Tuesday, November 17, 2009

அ.மார்க்ஸ் என்னும் திருஉரு

இலங்கை அரசின் முகவர் அ.மார்க்ஸ்,ஈழம் தொடர்பாக
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு,பதில் அளிக்கும்
விதமாக அரசு,இறையாண்மை,ஆயுதப் போராட்டங்கள்,
என்றொரு நீண்ட கட்டுரையைத் தீட்டி சோபாசக்தியின்
இணையத்தில் வெளியிட்டு மங்களம் பாடிவிட்டு சென்று
நீண்ட நாட்களாகி விட்டது.அதற்கு ஒரு மறுப்போ அல்லது
விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அவர்
பேசியிருக்கிற தத்துவவியலாளர்கள்,காட்டியிருக்கிற
மேற்கோள்கள் அணைத்தையும் விளாவாரியாக உட்கார்ந்து
படித்து புரிந்துகொள்ளவே சில மாதங்கள் ஆகிவிடும் போல
இருக்கிறது.அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை
என்பதால் ஏதோ நமது சிற்றறிவுக்கு உகந்த வகையில்
ஒரு சிறு மறுப்பையாவது எழுதிவிட வேண்டும் என்கிற
ஆவல் தூண்டியதால் இந்த பதிவு.


தமிழில் நீதி,தர்மம்,போன்ற சொற்களை எதிர்மறைகளாக்க
அவைகளின் முன்னால் அ என்கிற உயிரெழுத்தைச் சேர்ப்பது
வழக்கம்.தனது பெயரை சுருக்கி எழுதும் விதமாக அ.மார்க்ஸ்
என்று எழுதுகிறாரா முன்னாள் பேராசிரியர்,இல்லை தான்
பேராசான் என்று அடைமொழியோடு மட்டுமே ஒரு காலத்தில்
குறித்து வந்த மார்க்சிய ஆசானுக்கு தான் எதிர்பாளனாக
மாறிவிட்டேன் என்பதை சங்கேதமாக குறிக்க அ.மார்க்ஸ்
என்று எழுதுகிராறா என்கிற சந்தேகம் நமக்கு எழும்பி பல
காலமாகிவிட்டது.அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரது
அந்த நீண்ட கட்டுரை அமைந்திருக்கிறது.துவக்கத்திலேயே அ.மார்க்ஸியத்தின் முத்திரையை நம்மால்
உடனடியாக கண்டுகொண்டு விட முடிகிறது.கடந்த முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழினத்துக்கு எதிராக சிங்கள
பேரினவாத அரசுகள் நடத்தி வரும் திட்டமிட்ட இனப்
படுகொலையின் உச்சமாக நடந்த இன அழிப்பை,
ராஜபக்ஸேவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான
வெறித்தாக்குதலாக மட்டுமே சித்தரிப்பதை அவரது
கவனகுறைவாகவே அல்லது நியாபக மறதியாகவோ
புரிந்துகொள்வது சாத்தியம்தானா?


