Tuesday, December 15, 2009

வன்முறையின் அரசியல் - 1

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் புலிகளை
பந்தயக்குதிரைகளாக கருதிய நபர்களும் இருந்தனர்
என்பது நாம் அறிந்ததுதான்.வசதியான வாழ்க்கை
முறைகளும் வெள்ளாள சாதி உணர்வும் கொண்ட
இந்த சிறிய குழுவினர் தமிழ் வீரம் என்று காட்ட
முயன்ற ஒன்றுக்கும் அறத்தின் அடிப்படையில்
களத்தில் நின்ற புலிகள் காட்டிய வீரத்துக்கும்
இடையில் இருக்கும் வேறுபாடுகள் நிச்சயம்
பேசப்பட்டே ஆக வேண்டும்.குருட்டுத்தனமாக
வன்முறையை வழிபடுபவர்கள் வீரம் என்கிற
பெயரில் முன்நிறுத்துவது புலிகளின் அறம்
சார்ந்த வீரத்தை அல்ல என்பதை விளக்கவே
பிரபாகரனை அவமானப்படுத்தாதீர்கள் சீமான்
என்கிற அந்த முந்தைய பதிவு எழுதப்பட்டது.



சர்வதேசியவாதி என்கிற வார்த்தை மனதில் எழும்
போதெல்லாம் சே குவேரா என்கிற பெயரும் கூட
எழுவதை தவிர்க்க இயலாமல் இருக்கிறது நமக்கு.
சர்வதேசியவாதி என்கிற வார்த்தைக்கு பதிலாக
பேசாமல் சே குவேரா என்று எழுதி விடலாம் என
தோன்றி இருக்கிறது பல முறை.வன்முறை
பற்றிய இந்த பதிவை எழுத நினைத்தபோது
அந்த தோழனின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்று
நினைவுக்கு வருகிறது.க்யூபாவின் காடுகளில்
சே வும் தோழர்களும் கொரில்லாக்களாக போர்
நிகழ்த்திக்கொண்டிருந்த காலம் அது.தங்களோடு
எங்கிருந்தோ வந்து இணைந்து கொண்ட நாய்
மீது அவர்கள் அன்பை பொழிந்துகொண்டு
இருந்தனர்.


சில நாட்களின் பின்னால் ஒரு தாக்குதலைத்
தவிர்த்துக்கொள்ள தோழர்கள் பதுங்கி இருந்த
போது அந்த நாய் குறைத்ததால் மோதல்
ஏற்பட்டு சில தோழர்கள் காயம் அடைந்தனர்.
விட்டுவிட்டுச் செல்ல முயன்றாலும் தங்கள்
பின்னால் வர முயன்ற அதைக் கொலை
செய்வது என்பதைத் தவிர வேறு வழியற்ற
நிலையில் அதை தோழர்கள் கொன்றனர்.
கொல்லப்பட்ட அந்த உயிருக்காக சே வின்
கண்கள் நீரைப் பொழிந்து கொண்டிருந்தன
பல நிமிடங்களுக்கு.ஆம் மக்கள் நேசம்
கொண்ட போராளிகள் கண்கள் உயிர்களில்
வேறுபாடுகள் அறியாதவைகள்தான்
எப்பொழுதும்.நாயின் உயிருக்காக அழும்
கண்கள் தங்களால் வீழ்த்தப்படும் எதிரிகள்
உயிர்களுக்காகவும் அழவே செய்யும்.
காலம் காலமாக சக மனிதர்கள் மீதான
சுரண்டலுக்கும் அநீதிகளுக்கும் எதிராக
வேறு வழியின்றி ஆயுதங்கள் ஏந்தும்
போராளிகள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
புலிகளும் அதில் விதி விலக்கல்ல.



