Friday, January 22, 2010

புரட்சிகர முகமூடி + பார்ப்பன திமிர் = புதிய ஜனநாயகம்

தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நானும் ரௌடி
நானும் ரௌடி என்று வடிவேலு பாணியில் நாங்களும்,நக்சல்
பாரிகள் என்று காட்டிக்கொண்டிருக்கும் மக்கள் கலை இலக்கிய
கழகத்தினரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திக்கொண்டு
வந்திருக்கிறோம்.அந்த வகையில் தமிழகத்தின் ஒரே புரட்சிகர
இதழான ‘புதிய ஜனநாயகத்தின்’ ஜனவரி இதழில் இருந்து
சில விசயங்களை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.
கருணாநிதி பாணியில் கேள்வி பதில் அறிக்கை போல,
இதழின் கட்டுரைகளில் இருக்கும் பத்திகளின் மேல் நம்
கருத்துக்களை பதிவு செய்யலாம்.

முதலில் எடுத்துக்கொள்கிற கட்டுரை,நேபாளம்: கிளர்ந்தெழும்
மக்கள் திரள் போராட்டங்கள்,கந்தலாகி வரும் இந்திய அரசின்
சதிகள் என்கிற கட்டுரையில் உள்ள முரண்பாட்டின் மீது
கவனம் செலுத்தலாம்.ஈழ விடுதலைப்போரை அழிக்க
இந்தியா எவ்வாறு செயல்பட்டதோ அப்படியே நேபாள
புரட்சியை அழித்தொழிக்க கிளம்பியுள்ளதாகவும்,இந்திய
ஆதரவுடன் நேபாள ராணுவம் மாவோயிஸ்ட் அழிப்பு போரை
தொடுக்கும் அபாயம் நிலவுகிறது.அத்தகைய போர்த்தாக்குதல்
நிகழ்ந்தால் அதை எதிர்கொண்டு முறியடிக்கவும்,அந்நிய
தலையீடுகள் இன்றி நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்கள்
கூட்டுக் குடியரசை கட்டியமைக்க தயாராகி வருகிறார்கள்
என்று எழுதுகிறார்கள்.

முதல் விசயம் மீண்டும் ஆயுதப்போரில் தாங்கள் இறங்க
முடிவு செய்திருப்பதாக நேபாள மாவோயிஸ்ட்டுகள் எந்த
அறிவிப்பையும் வெளியிடவில்லை.இந்திய அமெரிக்க
தலையீட்டையும் விரிவாதிக்கத்தையும் எதிர்த்து போர்
செய்யக் கூடிய அளவுக்கு தங்களிடம் பலம் இருப்பதாக
மாவோயிஸ்ட்டுகள் கருதியிருந்தால் மக்கள் திரள்
நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொம்மை
அரசின் செயல்பாடுகளை முடக்குவதை நோக்கி நகர்ந்து
இருக்க மாட்டார்கள்.நேபாளத்தின் தேசிய பொருளாதார
கட்டுமானத்தை முழுக்க கைப்பற்ற விரும்பும் அந்நிய
சக்திகளுக்கு எதிராக,அவர்களின் உள்கட்டுமானங்கள்,
உற்பத்திசார் தொழிழ்களை தவிர்த்த முதலீடுகளை
தடுத்து நிறுத்துவதற்காக மக்கள் திரள் போராட்டங்கள்
மாவோயிஸ்டுகள் முன்னெடுத்திருக்கிறார்களே தவிர,
மரபுரீதியான புரட்சியை நோக்கி முன்னேறுகிறார்கள்
என்று கருத எந்த நியாயமும் இல்லை.மேலும்
உலகெங்கிலும் உள்ள புரட்சிகர ஜனநாயகசக்திகளை
மட்டுமே நேபாள மாவோயிஸ்ட்டுகள் நம்புவதாகவும்
கதை அளந்திருக்கிறார்கள்.விடுதலைப்புலிகள்
போல இந்திய ஓட்டுகட்சிகளிடம் உறவுகொண்டு
காரியங்களை சாதித்துக்கொள்ள மாவோயிஸ்டுகள்
விரும்பவில்லையாம்.

