Friday, December 11, 2009

பிரபாகரனை அவமதிக்காதீர்கள் சீமான்

விமர்சனங்கள் செய்வதை ஏற்றுகொள்ளாத,கேள்விகள்
எழுப்ப மறுக்கின்ற ரசிகர் மன்ற மனபான்மை சீமான்
அதரவாளர்கள் மத்தியில் நன்கு வேறூன்றி விட்டது
என்பதையே நமது முந்தைய பதிவுக்கு கிடைத்த
சில எதிர்வினைகள் காட்டுகின்றன.உணர்வுகளின்
அடிப்படையில் எதிவினையாற்றும் அவர்கள் மீது
நமக்கு வருத்தங்கள் இல்லை.அதேவேளை சிலரை
காயப்படுத்துகிறது என்பதற்காகவே நாம் விமர்சனம்
செய்வதை நிறுத்திக் கொண்டு விட முடியாது.தன்
மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலாக
கீற்றில் சீமான் முன்வைத்த நியாயங்களும் அபத்த
களஞ்சியமாகவே இருக்கின்றன.வேறு வழியில்லை
எதிர்வினை ஆற்றியே தீர வேண்டி இருக்கிறது.அதற்கு முன் இரண்டு தகவல்களை பதிவு செய்து
விடலாம்.முதலில் தோழரும் நடிகருமான
மணிவண்ணன் கோவையில் நடைபெற்ற ஈழ
ஆதரவுக் கூட்டத்தில் பேசியபோது சொன்ன
தகவல்.சிங்கள அரசுடனான போர் தவிர்க்க
இயலாது என்று தெரிந்தவுடன் தன் தளபதிகளை
அழைத்த பிரபாகரன்,நம்மோது இப்போது
சண்டையிட வந்திருக்கும் சிங்கள படையில்
இருக்கும் சிங்கள இளைஞர்கள்,தென்னிலங்கை
பகுதி கிராமங்களைச் சேர்ந்த வறுமையில்
வாடும் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
பிற்காலத்தில் சிங்கள இனத்தில் அதிகாரவர்க்க
ஆட்சிக்கு எதிராக நிகழ வேண்டிய எதிர்ப்புக்கு
உதவியாக அமைய வேண்டியவர்கள்.அதனால்
இயன்ற அளவுக்கு சாதாரண சிப்பாய்களை
பலியாக்குவதை தவிர்த்துவிட்டு,டாங்குகள்
கவச வாகனங்கள்,கனரக ஆயுதங்கள்,
ஆர்டிலரிகள் என்று ஆயுதங்களை அழிப்பதை
முதன்மையாக கொள்ளுங்கள்,உங்கள் கீழ்
இருக்கும் போராளிகளையும் அப்படியே வழி
நடத்துங்கள் என்று பேசியதாக ஒரு தகவலை
பதிவு செய்தார்.அடுத்ததாக கிடைத்ததும் செவிவழித் தகவல்தான்.ஏன்
நீங்கள் ஈழ விடுதலைக்கு இந்திய இடதுசாரிகளின்
துணையை நாடக் கூடாது என்கிற கேள்விக்கு,
இந்திய இடதுசாரிகளில் மார்க்சியவாதிகளாக
இருப்பதை விட இந்திய தேசியவாதிகளாகவே
(அதன் முதலாளித்துவ அர்த்தத்திலும் சோசலிச
அர்த்தத்திலும் இந்திய விரிவாதிக்கவாதிகளாகவே)
இருக்கிறார்கள்.(வெளிப்படையான
உதாரணம் சி.பி.எம்).தேசிய இனங்களின்
விடுதலையில் பார்வை குறைபாடு கொண்டவர்கள்
ஆக இருக்கிறார்கள் என்று பிரபாகரன் பதில்
சொன்னதாக அந்த தகவல் முடிகிறது.புலி
எதிர்ப்பாளர்களால் சகிக்க இயலாத ஆத்திரத்துடன்
எதிர்கொள்ளப்படும் தகவல்கள் இவைகள் என்பதை
அறிந்தே இருக்கிறோம்.இதன் நம்பகத்தன்மை
மீது கேள்வி எழுப்பவும் நிராகரிக்கவுமான அவர்கள்
உரிமைகளை அங்கீகரித்துவிட்டே நகர்கிறோம்.நீண்ட நாட்களாக மனதில் அதிர்வுகளை எழுப்பிக் கொண்டு
இருந்த ஒரு விசயத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிட்டியது
நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.போர் நிறுத்த உடன்பாடு