இந்தியாவை தவிர்த்துவிட்டு ஐரோப்பிய நாடுகளின் வழியே
ஈழ அங்கீகாரத்தை பெறுவது என்கிற அரசியல் திசைவழிக்கு
புலிகள் நகர்ந்திருந்தது.தமிழகத்தில் உள்ள புலி
ஆதரவாளர்களினது மட்டுமல்ல,பெரும்பாலும் தமிழக
மக்களின் கோரிக்கை என்பதே இலங்கையில் புலிகளுக்கு
எதிரான போர் என்கிற பெயரில் நடத்தப்படும் இன அழிப்பு
நிறுத்தப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருந்ததை
மறைத்துவிட்டு,இந்தியா தமிழ் ஈழத்தை அமைத்து தர
வேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கோரியதாக சமீப
காலங்களில் பரவலாக முன்னிறுத்தப்படாத ஒரு
கோரிக்கையை தானாகவே முன்நிறுத்தி அதற்கு பதிலும்
சொல்லிக் கொள்கிறார் அ.மார்க்ஸ்.மற்றொரு நாட்டின்
இறையான்மையில் நாம் தலையிட முடியாது என்று
மத்திய அரசு கூறியதாகவும் அதன் மாநில அரசு
வழிமொழிந்ததாகவும் கூறும் அ.மார்க்ஸுக்கு கடந்த
ஒரு ஆண்டில் மட்டும் இலங்கையின் இறையான்மையை
தனது 12.000 கோடிக்கு மேற்பட்ட முதலீடுகள் மூலம்
இந்திய அரசு களவாடிக்கொண்டிருந்ததை
எப்படி மறந்து போகிறது.இந்திய அரசு இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய
போரில் தலையிடாததற்கு காரணங்கள் பல என்று
வெகு சுலபமாக முடித்துக்கொள்ளும் அ.மார்க்ஸுக்கு
இந்திய அரசு புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு
ஆதரவாக தலையிட்டது ஏன் என்பதை ஆராய்வதில்
உள்ள சிக்கல் நம்மால் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.
இனி இறையான்மை பற்றிய அவரது கதையாடலை
கவனிக்கலாம்.வாசிக்கத் துவங்கி இரண்டு பத்திகளுக்கு மேல் ஆகிவிட்டதே
இன்னும் சோவியத்கூட்டமைப்பு எதிரான கருத்து எங்கே
காணவில்லை என்று பார்த்தால்,சோவியத கூட்டமைப்பில்
இருந்த தேசிய இனங்களின்,அரசுகள் மட்டுமே
இறையான்மையற்ற தேசிய எல்லைகள் கொண்டநாடுகளாக
அமைந்திருந்தன என்று கூறி தனது முத்திரையை
பதித்திருந்தார்.காலாவதியாகிப்போன சோவியத் ஒன்றியத்தில்
அதிகாரமில்லாமல் வைக்கப்பட்டிருந்த நாடுகளின் மீதெல்லாம்
பதியும் அ.மார்க்ஸின் கருனைப்பார்வை,நவீன தேசங்களாக
மாறும் உரிமை மறுக்கப்பட்டு,அடிமை நிலையில்
வைக்கபட்டிருக்கும் இந்திய தேசிய இனங்களின் மீதெல்லாம்
என்று படுமோ? யாமறியோம் பராபரமே.இறையான்மை மறுக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய
நாடுகளின் உரிமைக்காக இன்று கூட குரல் கொடுக்கும்
அ.மார்க்ஸ் இலங்கையில் தனது இறையான்மைக்காக
போராடும் ஈழ தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக
உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதுதானே நியாயமாக
இருக்க முடியும்?


அரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக
மார்க்சியர்கள் காண்பர் என்று கூறிவிட்டு கம்பி நீட்டும் அ.
மார்க்ஸ்,ஒரு அரசின் இறையான்மையுடன் கூடிய அதிகாரம்
அதற்கு அளிக்கப்படும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தின் மூலம்
உருவாகிறது என்றும் இந்த அதிகாரத்தின் பின்புலம்
எதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் ஒரு
முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்.இந்த மக்கள் ஆதரவை
இழக்கும்போது அது தன் அதிகாரத்தை தக்க வைக்க
வன்முறைய நாடுகிறது என்கிறார்.