புலத்திலும்,தமிழகத்திலும்,மனிதநேயம் அற்ற
ராணுவ சாகசகாரர்களாக வீர வழிபாட்டுக்கு
உரியவர்களாக புலிகளை அறிமுகப்படுத்தும்
சாதி ஆதிக்க உளவியல் கொண்ட நபர்களை
காணும்போதெல்லாம்,அன்றாட வாழ்வின்
சம்பவங்கள் மனதில் எழுகின்றன.மக்கள்
விடுதலைத் தத்துவமான மார்க்சியத்தில்
கரை கண்டவர்களாக காட்டிக்கொள்ளும் பலர்
தேநீர் கடையில் வேலை செய்யும் சிறுவனை
மரியாதை இன்றி அழைத்து அதிகாரம்
செய்வதில் மகிழ்ந்தது.பிச்சையை தொழில்
ஆக செய்யாதவர்கள் என தெரிந்தாலும் சில
முதிய உயிர்களுக்கு ஒரு ரூபாயேனும் தர
மறுத்தது.எந்த பிரக்ஞையும் இன்றி
பெண்களுக்கு எதிரான வார்த்தைகளின்
வன்முறைகளில் பங்கு கொண்டது என்பதை
எல்லாம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது.
மார்க்சியத்தின் உயிரோட்டமான மனித குல
நேசத்தை அறியாத அவர்களைப் பார்க்கும்
போது அவர்களின் தோள்களில் மார்க்சின்
சாகடிக்கப்பட்ட உடல் தொங்கிக் கொண்டு
இருப்பதாகத் தோன்றும் கண்களுக்கு.
மார்க்சியவாதிகளாக தங்களை அடையாளப்
படுத்திக்கொள்பவர்களின் நிலையே இப்படி
இருக்கும்போது சரியான வழிகாட்டல் அற்ற
சாதாரண நபர்கள் புலிகளின் பெயரால்
நிகழ்த்தப்படும் அபத்த அரசியலை கண்டு
கொள்வதில் தவறிழைப்பது இயல்புதான்
அல்லவா?



மனித குல மீட்பர்களாக மார்க்சியவாதிகளாக
தங்களைக் காட்டிக்கொண்ட சிலர் ஈழத்தில்
இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு காரணம்
புலிகளின் ராணுவக் கண்ணோட்டமும் அக
காரணங்களும்தான் என்று பேசியபோது
ஒரு கேள்வி எழுப்பபட்டது.இரவில் தனியாக
வந்தாள் ஆபாசமாக உடை அணிந்திருந்தாள்
அதனால்தான் பெண் பாலியல் வல்லுறவுக்கு
உள்ளாகிவிட்டாள் என்று பெண்ணை குற்றம்
சொல்வதற்கும் உங்கள் கருத்துக்கும் என்ன
வேறுபாடு என்றபோது அவர்களிடம் இருந்து
மௌனம் மட்டும்தானே பதிலாக கிடைத்தது.




புலிகள் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக
அறிவித்த பிறகும்,எந்த எதிர்தாக்குதலும்
இல்லாத நிலையில் முப்பதாயிரம் மனித
உயிர்கள் அழிக்கப்பட்டது ஏன்?கொள்வனவு
செய்த ஆயுதங்களை உபயோகித்து தீர்ப்பதன்
மூலம் புதிய ஆயுத கொள்வனவில் கமிசன்
பெற்று இலாபமடைய மகிந்தர் முயன்றது
மட்டுமே காரணமாகி விடுமா? மூன்றாம்
உலக நாடுகளில் இருக்கும் கனிமவளங்கள்
எண்ணெய் வளங்கள்,காடுகள்,கடல்வளம்
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த
பிரதேசங்கள் அணைத்தையும் தங்கள்
உபயோகத்துக்கு கொண்டு வர அந்த
நாடுகளின் மக்கள் தொகையை குறைக்க
ஒரு உயிரியல் ஆயுதமாக எய்ட்ஸ்
அமெரிக்காவால் உருவாக்கபட்டது என்கிற
தகவலோடு இந்த படுகொலை நிகழ்வும்
ஒத்துப்போகிறது அல்லவா? ஒரு
தேசியத்தின் நிலபரப்பில் இருக்கும்
வளங்கள் அந்த மக்களின் பயன்பாட்டுக்கு
அல்ல தங்களின் உபயோகத்துக்காகத்தான்
என்று கருதும் சர்வதேச நாடுகள் ஈழத்தின்
மக்கள் தொகையை குறைக்கும் திட்டத்தின்
ஒரு பகுதியாகத்தானே அந்த இறுதிப்
படுகொலை நிகழ்த்தப்பட்டது.



தொடரும் .......

No comments:

Post a Comment