சிங்கள படைகளால் மீறப்பட ஆரம்பித்த காலத்தில்
சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை அணிகளின் தளபதி
தோழன் லெப்.கேனல் அமுதாப் தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம் என்று பேசியிருந்தான் அந்த தோழன்.
வீரத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மனிதத்தின்
உச்சத்திலும் உறுதியாக நின்றவர்கள்தான் அந்தப்
போராளிகள்.தங்கள் உரிமைக்கும் சுயமரியாதைக்கும்
போராடுவதன் வழியாக ஆதிக்கசாதிகளில் இருக்கும்
மனிதர்களையும் நாகரிகமான மனித உயிர்களாக்க
போராடும் தலித்துகள் பற்றி மனதில் உணர்வுகள்
எழுந்து அடங்குகின்றன.அந்த மகத்தான போராளிகள்
தங்கள் தலைவராக ஏற்றிருந்த பிரபாகரன் ராஜபக்சே
சிங்கள் இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
கூறியதாக நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்ப
முடியும் சீமான்?ஆனையிறவு முற்றுகைக்குள் சிக்கிக்கொண்ட நாற்பது
ஆயிரம் சிங்கள ராணுவத்தினரை உச்சபட்ச மனித
நேயத்துடன் உயிரோடு வெளியேற அனுமதித்த
போது,தங்களை அழிக்க வந்தவர்கள் என்பதையும்
தாண்டி அவர்களை மனித உயிர்களாக கருதி அந்த
ராணுவத்தினருக்கும் ஒரு குடும்பம்,உறவுகள்
அழகான குழந்தைகள் என்று இருக்கும் அவைகளைச்
சிதைக்க கூடாது என்கிற மனிதநேயம் புலிகளுக்கு
இருந்தது அல்லவா? மறுபுறத்தில் என்ன நடந்தது
ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலி
கொடுத்து,ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கி
மூன்று ஆண்டுகளாக சிங்கள உழைக்கும் மக்களை
கசக்கிப் பிழிந்து,ஆயுதக் கொள்வனவில் அடித்த
கொள்ளை,அபிவிருத்தி திட்டங்கள் என்ற
பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈழம்
உட்பட்ட இலங்கையை திறந்து விட்டு பெற்ற
பணம் அணைத்தையும் இரவில் கட்டிலில் கொட்டி
தடவிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ
மனநோயாளியாகத்தானே மகிந்தர் இருக்கிறார்.
நீங்களே சொல்வதுதான் என் அண்ணன் போர்
அறங்களை மதித்து கடைசிவரை கொழும்பு
போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை
என்று.மனித உயிர்களின் மதிப்பு தெரிந்த
போரியல் அறங்களை கடைபிடிக்கும் ஒரு
தலைவன் ஈவு இரக்கமற்ற முறையில் போர்
அறங்களை மீறும் ஒரு நபரை தன இனத்துக்கு
நேர்மையாக இருந்தவர் என்று எப்படி கூறுவார்?ஆயிரக்கணக்கில் போராளிகள் மற்றும் அப்பாவி
தமிழர்கள்,சிங்கள இளைஞர்கள் உயிர்கள் என
அணைத்தையும் தனது பச்சை சுயநலத்துக்காக
இனவெறியோடு சிதைதழித்த ராஜபக்சேவை
தன் இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
பிரபாகரன் எப்படி சொல்லி இருக்க முடியும்?
உங்கள் கருத்தை,நிலைப்பாடுகளை நியாயப்
படுத்திக் கொள்ள அந்த மகத்தான,பிரபாகரன்
உள்ளிட்ட போராளிகளை அவமதிக்காதீர்கள்
சீமான்.நீங்கள் ஏற்க மறுக்கலாம் உங்களுக்கு