இந்த கருதுகோளை சற்று அலச வேண்டியிருக்கிறது.அரசு
என்பதுசமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின்
கருவி,மற்றும் சுரண்டுவோர்,சுரண்டப்படுவோர் என்று
வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில்
சுரண்டுவோரின் சார்பாக ஒடுக்குமுறை செலுத்தும்
நிறுவனம் என்கிற மார்க்ஸிய கருதுகோளை எந்த
ஆய்வுகளின் அடிப்படையில் தான் நிராகரித்தோம்
என்பதை வெளிப்படுத்தாத அ.மார்க்ஸ் கடைசில்,
தெரிந்தோ தெரியாமலோ மார்க்ஸின் வழியிலே
நிறக வேண்டி வந்துவிடுகிறது.வாக்களிப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் மக்களின்
பங்களிப்பை கோராத முதலாளித்துவ அரசுகளை,
குடியரசுகள் என்று விளித்து அவைகளுக்கு மக்கள் ஆதரவு
ஏதோ ஒரு விதத்தில் இருந்து ஆக வேண்டி இருக்கிறது
என்கிறார்.அது என்ன ஆதரவு? உழைக்கும் மக்கள்
தங்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களை சகித்துக்கொண்டு
கொடுக்கும் ஆதரவாக மட்டுமே அது இருக்கமுடியும்.
முதலாளித்துவ ஜனனாயக அரசுகளை புனிதப்படுத்தும்
தனது நோக்கத்துக்கு எதிராக சுரண்டலுக்கு எதிராக
மக்கள் எழுகையில்,அரசு வன்முறையை கையில்
எடுப்பதாகக் கூறி இறையான்மை கொண்ட அரசுகளின்
வர்க்க இயல்பை அம்பலப்படுத்த தானும்
துணைபோய்விடும் கவனக்குறைவை அ.மார்க்ஸ்
தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ))தங்களுக்கு தாங்களே இறையான்மையை எழுதிக்கொண்ட,
வழங்கிகொண்டமுதலாளித்து அரசுகள் மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதை கண்கானிக்க,உலகளாவிய மனித
உரிமை பிரகடனம்,ஹேக் உடன்பாடு, பன்னாட்டு மனித
உரிமை ஆணையம்.பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவை
உருவாக்கபட்டதையும் அதில் ஐ.நா உறுப்பு நாடுகள்
கையெழுத்திடுவது நிபந்தனையாக்கபடவில்லை என்றும்.
கையெழுத்திட்டபோதிலும் அவற்றை மீறுவதை
அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளாதாகவும்
கூறுகிறார் அ.மார்க்ஸ்


இந்த மனித உரிமை பிரகடனங்களை உருவாக்கிய நாடுகள்,
மற்றும் உருவாக்கியவர்கள் பற்றி இங்கே விரிவாக
பேசிக் கொண்டிருப்பது தேவை இல்லை என்பதால்
ஓஷோ வின் அடிப்படை மனித உரிமைகள்
என்கிற புத்தகத்தை பரிசீலிக்க கேட்டுக்கொண்டு
நகர்ந்து விடலாம்.அடுத்த இரண்டு மூன்று பத்திகளில் கொடுக்கப்பட்டிருக்கும்
அரசியல் உள்ளடக்கமற்ற தகவல்களின் பட்டியலைத்
தவிர்த்துவிட்டு,உலகமயம் ஏற்படுத்திய விளைவுகளாக
அ.மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் விசயங்களை
கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.


தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் வர்க்கப்போராட்டத்துக்கு
அணிதிரள்வதை தடுக்கும் வகையில்,மூன்றால் உலக
நாடுகளில் வணிகசுரண்டல் மூலம் தாங்கள் பெற்ற
லாபத்தில் ஒரு பகுதியை தங்கள் நாடுகளின் கடைநிலை
மக்களுக்கு அளிக்கும் மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தை
ஜனனாயகத்தை மேம்படுத்தும் செயலாக
அடையாளம் காண்பது எவ்வாறு சாத்தியம் என்பது
அ.மார்க்ஸுக்கு மட்டுமே வெளிச்சம்.மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளில்
குடியேறியுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்த நாடுகளில்
கடைநிலை வேலைகளில் உழன்று கொண்டிருப்பதே
யதார்த்தமாக இருக்க,மேற்கத்திய நாடுகளில் குடியேறிய
அணைத்து மக்களையும் வசதியானவர்களாகவும்,தூரதேசிய
உணர்வுக்கு ஆட்பட்டவர்களாகி பாசிச இயக்கங்களுக்கு ஆதரவு
தெரிவிப்பவர்களாகவும் அ.மார்க்ஸுக்கு கூறுவது நமக்கு
விளங்கவில்லை.ஒரு வேளை இலங்கை,இந்திய,அரசு
பாசிசத்துக்கு மறைமுகமான கருத்தியல் நியாயங்களை
வழங்கிக்கொண்டிருக்கும் தனது மேற்கத்திய நண்பர்களைப்
போலவே அணைவரையும் கருத்திக்கொண்டிருக்கிறாரா
என்னவோ?தங்கள் சுரண்டலுக்கு தடையாக இருக்கும் தேசிய இன
அடையாளங்களை ஏகாதிபத்திய நாடுகள் அழித்துக்
கொண்டிருப்பதை,பன்மைத்துவ தேசிய கட்டமைப்பாக
சித்தரித்து பாராட்டுகிற அ.மார்க்ஸ் எதற்காக தனக்கு
இடதுசாரி முகமூடியை மாட்டிக் கொள்ள வேண்டும்
என்பதும் நமக்கு புரியவில்லை.கடைசிவரை ஏகாதிபத்தியங்களுடன் சமரசமின்றி
போரிட்டுக்கொண்டிருந்தபுலிகளை தங்கள் வலதுசாரிய
வாழ்வியல் சூழலையும் தாண்டி ஆதரித்து நின்ற
புலம்பெயர் தமிழர்களை,இந்துதுவ பாசிச இயக்கங்களின்
ஆதரவாளர்களோடு அ.மார்க்ஸ் ஒப்பிடுவது
அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடித்தனமே
அல்லாமல் வேறென்ன?


