Friday, February 12, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 5

தனது நாட்டு மக்களுக்கு எதிராகவே விமானப்படையை பயன்படுத்திய
நாடு இலங்கை என்ற பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம்,அதிலும்
இலங்கைக்கு முன்னோடி இந்தியாவே என்பது நினைவில் வந்தது.
நாகாலாந்து தேசிய விடுதலைப்போராளிகளின் முற்றுகையில் சிக்கிய
இந்திய ராணுவத்தினரை,ஈவு இரக்கமற்ற விமானப்படைத் தாக்குதல்
மூலமே இந்திய அரசு மீட்டது என்பதை எப்படி மறப்பது?.ஈழத் தமிழ்
மக்கள் மீதான அரச பயங்கரவாதக் கொடுமைகள் பற்றிய நினைவு
வரும்போதெல்லாம்,இந்தியாவின் வடகிழக்கு பிரதேசங்களில்,இந்திய
அரச பயஙகவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நினைவே
எழுகிறது.ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எந்த
விதத்திலும் சளைக்காத அரசபயங்கரவாத கொடுமைகளை எதிர்
கொள்ளும் அந்த மக்களைப் பற்றி தமிழகத்தில் நிலவும் மௌனம்
அருவருப்பையே தருகிறது.கடந்த ஐம்பது ஆண்டு காலமாக
இந்திய ராணுவத்தின் ஆட்சியில் இருக்கும் அந்த மக்களுக்காகவும்
நாம் பேசத் துவங்கியாக வேண்டும்.ஒப்பீட்டளவில் தமிழகத்தின்
அரசியல் விழிப்புணர்வு கொண்ட பிரிவினரிடம்,காஸ்மீர் மக்களின்
அவலங்கள் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு கூட,மணிப்பூர்,
நாகாலாந்து,அஸ்ஸாம்,உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்களின்
மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் அரசபயங்கரவாத
கொடுமைகள் பற்றிய செய்திகள் இன்று வரை கொண்டு
செல்லப்படவில்லை என்பதே மறுக்க முடியாத
உண்மையாக இருக்கிறது.

தமிழகத்தின் தேசியவிடுதலைக்கான போராட்டத்தில் இயல்பான
நட்புகரங்களாக நாம் அந்த மக்களையே கருத முடியும்.தடா,
பொடா,என்று மத்திய இந்திய பகுதிகளில் நடைமுறையில்
இருந்த கொடூரமான சட்டங்கள் எல்லாம் கூட,மனித உரிமை
இயக்கங்கள்,ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் மூலம்
ஒழிக்கப்பட்ட நிலையில்,இன்றைக்கும் ஒழிக்கப்படாத கருப்புச்
சட்டமாக வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதபடைகளுக்கான
சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீடித்துக்கொண்டிப்பது எத்துணை
அவலமானது? இந்திய ராணுவம் எங்களை கற்பழிக்கிறது
என்று நிர்வாணமாக பெண்கள் போராடும் அளவுக்கு,அரச
பயங்கரவாதத்தின் கொடுமைக்குள் சிக்கி இருக்கும்
மக்களுக்காக பேசாவிட்டால் நாமெல்லாம் என்ன மனிதர்கள்?
தமிழகத்தின் தமிழ்த்தேசியசக்திகள் ஒடுக்கப்படும் அந்த
மக்களினங்களிடம் நட்புச்சக்திகளை தேடிக்கொள்வதும்,
இணைந்து போராட முன்வருவதும் மட்டுமே,நாம் சரியான
தேசியவாதிகளாக இருக்கிறோம் என்பதன் அடையாளமாகும்.
இந்திய அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட போலி
பார்ப்பன தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கவும்,நிராகரிக்கவும்,
அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின்
மீதான வன்கொடுமைகளே நமக்கு ஆயுதமாக மாற வேண்டும்.

