க உளவாளி தோழர்களிடம் இருந்து தகவல் சேகரித்து வெளியிடாமல் போனது ஏனோ ?

தங்கள் தேசத்துக்கான அங்கீகாரத்தை பெறும் ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே பெயரளவில் ஏகாதிபத்திய நாடுகளோடு சமரசத்தை கடைபிடித்த தலைமையின் வழிகாட்டலில்,களத்தில் போராடி வீழ்ந்த போராளிகளின் மரணத்தை அரசியலற்ற அவலங்களாக சித்தரிக்கும் உங்கள் போலித்தனத்தை உணர முடியாத அளவுக்கு நாங்கள் அரசியல் அறிவு அற்றவர்களுமல்ல.

தங்களின் அப்பட்டமான தனிமனிதத்துவ வாழ்வியல் சிந்தனைகளையும் தாண்டி,போராட துணிந்த புலம்பெயர் தமிழ் இளைஞர்களை துரோகிகள் என்று விளிக்கும் உங்களின் திடீர் இடதுசாரிபாசத்தின் யோக்கியதை எங்களுக்கு தெரிந்ததுதான்.செத்த விலங்கிலிருந்து உண்ணி கழருவதுபோல இடதுசாரி அமைப்புகளில் இருந்து பிய்த்துக்கொண்டு சென்றவர்களின் ரசிகர்மன்ற நிர்வாகிதானே நீங்கள்.

சிங்கள் அரசின் மனித உரிமை மீறல்கள்,சரணடைந்த பெண் போராளிகளின் பாதுகாப்பு,விசாரணைகளின்றி நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் தமிழ்ர்களின் மறுவாழ்வு என்றெல்லாம் கதையாடல்களை நீட்டிச் செல்லும் நீங்கள் இன்றுவரை எரிக்சோல்கைம் இருதரப்புகளுமே ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன என்று சொல்லிக்கொண்டிருப்பதை சுட்டிகாட்டுகிறீர்கள்.

அது என்ன தீர்வாக இருந்திருக்கும் என்பதையும் சுட்டிகாட்டி இருக்கலாமே?

திரிகோணமலையை இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும்,நோராச்சோலையை சீனாவுக்கும் இலங்கை அரசு திறந்துவிட்டுருப்பதுபோல தமிழீழத்தின் பகுதிகளை அந்நிய நாடுகளுக்கு திறந்துவிட புலிகள் சம்மதித்து,தமிழீழத்தின் மக்களையும்,வளங்களையும் சூறையாடலுக்கு விட்டுவிட்டு,இலங்கை அரசும் மேற்கு மேற்கு நாடுகளும் கொடுக்கும் பெயரளவிலான தீர்வுத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு இனஒடுக்குமுறை என்கிற நுகத்தடியை சுமந்துகொண்டிருக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய ஒடுக்குமுறை என்கிற என்கிற நுகத்தடியை சுமத்தவும் சம்மதித்திருக்க வேண்டும். அதுதானே நீங்கள் சொல்ல வருகிற தீர்வு?

புலிகளின் அழிவு,தலைமை கொல்லபட்டுவிட்டது என்றெல்லாம் நீங்கள் அள்ளிவிடும் சரடுகளையெல்லாம் சற்றுபரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

2008ஆம் ஆண்டு நவம்பரில் கிளிநொச்சியை பிடிப்பது சிங்கள ராணுவத்துக்கு கனவாகவே அமையும் என்று பிரபாகரன் தனது மாவீரர் தின உரையிலேயே குறிப்பிட்ட சில தினங்களிளேயே பின்வாங்கி செல்லும் முடிவை எடுத்த புலிகளின் நடவடிகைகளை கனரக ஆயுதங்கள்,ஆளில்லாத உளவு வாணூர்திகள்,ராணுவவீரர்கள் என்று இலங்கையின் போரை தனது போராக நடத்திக்கொண்டிருந்த இந்தியாவின் உளவு செயற்க்கைகோள் அனுப்பும் முயற்சிகளோடு இணைத்துப்பார்ப்பது சரியாக இருக்கும்.

தமிழகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் எழுச்சிகளும் என்ன விளைவுகளை கொடுக்கின்றன என்பதை அறிவதற்காகவும்,சிங்கள் ராணுவத்தின் பிடியில் விழும் மக்களுக்கு இழைக்கப்படபோகும் சித்திரவதைகளை கருத்தில்கொண்டும் தங்களோடு வந்த மக்களை அழைத்துக்கொண்டு பின்நகர்ந்த புலிகள் ஆயுத போராட்டத்தை ஒத்திவைக்கிற முடிவை அப்போதே எடுத்துவிட்டதாக கருத சகல நியாயங்களும் உண்டு.

தங்கள் மரபுவழி படையணிகளையும் ஆயுதவளங்களையும் பரவலாக்கிவிட்டு பின்நகர்ந்த புலிகள்,புலத்திலும், ஊடுருவியிருந்த சக்திகளால் அடையும் பின்னடைவுகளை உணர்ந்து கொண்டு,தனது மகனையும்,மகளையும் போராட்ட களத்திற்க்குகொடுக்கும் முடிவில் இருந்த தேசிய தலைவரை போரின் ஏதோ ஒரு கட்டத்தில் களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்கள் என்ற முடிவுக்கு தர்க்கரீதியாக வர முடியும்.

ராணுவ தளபதிகள் சிலரையும் அரசியல் பிரிவு தலைவர்கள் சிலரையும்,குறிப்பிட்ட அளவிலான போராளிகளையும் மட்டுமே களத்தில் நிற்க வைத்திருந்தார்கள் புலிகள் என்பதாகவும் கருதலாம்.

ஆயுதங்களை மௌனிக்க செய்வது என்கிற முடிவை புலிகள் அறிவித்த பிறகும் அவர்களையும் மக்களையும் கொன்றொழித்திருக்கிறது இலங்கை ராணுவம்.

வன்னியில் புலிகளுக்கெதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்,பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த பகுதிகளுக்கு வந்த மக்களை ஏன் கொன்றார்கள்,ப்ரான்ஸின் உதவி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் ஆம்புலன்ஸை தாக்கி மருத்துவ பணியாளர்களை கொன்றார்களே அவர்கள் எல்லாம் புலிகளா? இது ஒன்றே போதுமே புலிகள் ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவே மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்ன தோழன் முத்துக்குமாரின் வார்த்தைகள் களத்திலும்,இன்று முகாம்களிலும் நிதர்சனமான உண்மையாகிருக்கிறது.

மாகாண சபைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்க்கு அரசு தரப்பு சம்மதித்திருப்பதாகவும்,கிழக்கின் உதயத்தை போலவே வடக்கின் வசந்தத்தை அரசு கொண்டுவந்துவிடும் என்று தமிழ்மைய கட்சிகளும் தமிழ் அறிவுஜீவிகளும் கருதுவதாக ஷோபாசக்தி சொல்லிக்கொண்டிருக்கையில், நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற இரு தரப்பினராக மட்டுமே இலங்கையில் உள்ள மக்களை தான் பார்க்கப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்க முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக உறுதிபடுத்தியிருக்கிறார் ராஜபக்சே.

அறுபது ஆண்டுகளாக சிங்கள அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வராத மாற்றம் இனி வரும் என்று நம்பவோ,ஒட்டுமொத்த இலங்கையில் புரட்சி என்பது போன்ற அபத்தகளஞ்சியமான சிந்தனைகளுக்கோ இனி எந்த இடமில்லை.


அரசியல் போராடங்களை முதன்மைப்படுத்துவது.அமைப்பில் இருக்கும் சந்தர்ப்பவாத சக்திகளை களையெடுப்பது.போராட்ட போக்கின் வழியில் இழைத்த சில தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்வது தேவையான நேரத்தில் ஆயுதபோராட்டத்தை முன்னெடுப்பது ஆகியவைகளே புலிகளின் திட்டமாக இனி இருக்க கூடும்.