அடுத்த பத்திகளில் இருந்து அ.மார்க்ஸ் கூற வரும்
விசயங்களை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.உலக நாடுகள் முதலீடு செய்வதற்கும்,வணிக சுரண்டலை
நிகழ்த்துவதற்க்கும் உரிய வகையில் அமைதியான சூழலை
உருவாக்கி கொடுக்கவும்,தோற்றுப் போன நாடாக தான்
ஆகி விடாமல் இருக்கவும் இலங்கை அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளை கூறிச் செல்லும் அ.மார்க்ஸ்
அவைகளை ஏன் வெரும் தகவல்கள் என்கிற
அளவிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டும்? அவரின்
நுன்னரசியல் ஆய்வு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில்
மட்டும்தான் கவனமெடுத்துக் கொள்ளும் போல.

வலுவான நாடுகளுக்கிடையே சிக்குன்ட சிறிய நாடுகள்
சர்வதேச சூழலைச் சரியாக கணக்கிலெடுத்துக்கொண்டு
காய்நகர்த்துவதன் மூலம் இறையான்மையை
காத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இலங்கையை ஓர்
எடுத்துகாட்டு என்று கூறும் அ.மார்க்ஸ் எந்த
இறையான்மை என்பதை கவனமாக தவிர்த்துக்
கொண்டது ஏனோ?


சர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர் என்பதை தனது
தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை அரசு
பயன்படுத்திகொண்டதையும்,தங்கள் அரசியல் பொருளாதார
நலன்களின் அடிப்படையில் உலகின் பெரும்பாலான நாடுகள்
இலங்கை அரசை ஆதரித்து நின்றதற்கு காரணமாக லக்‌ஷ்மன்
கதிர்காமர் கொலையை காட்டும் அ.மார்க்ஸின்
அதிமேதாவித்தனத்தை கண்டு புல் அரிப்பே
வந்துவிடுகிறது நமக்கு.


லக்‌ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொல்லாமல் இருந்திருந்தால்
மேற்கத்திய நாடுகள் புலிகளை தடை செய்திருக்காது என்று
சொல்லாமல் விட்டதையிட்டு மகிழ்ச்சி அடையலாம்.


போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,உள்ளக
சுயநிர்ணய உரிமை கோரிக்கையூடாகவும்,இடைக்கால
தன்னாட்சிகான வரைவை அளித்ததன் மூலம் தமிழ்
மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நேர்மையான
தீர்வை எட்டும் முயற்சியில் புலிகள் ஈடுபட்ட
காலத்திலேயே மேற்கத்திய நாடுகள் புலிகளை தடை
செய்தன என்பதைக் கூட அறியாத தற்குறிகள் என்று
தமிழர்களை கருதும் அ.மார்க்ஸுன் துணிவை
மெச்சத்தான் வேண்டும்.