நாகாலாந்து தேசியவிடுதலைப்போராட்டம் பற்றிய செய்திகளில் ஒரு
விசயத்தை குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது.அங்கு வாழும் சுமார்
இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட இனக்குழு வாழ்நிலையில் இருந்த
சமூகங்கள் தங்களுக்குள் ஒரு பொதுமொழியை உருவாக்கிகொண்டு
தேசிய விடுதலைக்காக இணைந்தனர் என்கிற செய்தியை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.இனக்குழு நிலையில் இருந்த
மக்கள் தங்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு
இணைவதே சாத்தியமாக இருக்கும்போது,வளமான தேசியப்போராட்ட
மரபை கொண்டிருக்கும் தமிழகத்தில் தேசிய இணைவு சாத்தியம்
அற்றது என்றோ,தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கு,தேசிய
விடுதலைப்போராட்டம் வழியாக தீர்வு காண்பது இயலாதது என்றோ
கருத முடியாது.பெரியார் வளர்தெடுத்த சாதியொழிப்பு மரபு,
அம்பேத்கரிய சிந்தனைகளை வீச்சாக கொண்டு சென்ற தலித்திய
இயக்கங்களின் செயல்பாடுகளால்,விழிப்படைந்திருக்கும் சாதி
எதிர்ப்புணர்வை,சாதியொழிப்பு போராட்டங்கள் வழியாக,தேசிய
விடுதலைப்போராட்டத்தோடு இணைப்பதன் வாயிலாக வளர்க்க
முயற்சிப்பதே தமிழ்த்தேசியவாதிகளின் முதல் கடமையாக
அமைய வேண்டும்.இயல்பாகவே இந்தியாவில் உள்ள மற்ற
மாநிலங்களை விட குட்டிமுதலாளித்துவ பிரிவினர் அதிகம்
வாழும் பகுதியாக இருப்பதால்,தேசியக்கோரிக்கையின்
வர்க்கத்தலைமையை மாற்ற முயலும் சக்திகளுக்கு எதிரான
தொடர்ந்த போராட்டங்களும் தேவையாக இருக்கும்.இந்தியப்
பெருநிலப்பரப்பில் செயல்படும் மாவோயிஸ்டுகள் போன்ற
உண்மையான புரட்சிகர சக்திகளின் ஒத்துழைப்பையும் தமிழ்த்
தேசிய சக்திகள் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.

தமிழகத்தின் புறச்சூழல் எப்படி இருக்கிறது என்று மதிப்பிட வேண்டி
இருக்கிறது.பரவலாக தேசியச்சிந்தனைகள்,தேசிய இனம்
பற்றிய தன்னுணர்வு தமிழகத்தில் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
இருந்தபோதிலும்,மார்க்சிய வழிகாட்டல் அற்ற,பெரியாரிய
அம்சங்களால் வளப்படுத்தப்பட்ட ஒன்றாக தேசியம் இல்லை
என்றே கூற வேண்டி இருக்கிறது.தமிழகத்தின் தமிழ்த்தேசிய
அரசியலை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பவர்களில் ஒரு பிரிவினர்
தேர்தல் அரசியலுக்காக தமிழ்தேசியத்தை ஒரு கருவியாக பயன்
படுத்த முயல்வது அறியக் கூடியதாக இருக்கிறது.இந்தத்
தரப்பினர் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.இவர்களின் குரலுக்கு செவி
கொடுத்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளை தமிழர்கள் இழக்க
வேண்டி வரலாம்.மறு தரப்பினர் தங்களை மார்க்சியவாதிகள்
என்று கூறிக்கொண்டாலும் அவர்களிலும் பெரும்பாலானோர்
தமிழ்ச்சாதி கோட்ப்பாட்டாளர்களாக இருக்கும் அவலமும்
மறுக்க இயலாததாக இருக்கிறது.

ரேசன் கடையில் பொருள் வாங்க நின்று கொண்டிருந்தபோது பார்த்த
விசயம் ஒன்று நினைவுக்கு வருகிறது.வரிசையில் பக்கத்தில்
நின்றிருந்த நபர்,ஒரு முஸ்லிம் வரிசையில் நிற்க வந்தபோது
முகத்தைச் சுழித்துக்கொண்டு விலகி நின்றார்.ஒரு தரமான
வாழ்க்கைக்கு வழியற்ற நிலையில் ரேசன் கடையில் நிற்கும்போது
கூட மத அடையாளத்தின் பெயரால்,சக மனிதனை வெறுக்கும்
அவரது மனநிலைக்கு காரணம் என்ன என்று யோசித்தபோது
இந்துத்துவ தீவிரவாதிகள் சமூகத்தின் பொதுவெளியை எப்படி
நஞ்சாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதே புரிந்தது.வேலை
இல்லாமல்,விலைவாசி உயர்வை சமாளிக்க இயலாமல்,
படுத்தி எடுக்கும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை
அழைத்து வைத்து இந்துத்துவ பயஙகரவாதிகள் என்ன
சொல்வார்கள்,உன் அத்தனை பிரச்சணைகளுக்கு காரணம்
இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் என்றுதானே.அப்படிச்
சொல்கையிலேயே உண்மையான சுரண்டல்காரர்களான
ஏகாதிபத்தியங்கள்,இந்திய,தமிழக முதலாளிகள்,ஆதிக்க
சாதி வெறியர்கள் அணைவரையும் தப்ப வைத்துவிடுவார்கள்
என்பது நாம் அறிந்ததுதான்.தமிழ்த்தேசியக் கோரிக்கையை
கையில் எடுத்திருக்கும் தமிழ்சாதிக்கோட்பாட்டாளர்களின்
அரசியலும் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் காரர்களின்
பாணியில் செல்வது இங்கேதான்.இவர்களில் பாதிப்பேர் தங்கள்
முகங்களில் மார்க்சிய முகமூடியையும் மாட்டிக்கொண்டிருக்கும்
வெட்கக்கேடும் நிகழ்ந்தேருகிறது.

