Friday, February 12, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 4




நிகழ்காலத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகச் சூழலைப் பற்றி
விரிவாக பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.வழக்கம்
போலவே தேசிய விடுதலைப்போராட்டத்தின் முக்கியத்துவத்தையும்,
அதை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கடமையோடு இணைப்பதையும்,பற்றி
பெரியாரிய தோழர்கள் மத்தியில் அலட்சியமே நிலவி வருகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக பூமியை மாற்றிக்கொண்டு
இருக்கிற ஏகாதிபத்தியச் சுரண்டலை பாதுகாப்பதற்காக,மனிதர்களாக
வாழ்வதன் கௌரவத்தை களவாடிக்கொண்டிருக்கும் நிலையை
அடைந்திருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்தும்
திட்டங்களுக்கு இன்றைக்கும் வரவேற்பளிக்கும் நிலைதான்
பெரியாரியம் பேசும் தோழர்கள் மத்தியில் இருக்கிறது.
ஏகாதிபத்திய கட்டத்துக்கு ஏற்ப பெரியாரியலை வளர்த்தெடுக்கும்
எந்த செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.மார்க்சிய
வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தேசிய விடுதலைப்
போராட்டத்தோடு பெரியாரிய அம்சங்களை இணைப்பதன் மூலம்
அதனை ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாக மாற்றுவது,
இந்துத்துவ சார்பு நிலையில் இருந்தும்,இனவாத நிலையில்
இருந்தும் தேசிய விடுதலைக்கோரிக்கையை எழுப்புபவர்களை
அம்பலப்படுத்துவது,தலித் விடுதலையை அலட்சியப்படுத்தும்
தேசியத்தின் கூறுகளை இனம் கண்டு அகற்ற பெரியாரியத்தை
பயன்படுத்துவது,போன்ற எந்த முன்னெடுப்புகளும் இன்றுவரை
மேற்கொள்ளப்படாததே யதார்த்தமாக இருக்கிறது.மறுபுறத்தில்
அடையாள அரசியலின் பெயரால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை
செய்வோர் பெரியாரின் கருத்துக்களை தங்களின் ஏகாதிபத்திய
ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்திகொள்வதை தடுக்க இயலாத
நிலையே இருக்கிறது.தனது காலகட்டத்துக்கும்,அன்றைய
சூழலுக்கும் ஏற்ப பெரியார் கடைபிடித்த ஆளும் வர்க்கத்துடனான
சமரசங்களை இன்றைக்கும் அப்படியே பின்பற்றுவது என்பது
அபத்தமாகத்தான் இருக்க முடியும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கும்,சுரண்டலுக்கும் தடைகளேதும்
இல்லாமல் திறந்து விடப்பட்ட பிரதேசமாகத்தான் தமிழகம் இருந்து
கொண்டு இருக்கிறது.ஈழத்தைப் போன்றோ,இந்தியாவின் வடகிழக்கு
மாநிலங்களைப்போலோ,காஷ்மீரைப்போலவே ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு ஒப்பீட்டளவில் நிலவிய தடைகள் கூட இங்கு
இல்லை.சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் ஒரு
தகவலைச் சொன்னார்.கடந்து மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு
47.000 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் வந்திருப்பதாகவும்,
அதன் மூலம் இரண்டு இலட்சத்து இருபத்து இரண்டாயிரம் பேருக்கு
வேலை கிடைத்திருக்கிறது என்றார்.நாற்பத்தேழாயிரம் கோடி
முதலீட்டில் வெறும் இரண்டு இலட்சத்து இருபத்திரெண்டாயிரம்
பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பது என்ன வகை வளர்ச்சி?
அந்த 47.000 ஆயிரம் கோடியும் அடுத்த முன்று ஆண்டுகளில்
வரிச்சலுகைளாக,உழைப்புச்சுரண்டலாக,அந்த அந்நிய
முதலீட்டாளர்களுக்கே திரும்பவும் போய் விடும் என்பதொன்றும்
சிதம்பர ரகசியமல்ல.மூன்று இலட்சம் பேருக்கு அரசு வேலைகள்
அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் தகவல் சொல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் ஏகாதிபத்தியங்களுக்கும்,இந்திய,தமிழக
முதலாளிகளுக்கும் தமிழகத்தை சூறையாட அனுமதிப்பதற்கு
தமிழக மக்களுக்கு இலஞ்சம் கொடுத்துக்கொண்டு இருப்பதாகவே
இன்றைய சூழல் இருக்கிறது.இந்த வேலை வாய்ப்புகளோடு சேர்ந்து
நுகர்வு மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை உருவாக்கமும்
நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.ஒரே கல்லில்
இரண்டு மாங்காய் அடிக்கிறது ஆளும் வர்க்கம் என்றே கருத
வேண்டி இருக்கிறது.