தங்கள் ராணுவ.பொருளாதார,பிராந்திய நலன்களுக்காக
சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற
விசயத்தை தனது இனப்படுகொலை திட்டத்துக்கு சாதகமாக
இலங்கை அரசு பயன்படுத்தியதை அனுமதித்தும்,உதவிகள்
அளித்தும்,வழிநடத்திய மேற்கத்திய நாடுகளின் உண்மை
முகத்தை மறைத்து புலிகளை பலிகடாவாக்கும்
வேலையை மிக திறமையாகவே
செய்து முடிக்கிறார் அ.மார்க்ஸ்.

புதிய சூழல்கள் வெறுமனே இறையாண்மையுள்ள அரசுகளைப்
பலவீனப்படுத்திவிட்டது என்றோ,வெறுமனே வன்முறைக்
கருவி என்கிற வகையில் அரசுகள் மேலும் பலம்
அடைந்துவிட்டது என்று மட்டுமோ நாம் எளிமைப்படுத்திப்
புரிந்துகொள்ளக் கூடாது வெகு அக்கறையாக கூறும்
அ.மார்க்ஸ் அவர்களே


இனப்படுகொலை உள்ளிட்ட எத்தகைய அநீதிகளையும்
நிகழ்த்துவதன் மூலம் உலகமயமாக்கலுக்கு
துணைபோகும் முதலாளித்துவ அரசுகளை வேறு
எவ்வாறு புரிந்துகொள்வது?


குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உயிர்வாழும்
உரிமை உட்பட அணைத்தையும் பறித்துக்கொள்கிற
நெருக்கடி நிலை அறிவிக்கும் அரசுகளின் உரிமையை,
இறையாண்மையாக காணும்.அரச பயங்கரவாதத்தை
பாசிசத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு
ஏகாதிபத்திய அடிவருடி புலிகளை பாஸிஸ்டுகள்
என்று விமர்சிப்பதை காலத்தின் கொடுமை என்று
தள்ளி விட்டு நகர்ந்து விடுவது சாத்தியமதானா?

இங்கே நிச்சயமாக இவர்கள் முன்வைக்கும் கற்ப்பித
தலித்திய அடையாள போராட்டங்களையும்,அதன்
விளைவுகளையும் கூட நாம் மீள் பரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டியிருக்கிறது.


