Thursday, December 17, 2009

வன்முறையின் அரசியல் - 3

இனியொருவில் நிகழ்ந்த அந்த நீண்ட விவாதத்தினை
கவனித்துக்கொண்டு இருந்தபோது ஒரு கேள்வி
எழுந்தது.புலிகள் மீதும் இந்திய மாவோயிஸ்டுகள்
மீதும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிராக
சரியான மார்க்சிய அடிப்படையுடன் எதிர்வினை
ஆற்றிக்கொண்டிருந்த தோழர்களிடம் கேட்க
விரும்பிய கேள்வி அது.மக்களை அரசியல்
மயப்படுத்துவது,அரசியல் போராட்டத்தின்
வழியாக மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தின்
அவசியத்தை உணர்த்துவது,ஆயுதபோராட்டம்
மூலம் அரசை தூக்கி எறிவது என்கிற மார்க்சிய
வழிகாட்டலை அப்படியே நடைமுறைப்படுத்துகிற
சூழல் இன்று நிலவுகிறதா? சரி அந்த வழி
முறையே முழுவதும் சரியானது என்று வைத்துக்
கொள்ளலாம்.பிரமாண்டமான ஆயுதபலம்,
நாபாம் போன்ற இரசாயன ஆயுதங்கள்,கிளஸ்டர்
குண்டுகள் ,ஆளில்லா உளவு விமானங்கள்,உளவு
செயற்கைக்கோள்கள் என்று அணைத்தையும்
கொண்டிருக்கிற முதலாளித்துவ ராணுவங்களை
முறியடித்து ஒரு பரந்த நாட்டில் அரசை
கைப்பற்றும் நிலைக்கு முன்னேறும் கம்யூனிஸ்ட்
கட்சி ஏகாதிபத்தியங்களால் அணு ஆயுத
தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டால் என்ன
செய்ய முடியும்,கைகளை தலைக்குமேல் தூக்கிக்
கொண்டு நிற்பதைத் தவிர ? ஏற்கனவே
எழுதிய அணு ஆயுத உலகில் புரட்சிகரப்
போராட்டங்கள் பதிவை நினைவுபடுத்த
விரும்புகிறேன்.ஏகாதிபத்தியங்கள் அணுகுண்டு
தாக்குதலை நிகழ்த்த மாட்டார்கள் என்று
நம்புவதற்கு எந்த அடிப்படையில் இல்லை.தாங்கள் தயாரித்து வைத்திருக்குகிற அணுகுண்டை
சோதித்துப் பார்பதற்காகவும்.சோவியத் அரசின்
ராணுவத்திடன் ஜப்பான் சரண் அடைவது,
ஜப்பானில் இடதுசாரிகளின் ஆட்சியை அமைக்க
உதவும் என்பதால் அதை தடுக்கவும் மட்டுமே
அமெரிக்காவால் அணு ஆயுதம் உபயோகப்படுத்த
-ப்பட்டது என்பதை நாம் மறந்து விட இயலாது.
மேலும் உலக நாடுகளின் மீதான தனது
மேலாதிக்கத்துக்கு உதவும் கருவியாக அணு
ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது
என்பதையும்,சோவியத் யூனியனின் அணு ஆயுத
தயாரிப்பின் பின்பே அமெரிக்கா சோவியத
அரசை அங்கீகரித்தது என்கிற விசயங்களையும்
மறந்து விட இயலாது.முதலாளித்துவத்துக்கு
மனித உயிர்களின் மதிப்பு தெரியும் என்று
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருந்துவிட
இயலாது.முந்தைய பதிவில் சுட்டிக்காட்டியது போலவே மூன்றாம்
உலக நாடுகளில் இருக்கும் கனிம வளங்கள்,எண்ணெய்
காடுகள்,கடல் என்று அணைத்தையும் தங்களின்
பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்த நாடுகளின் மக்கள்
தொகையை குறைக்க சர்வதேச ஏகாதிபத்திய நாடுகள்
முனையும் என்பதைப் பார்த்தோம்.அதற்கு மறை
முகமாக உதவி செய்வதாக அமையும் போராட்ட
முறைகள் தவிர்க்கப்படுவது காலத்தின் அவசியமாக
இருக்கிறது.மார்க்சிய ஆசான்களின் புத்தகங்களில்
அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடப்பட்டால் என்ன
செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் தேட
முயலாதீர்கள் தோழர்களே.மிக தீவிரமான ஆயுத
போர் நிகழ்ந்த களங்களில் இடதுசாரியத்திலும்
மக்கள் நலன்களிலும் உறுதியாக நின்றவர்கள் கூட
இன்றைக்கு ஏகாதிபத்திய அரசுகளுடன் உறவுகளை
மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.
சிறந்த உதாரணம் வியட்னாம்.எந்த ஒரு முற்போக்கு
முகாமின் உதவியுமின்றி தேசிய விடுதலையையோ
இடதுசாரி புரட்சிகளையோ வெற்றிகரமாக நிறைவு
செய்த நாடு என்று ஒன்றையாவது உலகில் காட்ட
இயலுமா? சொந்தக் காலில் தேசியப்
பொருளாதாரத்தை கட்டமைக்கும் திறனை
வியட்நாமுக்கு இல்லாமல் ஆக்குவதையே
முதன்மை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்ட
போர் முறை இன்றைக்கு அமெரிக்காவுக்கு பலன்
அளித்துக்கொண்டிருப்பதை நாம் உணராமல் இருக்க
இயலாது.
வருங்கால சமையல்காரர்கள் எப்படி சமையல் செய்வது
என்று குறிப்புகளை தயாரித்து வைத்துவிட்டு செல்வதாக
நாங்கள் கருதவில்லை என்ற மார்க்சின் வாசகங்களையே
நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.ஆயுதப் போரின்
சாத்தியங்கள் பற்றி பேச முனைபவர்கள் ஈராக்கையும்
ஆப்கானிஸ்தானையும் சுட்டிக் காட்டுவது கேட்காமல்
இல்லை.ஈராக்கின் எண்ணெய் வளம் கொள்ளையடிக்க
-படுவதும் அந்நாடு சுரண்டப்படுவதும் அங்கே நிகழ்ந்து
கொண்டிருக்கும் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்
பட்டுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்ற
பதிலே கிடைக்கும்.போராட்டக்காரர்களால்
கொல்லப்பட்ட அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள்
ராணுவத்தைச் சேர்ந்தவர்களை விட அதிகமாக
ஈராக்கின் அப்பாவி மக்கள்தான் கொல்லப்பட்டு
உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.சதாம்
காலத்தில் சண்டைகளில் ஈடுபடாத இஸ்லாமிய
பிரிவுகள் இடையேயான மோதல் ஊக்குவிக்கப்பட்டு
இரத்த ஆறு ஒடிக்கொண்டு இருக்கிறது.மார்க்சிய
வழிகாட்டல் இல்லாத சரியான வழிகாட்டல் அற்ற
நிலையில் நிகழும் போராட்டங்களால் ஏகாதிபத்திய
அரசுகளுக்கு இலாபமே தவிர பாதிப்பு கிடையாது.
சரியான முறையில் போராட்டம் முன்னெடுக்கபட்டு
ஈராக்கின் எண்ணெய் கொள்ளையடிக்கப்படுவது
தடுத்து நிறுத்தப்பட்டால் தற்போது சரிவில் இருக்கும்
அமெரிக்க பொருளாதாரம் மேலும் சரியும் என்கிற
நிலையில் ஈராக்கில் அத்தகைய போராட்டங்கள்
எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானிஸ்தானிலும் ஏறக்குறைய இதே நிலையே
நீடிக்கிறது.அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைவதற்கு
முன் ஆப்கானிஸ்தானில் நடந்த போதைப்பொருள்
உற்பத்தியின் அளவை விட இன்றைக்கு 44 மடங்கு
அதிகம் உற்பத்தி நிகழ்கிறது.ஆப்கானிஸ்தானில் இருந்து
தனது நாட்டுக்குள் போதைப்பொருள்கள் கடத்தி
வரப்படுவதை தடுக்குமாறு ரஸ்யா அமெரிக்காவிடம்
கோரி இருக்கிறது.யுத்தச் செலவுக்கு போதைபொருள்
உற்பத்தி செய்வதை அனுமத்தித்துக்கொண்டு இருக்கிறது
அமெரிக்கா என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கும் செயல்
அல்ல.ஒரே நேரத்தில் ஹிட்லருக்கும்,அமெரிக்க
அரசுக்கும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆயுத
விற்பனை செய்த அமெரிக்க முதலாளிகளின் லாப
வெறியை வரலாறு கண்டிருக்கிறது.இராணுவ ரீதியிலான
எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதாலேயே
அது அதன் இறுதி விளைவான ஏகாதிபத்தியங்களை
வெற்றிகொள்ளும் நிலை வரை சென்று விடும் என்று
கருத இயலாது.தற்காலிகமாக பின் வாங்கும்
ஏகாதிபத்திய நாடுகள்,பொருளாதார ராணுவ ரீதியாக
தங்களை பலபடுத்திக்கொண்ட பிறகு மீண்டும்
ஆக்கிரமிப்பில் இறங்குவதன் சாத்தியங்களும்
மிக அதிகமாக உள்ளன.மேலும் அமெரிக்க அரசின்
ராணுவத்தினரை விட அமெரிக்காவில் இயங்கும்
தனியார் பாதுகாப்பு படையினரே இந்த நாடுகளில்
அதிகம் உள்ளனர் என்பதையும்,அமெரிக்க அரசின்
ராணுவத்தினருக்கு செலவு செய்யப்படும் தொகையை
விட மூன்று மடங்கு அதிகமாக இவர்களுக்காக செலவு
செய்யப்பட்டு வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
தனியார் பாதுகாப்புபடையின் முதலாளிகள் யுத்தம்
நீடிப்பதையே விரும்புவார்கள் என்பது சொல்லித்
தெரிய வேண்டியதில்லை.தேசம்.தேசியம்
ஆகிய அடையாளங்களுக்குள் முதலாளித்துவ
இலாப வெறியை உள்ளடக்கி மதிப்பிவிட்டு விடவும்
முடியாது.
மொத்ததில் உலகில் புரட்சிகர எழுச்சிகளுக்கும்,தேசிய இன
விடுதலைப்போராட்டங்களுக்கும் ஆதரவு அளிக்க எந்த ஒரு
முகாமும் இல்லாத நிலையில்,உச்சபச்ச நேர்மையுடன்
தங்கள் மக்களுக்காகவும்,சர்வதேச உழைக்கும்
வர்க்கத்துக்காகவும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போரிட்டு
வீழ்ந்திருக்கும் புலிகளிடம் இருந்து நாம் மாற்றுப் போராட்ட
வழிகளை கற்க வேண்டி இருக்கிறது.ராணுவ ரீதியாக
மட்டுமே உலக வல்லரசுகளை எதிர்த்து முறியடித்து விட
முடியும் என்பதை தவிர்த்து விட்டு அரசியல் போராட்ட
முறைகளுக்கு முற்போக்கு சக்திகள் கவனம் செலுத்த
வேண்டும்.

No comments:

Post a Comment