Friday, January 22, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 1

2008 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கி சென்ற வருடம்
முழுதும் நீடித்திருந்த அரசியல் எழுச்சி தமிழகத்தில்
ஏறக்குறைய தேக்கநிலையை அடைந்திருக்கிறது.ஈழத்
தமிழர்களுக்காக நிகழ்ந்த போராட்டங்கள் அவர்களுக்கு
பலன் அளிக்காமல் போனதின் வேதனை ஒருபுறம்
இருந்தாலும்,அந்த எழுச்சி தமிழக தமிழர்களுக்காவது
பயன்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும்,கனவாகவே
போய் விட கூடிய சூழல் விரக்தியை நோக்கியே
நம்மை தள்ளுகிறது.தமிழகத்தின் முதுகெலும்பற்ற
இலக்கியவாதிகள்,தமிழ்ச் சான்றோர்கள் கூட்டம்
கருணாநிதியின் செம்மொழி மாநாட்டில் இடம்
பிடிக்க அலையும் அவலம் முகத்தில் அறைகிறது.
கோபத்துடன் ஒரு மூலையில் அமர்ந்து சிந்திக்க
ஆரம்பித்தால் மனிதம் மீதே நம்பிக்கை அற்றுப்
போகிறது.மனதின் வலிகளை பதிவெழுதி
இறக்கி வைத்து விடலாம்.வேறென்ன செய்து
விட்டேன் இதுநாள்வரை? அரசியலற்ற மனிதனாக
வாழ்ந்திருந்தால் குறைந்தபட்சம் இயலாமையின்,
சுவடுகளை இதயத்தில் சுமந்து அலையும் சிரமம்
இல்லாமல் போயிருக்க கூடும்தானே?


சமீப காலங்களில்,ஈழம் தொடர்பான கட்டுரைகளில்
எல்லாம் காந்தியின் தேசம் கொன்றதே என்கிற
ஆதங்கம் எழுப்பபட்டபோதெல்லாம்,காந்தியின்
தேசம் கொல்லவே செய்யும் என்கிற உண்மை
அழுத்தமாக பதிவு செய்யப்படாமல் போனதன்
விளைவைக் கண்டு சிரிக்கவே தோன்றியது.
பகத்சிங்கை கொன்றவர்களுக்கு துணைபோன
நபரின் அரசியல் வாரிசுகளிடம் நாம் வேறு
எதை எதிர்பார்க்க முடியும்? அமைதியாக
சிந்தித்துப்பார்த்தால் இந்தியாவின் புரட்சிகர
ஜனநாயக சக்திகளிடமிருந்து ஈழத்தமிழர்கள்
அடைந்ததென்ன? சில கட்டுரைகள்,சிங்கள
தேசத்தின் அதிபருக்கு மனித உரிமைகளை
மதிக்கக் கோரி ஒரு கடிதம்,மனித உரிமை
தளத்திலான சில இயக்கங்களின் பங்களிப்பு
மட்டும்தானே? வருத்தமோ,குறை கூறலோ
அல்ல இது,யதார்த்தம் இப்படியாகத்தான்
இருக்கிறது.


சமீப நாட்களில் இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள்
திரும்பத் திரும்ப ஒரு காட்சியை ஒளிபரப்பிக்கொண்டு
இருந்தன.திருநெல்வேலி அருகே காவல்துறை
அதிகாரி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு
இருப்பதை இரண்டு தமிழக அரசின் அமைச்சர்கள்
வேடிக்கை பார்ப்பதை காட்டி அவர்களை கோழைகள்,
என்றும் மனிதநேயம் அற்றவர்கள் என்றும் காட்டமாக
விமர்சித்துக்கொண்டு இருந்தார்கள்.இதே திராவிட
முன்னேற்ற கழகத்தின் தலைவரும்,அமைச்சர்களும்
ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை
வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தபோது வராத
கோபம் இவர்களுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து
வந்தது.ஈழத்தில் படுகொலைக்கு உள்ளாகும்
தமிழர்களை காப்பாற்றக்கோரி தமிழகமே குரல்
கொடுத்தபோது கண்களையும் காதுகளையும் மூடிக்
கொண்ட இந்த ஊடக கோழைகள் மனிதநேயம்
பற்றி பாடம் எடுப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?