இந்திய இடதுசாரி இயக்கங்கள் தலித்திய அடையாளத்துக்கு
முக்கியத்துவம் கொடுப்பதிலும்,சாதி ஒழிப்பு
நடவடிக்கைகளில் போதிய அக்கறை இன்றி இருந்ததையோ
நாம் மறுப்பதற்கில்லை,அதன் விளைவாக ஒடுக்கப்பட்ட
தலித்துகள் தங்களுக்கான அடையாளத்தின் கீழ்
அணிதிரண்டதையும் அமைப்புகளாகி இருக்கின்ற சமூக
சட்டகத்துக்குள்ளேயே தங்களுக்கான
சில உரிமைகளை போராடி அடைந்ததையும் நாம் அறிவோம்.அ.மார்க்ஸே தனது தலித்தியம் பற்றிய கட்டுரை
ஒன்றில் ஆனந்த் டெல்டும்ப்டேயின் ஏகாதிபத்திய
எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்கிற நூலைக் குறிப்பிட்டு
விட்டு,ஏகாதிபத்திய சுரண்டல் தலித் மக்களை
மிக மோசமாக சுரண்டி வருவதை ஒப்புகொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெருமே ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்று இருந்து விடாமல் தகவல்
தொழில்நுட்பத்துறை போன்ற ஏகாதிபத்தியம்
கொடுக்கும் வாய்ப்புகளையும் தலித்துகள்
பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று
கூறியிருந்தார்.அதிலும் நமக்கு மாற்றுக்
கருத்துக்கள் இல்லை.ஆனால் அந்த அடையாள அரசியலை உயர்த்திப்
பிடித்து ஓட்டு அரசியலுக்கு சென்ற கட்சிகளின்
பிழைப்புவாத தலைமைத்துவங்கள்,மற்றும் அந்த
தலைமைத்துவங்களை சார்ந்து உருவான ஒரு
சிறியகூட்டம் இவைகளைத் தாண்டி,சாதிய
ஒடுக்குமுறையாலும் அரசின் ஏகாதிபத்திய
ஆதரவு பொருளாதார கொள்கைகளாலும்,சீரழிந்து
கொண்டிருக்கும் பெரும்பாலான தலித்துகளின்
அவலங்கள் பற்றி இவர்கள் பேசியதே இல்லை
என்பது ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது.
அவலங்களுக்கு உள்ளாகி இருக்கும் தலித்துகளின்
அடையாள ஒன்றினைவைப் பற்றி இவர்கள்
கூக்குரலிடுவது தலித்துகள் மத்தியில் இருக்கும்
பிழைப்புவாத சக்திகள் நலன்களை அடிப்படையாக
கொண்டே என்பதும்,உழைக்கும் தலித்துகளின்
முதுகில் குத்துவதே இவர்களின் உண்மையான
நோக்கம் என்பதும் உறுதிபடுத்தபடுகிறது.இருக்கிற சுரண்டல் அமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத்
தேடச் சொல்லும் அரசு சாரா நிறுவனங்களின்
ஏகாதிபத்திய அடிவருடி அரசியலோடு அ.மார்க்ஸியம்
ஒத்துப்போவது ஒன்றும் வியப்பானதல்ல.சாதிய
ஒடுக்குமுறைகளாலும் பிற்போக்குதனங்களாலும்
சிதைந்து கிடந்த இந்திய,தமிழ் சமூகங்களில்
தலித்துகளின் வாழ்நிலையில் ஆங்கிலேய
காலனி ஆதிக்கம் விளைவித்த சிறிய மாற்றங்களை,
இன்றைக்கு அடியோடு தலித்துகளின் வாழ்நிலையை
சிதைக்க முனையும் நவகாலனித்துவ சுரண்டலும்
கொடுக்கும் என்று தலித்துகளை நம்பவைத்து,வர்க்கப்
போராட்டத்தின் கிழ் அவர்கள் அணி திரள்வதை
தடுப்பதை நோக்கமாக கொண்ட சக்திகளை நாம்
அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.


இவர்களின் இந்துதுவ எதிர்ப்பு என்பதும் எவ்வாறு சாரமற்றுப்
போகிறது என்பதையும் நாம் சற்று கவனிக்க
வேண்டியிருக்கிறது.தொன்னூருகளுக்கு பிறகு இந்தியாவில்
தாராளமய பொருளாதாரகொள்கைகள் அறிமுகபடுதப்பட்டதன்
பின்னனியில் வைத்தே இந்துதுவ பாஸிச இயகங்களின்
எழுச்சியை காண வேண்டியிருக்கிறது.நாட்டில் ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் சுரண்டலால்
பாதிப்படையும் மக்களின் கோபத்தை மதரீதியிலான
மோதல்களுக்கு திருப்பி விடுவதன் மூலம்
ஏகாதிபத்தியங்கள் தங்கள் சுரண்டலை
தொல்லையின்றி நிகழ்த்த உதவி செய்வதாகத்தான்
இந்துதுவ பாசிச இயக்கங்களின் எழுச்சி நிகழ்ந்தது.
அத்தகைய போக்கு தங்களுக்கும் உதவியாக
அமையும் என்பதால் பார்ப்பன,பனியா இந்துதுவ
ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளாமல்
அனுமதித்துக்கொண்டிருக்கின்றன இன்று வரை.மொத்தத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்து இந்துத்துவ
எதிர்ப்பையும்,பார்ப்பன பனியா இந்திய அரச எதிர்ப்பில்
இருந்து தலித்தியதையும் பிரித்து பார்ப்பது அடிப்படையில்
சாத்தியமற்றது என்று ஆகி விட்ட நிலையில்
தலித்துகளை அரச பயங்கரவாததோடும்,பாசிசத்தோடும்
சமரசபடுத்த முயல்வதும் தலித்துகளின் மத்தியில்
பிழைப்புவாதிகளை ஊக்குவிப்பதுமே
அ.மார்க்ஸியத்தின் சாரமாக இருக்கிறது.


