Friday, February 12, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 3

இந்து மத ஒழிப்பில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு
இயல்பாக வந்து சேர்ந்ததைப்போலவே,இந்து மத ஒழிப்புக்கு இந்திய
தேசிய ஒழிப்பும் அத்தியாவசியமானது என்று புரிந்துகொண்டதன்
வெளிப்பாடாகவே பெரியாரின் தமிழ்த்தேசியகோரிக்கையை பார்க்க
முடியும்.பெரியாரைப் பொறுத்தவரை அடையாள அரசியலை முன்
நிறுத்தி அரசுகளிடம் இருந்து சாத்தியமான நலன்களைப் பெறுவது
என்பதை மட்டும் இறுதி இலட்சியமாக என்றைக்கும் முன்நிறுத்தியது
இல்லை.அதே நேரம் அரசுகளிடம் இருந்து பார்பனரல்லாத சமூகங்கள்
பெறவேண்டிய சாத்தியமான,அத்தியாவசியமான உரிமைகளைப்
பெறுவதற்க்கான போரட்டங்களின் தேவையை குறைத்து
மதிப்பிட்டவருமில்லை.வர்க்கப்போராட்டத்தின் பெயரால்,
பார்பனரல்லாத சமூகங்கள் பெறக் கூடிய உரிமைகளைக் கூட,
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் இருந்த பார்ப்பனர்கள்
வர்க்கப்போராட்டத்தின் பெயரால் தடுப்பதாக கருதியதன் பின்னனியில்
பெரியார் கூறிய கருத்துக்களை,கம்யூனிஸ இலட்சியங்களுக்கு
எதிரான அவரது கருத்துக்களாக பொதுமைப்படுத்தி புரிந்துகொள்வது
சாத்தியமற்ற ஒன்றாகும்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு,சாதியொழிப்பு நோக்கங்களுக்காக மொழிவாரி
மாநிலங்கள் பிரிவினைக்கு பின்பாகவும் திராவிட அடையாளத்தை
பெரியார் முன்நிறுத்தியிருந்தாலும்,தமிழர்களின் நலன்களுக்கு எதிராக
இந்திய அதிகாரவர்க்கம் எடுக்க முனையும் எந்த நடவடிக்கையையும்
எதிர்த்து முதலில் எழும் குரல் பெரியாருடையதாகத்தான் இருந்தது.
சாதியொழிப்பு,பெண் விடுதலை,சமூக விடுதலைச்செயல்பாடுகளை,
தேசியவிடுதலைக் கோரிகையோடு இணைத்து வைத்ததன் மூலமாக,
தேசிய இன வரலாற்று வளர்ச்சிப்போக்கின் அடுத்தகட்டத்துக்கு
தமிழகம் முன்னேற வழிகாட்டி விட்டுச் சென்றார் பெரியார்.மீண்டும்
பெரியார் தேசியவிடுதலைக்கோரிக்கையை எழுப்ப,அவரிடமிருந்து
பிரிந்து சென்றவர்கள் தமிழகத்தின் பார்ப்பனர்களுடன் செய்துகொண்ட
சமரசங்களும் ஒரு காரணமாக இருந்திருக்க கூடும்.தமிழகத்தில்
பார்ப்பனியத்துடன் அண்ணாவின் சமரசம் என்பது அதன்
அடுத்தகட்டமாக,பார்ப்பன,பனியா,நலனுக்கான இந்திய அதிகார
வர்க்கத்தோடும் சமரசத்தில் முடிந்ததை தன் வாழ்நாளிலேயே
கண்டவர்தான் பெரியார்.மீண்டும் தேசிய விடுதலைக் கோரிக்கையை
கையிலெடுத்து தீவிரமாக பெரியார் குரல்கொடுக்க ஆரம்பித்ததன்
பின்னனி இதுவாகவே இருக்கக் கூடும்.பெரியாரின் மறைவோடு
தமிழ்ச்சமூகம் தேக்கத்தை அடைந்தது என்கிற யதார்த்தத்திலிருந்தே
நாம் மீண்டும் பேசத் துவங்கவேண்டி இருக்கிறது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தின் தலைமை என்பது
சாதியொழிப்பு,மற்றும் தேசிய விடுதலைக்கான போராட்டங்களில்
பெரியாரின் தொடர்ச்சியை முற்றாக இழந்து,பகுத்தறிவு,இட
ஒதுக்கீடு,அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவது
என்பதோடு தனது எல்லையை சுருக்கிகொண்டதே வரலாறாக
இருக்கிறது.தமிழ்த்தேசிய உணர்வு என்பது ஏறக்குறைய
தமிழகத்தின் பொதுவெளியில் கைவிடப்பட்ட நிலையை
அடைந்தது என்றே கூறிவிடலாம்.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
உழைப்பைச் சுரண்டிக்கொண்டு உழைத்தவனுக்கு,ஐம்பது ரூபாய்
கொடுக்கும் முதலாளியின் பாத்திரத்தை ஆட்சியதிகாரத்தின்
தலைமையில் இருந்துகொண்டு வகிக்க ஆரம்பித்தார் அண்ணா.
சாதி ஒடுக்குமுறை,முதலாளித்துவச் சுரண்டல் இரண்டின்
தாக்கங்களும் மிகக் கடுமையாக தமிழகத்தின் உழைக்கும்
மக்கள் மீது பாதிப்பைச் செலுத்துவதை தடுக்கும் அரைகுறைத்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தங்களது
ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது என்பதே
அன்றிலிருந்து இன்றுவரை திராவிட கட்சிகளின் வரலாறாக
இருந்து வருகிறது.அந்தப்போக்கிலும் ஜெயலலிதாவின்
ஆட்சிக்காலங்கள் விதிவிலக்கானவையே.