உலகெங்கிலும் உள்ள ஜனநாயக புரட்சிகர சக்திகளோடு
தொடர்பில் இருந்தாலும் அவைகளின் பலம் பற்றிய
மிகச் சரியான மதிப்பீட்டை கொண்டு இருப்பதாலேயே
நேபாள மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் ஆயுதங்களை
கைகளில் எடுக்காமல் இருக்கிறார்கள்.தவிர பாரதிய
ஜனதா கட்சித்தலைவர்களை நேபாள் மாவோயிஸ
கட்சித்தலைவர்கள் சந்தித்ததைப் பற்றி கமுக்கமா
மறைத்து எழுதும் இவர்கள் புலிகளுக்கு எதிராக
வனமத்தை கக்குவது ஏனோ? நொடிக்கொருதரம்
போலிக்கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் விளிக்கும்
சி.பி.ஐ. சி.பி.எம் கட்சிகளோடு கூடத்தான்
நேபாள மாவோயிஸ்டுகள் உறவுகொண்டு
இருக்கிறார்கள் என்பதை,சத்தமில்லாமல் கடந்து
செல்லும் இவர்களின் புரட்சிகர நேர்மை புல்லரிக்க
வைக்கிறது.நேபாள் தோழர்களின் முதுகுக்கு
பின்னால் ஒளிந்துகொண்டு,புரட்சிகர வேடம்
போடும் இவர்கள் மீண்டும் ஆயுதங்களை
எடுக்கும்படி தோழர்களுக்கு அறிவுரை சொல்லலாமே?
அதிகபட்சம் ஆறுமாதங்களுக்குள் அழிக்கப்பட்டுப்
விடுவார்கள்.சாதகமான நிலை இல்லாத நிலையில்
இங்கிருந்து,மரபுரீதியிலான போராட்டத்துக்கும்,
ஆயுதங்களை மீண்டும் கையில் எடுப்பதற்கும் நேபாள
தோழர்களை தூண்டுவதன் மூலம் அவர்களை அழிவை
நோக்கி தள்ள முயற்சிக்கிறார்கள் என்றே கருத
வேண்டி இருக்கிறது.

ஈழவிடுதலைப்போரின்,விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு
பிறகு மூன்று வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள்
இவர்கள்,தெரிந்தே சொல்லப்பட்ட பொய்கள்,தர்க்க
முரண்கள்,வன்மம் எல்லாம் நிறைந்து கிடந்த அந்த
குப்பைகளில் ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டு இருந்த
விசயத்தை படித்தபோது எதைக்கொண்டு சிரிப்பது
என்ற குழப்பமே வந்துவிட்டது.ஈழவிடுதலைப்போராளிகள்
தமிழகத்தில் செயல்பட துவங்கியபோது,அமைப்புகளோடு
இவர்கள் பேசி இந்திய விரிவாதிக்க நோக்கங்களை புரிய
வைக்க முயன்றார்களாம்,அதை போராளி இயக்கங்கள்
ஏற்காமல் போய்விட்டார்கள்,ஏனென்றால் நாங்கள் அந்த
நேரத்தில் பலம் இல்லாமல் இருந்தோம்,வளர்ச்சி
அடையாமல் இருந்தோம்,இப்போது வளர்ச்சி அடைந்து
விட்டோம் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தார்கள்.

