Friday, January 22, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 2

தமிழகத்தில் தமிழ்தேசியம் என்கிற கோரிக்கையும்,தமிழக
விடுதலைக்கான போராட்டங்களும்,பெரியாரிய வழிகாட்டல்
மூலமாக மட்டுமே ஜனநாயகபூர்வமானதாகவும்,அறத்தின்
அடிப்படையில் அமைந்ததாகவும் நிகழ முடியும்.தமிழக
விடுதலைக்கோரிக்கையை,தமிழ்நாடு தமிழருக்கு என்கிற
முழக்கத்தின் வாயிலாக 1938 ஆம் ஆண்டிலேயே
எழுப்பியவர்,பெரியார்,பிறகு ஐம்பதுகளின் மத்தியிலும்
தனது வாழ்நாளின் இறுதி கட்டங்களுக்கு சில காலம்
முன்பாகவும் தனித்தமிழ்நாடு என்கிற கோரிக்கையை
பெரியார் எழுப்பி இருக்கிறார்.பெரியார் தேசிய
கோரிக்கையை அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்திக்
கொண்டதையும் நாம் கவனிக்க வேண்டும்.பெரியாரை
சரியாக புரிந்துகொண்டால்,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தபட்ட
வகுப்புகளில் இருந்து கல்வி கற்ற,சிந்திக்கும்,போராட
வாழ்வியல் அடித்தளம் கொண்டவர்களை (மார்க்சிய
மொழியில் சொன்னால் குட்டிமுதலாளித்துவ பிரிவினரை)
உருவாக்கவே ஆளும் வர்க்கங்களுடன் உறவும்,முரணும்
கொண்டு செயல்பட்டு வந்தார் என்பதை நாம் உணர முடியும்.
பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்ஸே குட்டிமுதலாளித்துவ
வாழ்நிலையில் இருந்து வந்தவர்தானே.பார்ப்பனர்கள்
மட்டுமே அறிவுத்துறையில் இருந்த சமூக அமைப்பில்,
பெரியாரின் சமரசங்களை அந்த வரலாற்றுச்சூழலில்
வைத்து மட்டுமே சரியாக மதிப்பிட முடியும்.சாதி ஒழிப்பு,பெண்ணிய விடுதலை,பகுத்தறிவு,பார்ப்பன,
பார்ப்பனிய எதிர்ப்பு என்று,பெரியாருக்கு இருக்கும்
பன்மைத்துவமான செயல்பாடுகளை முழுக்க இங்கே
விவாதிப்பது நமது நோக்கமல்ல.ஒரு சரியான தேசிய
விடுதலைக்கண்ணோட்டம் பெரியாருக்கு தொடர்சியாக
இருந்து வந்ததை சுட்டிக்காட்டுவதே நம் நோக்கம்.
எந்த ஒரு விடயத்தையும் யார் கைகளில் எடுக்கிறார்கள்,
அதன் நோக்கம் என்ன என்பதன் அடிப்படையிலேயே
பெரியார் ஆதரவையும்,எதிர்ப்பையும் நிகழ்த்தி வந்தார்.
மதம் தொடர்பான பிற்போக்குதனமான இலக்கியங்கள்,
பெண்ணடிமைத்தனத்தை போற்றும் கருத்துகளை மொழிப்
பாதுகாப்பு என்கிற பெயரில் தக்கவைக்க முயற்சி செய்த
போது எதிர்ப்பையும்,அதே நேரத்தில் ஒரு மனிதனுக்கு
தலையாய பற்றாக இருக்க வேண்டியது மொழிப்பற்று
என்று கூறி ஆதரவையும் தெரிவித்திருக்கிறார் பெரியார்.மொத்தத்தில் நாகரிகத்தையும்,முன்னேற்றத்தை நோக்கிய
கலாச்சார,பண்பாட்டு,சமூக,அரசியல் நிகழ்வுகளை
துவக்கி வைத்தவராகவும்,நிகழ்த்தியவராகவும்,ஆதரித்த
வராகவும் பெரியார் இருக்கிறார்.அதே நேரம் அந்நிய
ஏகாதிபத்திய அரசுகள்,இந்திய பார்ப்பன,பனியா
அதிகார வர்க்கத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட
இந்திய கட்டமைப்பில் இருந்து வெளியேறுவதே
தமிழர்களுக்கு நிரந்த விடிவைத் தரும் என்கிற
முடிவுக்கு இயங்கியல் ரீதியாக வந்தும் சேர்கிறார்.
தனது இறுதிக்காலங்களில் தனிதமிழ்நாட்டு
கோரிக்கைகாக தீவிரமாக பெரியார் குரல் கொடுக்க
ஆரம்பித்ததை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தான் விரும்பியவாறு சுயசிந்தனை கொண்ட,பகுத்தறிவு,
சாதிய ஒழிப்பில்,பெண்விடுதலையில் நேர்மை என்று
முற்போக்கு எண்ணம் கொண்ட தளத்தை உருவாக்கி
கொண்டதன் பின்னனியிலேயே மீண்டும் பெரியார்
தேசியக் கோரிக்கைக்கு அழுத்தம் தர துவங்கினார்
என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அரசின்,அதிகார
வர்க்கத்தின் இயல்பு பற்றி பெரியாருக்கு வர்க்க
கண்ணோட்டம் தொடர்சியாக இருந்து வந்து இருப்பது
அவரது எழுத்துக்களில் இருந்தே நம்மால் அறிய முடியும்.
பெரியார் இன்னும் சற்று காலம் உயிரோடு இருந்து
போராடியிருந்தால் ஈழத்துக்கு முன்பாகவே தமிழ்
நாடு விடுதலை அடைந்திருக்கலாம் ஒருவேளை.சாதிய ஒழிப்புக்கும் தேசிய விடுதலைக்கும் உள்ள
தொடர்பை பெரியாரின் வார்த்தைகளிலேயே கீழே
பார்க்கலாம்.
நமது தமிழ்நாடு பிரிந்தே ஆக வேண்டும்.சாதி ஒழிப்பு
காரியத்துக்கு ஒரு திட்டம் என்கிற வகையில் நம்
நாட்டை நாமே ஆள வேண்டும்.நமக்கு எதற்காக
டெல்லி?பத்து ஆண்டுகளாக பார்த்தாகிவிட்டது,நாம்
இரண்டு பேர் கூப்பாடு போடுகிற நிலை
இல்லாவிட்டால் உயர்ந்த பதவிகள் அத்தணையும்
பார்ப்பானிடம்தான் இருக்கும் - 1956 குடந்தை
சொற்பொழிவில்.மேலே உள்ள பெரியாரின் கருத்து தெளிவாக உள்ளது.
இந்திய,இந்துவ கட்டமைப்பில் இருந்து தமிழகம்
நீங்கும்போது சாதியத்தை எளிதாக ஒழிக்க முடியும்
என்பது ஒன்று.மற்றது அந்த நீண்டகால திட்டத்துக்கு
முன்பாக அதிகார வர்க்கத்தின் பதவிகளில் தமிழர்கள்
தங்களுக்கான பங்கை பெறுவதன் ஊடாக,
சாத்தியமான நலன்களை தாழ்த்தப்பட்ட,பிற்படுத்த
வகுப்புகளுக்கு பெறுவது.பார்பனர்கள் ஆதிக்கத்தில்
இருந்த சமூகத்தில் பெரியாரின் சமரசம் எதற்காக
என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இன்னும் வரும்....