மேலும் இந்திய அரசின் தணிக்கைத்துறையின் தகவலின்படி மத்திய
அரசு வருமானத்தில் மாநில அரசுகளின் பங்கு 54 சதவிகிதமாக
இருக்கும் நிலையிலும்,மத்திய அரசுகளிடம் இருந்து மாநில அரசுகள்
பெரும் நிதி 34 சதவிகிதமாகவே இருக்கிறது.இது நடைபெறுகிற
சுரண்டலின் இன்னுமொரு நடைமுறை வடிவமாக இருக்கிறது.ஒரு
ஒப்பீட்டின் வழியாக தமிழர்கள் இழந்துகொண்டிருக்கும் வளங்களின்
மதிப்பை கணக்கிடலாம்.டாடா அமைக்க இருக்கும் டைட்டானியம்
ஆலை வழியாக கிடைக்க கூடிய வருமானம் நான்கரை இலட்சம்
கோடிகள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.தமிழகத்தின் உலகவங்கிக்
கடன் 78.000 ஆயிரம் கோடிகள் இருக்கிறது என்று முதலமைச்சர்
கூறுகிறார்.தமிழகத்தின் ஒரு இடத்தில் கிடைக்கும் கனிமத்தை
விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஆறில் ஒரு
பகுதியைக் கொண்டே உலகவங்கி கடனை அடைத்துவிட்டு,
தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கும் நிலை இருக்கையில்
இந்திய முதலாளிகளுக்கும்,ஏகாதிபத்தியங்களுக்கும்,தமிழ்நாட்டை
சூறையாட அனுமதிப்பதற்கு இலஞ்சமாக தமிழக அரசு கொடுக்கும்
வேலை வாய்ப்புகளை வரவேற்பது என்ன வகை புத்திசாலித்தனம்?




நரிமணத்தின் பெட்ரோல்,சேலம் இரும்பு,நெய்வேலி நிலக்கரி
மின்சாரம் என்று தமிழகத்தில் இருந்து அந்நிய,இந்திய,
தமிழக சுரண்டல்காரர்களின் நலன்களுக்காக சூறையாடப்படும்
வளங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.அரசு
நிறுவனங்களுக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த
மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளே முறையாக
நடைபெற்றது இல்லை என்னும்போது,சிறப்பு பொருளாதார
மண்டலங்களுக்காக தங்கள் நிலங்களை பறிகொடுக்கும்
மக்களின் நிலையைப் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை.
தமிழகத்தின் வளங்களை,சுற்றுச்சூழலை,சீரழிப்பதோடு,
மாநகராட்சிகள் என்று தமிழகத்தின் பெருநகரங்களை
அறிவிப்பதன் மூலமும்,நகரங்களை அழகுபடுத்துவதன்
பெயராலும்,சாதி ஒடுக்குமுறையின் பிடியில் இருந்து
ஒப்பீட்டளவில் தப்பிக்க நகர்புறங்களைச் சார்ந்து இருந்த
ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும்,தீண்டாமையின் பிடிக்குள்
தள்ளும் வேலையும் தமிழகம் முழுக்க நடந்துகொண்டு
இருக்கிறது.ஏகாதிபத்திய,உள்ளக சுரண்டல்களை
பாதுகாப்பது,சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்களை
தடுக்கவும்,தணிக்கவும் சில திட்டங்களை செயல்படுத்துவதன்
மூலம் ஆட்சியதிகாரத்தை தக்க வைப்பது என்கிற
நடைமுறைகளை இனியும் தொடர முடியாத நிலை
ஆட்சியாளர்களுக்கு ஏற்படவே செய்யும் என்பதற்கான எல்லா
அடையாளங்களையும் காணக் கூடியதாகவே இருக்கிறது.



பெரும்பணக்காரர்கள் தவிர்த்த,உயர்நடுத்தர வர்க்கம்,நடுத்தர
வர்க்கத்தின் இருப்பு பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகாத
போதும்,ஏழை மற்றும இரண்டாம் நிலை நடுத்தரவர்க்கம்,
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் கீழே சென்று கொண்டிஇ
ருப்பதுவே யதார்த்தமாக இருக்கிறது.ரேசன் கடைகளை
நம்பியே வாழும் நிலைக்கு தமிழகத்தின் பெருவாரியான
உழைக்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதைக் காணக்
கூடியதாக இருக்கிறது.தமிழகவளங்களைச் சூறையாட,
சுற்றுச்சூழலை சீரழிக்க,உழைப்புச்சக்தியை மலிவு விலைக்கு
உறிஞ்ச,அணு உலைகளை அதிகரித்து மக்களின்
பாதுகாப்பை அபாயதுக்குள்ளாக்க எங்களை அனுமதியுங்கள்,
இருக்க இடமும்,உண்ண உணவும் தருகிறோம் என்பதே
ஆளும் வர்க்கத்தின் பேரமாக இருக்கிறது.சிறைகளில்
பராமரிக்கப்படும் கைதிகளின் நிலையில்,தமிழக உழைக்கும்
மக்களை வைக்க விரும்பும் அரசுக்கு எதிராக,பெரியாரின்
சுயமரியாதை மரபை உயர்த்திப் பிடிப்பதே
இன்றைக்கு அவசியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment