Wednesday, December 2, 2009

இரயாகரன் என்னும் அறீவுஜீவி

மக இக வினரின்,இலங்கைக்கான மார்க்ஸ் இரயாகரன்
இனியொரு தளத்தின் மூலமாக அம்பலப்படுத்தபட்டுக்
கொண்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சர்வதேச அரசியல் சூழல்கள் பற்றிய எந்த புரிதலும்
இன்றி,சொந்த வன்மத்துடன் ஈழ விடுதலைப்
போராட்டத்துக்கும்,புலிகளுக்கும் எதிராக இணைய
தளத்தில் புரட்சி செய்து கொண்டிருந்தவரின் பின்னனி
பற்றி தோழர் அசோக் யோகனின் கட்டுரையை வாசித்த
போது இரயாகரன் பற்றி நாம் உருவாக்கி கொண்டிருந்த
மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டது.

ஈழ விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவான எந்த ஒரு
ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் கொண்டிராத,
குறைந்தபட்சம்,விமர்சனங்களில் கூட நேர்மையை
கொண்டிராத,இவரது இணையத் தள கட்டுரைகளை
மாற்றுக் கருத்துக்களை அறியும் ஆவலில் படித்து
வந்தது மிகப்பெரிய தவறு என்பதும் இப்பொழுது
புரிகிறது.ஈழ விடுதலை போராட்டத்தின் வரலாறு
பற்றிய முழுமையான தகவல்கள் தமிழகத்தைச்
சேர்ந்தவன் என்கிற முறையில் கைவசம் இல்லாத
நிலையிலும் இரயாகரனின் சிறுபிள்ளைத்தனமான
கருத்துக்களுக்கும் அவரின் மக இக சீடர்களின் ஈழம்
தொடர்பான கட்டுரைகளுக்கும் நாம் அவ்வப்போது
எதிர்வினையாற்றி வந்திருப்பது சரியானது என்று
உணர்கையில் மகிழ்சி அடைய முடிகிறது.

யமுனா ராஜேந்திரனின் புலிகள் பற்றிய கட்டுரையின்
எதிர்வினையாகவும்,மற்றும் புலிகளுக்கும் ஈழப்
போராட்டத்துக்கும் ஆதரவாக எழுதுபவர்களுக்கு
மறுப்பு என்கிற பெயரில் இவர் எழுதிக் குவித்த அபத்த
களஞ்சியமான கட்டுரைகளில் இழையோடியிருந்த
தர்க்கப் பிழைகள்,தனது நேர்மையை சந்தேகிக்கும்
உரிமையை உலகில் எந்த மனிதனுக்கும் அளிப்பதை
சகித்துக்கொள்ள இயலாத இவர்,புலிகளிடம் பணம்
பெற்றுக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அவதூறுகளை
பொழிந்திருந்தது ஆகிய விசயங்களே இவரின்
அரசியல் நேர்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக்
காட்டி விட்டன என்றாலும்,இன்றைக்கு இவர்
அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலிம் நம்மளவில்
ஒரு எதிர்வினை அவசியம் என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் அரசியல் புலனாய்வு இதழ்கள் பெருமளவில்
இவரது இணையத்தில் கிடைத்த விடயங்களை தங்கள்
வியாபாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டது நமக்கு
சந்தேகங்களை எழுப்பினாலும் அதை ஒருபுறம் ஒதுக்கி
வைத்துவிட்டு புலிகளின் தோல்விக்கான காரணமும்
அரசியல் யதார்தமும் என்கிற இவரது கட்டுரையையே
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இனப் படுகொலை என்பதற்கு உலகப் புகழ்பெற்ற சட்ட
வல்லுனரான ரபேல் லெம்கின் என்பவர் கொடுத்த
வரையறையை அதற்கு முன் பார்த்து விடலாம்.

பொதுவாகச் சொல்லப்போனால் இனப்படுகொலை என்பது
உடனடியாகவே ஒரு இனத்தை அழித்து விடுவது என்று
அர்த்தமல்ல.அப்படிக் கொள்வதாயின் அந்த இனத்தைச்
சார்ந்த அணைத்து உறுப்பினர்களுமே கூட்டாக கொலை
செய்யப்பட வேண்டும்.இனக் கொலை என்பது தேசிய
இனக் குழுமங்களின் வாழ்விற்கும் வளத்திற்கும்
அடிப்படையாக விளங்கும் ஆதாரத் தூண்களை அழிக்கும்
நோக்கத்தைக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு
அழிவுத் திட்டத்தையே குறிக்கும்.இந்த அழிவுத்
திட்டமானது அந்த இனக் குழுமங்களைப் படிப்படியாக
அழிக்கும் நோக்கமுடையது.

தேசிய இனங்களின் மொழி,பண்பாடு,தேசிய உணர்வு,
மத சமூக அரசியல் நிறுவனங்கள்,பொருளாதார
வாழ்வை படிப்படியாகச் சிதைப்பது மட்டுமின்றி அந்த
இனத்தைச் சேர்ந்த தனி மனிதர்களின் சுதந்திரம்
நலம் கௌரவம் தனிபட்ட பாதுகாப்பு உயிர்வாழ்வு
ஆகியவற்றை அழிப்பதுமே இந்த பலமுகம் கொண்ட
அழிவுத் திட்டத்தின் நோக்கம்.இனக்கொலையானது
ஒரு இனத்தின் தேசிய வாழ்வை சிதைப்பதையே
இலக்காக கொண்டது.தனி நபர்களுக்கு எதிராக
எடுக்கப்படும் நடவடிக்கை அந்த தனி நபருக்காக
அல்ல.மாறாக அவர் அந்த இனத்தைச் சேர்ந்த
தனி மனித உறுப்பினர் என்பதற்காகவே.

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்தே மேலே இனப்
படுகொலை என்பதற்கான வரையறையில் அடங்கிய
விசயங்கள் படிப்படியாக சிங்கள் பேரினவாதிகளால்
திட்டமிட்டு செயல்படுத்தப்பட துவங்கின என்பதை
எவரும் மறுக்க முடியாது.தொடர்சியாக கலவரங்கள்
என்கிற பெயரில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
இன அழிப்பு படுகொலைகள்,நில ஆக்கிரமிப்பு,கல்வி
உரிமைப் பறிப்பு என்று சிங்கள பேரினவாதம் ஈழத்
தமிழர்களுக்கு இழைத்த எண்ணற்ற கொடுமைகளின்
விளைவாகவே ஈழ விடுதலைக் கோரிக்கை எழுந்தது
என்பது வரலாறு.இந்த நிதர்சனமான உண்மையை
மறைத்து தரப்படுத்துதல் முறை மூலம் யாழ்ப்பாண
மேட்டுக்குடி வர்க்கம் இழந்த நாற்பது பொறியியல்
கல்லூரிகளுக்கான இடங்களும்,நாற்பது மருத்துவ
கல்லூரிகளுக்குமான இடங்களும் மட்டுமே தமிழீழ
கோரிக்கை எழ காரணமாக இருந்தது என்கிற அதி
மேதாவித்தனமான காரணத்தை உற்பத்தி செய்து
வெளியிட்டவர்தான் இந்த இரயாகரன்.

உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் அந்த கல்லூரி
இடங்களை இழந்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி
வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றால்,அவர்களுக்கு
நிச்சயமாக தமிழகத்துக்கோ அல்லது மேற்கத்திய
நாடுகளுக்கோ தங்கள் பிள்ளைகளை அனுப்பி கல்வி
பெற வைக்கும் வசதி இருந்திருக்குமே என்ற சிறு
குழந்தைக்கு கூட தோன்றும் கேள்வியை எழுப்ப
வக்கற்றவர்கள்தான் இவரின் மக இக சீடர்கள்.இந்த
மொன்னத்தைனமான அரசியல்தான் ஈழத்தின்
இனக்கொலையில் சர்வதேச நாடுகள் வகித்த
பாத்திரத்தை குறைத்து புலிகளின் தலையில்
பழியை சுமத்துவது வரை இவர்களை கொண்டு
வந்து விட்டிருக்கிறது.

திட்டமிட்ட இனக்கொலையின் கூறுகளை அடையாளம்
காணவும் எதிர்த்து போராடவும் தவறிய சிங்கள தமிழ்
இடதுசாரிகளின் அலட்சியப் போக்கு,தமிழர்களுக்கான
உரிமைகளை அரசியல் போராட்டங்கள் மற்றும்
பாராளுமன்ற பங்கேற்ப்பின் வழியாக பெற இயலாத
தமிழர் கட்சிகளின் நிலை போன்ற விசயங்களே
இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தேசிய
விடுதலைபோராட்டத்தை முன்னெடுக்கத் தூண்டிய
காரணியாக அமைந்தது.முப்பது ஆண்டுகால ஆயுத
போராட்டம்,அதில் விடுதலைப்புலிகள் வகித்த
சமரசமற்ற பாத்திரம் மூலமே சிங்கள பேரினவாதிகளின்
இனப்படுகொலைத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு ஈழத்
தாயகத்தில் இன்றைக்கும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு
இருக்க முடிகிறது எனபது பாரிஸிலும் தமிழகத்திலும்
இருந்து கொண்டு இணையத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை
நிகழ்த்திகொண்டு இருக்கும் இரயாகரனுக்கும் மக இக
வினருக்கும் புரியும் என்று எதிர்பார்ப்பது நம் தவறுதான்.
சரி இனி இரயாகரனின் கட்டுரைக்குள் போகலாம்.

தங்களின் தோல்வி பற்றி சுய விமர்சனம் இல்லாமல்
தமிழ் மக்களை மந்தைகளாக தொடர்ந்து பேண
புலிகள் விரும்புவதாக கூறும் இரயாகரன்,ஈழத்துக்கு
சென்று நல்ல மேய்ப்பனாக தமிழ் மக்களுக்கு வழி
காட்டுவதை யார் தடுத்தது?

தேசியம் என்பது எங்கும் எப்பொழுதும் முதலாளித்துவ
கோரிக்கையே தவிர பாட்டாளி வர்க்க கோரிக்கை
அல்ல என்று புத்தகமே வெளியிட்டவர்,ஏகாதிபத்திய
அமைப்புக்கேற்ற உலகமயமாதல் என்னும் சமூக
அமைப்பில் தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின்
அரசியலாகும் என்று பல்டி அடித்திருக்கிறார் இன்று.
எந்த போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றாரோ?

சிங்களர்கள் மட்டும் உண்மையான பௌத்தர்களாக
இருந்திருந்தால் நான் ஆயுதத்தை எடுத்திருக்க
வேண்டிய தேவையே எழுந்திருக்காது என்று கூறிய
பிரபாகரனும்,களத்தில் கிடைத்த சிங்கள ராணுவ
வீரர்களின் உடல்களை ராணுவ மரியாதையோடு
அடக்கம் செய்த புலிகளும் இரயாகரன் போன்ற
நபர்களுக்கு சிங்கள இனத்துக்கு எதிராக போர்
நடத்தியததாக தெரிவதில் ஆச்சரியமொன்றும்
இல்லைதான்.

புலிகளின் தலைமை அழிவு,புலிப் பாசிசம் என்று
எல்லாம் அவர் வழக்கமாக அடிக்கும் ஜல்லியை
ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே வரியில் சொல்லி
விடலாம் ஒரு சரியான தேசிய விடுதலைப்
போராட்டத்தை புலிகள் முன்னெடுத்ததாலேயே
அவர்கள் அழிக்கப்பட்டனர்.இவர் சொல்வது
போல ஏகாதிபத்திய சார்பாளர்களாக சமரசத்துக்கு
உடன்படுபவர்களாக இருந்து,ஒடுக்கப்பட்டவர்களின்
பக்கம் புலிகள் நிற்கவில்லை என்றால் சர்வதேச
நாடுகள் என்னும் பெயரில் அறியப்படும்
முதலாளித்துவ நாடுகளுக்கு புலிகளை அழிக்க
வேண்டிய தேவை எழுந்திருக்கவே போவதில்லை
என்று இந்த மாமேதையின் மூளைக்கு தெரியாமல்
போனதில் வியப்பென்ன?

மக்களின் பெயரால் மார்க்ஸியத்தின் பெயரால் மனித
விரோத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை
அடையாளம் காண்பதும்,எதிர்த்துப் போராடுவதும்
இன்று மக்களை நேசிப்பவர்கள் முன் உள்ள
கடமையாகும்.

7 comments:

Anonymous said...

I think in on of his article he said that his guys suggested LTTE some battlefield ideas like breaking through the defence and they did not listen and got defeated.

Good i was expecting someone to shut his mouth

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி நண்பா

Anonymous said...

arumaii

Anonymous said...

solla theriyavillai.....arumai....thodarnthum ampala paduththungal.-raavan rajhkumar-jaffna

Anonymous said...

good article
anna

ஸ்டாலின் குரு said...

அனானியாக வந்த நண்பர்களுக்கு நன்றிகள்

Bala said...

போர் முடிந்து புலிகளே இல்லை என்று உலகமே கூறிவரும் நிலையிலும் இராயகரன் போன்ற புரட்சி புசுவாணங்கள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றியோ குறைந்த பட்சம் மறுக்கப் படும் மனித உரிமைகள் பற்றியோ பேசாமல் இன்னும் பழைய புலி எதிர்ப்புப் பல்லவியையே பாடிக் கொண்டிருப்பது இவர்கள் என்றுமே கையாலாகத காகிதப் புரட்சிக் காரார்கள் என்பதையே காட்டுகிறது.

Post a Comment