ஆதிக்கசாதி உணர்வில்லை என்று.ஆனால்
ஆதிக்கசாதி உளவியல் மட்டுமே இது போன்ற
அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளை
உற்பத்தி செய்யும்.மனசாட்சியை தொட்டுச்
சொல்லுங்கள் சீமான் ராஜபக்சே தன் சிங்கள
இனத்துக்கு நேர்மையாக இருந்தார் என்று
பிரபாகரன் கூறினாரா?வரிக்கு வரி பேச்சுக்கு பேச்சு உங்களுக்கு மறுப்பு எழுதிக்
கொண்டு இருப்பது நமக்கு சாத்தியமற்ற விசயம்.கீற்றில்
நீங்கள் இரண்டாவதாக அளித்திருக்கும் நேர்காணலில்
மீது சில விமர்சனங்களை வைத்துவிட்டு,வருத்ததுடன்
உங்கள் வாக்குப் பொறுக்கி அரசியலுக்கு வாழ்த்தை
தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.பொறுத்து
அருளுங்கள். சில கேள்விகள்தான்.எந்த தேர்தல் அரசியலின் வழியாக ராஜஸ்தானில்
குஜ்ஜார்கள் தங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற
முடிந்தது சீமான் ?எந்த தேர்தல் அரசியல்
வழியாக காஸ்மீரிகள் அமர்நாத் கோவிலுக்கு
முறைகேடாக கொடுக்கப்பட்ட தங்கள் மண்ணை
திரும்ப பெற்றார்கள்? சீக்கிய படுகொலையில்
ஈடுபட்ட குற்றவாளிகளை விசாரனைக் கமிசன்
வழியே குற்றவாளிகள் அல்ல என்று விடுவித்த
காங்கிரஸ் அரசுக்கு எதிராக எழுந்த பஞ்சாப்
மக்களை அவர்களின் தாழ்த்தப்பட்ட பிரிவுத்
தலைவரை வியன்னாவில் படுகொலை
செய்ததன் மூலம்தானே அந்த மக்களின் எழுச்சி
திசை திருப்பபட்டது.கரும்பு விலை சட்டத்துக்கு
எதிராக டெல்லியில் திரண்ட விவசாயிகளால்
அந்த சட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது எதைக்
காட்டுகிறது?முத்துகுமாரின் தியாகத்துக்கு
பிறகு குஜ்ஜார்களை போல காஸ்மீரிகளை
போல ஒரு எழுச்சியை நிகழ்த்தாமல்
விட்டதில் நம் அணைவருக்கும் பொறுப்பு
இல்லையா?அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவின் கீழ் மிக
எளிதாக கலைக்கப்பட கூடிய,எந்த அதிகாரங்களும்
அற்ற தமிழக அரசை உலக தமிழர்களின் நல்லது
கெட்டதை முடிவு செய்கிற அதிகாரம் கொண்டதாக
நீங்கள் சித்தரிப்பது நல்ல வேடிக்கையாக உள்ளது.
அரசின் தலைமையில் தமிழர் இல்லை அதனால்
தான் பின்னடைவு என்று வேடிக்கையான
கருத்துக்களை உற்பத்தி செய்வது என்ன விதமான
பகுத்தறிவு.இன்றைக்கு உங்கள் பின்னால்
இருப்பவர்கள் கொண்டிருக்கும் ரசிக மனபான்மை
உடையவர்கள் போலவே ஓட்டுகட்சிகள் மத,
சாதிய,இயக்கங்கள் நடத்துபவர்கள் கீழ்
தலைமை வழிபாடு நடத்துபவர்களாக தமிழர்கள்
சிதறிக் கிடந்ததுதான் அத்தகைய எழுச்சியை நாம்
நிகழ்த்த இயலாமல் போனது என்பதை மறுக்கப்
போகிறீர்களா?முத்துராமலிங்கத்துக்கு மாலை போட்டதை நியாய
படுத்த ராஜபக்சே தனது இனத்துக்கு நேர்மையாக
இருந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்
என்பது சிறுபிள்ளைத்தனமான கருத்தாக தோன்ற
வில்லையா உங்களுக்கு? இந்திய தேசிய
விடுதலைப்போராட்டதில் ஈடுபட்டதற்காக முத்து