பெரியாரால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு சரியான தேசிய விடுதலை
போராட்டக்களத்தை அபகரித்து கொண்டவர்கள் அல்லது திசை
திருப்பியவர்களாகவே திராவிட கட்சிகளை கருத முடியும்.
திராவிடர் கழகத்திலும் பெரியாரின் கொள்கைகளை தங்களின்
வாழ்வில் நேர்மையாக பின்பற்றிக்கொண்டு இருந்த தோழர்களை
மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.பெரியாருக்குப்
பிறகான திராவிட இயக்கத்தின் தலைமையும் கூட போதுமான
அளவு சாதியொழிப்புக்கான செயல்பாடுகளை
முன்னெடுத்திருக்கவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது.

அதன் காரணமாக தலித்துகள் தங்களுக்கான அடையாள அரசியலின்
கீழ் தங்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டிய தேவை எழுந்தது
என்பதையும்,தொன்னூறுகளுக்கு பிறகான தலித்திய அரசியல்
வளர்த்தெடுத்த சுயமரியாதை,மற்றும் அரசியல் அணிதிரட்டல்
வேலைகள் ஆரோக்கியமான ஒன்றாகவே துவக்கத்தில் இருந்து
வந்தன என்பதும் நாம் அறிந்ததுதான்.வழக்கம்போலவே
சமரசங்களுக்கு சென்று,தங்களின் கீழ் திரண்டிருக்கும்
மக்களின் நலன்களுக்கு விரோதமாக தங்களை நிறுத்திக்கொண்டு
அந்த மக்களையே சுரண்டுவது என்கிற அமைப்புகளின் பொதுவான
இயங்கியலுக்குள்,தலித்திய இயக்கங்கள் செல்லத் துவங்கி
இருக்கின்றன என்பதே நிகழ்காலமாக இருக்கிறது.தலித்திய
அடையாளத்துடன் தேசிய இன அடையாளம் பற்றிய
தன்னுனர்வையும் தமிழகத்தில் இயங்கும் தலித்திய இயக்கங்கள்
சிறிதளவு வளர்த்திருக்கின்றன என்பது,வர்க்க அடிப்படையிலான
தேசிய விடுதலைக்காக முயற்சி செய்பவர்களைப் பொறுத்தவரை
ஒரு வரவேற்கத்த அம்சம்தான்.

தமிழகத்தின் பொதுவெளியில் இருந்து கைவிடப்பட்ட தேசிய உணர்வு,
தமிழ் அடையாளம் பற்றிய விழிப்புணர்வை,தமிழகத்துக்கு மீட்டு
கொடுத்தது என்பதுகளுக்குப் பிறகான ஈழ ஆதரவு போராட்டம்தான்.
பொதுவெளியில் அகற்றபட முடியாத ஒன்றாக வளர்ந்திருந்த இந்திய
உணர்வை அகற்றுவது சாத்தியமே என்கிற நம்பிக்கையை
வளர்ப்பதாகவே சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
நிகழ்ந்த போராட்டங்கள் அமைந்திருக்கின்றன.பெரியாரின்
கொள்கைக்கும்,சாதியொழிப்பு போராட்ட மரபுக்கும் தொடர்ச்சியாக
திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய தோழர்களால்
ஆரம்பிக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் தமிழகத்தின்
பொதுவெளியில் செயல்பட துவங்கி இருப்பதும்,பெரியாரின்
வழியில் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்ததிருப்பது
ஆறுதலிக்ககூடியாதவே இருக்கிறது.

No comments:

Post a Comment