Tuesday, February 16, 2010

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 1
இடதுசாரிகளாக இருந்தாலும் தேசிய விடுதலைப்போராட்ட
அமைப்புகளாக இருந்தாலும்,தினம்,மாற்றமடைந்து
கொண்டே இருக்கும் சர்வதேச சூழல்களை கணக்கில்
எடுத்துக்கொண்டே தங்களது நடவடிக்கைகளை
அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இருந்தபோதிலும் பெரும்பாலான நேரங்களில் அது
போன்ற ஆய்வுகளை மேகொள்ளாமல் தான் புரட்சிகர
சக்திகள் இயங்கிகொண்டு இருக்கின்றன.தற்போதைய
சர்வதேச சூழலைக் குறித்து சற்று பரிசீலிக்க முயலலாம்.
முதலாவதாக இடதுசாரி எழுச்சிப்போராட்டங்களையோ,
தேசிய இன விடுதலைப்போராட்டங்களையோ ஆதரிக்க
எந்த சோசலிச முகாமும் இன்றைக்கு உலகில் இல்லை.
முழுக்க முதலாளித்துவ உலகத்தின் கீழ்தான் நாம் வாழ்ந்து
வருகிறோம் என்பதே நிராகரிக்க முடியாத உண்மையாக
இருந்து வருகிறது.இன்றைய சூழலில் அமெரிக்கா
தலைமையிலான ஒற்றைத்து துருவ அரசு என்கிற நிலை
மறையத் துவங்கிவிட்டது.அமெரிக்காவை விட ராணுவ
பலத்தில் ரஸ்யா மேலாதிக்கத்தை அடைந்திருக்கிறது.சீனா
அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு இணையாக
வளர்ந்திருக்கிறது.


http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html


இந்த இரண்டு தலைப்புகளின் கீழ் ஏற்கனவே விவாதித்த
விசயங்களைமீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டி இருக்கிறது.பலத்தை இழந்திருக்கிற
அமெரிக்க முகாமைச் சார்ந்து இருப்பதை தவிர்த்து,சீன,
ரஸ்ய சார்பின் மூலமே தனது இலாபவேட்டையை
அதிகரித்துக்கொள்வது என்கிற நிலையிலேயே இந்திய
முதலாளி வர்க்கமும்,அதற்கு இசைவாக இந்திய
வெளியுறவுக்கொள்கை அமைந்திருக்கிறது என்பதையும்
அந்த தலைப்புகளின் கீழ் பார்த்தோம்.சீனாவால்
இந்தியாவுக்கு பாதிப்பு என்று எவ்வளவு கூப்பாடு
போட்டாலும்,இந்திய அதிகாரவர்க்கம் அலட்சியமாக
கடந்து செல்வதற்கு சீனாவோடு,இந்தியாவால் தற்காப்பு
யுத்தத்தை நடத்துவது மட்டுமே சாத்தியம் என்கிற
உண்மையோடு,நாம் வேறு ஒன்றையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.தனது நலனுக்கு ஏற்ப சோவியத்தோடும்,
அமெரிக்காவோடும்,யாருடைய பலம் அதிகரிக்கிறதோ
அவர்கள் பக்கம் சாய்வதன் மூலம் தன் நிலையை உறுதி
படுத்திகொள்வது என்பதே இந்திய வெளியுறவுக்
கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.அந்த வகையில்,பொருளாதார ரீதியாகவும்,ராணுவ
ரீதியாகவும் பலம் அடைந்திருக்கும் ரஸ்ய,சீன
சார்புநிலையையே அது எடுத்திருக்கிறது.ஒற்றை
முகவரா,இரு தரப்பு முகவரா அல்லது பல்முனை
முகவரா என்று அடையாளம் காணமுடியாத்போதும்
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் ‘இந்து’
ராம் இந்தியமுதலாளிவர்க்கத்தின் நலனுக்காக
அயராது உழைக்கும் நபர்.அவரே சீனாவுக்கு
மேலாதிக்க நோக்கம் இல்லை என்று சொல்வதன்
அர்த்தத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
சீனாவுக்கு மேலாதிக்க நோக்கம் இல்லை என்கிற
அவரது கருத்துக்கு வழிமொழிதல் எழும் இடம் நமக்கு
ஆச்சரியளிக்கவில்லை.தங்கள் புதிய ஜனநாயகம்
பத்திரிக்கையில் அப்பட்டமாக சீனாவுக்கு மேலாதிக்க
நோக்கம் இல்லை என்று எழுதி‘ இந்து’ ராமினை
வழிமொழிந்திருக்கிறார்கள் மக இக வினர்.
அடுத்த வழிமொழிதல் கிளம்பும் இடமும் கூட
ஆச்சரியத்தை தரவில்லை.அது அ.மார்க்ஸிடமிருந்து
வந்திருக்கிறது.இவர்கள் அணைவரும் இணையும்
புள்ளி எது என்பதை ஊகத்துத்துக்கே விட்டு
விடலாம் இப்போதைக்கு.ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த
பின் க்யூபா,வெனிசுலா மற்றும் சில இடதுசாரி சார்பான
இலத்தீன்அமெரிக்க நாடுகளுக்கு எதிராக நாம் பரவலாக
கடுமையானவிமர்சனங்களை எழுப்பி வந்திருக்கிறோம்.
மாவோவின் சீனா நிக்சனின் கரங்களைப் பற்றி குழுக்கியதை
எல்லாம் நம்மால் மறந்திருக்க இயலாது.சர்வதேசியம்
என்கிற வார்த்தையை அதன்உண்மையான அர்த்தத்தில்
இன்று வரை உலகம் காணாமல்தான் இருந்து வருகிறது.
சில விதிவிலக்குகளைத் தவிர.சோவியத் யூனியனின்
சிதைவுக்குப் பிறகு கடந்த இருபது ஆண்டுகளாக,
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் தினறிக்
கொண்டிருக்கும் க்யூபாவும்,எந்நேரமும் அமெரிக்கத்
தாக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியம் இருக்கும் இலத்தீன்
அமெரிக்க நாடுகளும், சீன,ரஸ்யச்சார்பு நிலையை
எடுத்திருப்பதன் மூலம் தங்களுக்கான பாதுகாப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதையும்,
அமைதியான முறையில் வளர்ச்சியை நோக்கி
முன்னேறுவது.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது
போன்ற வழி முறைகளையே இலக்காக கொண்டுள்ளன
என்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