ராமலிங்கத்தை நாம் மதிக்க வேண்டும் என்று
கோருகிறீர்கள்.இந்தியதேசிய விடுதலை என்றால்
என்ன என்று அன்றைக்கே பெரியார் மிகத்
தெளிவாக சொன்னார்.ஆங்கிலேயரிடம் இருந்து
பார்ப்பன பனியாக்களுக்கு அதிகாரம் கைமாற்றிக்
கொடுக்கப்படும் நிகழ்வு என்று.சாதிமுறையை
பாதுகாக்கவும்,இந்தியாவில் இருந்த சுரண்டல்
கும்பல்கள் நலனுக்கு கேடுவராமலும் போராடும்
பிரிவின் பக்கம் நின்றவர்தான் முத்துராமலிங்கம்
என்பதை மறைத்து குற்றபரம்பரை சட்டத்துக்கு
எதிரான அவரது செயல்பாட்டை மட்டும் நீங்கள்
முன்நிறுத்துவது தலித்துகளுக்கு எதிரான
அவரது வன்மத்தை மறைக்க திரைபோடும்
வேலையாகத்தான் அமைய முடியும் சீமான்.எத்தனை நாளைக்கு சாதியைக் காட்டி அந்த சமூகத்தை
ஒதுக்கி வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புகிறீர்கள்.அந்த
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறை,நிர்வாகம்
அரசியல் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக்
கொண்டிருப்பதை எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்க
முயலுகிறீர்கள்.அதிகாரவர்க்கத்தில் இருந்துகொண்டு
தலித்துகளுக்கு எதிரான சகல வன்முறைகளையும்
தொடுத்துக் கொண்டு இருப்பவர்களை ஏதோ விளிம்பு
நிலையில் வாடும் பரிதாபதுக்குறிய சமூகமாக
சித்தரிக்க முயலுவதும் ஆதிக்க சாதி உளவியல்தான்.
சாதிகளுக்குள்ளும் வர்க்கம் உள்ளதையோ ஏழை,
பணகாரன் வேறுபாடுகள் உள்ளதோ அந்த சமூகத்திலும்
உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையோ நாம்
மறுக்கவில்லை.ஆனால் உங்களின் அரசியல் அந்த
சாதிகளில் இருக்கும் ஆதிக்கவெறி கொண்டவர்ளுக்கு
துணை செய்வதாக மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் சீமான்,பாராளுமன்ற
உறுப்பினராக,சட்டமன்ற உறுப்பினராக ஆக முயலும்
எவனாவது தமிழ்த்தேசியம் தனிநாடு என்று பேசி
சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்புவானா என்று
கேட்கிறீர்கள்? பேசினார்களே சீமான்.தமிழ்த்தேசிய
கோரிக்கையை சாதிய ஒழிப்புடனும்,இந்திய
அதிகாரவர்க்க எதிர்ப்புடனும் சரியான வழியில்
பெரியார்,முன்னெடுத்துவிட்டால் அதை தடுத்து
நிறுத்துவது சாத்தியம் இல்லை என்கிற நிலையில்
திராவிட நாடு என்று பேசி தமிழர்களை திசை
திருப்பி ஆட்சிக்கு வந்ததன் மூலம் பார்ப்பன
பனியா இந்திய அதிகாரவர்க்கத்துக்கு மண்டியிட்டு
சேவை செய்தார்களே திராவிட முன்னேற்ற கழக
உடன்பிறப்புகள்.நீங்கள் தேர்தல் அரசியலுக்கு
முன்வைக்கிற நியாங்கள் எல்லாம் அவர்களும்
முன் வைத்ததுதான்.ஆமாம் தமிழ்த்தேசியதை
தனிநாட்டை சட்டமன்றத்தின் வழியாக பெறும்
உங்கள் திட்டத்தை விரிவாக விளக்க முடியுமா?
சட்டமன்ற கட்டத்தில் இருந்த புல்லை வெட்ட
கடிதம் எழுதி ஆறுமாதம் கருணாநிதி காத்து
இருக்கும் அளவுக்குத்தான் மாநில அரசுக்கான
அதிகாரம் இருக்கிறது என்ற கதையைச் சொன்ன
