Wednesday, March 30, 2011

கவிதை ;'
வற்றிப்போய் உயிரற்றவையாய்
நேர்த்தியான சடக்கூடுகள்
என்நேரமும் நனைந்து
பொய் சொட்டிக்கொண்டிருந்தன
சுவாசம் எங்கணும்
இளைப்பு கண்டு தவித்து
களைப்பேறி

பிச்சைகாரனின் தட்டில் காசு பொறுக்கி
புகை பிடித்து
சள்ளை பிடித்த
தத்துவங்களை உமிழ்ந்துவிட்டு
அருகிலேயே மரித்துப்போயின

சலனங்களற்று தேங்கிக்கிடக்கும்
யாவும் நேசமற்ற தூரிகையின்
மங்கலான வெளிச்சத்தில்

பரிதாபத்துக்குரிய அசட்டு
சிறுமியின் கிறுக்கல்களாய்
வெடுக்கென பிடுங்கி
எறியப்பட்டு விடும்

வீதிகள் எங்கிலும் மலர்களை தின்று செரித்த
கூட்டம் கள்ள விழிகளில் ஏளனம் சுமந்து
காற்றைப் புணர்ந்து
உப்பித்திரியும்

வார்த்தைகளில் முற்றுப்பெறாத
ஏதோ ஒன்று தனித்து
இனிவரும் நாட்களை
புதுப்பிக்க காத்திருக்கும்

அடர்த்தியான இருள்போர்வை கிழித்து
புவியின் மீள் விடியல் துவங்கும்.

கவிதை .,
என் ஜன்னலுக்கு
வெளியே மட்டும்
இல்லை
மழை

Friday, March 18, 2011

-கவிதை -கற்பிதங்களின்

புனிதத்தில்

என்னை வடிக்கும்

சிற்பியாய் என்

கவிதைகளின் கரு


நீர்க்குளத்தின்

சலனங்கள்

பார்க்கும்

சுட்டிக் குழந்தை


ஓரோர்

பொழுதுகளின்

நிராகரிப்பின்

தூண்டலும்

துவளலும்

எள்ளலும்

மீட்டலுமாய்

என்னில் நான்


மீண்டு(ம்) வந்து

கட்டிக்கொள்ளும்

என் கவிதை

அழுமூஞ்சியோடு

-கவிதை .வெக்கை தாளாமல்

விழித்துக்கொள்கிறது

என் இரவு


இடைக்கிடை

அமிழ்ந்து எங்கோ

ஓர் குழந்தையின்

அழுகுரல் கேட்கும்


தனித்து வானத்தின் கீழ்

உயிர்ப்பை அறிவித்து

சலனங்களற்று என்

வேர்களும் நீளும்


முற்றத்தில் அமர்ந்து

தர்க்கித்தும்

விமர்சித்துமிருந்தவன்

இமைகளை உயர்த்தி

தாழ்த்திக்கொள்வான்


விழிகளின் விழிகளில்

புன்னகை மலரும்


வழிப்போக்கர்களின்

காலடியோசை

கேட்டு துவங்கும்

என் நாள்


துயில்கொண்டு

நீங்கிச் சென்ற

தென்றலின் சுவடு

தோள்களில்

இனியும் இனியும்

மிச்சமிருக்கும்

கவிதைஎல்லையற்ற வானத்தின் கீழ்

அந்தி பொழுதின் நிழல்களையும்

வண்ணங்களையும் தூரிகை கொண்டு

வரைந்திடும் கண்கள் விரிய திறந்து

தேம்பி அழுதவாறு நிற்கும்நீல வானம் தூய காற்று

கூச்சப்பட்டு தழுவிக்கொள்ளும்அர்த்தமற்ற சந்தடியையும்

பரபரப்பையும் கடந்து

மர நிழல்களில் ஒளிந்து

செல்லும் உருவங்கள் கதைகள்

சொல்லி செல்லும்தனிமையாலும் சோர்வாலும்

முடங்கியிருக்கும் தருணங்கள்நிலவுதல் இல்லாத நிலையின்

எஞ்சிய பரப்பெங்கும்

சோகம் கலந்த உள்ளன்பு

பரவும்கதகதப்பான கைகளுக்குள்

புதைந்துகொண்டு

சிறுவிழிகள் சிமிட்டி

விரல்களால் உயிர்தொட்டு

நீங்கும் ஓர் குழந்தைமெல்ல குளிராகி

இருள் சூழும்

Wednesday, March 9, 2011

!! கவிதை !!
அந்தகனின் விழிகளை
அணிந்திருந்தேன்

நண்பகல் வானில்
நட்சத்திரங்கள்
இறைந்திருந்தன

முன்னிரவின் துவக்கத்தில்
கைகளில் வழிந்த
துளிகளில் நின்றது
பேரிசையின் தொடரணி

தள்ளி வைக்கப்பட்டிருந்த
எனது தலையின்
இடப்பக்கம் ஹெராக்ளிடஸ்
வலப்பக்கம் பெர்மினியீட்ஸ்

நான்கு நாட்களுக்கொரு முறை
புதுப்பிக்கப்படும் கணினியை
உடைத்துவிட்டு நடந்தான்

லோகாயத
சித்தன்...