அவைகள் ஈழத்ததமிழர்கள் விசயத்தில் இழைத்த குற்றத்தை
மறுக்க முடியாதபோதிலும்,அதற்கான பின்னனியை பார்க்க
வேண்டும்.ரஸ்யாவைப் பொறுத்துவரை இன்றளவும் ஒரு
விதமான கலப்புப்பொருளாதாரம்தான் நிலவி வருகிறது.
முன்னால் கே.ஜி.பி.யின் சேர்மனும்,இரண்டு முறை
அதிபரும்,தற்போதைய பிரதமருமான விளாடிமிர்
புதினுக்கும்,தற்போதைய அதிபர் மெத்வதேவுக்குமான
முரண்பாடு எதன் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டு
இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.முழுக்க
தாராளமயமாக்குவது,தனியார்மயமாக்குவது,உலகமய
பொருளாதாரத்தோடு ரஸ்ய பொருளாதாரத்தை இணைப்பது
அதிபரின் நோக்கமாக இருக்கிறது.பிரதமர் புதின் தேசிய
பொருளாதாரத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க
முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.மேலும் இன்றளவும்,
எரிவாயு,எண்ணெய்,மின்சாரம்,அணுசக்தி போன்ற
பெரும்பாலான துறைகள் ரசியாவில் அரசு கட்டுப்பாட்டில்
தான் இருக்கிறது.சீனாவிலும் அதுவே நிலை.தேசியப்
பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
மேலும் ஆயிரக்கணக்கில் சீனாவில் அரசுக்கெதிரான
விவசாயிகளின் எழுச்சிகள் நிகழ்ந்துகொண்டிருப்பது,
கட்சியிலும்,அரசிலும் இருக்கும் மாபியாக்களுக்கு
எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எல்லாம்
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றங்களை நோக்கிய சாத்தியக்கூறுகளை உடைய
நாடுகளாகவும்,பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு
நிலவும் நாடுகள் ஆகவும் சீனாவையும்,ரஸ்யா
-வையும் புரிந்துகொண்டு இருப்பதாலேயே
இலத்தீன் அமெரிக்க நாடுகள் அவைகளைச் சார்ந்து
நிற்கின்றன.மேலும் முழு அளவிலான ஏகாதிபத்திய
அரசுகளாக அவைகள் வளர்வதற்கும்,தங்களின்
இறையான்மையை பலியாக கோருவதற்கும் சற்று
காலம் ஆகும் என்றோ அல்லதுஅப்படி ஒரு நிலை
ஏற்பட்டாலும்,பேசித்தீர்க்ககூடிய வாய்ப்புகள்,குறைந்த
பட்ச இழப்புகளோடு தங்கள் பொருளாதாரத்தையும்,
மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்
என்பதாலேயே இலத்தீன் அமெரிக்க நாடுகள் ரஸ்ய,
சீன சார்புநிலையைமேற்கொண்டு இருக்கின்றன.
மேலும் தேசியப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை
தங்கள் கையில் வைத்துக்கொண்டு,தங்களின்
வளர்சிக்கு உதவும் விதத்தில் அந்நிய முதலீகளை
கையாளுவதில்இலத்தீன் அமெரிக்க நாடுகள்
திறமையோடு செயல்படுகின்றன என்பதே
உண்மையாக இருக்கிறது.தனது மேலாதிக்க
நடவடிக்கைகளை சீனா ஆசிய பிராந்தியத்திலும்,
ரஸ்யா, முன்னாள் சோவியத் பகுதிகளிலுமே
நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன என்பதும்,உலக
ஆதிக்கத்துக்கான வேட்டையில் அவைகள்
இறங்க இன்னும் சற்றும் காலம் ஆகும் என்பதும்
அவதானிக்க கூடியதாக இருக்கிறது.அதே நேரம்
இந்த சர்வதேச சூழல் எந்த நேரத்திலும் மாறகூடிய
ஒன்றுதான் என்பதை மறந்துவிட்டு புரட்சிகர
சக்திகள் இயங்க முடியாது.என்ன செய்வது என்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டிய
நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.ஒரு முறையான
பின்வாங்கல் என்றும்,இன்றைய சர்வதேச சூழலுக்கு
ஏற்றதான முறை என்றும் நாம் நேபாள
மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளை முழுக்க ஏற்பது
சாத்தியம்தானா ? நிராகரிக்க முடியாத அரசியல்
சக்திகளாக தங்களை நேபாள அரசியல் அரங்கில் நிறுவிக்
கொண்டிருக்கிற விதத்திலும்,ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு தடைகற்களாக அரசியல் போராட்ட
வழிமுறைகளை பயன்படுத்துகிற விதத்திலும்,
நேபாள தோழர்களின் வழிமுறைகள் சரியானவைகள்தான்.
அதே நேரம் ஏற்கனவே நிலவிய அந்நிய,உள்ளக
சுரண்டல்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை
எடுக்கும் நிலையில் நேபாள தோழர்கள் இல்லை
என்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆட்சியதிகாரத்தை தேர்தலின் வழியாக மாவோயிஸ்டுகள்
கைப்பற்றுவதையும்,தேசியப் பொருளாதாரத்தை
கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இறையான்மையை
காப்பதையும் தடுக்க,இந்திய அமெரிக்க,சீன ஆளும்
வர்க்கங்கள் நிகழ்த்தும் அத்துமீறல்களை நேபாள்
தோழர்கள் முறியடித்துக்கொண்டுருப்பதே நிகழ்காலமாக
இருக்கிறது.அந்நிய சதிகளை முறியடித்து வெற்றிகரமாக
ஆட்சி அதிகாரத்தை,தேர்தல் வழியாக கைப்பற்றி,
இலத்தீன் அமெரிக்க மாதிரி அரசை மாவோயிஸ்டுகள்
உருவாக்குவார்களா என்பதற்கான விடை
வருங்காலத்திடமே உண்டு.

தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

இன்னும் வரும்....

4 comments:

blackpages said...

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

ஸ்டாலின் குரு said...

அடுத்த பதிவையும் பதிந்தாயிற்று நண்பா

Anonymous said...

தங்கள் புதிய ஜனநாயகம்
பத்திரிக்கையில் அப்பட்டமாக சீனாவுக்கு மேலாதிக்க
நோக்கம் இல்லை என்று எழுதி‘ இந்து’ ராமினை
வழிமொழிந்திருக்கிறார்கள் மக இக வினர்.
அடுத்த வழிமொழிதல் கிளம்பும் இடமும் கூட
ஆச்சரியத்தை தரவில்லை.அது அ.மார்க்ஸிடமிருந்து
வந்திருக்கிறது.இவர்கள் அணைவரும் இணையும்
புள்ளி எது என்பதை ஊகத்துத்துக்கே விட்டு
விடலாம் இப்போதைக்கு.//


ஏன் ஊகத்துக்கு விட வேண்டும்

ஸ்டாலின் குரு said...

கிடைக்கிற தகவல்களை வைத்து
ஆய்வுகுட்படுத்தி சில விசயங்களை
கோடிட்டுக்காட்டலாமே தவிர
முடிவுக்கு வருவது சரியல்ல
என்பதால்தான் ஊகத்துக்கு
விட்டுவிடலாம் என்று
சொல்லி இருக்கிறேன்

Post a Comment