தமிழகத்தைத் தாண்டி ஒரு கிளை கூட கட்ட இயலாத இவர்கள்,
வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டால் ஏதோ இந்தியாவின்
முப்பது மாநிலங்களும் முடங்கிப்போகும்,என்கிற அளவுக்கு
பில்டப் கொடுப்பதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.இந்த அதி
உன்னத புரட்சியாளர்களை நம்பாமல் போனதால்தான் புலிகள்
வீழந்துவிட்டார்களாம்.ஷ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே
என்று வடிவேலு பாணியில்தான் வசனம் பேச தோன்றுகிறது.
இந்தியாவிலோ,தமிழகத்திலோ ஆளும்தரப்புக்கு எதிராக
புரட்சி செய்யும்படியோ,போராடும்படியோ மக்களுக்கு
அறிவுரை சொல்வது,போராட்டத்தை ஏற்றுமதி செய்வது
எல்லாம் புலிகளின் வேலையாக இருக்க முடியாது என்கிற
அடிப்படை யதார்த்தம் கூட புரியாதவர்களிடம் பேசி என்ன
பலன்? ஒருவேளை மீண்டும் நேபாள மாவோயிஸ்டுகள்
ஆயுதபுரட்சியில்,இறங்கினால் இந்த உன்னத புரட்சியாளர்கள்
இந்தியாவில் இருந்து நேபாள அரசுக்கு செய்யப்படும் ஆயுத
உதவிகளை,தமிழகத்தில் முப்பது பேருடன் மாபெரும்
ஆர்பாட்டம் செய்து,இலங்கை அரசுக்கு செய்யப்பட்ட ராணுவ
உதவிகளை தடுத்தி நிறுத்தியதைப் போலவே தடுத்து
நிறுத்துவார்களா என்பதை சற்று பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.:)

எது பயங்கரவாதம் என்கிற தலைப்பில் 1986 ஆம் ஆண்டு
புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையை மறுபடி
வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த கட்டுரை பேசும்
அரசியலோடு நமக்குள்ள எல்லா முரண்பாடுகளையும்
பேச இது நேரமில்லை.அந்த நீண்ட கட்டுரையின் நடுவே
போகிற போக்கில் சொல்லப்பட்டு இருக்கிற விசயம்தான்
மிக முக்கியமாது.ரசிய சமூக ஏகாதிபத்தியம்
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துக்கொண்டு விடுதலை
இயக்கங்களுக்கெதிரான அரச பயங்கரவாத ராணுவத்
தாக்குதலை தொடுக்கிறது என்று எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து நேரடியாக ஆயுத
உதவிகளைப் பெற்றும்,அமெரிக்காவின் வழிகாட்டுதலின்
படியே போரிட்டும் வந்த ஆப்கன் முஜாகிதீன்களை
விடுதலைப்போராளிகள் என்று விளிக்க முடிகிற இந்த
புரட்சிக்காரர்களுக்கு புலிகள் பாஸிஸ்டுகளாகவும்,
ஏகாதிபத்திய சார்பாளர்களாகவும் தெரிகிற கொடுமையை
என்னவென்று சொல்வது? மார்க்சிய புத்தகங்களில்
எழுதப்பட்டுள்ள விசயங்களை,கால் புள்ளி,அரைப்
புள்ளி கூட மாற்றாமல் விடுதலைப்புலிகள் கடைபிடிக்க
வேண்டும் என்று கோருகிற இந்த புரட்சியாளர்களுக்கு,
மார்க்சிய வழிகாட்டல் எதுவும் இல்லாமல்,பிற்போக்கு
இஸ்லாமிய ஆட்சி முறைக்காக போராடுபவர்கள்
விடுதலை இயக்கங்களாக தெரிவதன் மர்மம் என்ன?
ஈழத்தின் இறையான்மையை விலைபேசாமலும்,எந்த
சமரசத்துக்கும் உடன்படாமலும்,தங்கள் மீதான
இனபடுகொலையை தடுத்து நிறுத்த அமெரிக்க,மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்
தமிழர்கள்,மற்றும் அந்தந்த நாட்டு மக்களின்,தமிழக
தமிழர்களின்,போராட்டங்களை புலிகள் நம்பியதையே
ஏகாதிபத்தியசார்பு என்று ஒப்பாரி வைத்தவர்களின்
முகத்திரை வழக்கம்போலவே கிழிந்துவிட்டது.

இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக சி.பி.எம்.
போன்ற கட்சிகள் பாலஸ்தீன மக்களுக்காக குரல்
கொடுப்பது நாம் அறிந்ததுதான்.ஒட்டு அரசியலுக்கு
வராத இவர்களுக்கு அப்பட்டமாக அமெரிக்கசார்பு
நிலையில் இருந்து போராடிய,ஆப்கன் இயக்கங்களை,
சரியான எந்த இலக்குமின்றி இன்றைக்கும் போராடிக்
கொண்டு இருக்கிற ஈராக்,ஆப்கானிஸ்தான் இயக்கங்களை
விடுதலை இயக்கங்களாக உயர்த்தி பிடிக்க வேண்டியதன்
பின்னனி விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய
விசயமாகவே தெரிகிறது.சரியான புரட்சிகர அரசியலின்
கீழோ,தமிழ்த்தேசிய விடுதலைக்கோரிக்கையின் கீழோ
முஸ்லிம்கள் இணைவதை தடுக்கும் முயற்சியாகவே
இவர்களின் செயல்பாடுகளை உணர முடிகிறது.
சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை,அதிகாரவர்க்க
ஆதரவு நிலைப்பாடுகளை புரட்சிகர முகமூடியின் கீழ்
மறைத்துக்கொள்ளும் இவர்கள்,தலித்தியத்தையும்,
அடையாள அரசியலையும் போகிற போக்கில்
ஏகாதிபத்தியத்தின் கள்ளக்குழந்தை என்று(தலித் முரசின்
வர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரையில்) எழுதுவதை
பார்ப்பன திமிராக பார்க்க முடியுமே தவிர,புரட்சிகர
நிலைப்பாடாக கருத முடியாது.அதே நேரம் தலித்
முரசின் வலிந்து திணிக்கப்பட்ட கருத்தையும் நாம்
கண்டிக்க வேண்டும்.முற்போக்கு அரசியலிலும்,
மக்கள் நலனிலும் விருப்பம் கொண்டவர்கள் இந்த
இணைய புரட்சியாளர்களிடம் இருந்து தங்களை
விடுவித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே சரியான
அரசியலை கைக்கொள்ள முடியும்.

9 comments:

பித்தன் said...

புலி குரு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.அதுதான் உங்கள் பிரச்சனையே.

ஆல் இன் ஆல் அழகுராஜா said...

kalakkal

Anonymous said...

இது புலி குருஅல்ல... புளி(மூட்டை ) குரு.

Anonymous said...

miga arumaiyaana vivaadhathai ulladakkiya edhirvinnai. mazhuppal,dhisai thiruppal illaamal ezhudhungal thozhargale.

ஸ்டாலின் குரு said...

உங்கள் பரிந்துரையை ஏற்க இயலாமல் இருக்கிறேன்
மிஸ்டர் பித்தன். :) எனினும் உங்கள் வழக்கமான
பாணியில் ஏதேனும் ஒரு முத்திரையை குத்தாமல்
பெயர் மாற்ற சொல்லி பரிந்துரை செய்கிற அளவுக்கு
நீங்கள் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

ஸ்டாலின் குரு said...

நன்றி அழகுராஜா

ஸ்டாலின் குரு said...

பெயர் அழகாக இல்லை என்னைப் போலவே,
கொஞ்சம் வேறு பெயரை பரிசீலியுங்கள்
அடுத்த அனானி நண்பா :)

ஸ்டாலின் குரு said...

இன்னொரு அனானி நண்பரின் வருகைக்கும்
கோரிக்கைக்கும் நன்றி

ராஜபக்சே பித்தன்களை ரவுண்டு கட்டுபவன் said...

//புலி குரு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.அதுதான் உங்கள் பிரச்சனையே.//

உண்மையில் பித்தனுக்கும் அவரது மனங்கவர்ந்த தோழர்களுக்கும்தான் புலிகள் பெரும் பிரச்சணையாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஈழத்திற்கு ஆதரவான, அரசியலோடு எழுதப்படும் பதிவுகளிலெல்லாம் ஆஜராகி தங்கள் புலியெதிர்ப்பு அரசியலை கடைவிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

Post a Comment