6 comments:

அரைகிறுக்கன் said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

Rathi said...

சில காலம் தமிழ்நாட்டு தமிழர்களுடன் இணையத்தில் பேசியபோது அவர்களில் சிலர் ஈழத்தில் புலிகளால் முன்வைக்கப்பட்ட தேசம், தேசியம், தன்னாட்சி என்ற கருத்துகளையும் தமிழ்நாட்டு தமிழ் தேசியத்தையும் தெளிவாகக் குழப்பிக்கொண்டார்கள். அவர்கள் உங்கள் கட்டுரைகளை படித்தால் நல்லது. தெளிவான விளக்கங்கள். தொடருங்கள்.

Thiraviam said...

வணக்கம் தோழரே
உங்கள் வலைப்பூவின் தொடர்ந்து படித்து வருபவன் ..ஆனால் இதுதான் என்னுடைய முதல் மறுமொழி ம .க .இ .க வின் புரட்சிகர செயல்பாடாய் அவர்கள் சொல்லி கொள்வதை விமர்சித்து அவர்களது செயல்பாடு தமிழ் தேசியத்துக்கு எதிராக எவ்விதம் அமைகிறது என சுட்டிக்காட்டி ஆங்காங்கே உங்களது தமிழ் தேசிய சிந்தனை கருத்துக்களை தெளித்தாலும் இதுதான் தமிழ் தேசியத்தை பற்றிய விரிவான முதல் பதிவு என நினைக்கிறேன் ...வாழ்த்துக்கள் தோழா . .......தொடர்ந்து பாயட்டும்

ஸ்டாலின் குரு said...

விரைவில் எழுதுகிறேன் அரைகிறுக்கன் நண்பா,

(நான் நக்கல் செய்யவில்லை உங்கள்
பெயரை)

ஸ்டாலின் குரு said...

ஆம் ரதி நிறைய குழப்பங்கள் தமிழக சூழலில்
இருக்கின்றன.இயன்றவரை சரி செய்யலாம்

ஸ்டாலின் குரு said...

பாராட்டுகளுக்கு நன்றிகள் தோழர் திரவியம்.

Post a Comment