சே குவேராவை கட்டவிழ்த்த அ.மார்க்ஸை நாம்
கட்டவிழ்த்தால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான்
வர முடிகிறது.


முதலாளித்துவமா சோசலிசமா என்றால் முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமா தேசியமா என்றால் ஏகாதிபத்தியம்
இஸ்லாமியர்கள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பா
இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசமா என்றால்
இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசம் என்று
பதிலளிக்கும் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய
அடிவருடிதான் அ.மார்க்ஸ் என்பதை
புரிந்து கொள்ள முடிகிறது.
பின் குறிப்பு
இன்றைய இளைஞர்கள் எதையும் ஆழ்ந்து படிப்பதில்லை
என்றும்,விசயங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை
என்றெல்லாம் வருத்தபட்டிருந்தார் அ.மார்க்ஸ்
சத்தீஸ்கரில் பூணூல் போட்ட மாவோயிஸ்டுகளை
பார்த்தாக எழுதினாலும் நம்ப தயாராக இருக்கிற
தனது ரசிகர்ளை மட்டுமே தமிழ்க இளைஞர்களாக
கருத வேண்டாமென்று அவரை கேட்டுகொள்வோம்.

1 comment:

Anonymous said...

அருமையான அலசல் நண்பா

இருந்தாலும் ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத்
தவறி விட்டீர்கள்.அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மூன்று இலட்சம் மக்களை புலிகள் பணய கைதிகளாக
பிடித்து வைத்திருந்தலால்தான் அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகள்,ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக
அறிவிக்கவோ ராஜபக்ஸே மீது போர்க்குற்ற விசாரனை
நடத்தவோ முன்வரவில்லை என்று கூறியிருக்கிறார்
அ.மார்க்ஸ்.

தங்கள் பிராந்திய,ராணுவ,பொருளாதார நலன்களுக்காக
போர்க் குற்ற விசாரனை நடத்தப்படுவதை அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்காமல் இருப்பதை
மறைத்துவிட்டு,புலிகள் மீது பழி சுமத்தி தனது
ஏகாதிபத்திய விசுவாசத்தை அ.மா காட்டிகொள்வது
ஒரு புறம் இருக்கட்டும்.

ஈராக் ஆப்கானிஸ்தான் என்று முஸ்லிம்களை கொன்று
குவித்துக்கொண்டிருக்கிற அமெரிக்காவும்,அதன்
ஐரோப்பிய கூட்டாளிகளும் ஈழத் தமிழர்கள் மீது
இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டடதாக கூறாததால்
இவரும் இனப்படுகொலை நிகழ்ந்ததாக கூற மாட்டாராம்.

இவ்வளவு வெளிப்படையாக ஏகாதிபதியங்களின்
காலைக் கழுவிக் குடிக்கும் இவர்களை முஸ்லிம்கள்
தங்கள் நட்புச் சக்தியாக கருதி தங்கள் மேடைகளில்
ஏற்றிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
அதற்கு பதில் இவர்கள் ஜெயமோகனையே மேடை
ஏற்றலாம்.என்ன வேறுபாடு இருந்து விடப் போகிறது?

அதுதான் என்னவோ அ,மாவின் பாரிஸ் சீடர் சுகன் தனது
இணையத்தின் இணைப்பு தளங்களில் அ.மார்க்ஸையும்
ஜெயமோகனையும் அருகருகே வைத்து இருவருக்கும்
வேறுபாடுகள் இல்லை என்பதை சங்கேதமாக காட்டி
கொண்டிருக்கிறாரோ என்னவோ :)))


இவர்கள்தான் இலங்கை மற்றும் இந்திய முஸ்லிகளின்
தலித்துகளின் காவலர்களாம்.

காலக் கொடுமைடா சாமி

தலித்துகள் அல்லாத சோபாசக்தி,ஆதவன் தீட்சண்யா,சுகன்
போன்றவர்கள் பற்றியும் இவர்களின் லோக குரு அ.மார்க்ஸ்
பற்றியும் இனிமேலாவது தலித்துகளும் முஸ்லிகளும்
எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Post a Comment