நம்மைப் பொறுத்தவரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்துவரும்
மக்களை,கன்னடசாதிகள்,தெலுங்குசாதிகள் என்று தனித்து நிறுத்த
முயலும் முயற்சிகளை அடியோடு நிராகரிப்பது என்பதே சரியான
ஒன்றாக இருக்க முடியும்.அதே நேரம் குடியேற்ற பிரதேசம் என்று
கருதத்தக்க அளவுக்கு சமீப நாட்களில் தமிழ்நாட்டில் அதிகரித்து
இருக்கும் பிற மாநிலத்தவரின் குடியேற்றங்களை எதிர்த்தே ஆக
வேண்டும்.ஏகாதிபத்திய சுரண்டலோடு நதிநீர் பிரச்சனைகளால்
விவசாயம் பாதிக்கப்பட்டதாலும்,தீண்டாமை கொடுமைகளை
சகிக்க இயலாமலும்,தமிழகத்தின் நகர்புறங்களில் உதிரிப்பாட்டாளி
-களாக இருக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு,பிற மாநில
மக்களால் பறிக்கப்படுவது ஏற்க முடியாத ஒன்றாகவே கருதப்பட
முடியும்.மக இக வினர் போன்ற உன்னத புரட்சியாளர்கள் பீகார்,
உத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளுக்குச் சென்று,
வேலை தேடி பிற மாநிலங்களுக்கு அந்த பகுதி மக்கள் செல்லக்
காரணமான ஆளும்வர்க்கத்தையும்,தீண்டாமையையும் எதிர்த்து
தங்கள் புரட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பதே நமது ஆசை.
கி.பி.2500 க்குள் அங்கெல்லாம் சென்று தங்கள் புரட்சிப்
பணியை ஆரம்பிக்க அவர்களை வாழ்த்துவோம்.

தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் தேசிய உணர்வை தேர்தல் அரசியலுக்கு
செலுத்தி வீனடிக்க முயற்சிப்பவர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழும் தீண்டாமை,சாதிய ஒடுக்குமுறைகளை அலட்சியம் செய்து
தேசியம் பேசுபவர்கள்,மார்க்சிய முகமூடி அணிந்துகொண்டே
தமிழ்ச்சாதி கோட்பாட்டாளர்களாகவும்,திராவிட எதிர்பாளர்களாகவும்
இருப்பவர்கள் என்று தமிழ்த்தேசியத்தை பலரும் கைகளில் எடுத்து
பயன்படுத்திக்கொண்டிருக்கும் சூழலே இன்றைக்கு நிலவுகிறது.
தவறான முன்னுதாரனங்களாக சுட்டிக்காட்ட உதவுவதன்,மூலம்
சரியான தேசியத்தை கட்டமைப்பதற்கு உதவுகிறவர்கள் என்கிற
வகையில் இவர்களுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.புறநிலை
உலகத்தின் யதார்த்தங்களை அறியாத கனவுலகவாசிகளாகவும்,
இன்றளவும் அதிகார நிறுவனங்களாக கட்சிகளை வைத்திப்பவர்
-களாகவும் இருக்கும் மார்க்சியர்களிடமிருந்து தேசிய
விடுதலைக்கான குரல்கள் வந்து கொண்டிருப்பதும் நாம் அறிந்த
ஒன்றுதான்.தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளிலும்,
அமைப்புகளில் அங்கம் வகிக்காமலும்,சிதறிக் கிடக்கும் இளைய
தலைமுறை தங்களை,அமைப்பற்ற அமைப்பு என்கிற வடிவத்தில்
ஒருங்கிணைத்துக்கொள்வதே இன்றைய தேவையாக இருக்கிறது.
மார்க்சிய வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தமிழ்த்தேச
விடுதலைக்கான கருத்தியல் தளத்தை உருவாக்குவது.பெரியார்
அம்பேத்கரின் பன்முகப்பட்ட சிந்தனைகளையும்,போராட்ட
மரபுகளையும் அதனோடு இணைப்பது.சரியான வர்க்க உணர்வு
கொண்ட,சாதியொழிப்பில்,பெண்விடுதலையில்,ஏகாதிபத்திய
எதிர்ப்பில் நேர்மை கொண்ட மனிதர்களாக தங்களை வளர்த்துக்
கொள்வது.சாத்தியமான ஊடகங்கள் வழியாக,தமிழ்த்தேசிய
விடுதலைக்கான கருத்தியல் பரப்பலை மேற்கொள்வது போன்ற
விசயங்கள் வழியாக மட்டுமே நம்மால் ஒரு சரியான தேசிய
விடுதலைப்போராட்ட அமைப்பை உருவாக்க முடியும்