உலகம் வியக்கத்தக்க விதத்தில் ராணுவ போராட்டங்களை நடத்திய அவர்கள் அரசியல் போராட்டங்களையும் அவ்வாறேமுன்னெடுத்து தமிழீழத்தை வெல்வார்கள் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

உலக இடதுசாரி இயக்கங்களால் இலங்கை ஆசியாவின் வெடிமருந்துபீப்பா என்று அழைக்கப்பட்ட காலம் ஒன்று இருந்ததாக அழுத்துக்கொள்ளும் ஷோபாசக்தி சமீபத்தில் இந்திய மாவோயிஸ்ட் கட்சி தனது அணிகளுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை பற்றி கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை.

அதில் விடுதலைபுலிகள் தங்கள் எதிரிகளை குறைத்து மதிபிட்டுவிட்டதால் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும்,அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி தனது அணிகளை கேட்டுக்கொண்டுள்ளதுடன்,விடுதலை புலிகளுக்குஏற்ப்பட்டிருக்கும் பின்னடைவு ஒட்டுமொத்த தெற்க்கு ஆசிய புரட்சிகர இயக்கங்கள்,தேசிய விடுதலை இயக்கங்களின் ஆயுத போராட்ட முன்னெடுப்புகள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்றும் குறித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் மீது விமர்சனங்கள் இருந்தாலும்,ஈழதேசிய விடுதலை போராட்டத்தின் புரட்சிகர உள்ளடகத்தையும் அதில் விடுதலைபுலிகள் வகித்த பாத்திரத்தையும் அங்கீகரித்திருக்கிறது இந்திய (மாவோயிச)கம்யூனிஸ்ட் கட்சி.

உண்மையான புரட்சிகர சக்திகளின் எண்ணத்தை அறிந்துகொண்ட பிறகு ஷோபாசக்தியிடம் நற்சான்றிதழ் பெற்று புலிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்க தேவைகள் இல்லை நமக்கு.

தமிழர்களின் உள்ளங்களில் வீரனாகவும் மனிதனாகவும் பிரபாகரன் ஜீவித்துக்கொண்டிருக்கும்வரை,ஏகாதிபத்திய அரசுகளுக்கும் பேரினவாத அரசுக்கும் எதிராக வெற்று வார்த்தைகளையும்,இடதுசாரி அமைப்புகளுக்கும்,தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் எதிராக வன்மத்தையும்,மனிதத்துவ முகமூடியை அணிந்துகொண்டு கக்கிக்கொண்டிருக்கும், உயிரோடு அழுக ஆரம்பித்திருக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஷோபாசக்தியும் ஜீவித்துக்கொண்டிருப்பார்.

6 comments:

Anonymous said...

Very good reply anna!!!

I suggest you, don't waste your time with these people.

- Kiri

Unknown said...

ஈழ விடுதலையின் எதிரிகளும், துரோகிகளும் ஈழ மக்களை ஆதரிக்கிறோம், விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம், காரணம் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார்கள்.