பார்பன,பனியா அதிகாரவர்க்கம்,அதன் எடுபிடி ஊடகங்கள்
இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரான பகையை
வெளியிடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.அதே
வேளையில் புரட்சிகர,முற்போக்கு சக்திகளாக இந்திய
நிலப்பரப்பில் செயல்படுபவர்களும் பார்பபனியவாதிகளாக
இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க
இயலாமல் இருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான
ஒடுக்குமுறையின்பால் இந்திய பெருநிலப்பரப்பின் சகல
தரப்புகளிலும் நிலவிய,நிலவும் அலட்சியம் அந்த
எண்ணத்தையே உறுதி செய்கிறது.அங்கீகரிக்கப்படாத
ஒரு தேசமாக இந்தியாவில் தமிழகம் இருப்பதாகவே
இந்திய அதிகாரவர்க்கம் கருதுகிறதோ என்றே எண்ண
வேண்டி இருக்கிறது.


இயல்பான வளர்ச்சியை நோக்கி சென்றிருக்க வேண்டிய
இந்தியாவின் தேசிய இனங்கள்,இந்திய நாடு என்கிற
கட்டமைப்புக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கபட்டதன்
விளைவுகளை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம்.
சமீபத்திய உதாரணம் தெலங்கானா.ஏகாதிபத்திய,
பார்ப்பன,பனியா வர்க்கங்களின் நலன்களுக்காக
உருவாக்கப்பட்ட இந்திய நாடு என்கிற கட்டமைப்பு
மொழிவழி அமைந்த தேசங்களாக,இந்திய தேசிய
இனங்கள் உருவாவதை தடைசெய்யும் விதத்தில்
அமைந்திருப்பதாலேயே பிராந்திய உணர்வுகள்
தலை தூக்குகின்றன.தெலுங்கு பேசும் ஆந்திர
மக்கள் ஒரு சோசலிச தேசிய அரசின் கீழ் ஒன்று
திரட்டப்பட்டு,சுயசார்பு தேசிய பொருளாதாரம்
கட்டமைக்கப்பட்டிருந்தால் ஒரு தேசிய இனத்துக்கு
உள்ளேயே பிளவுகள் தோன்றி இருக்காது.ஆந்திர
தேசியம் உருவாதையும் தேசிய பொருளாதாரம்
உருவாவதையும் தடை செய்யும் கருவியாக இந்திய
அதிகாரவர்க்கத்தின் ஆட்சியும்,ஏகாதிபத்திய,
உள்ளக சுரண்டல்காரர்களின் சந்தை நலனுமே தடை
காரணிகளாக இருக்கின்றன.இந்திய தேசியத்தின்
பிடியில் இருந்து விடுபட்டு ஆந்திர உழைக்கும்
மக்கள் தங்கள் சொந்த தேசிய பொருளாதார
கட்டுமானத்துக்காக போராடுவதே,நீண்டகால
நோக்கில் சரியான இலக்காக அமைய முடியும்.
தெலங்கான வேறு ஒரு விடயத்தையும் நமக்கு
உணர்த்துகிறது.வரலாற்று வளர்ச்சியின் வேறு
வேறு கட்டங்களில் இருக்கும் இந்திய தேசிய
இனங்கள் தங்கள் அரசியல் சமூக விடுதலைக்காக
சொந்த பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்
என்பதுதான் அது.அந்த வகையில் தமிழ்நாடு,
தமிழ்த்தேச விடுதலையை நோக்கியே
நகர வேண்டி இருக்கிறது.


இன்னும் வரும்....

No comments:

Post a Comment