9 comments:

Anonymous said...

நல்ல அலசல்

blackpages said...

மக இக வினர் போன்ற உன்னத புரட்சியாளர்கள் பீகார்,
உத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளுக்குச் சென்று,
வேலை தேடி பிற மாநிலங்களுக்கு அந்த பகுதி மக்கள் செல்லக்
காரணமான ஆளும்வர்க்கத்தையும்,தீண்டாமையையும் எதிர்த்து
தங்கள் புரட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பதே நமது ஆசை.
கி.பி.2500 க்குள் அங்கெல்லாம் சென்று தங்கள் புரட்சிப்
பணியை ஆரம்பிக்க அவர்களை வாழ்த்துவோம்//

மக இக வினருக்கான உங்கள் எதிர்வினையில் இருக்கும்
நக்கல் ஏற்கத்தக்கதுதான்.ஆனால் இடதுசாரித்தனம்
இல்லை என்றே கருதுகிறேன்.

ஸ்டாலின் குரு said...

நான் பார்த்த விசயங்களின் அடிப்படையில்தான்
பேச முடியும் தோழர்.பேருந்தில் செல்கையில்,
தினமும் இரண்டு மூன்று குரல்களையாவது
கேட்க முடிகிறது.வடநாட்டிலிருந்து இவர்கள்
வருவதற்கு முன் 150 ரூபாய் கூலி வாங்கிய
இடத்தில் இன்றைக்கு 80 ரூபாய்கும் 70 ரூபாய்கும்
வேலை செய்ய வேண்டி வந்துவிட்டதே என்கிற
விசன குரல்களை,கவனிக்க விசனம் என்கிற
வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறேன்.அவர்களை
எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணமோ,கோபமோ
கூட இல்லாத தமிழர்களுக்கே உரிய இயல்பான
குரல்களாகத்தான் அவை இருக்கின்றன்.சர்வதேசியம்
பற்றி பாடம் எடுக்க வேண்டிய நிலையில் தமிழர்கள்
இல்லை அது இயல்பான உணர்வாகவே தமிழ்
மனங்களில் இருக்கத்தான் செய்கிறது.
பிரச்சனைகளை யதார்த்தங்களின் அடிப்படையில்
அனுகலாம் நாம்.

என்னைப் பொறுத்தவரை வர்க்ககண்ணோட்டத்தின்
அடிப்படையில்தான் இந்த தமிழ்தேசியம் பற்றிய
பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வடக்கிலிருந்து தெற்கோ தெற்கிலிருந்து மேற்கோ அல்லது உலகளாவிய இடம் பெயர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று.முந்தைய கால கட்டங்களில் கேரளாவிலிருந்து தமிழக வருகை அதிகமாகவே இருந்தது.அதனால் தமிழகம் ஏனைய மொழி பேசுபவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு விட்டதாக தெரியவில்லை.மாறாக மாற்று கலாச்சார வாழ்க்கையையும் உள்வாங்கிக் கொண்டே நடை போடுகிறது.மன்னராட்சி,மொகலாய படையெடுப்பு,ஜனநாயகம் என பல முகங்களை உள்வாங்கிக் கொண்டும் மண் அதன் வேர்களை பரவ விட்டுச் செல்கிறது.