தோழர் கூட உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறார்
என்று நினைக்கிறேன்.திராவிடம் பற்றி உங்கள் பார்வையில் மாற்றம் வந்து
விட்டதாக நீங்கள் காட்டிக்கொள்வது.திமுக,அதிமுக
ஆகியவைகளை மட்டும் திராவிடம் என்பதறகாக
எதிர்க்கிறேன் என்பது,சமூக தளத்தில் போராட
பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது என்பது
எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை
வருங்காலம்தான் சொல்ல வேண்டும்.ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரேயை பெருமகன்
என்று சொன்னதற்கு எதிர்ப்பு கிளம்புவதாக புலம்புகிறீர்கள்
அது வெறும் வார்த்தையில் மரியாதை அளிக்கும் எளிய
விசயம் அல்ல.ஈழ விடுதலையை ஆதரித்தால்
பால்தாக்கரே மதிப்புக்குறிய நபராகி விடுவாரா?
தமிழச்சியின் வயிற்றை கிழித்து சிசுவைக் கொல்லும்
சிங்கள ராஜபக்சேவை எதிர்க்க மும்பையில் முஸ்லிம்
பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்லும்
ராஜபக்சேவின்(பால் தாக்கரேவின்) ஆதரவு
உங்களுக்கு வேண்டும் அடடா என்ன விவேகம்?
உங்கள் பின்னால் வந்திருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்
முகங்களைப் பார்க்க கூசவில்லையா சீமான்?
இதில் முற்போக்கு பிற்போக்கு என்று சினிமாவில் எழுத
வேண்டிய பஞ்ச் டயலாக் வேறு.
என்ன சொல்ல பேனா இருக்கிறது பேப்பர் இருக்கிறது
என்று எதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டு
போகாதீர்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்
உங்களை விமர்சிப்பதே நமக்கு தொழிலாகி விட
முடியாது அல்லவா? இந்து ராமின் தோளில்
தொங்கும் பூனூலை எதிர்த்துக்கொண்டே,பால்
தாக்கரேவின் பூனூலுக்கு கயிறு பிரித்துக் கட்டுகிற
நீங்கள்,பூனூலால் இழுத்துக் கட்டபட்டுள்ள
இந்தியதேசியத்தில் இருந்து சட்டமன்றத்தின்
வழியே தனிதமிழ்நாட்டையும் அப்படியே போனசாக
ஈழத்தையும் வாங்கிகொடுப்பீர்கள் என்கிற
கனவை நம்பாமல் செல்லும் இளைஞர்களில்
நானும் கலந்துகொள்கிறேன்.நன்றி சீமான்
பின் குறிப்பு
உங்கள் மீதான என் முந்தைய பதிவில் அதிர்ஸ்டம்
என்று ஒரு வார்த்தை வந்துவிட்டதால் நான்
பெரியாரை சரியாக படிக்கவில்லை என்று
உங்கள் ஆதரவாளர் கூறினார் தொலைபேசியில்.
அதிர்ஸ்டம் என்பதை நல்வாய்ப்பு என்று
தமிழில் மொழிபெயர்திருக்கிறார்கள்.ஒரு ஐந்து
பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தில்
அனுமதிப்பதன் மூலம் கிடைக்கும் கமிசன்
தொகையை வைத்து ஒட்டுமொத்த தமிழக
வாக்காளர்களையும் விலைக்கு வாங்கும் நல்
வாய்ப்பு இல்லாத நிலையில் நீங்கள் இருப்பதையே
அப்படி குறித்திருந்தேன்.அப்புறம் பொதுவாக
அதிகம் பேசுவது என் இயல்பு இல்லை.அதனால்
உங்கள் ஆதரவாளர்கள் அழைப்புகளுக்கு நான் பதில்
அளிக்க இயலாது என்பதையும் பணிவுடன்
தெரிவித்து விடுகிறேன் இந்த பதிவு மூலம்.