இலங்கையில் தமிழர்கள் சுந்திரமும், சம உரிமையும் உள்ள கௌரவமான வாழ்க்கையைப் பெறுவதற்கு தமிழீழக் குடியரசு அமைக்கப்பட வேண்டும் என்று 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே தமிழீழ மக்கள் ஆணை வழங்கி யிருக்கிறார்கள். ஈழ மக்கள் இட்ட ஆணையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு கடந்த 30 ஆண்டு காலமாக ஆயுதப் போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி தலைமையேற்று நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். அந்த மக்களிடம் இருந்தே தோன்றி, அந்த மக்களுக்காகவே அர்ப்பணித்து, வேறு எந்த நாட்டின் ஆதரவும் இன்றி அந்த மக்களின் ஆதரவுடன் மட்டுமே வலிமை மிக்க முப்படைகளை உருவாக்கி ஈழத் தேசத்தின் பெரும் பகுதியை ஏறத்தாழ 15,000 ச.கி.மீ. பகுதியை மீட்டவர்கள் விடுதலைப் புலிகள். சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்து மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி இருப்பவர்கள் விடுதலைப் புலிகள். புலிகளைக் காப்பவர்கள் மக்கள். மக்களைக் காப்பவர்கள் புலிகள். புலிகளும் மக்களும் பிரிக்க முடியாதவர்கள் என்றாலும் ஈழ மக்கள் வேறு, புலிகள் வேறு என்றும் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் ஈழத் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்கள் - ஈழ மக்கள் அடிமைப்பட்டு கிடக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் பொய்யாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். காரணம் ஈழ விடுதலைக்கு சமரச மின்றி போராடி வரும் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தித் தனிமைப் படுத்தி அழித்து விட்டால் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஈழவிடுதலையை எதிர்ப்பவர்கள் ஈழ மக்களை ஆதரிக்கிறோம் என்பது முற்றிலும் ஏமாற்றேயாகும். ஈழ மக்களை ஆதரிப்பது - அவர்களுக்கு உதவுவது என்பதன் பொருள் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தினின்றும் சிங்கள அரச பயங்கர வாதத்தினின்றும் விடுபட உதவுவதே ஆகும். தமிழீழமன்றி வேறு வழியில் அவர்கள் சிங்கள ஆதிக்கத்தி லிருந்தும், சிங்கள அரச பயங்கர வாதத்திலிருந்தும் விடுபட முடியாது என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து தீர்மானித்துப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவுவதென்றால் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்து உதவுவதே யாகும். அதற்கு மாறாக ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதும் போராட்டத்தைக் கைவிடக் கோருவதும், போராடும் அமைப்பை பயங்கரவாதிகள் அமைப்பு என முத்திரை குத்துவதும் அவர்களுக்குச் செய்யும் துரோகமே யாகும். இப்படிப் பட்ட துரோகிகள் மக்களை மட்டுமே ஆதரிக்கிறோம், புலிகளை அல்ல என்று பசப்புகிறார்கள். சமரசமின்றி விடுதலைப் போராட்டத்தை நடத்தி வரும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.க.இ.க., பா.ஜ.க., முதலானவை இப்படித்தான் செயல் படுகின்றன. இத்தகைய துரோகிகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தமிழ்வலை

Anonymous said...

anbulla stalin guru

shoba sakthi sonnathilaye mikavum keeltharmanthu

kodariyal thalaiyil vettu pattu sethu pona veeran

endru kochai paduthiyathuthan. avar kalthil illai odividuvar odivittar endru kathi viitavarkal eppothu eppadi santhosapadukirakal

tamilanai pirathatharikka vedakapukiren, itthai

kal nejakararkal ulagathil entha idathilum irukka mattarkal

தமிழ்நதி said...

எத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து? நியாயங்கள் பகிரங்கமாக வெளிவர ஆரம்பித்திருக்கும் இந்நாட்கள் வரையிலும், ஜீவித்திருக்கும் புண்ணிய ஆத்மாக்களிடமிருந்து பதில் இல்லை என்பதிலிருந்து அவர்களது உளச்சுத்தியை நாம் அறிந்துகொள்கிறோம்.

ஸ்டாலின் குரு said...

எத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து? நியாயங்கள் பகிரங்கமாக வெளிவர ஆரம்பித்திருக்கும் இந்நாட்கள் வரையிலும், ஜீவித்திருக்கும் புண்ணிய ஆத்மாக்களிடமிருந்து பதில் இல்லை என்பதிலிருந்து அவர்களது உளச்சுத்தியை நாம் அறிந்துகொள்கிறோம்.///

well said

Post a Comment