நாகலாந்து போன்ற மாநிலங்களில் அரசு அதிக கவனம் செலுத்தாமை,எல்லை மாநிலங்களில் அண்டைய நாடுகளின் நிழல் நடமாட்டங்கள் போன்றவை கிளர்ச்சிக்கான காரணங்கள்.இவைகளுக்கும் அடித்தளமாக சாதியம்,பண்ணையார் அடக்குமுறை போன்றவை தென்னகத்தை விட வடக்கில் அதிகம்.அடக்கப்படும் ஒரு குழு அதன் குரலை உரக்கச் சொன்னால் அதற்கு மாவோயிசம் என்ற பெயர் சூட்டலால் மனித அவலங்கள் கொச்சைப் படுத்தப் படுகிறது.

ஸ்டாலின் குரு said...

வடக்கிலிருந்து தெற்கோ தெற்கிலிருந்து மேற்கோ அல்லது உலகளாவிய இடம் பெயர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று.முந்தைய கால கட்டங்களில் கேரளாவிலிருந்து தமிழக வருகை அதிகமாகவே இருந்தது.அதனால் தமிழகம் ஏனைய மொழி பேசுபவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு விட்டதாக தெரியவில்லை.மாறாக மாற்று கலாச்சார வாழ்க்கையையும் உள்வாங்கிக் கொண்டே நடை போடுகிறது.மன்னராட்சி,மொகலாய படையெடுப்பு,ஜனநாயகம் என பல முகங்களை உள்வாங்கிக் கொண்டும் மண் அதன் வேர்களை பரவ விட்டுச் செல்கிறது.///

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_28.html


இதில் உங்களுக்கான பதில் கிடைக்கலாம்

ஸ்டாலின் குரு said...

நாகலாந்து போன்ற மாநிலங்களில் அரசு அதிக கவனம் செலுத்தாமை,
எல்லை மாநிலங்களில் அண்டைய நாடுகளின் நிழல் நடமாட்டங்கள்
போன்றவை கிளர்ச்சிக்கான காரணங்கள்.//

இறையானமை கொண்ட தேசமாக அறிவிக்கப்பட்ட பிறகும்
இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு
தேசம் நாகாலாந்து.கொஞ்சம் வரலாற்றைத் தெரிந்து
கொண்ட பின் பேச முயலுங்கள்.

அங்கே நிகழ்ந்துகொண்டுருப்பது தேசிய இன
விடுதலைக்கான போராட்டடங்கள்.அணடை
நாடுகளின் நிழழ் நடமாட்டங்கள் என்பதெல்லாம்
சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்றே
கருதுகிறேன்.உண்மையில் சொன்னால்
வடகிழக்கு தேசிய இனங்களுக்கு மத்திய
இந்தியா என்பதே அண்டை நாடுதான்.

இவைகளுக்கும் அடித்தளமாக சாதியம்,பண்ணையார்
அடக்குமுறை போன்றவை தென்னகத்தை விட
வடக்கில் அதிகம்.அடக்கப்படும் ஒரு குழு அதன்
குரலை உரக்கச் சொன்னால் அதற்கு மாவோயிசம்
என்ற பெயர் சூட்டலால் மனித அவலங்கள்
கொச்சைப் படுத்தப் படுகிறது//

புரிகிறது ஆனால் புரியவில்லை :)

blackpages said...

எங்கே நணபரைக் காணவில்லை வடகிழக்கு
தேசியப்போராட்டங்களை கிளர்சிகள் என்றார்
அந்நிய நாடுகளின் நிழல் நடவடிகைகள் என்றார்
பிறகு மாவோயிஸ்டுகள் சார்பு கருத்தை முன்வைத்தார்
என்னதான் சொல்ல வந்தார்.விவாதிக்க முற்பட்ட
நண்பரை சரியாக கையாளாமல் அனுப்பிவிட்டீர்கள்
ஸ்டாலின்

ஸ்டாலின் குரு said...

உண்மைதான் தோழர்

சரியாக கையாளாமல் கோபத்தில்
பதில் அளித்துவிட்டேன்.

ராஜ நடராஜன் said...

உங்களின் இன்றைய தேதி வரையிலான இறுதி இடுகையைப் பார்வையிட்டு விட்டு ஷோபாசக்தி ஜீவிக்கிறார் முழுதும் படித்து கூடவே உங்கள் பதிலுக்கான இடுகையையும் படித்து விட்டு இங்கே மீண்டும் வந்தேன்.

கோபத்தில் அளித்த பதிலா:)இந்த ஆட்டத்துக்கு நான் வரல:)ஆமா!அது யாரு நண்பர் கருப்புபக்கங்கள் வடிவேலு மாதிரி மாட்டுனவனை விட்டுட்டீங்களே என்பது:)

மீண்டும் வருகிறென்.

Post a Comment