7 comments:

Anonymous said...

பூணுகிற நூல் = பூணூல்.

blackpages said...

தங்கள் உரிமைக்கும் சுயமரியாதைக்கும்
போராடுவதன் வழியாக ஆதிக்கசாதிகளில் இருக்கும்
மனிதர்களையும் நாகரிகமான மனித உயிர்களாக்க
போராடும் தலித்துகள் பற்றி மனதில் உணர்வுகள்
எழுந்து அடங்குகின்றன.

சரியான வார்த்தைகள் தோழா !!


ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் அது
தலித்துகளாக இருந்தாலும் ஈழத்
தமிழர்களாக இருந்தாலும் தங்கள் மீது
ஒடுக்குமுறையை நிகழத்துபவர்களுக்காகவும்
சேர்ந்தேதான் போராடிக் கொண்டு
இருக்கிறார்கள்.எழுதப்பட்ட வரலாறு
எல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு
என்கிற வாசகங்களுக்கு கீழேயே மனித
நிலையை நோக்கி முன்னேற விரும்பும்
பலவீனர்களான,நேசம் கொண்ட மனித
உயிர்களாக தங்களை உணரும்
மனித தொகுதிக்கும்,மிருகத்தன்மைக்கே
திரும்ப விரும்பும் மனித தொகுதிக்கும்
ஆன போராட்டம் இழையோடுவதை எத்தனை
பேர் உணர்ந்திருக்கிறோம்.5000 ஆண்டுகள்
3000 யுத்தங்கள்,சிந்தப்பட்ட இரத்தங்கள்
அழிக்கப்பட்ட உயிர்களின் கறைபடிந்து
கிடக்கும் மனித வரலாற்றில் நம்மை இனியேனும்
சக மனிதனை நேசிக்கும் உயிர்களாக மாற்ற
முடியும் என்கிற நம்பிக்கை மட்டுமே ஈழத்தில்
கொன்று குவிக்கப்பட்ட ஐம்பது ஆயிரம் உயிர்களின்
இறுதி விருப்பமாக இருந்திருக்க கூடும்
இல்லையா?

ஸ்டாலின் குரு said...

உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில்
இல்லை நண்பா


உங்கள் வார்த்தைகளில் இழையோடும்
வலியை பகிர்ந்துகொள்ள மட்டுமே
என்னாலும் இயலும்

prabakaran said...

கருத்தாழம் மிக்க சிந்தனையில் விசாலம் கொண்ட ஒரு அலசல். ஆனால் அதற்காக சீமானை குறை கூறுவதை சரி என்று சொல்ல மாட்டேன். பெரும்பாலான தமிழின உணர்வு கொண்டு பெரியாரின் அண்ணாவின் வழிகாட்டுதல் கிடைக்கப்பெறாத ஆனால் அவர்கலைப்போல ஒரு தமிழிண மேம்பாட்டுக்கும் தனித்த அடயாளத்தை நிலைநிறுத்திடவும விடிவெள்ளி தேடி அலைகின்ற ஒரு சமூகத்தின் உணர்வுகளை இன்றைய கால கட்டத்திலே ஓரளவேணும் உரத்துக் கூறுகிற பிரதிபலிக்கிற ஒரு நபராய் சீமான் இருக்கிறார் என்பது உண்மை.உண்மையாண தமிழர் உணர்வுகளை காலம் காலமாய் ஆண்டு வரும் கட்சிகள் மறந்துவிட பெரியாரும் திராவிட இயக்கங்களும் முறுக்கேற்றிய இன்னும் அழிந்துவிடாத அல்லது மீதம் இருக்கும் கொஞ்சம் வீரர்கள் ஒரு விடிவெள்ளி தேடி அலைகையில் அவ்வாறு ஒரு நபர் வரும் வரையான ஒரு இருண்ட காலத்தில் த்மிழினம் நடைபோட அதனை அடுத்த கட்டம் வரை நகர்த்தும் அல்லது அதுவரை அவர்களை எடுத்துக் செல்லும் ஒரு சக்தியாய்க் கூட அவர் இருக்கக்கூடும் அல்லது வேண்டும் என்பது எனது ஆசை.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அட, பிரபாகரன் சீமான் படங்க்ளை எல்லாம் விடாம பார்த்து இருக்கரு. அது கூட தெரியாம!! இததனைக்கும் நடுவுல அவரு யுத்ததை வேற எப்படி நடத்தினாரோ தெரியவில்லை...

//மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். //

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=17029&Itemid=107

ஸ்டாலின் குரு said...

கருத்தாழம் மிக்க சிந்தனையில் விசாலம்
கொண்ட ஒரு அலசல். ஆனால்
அதற்காக சீமானை குறை கூறுவதை சரி
என்று சொல்ல மாட்டேன்.பெரும்பாலான
தமிழின உணர்வு கொண்டு பெரியாரின்
அண்ணாவின் வழிகாட்டுதல் கிடைக்கப்
பெறாத ஆனால் அவர்கலைப்போல ஒரு
தமிழிண மேம்பாட்டுக்கும் தனித்த
அடயாளத்தை நிலைநிறுத்திடவும
விடிவெள்ளி தேடி அலைகின்ற ஒரு
சமூகத்தின் உணர்வுகளை இன்றைய
கால கட்டத்திலே ஓரளவேணும்
உரத்துக் கூறுகிற பிரதிபலிக்கிற ஒரு
நபராய் சீமான் இருக்கிறார் என்பது
உண்மை.//


அண்ணாவை தலைவராக ஏற்க என்னால்
இயலாது.அண்ணாவை உங்களால் ஏற்க
முடியமுபோது சீமானையும் ஏற்க்
முடிவதில் ஆச்சரியமில்லை.

ஸ்டாலின் குரு said...

உண்மையாண தமிழர் உணர்வுகளை
காலம் காலமாய் ஆண்டு வரும்
கட்சிகள் மறந்துவிட பெரியாரும்
திராவிட இயக்கங்களும் முறுக்
கேற்றிய இன்னும் அழிந்துவிடாத
அல்லது மீதம் இருக்கும் கொஞ்சம்
வீரர்கள் ஒரு விடிவெள்ளி தேடி
அலைகையில் அவ்வாறு ஒரு
நபர் வரும் வரையான ஒரு இருண்ட
காலத்தில் த்மிழினம் நடைபோட
அதனை அடுத்த கட்டம் வரை
நகர்த்தும் அல்லது அதுவரை
அவர்களை எடுத்துக் செல்லும்
ஒரு சக்தியாய்க் கூட அவர்
இருக்கக்கூடும் அல்லது
வேண்டும் என்பது எனது ஆசை.//

கதை எழுதாதீர்கள் நண்பா

உங்கள் புனைவுகளும் ஆசையும்
யதார்த்தமற்றது.


ஈழ்த்தை ஆதரித்தால் பால் தாக்கரேயின்
கையை பிடிப்பாராம்.பொன்சேகா
சொல்கிறார் பிரபாகரனின் பெற்றோரும்
முன்னால் புலிகளும் எனக்கு ஆதரவு
அளித்தால் 13 வது சட்ட திருத்ததுகு
மேல் சென்று தமிழர்களுக்கு உரிமை
கொடுப்பேன் என்று.என் உறவுகளே
பெருமகனார் பொன்சேகா வாக்குறுதி
தருகிறாற் அவருக்கே வாக்களியுங்கள்
என்று பேசிவிடுவார் போல இருக்கிறது
விட்டால்.முதலில் படிக்க
சொல்லுங்கள் அவரை.

வார்த்தைகளில் கவனமாக இருக்க
சொல்லுங்கள்.என்னை நம்பி
வந்திருக்கும் ஆயிரகனகான
இளைஞர்களை என்ன செய்வது
என்று கேட்கிறார்.ஏதாவது
எம்ப்ளாயிமெண்ட் அலுவலகம்
திறக்கப் போகிறாரா?

வீட்டுச் சோற்றை தின்றுவிட்டு
நாட்டுக்கு உழைக்க வா என்ற்
பெரியாரின் பேச்சுக்கும் என்னை
நம்பி வந்தவர்களுக்கு வழிகாட்ட
வேண்டும் என்கிற பேச்சுக்கும்
வேறுபாடு தெரியவில்லையா
உங்களுக்கு?

அரசியலை தொழில் என்று
கருதுகிறாரா?

Post a Comment