Monday, August 17, 2009

நெருக்கடி நிலை உலகம்


ஒற்றைமைய அரசாக,உலகத்தின் போலிஸ்காரனாக கடந்த
இரு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த,
சோவியத் யூனியனின் சிதைவுக்கு பிறகு தான் உருவாக்கிய
இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற புனைவு எதிரியோடு
மோதல் என்கிற பெயரில் தனது பொருளாதார வல்லாதிக்க
திட்டங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்த அமெரிக்கா
இன்றைக்கு சர்வதேச பயஙகரவாதத்துக்கு எதிரான போர்
என்பதை தான் கைவிட்டுருப்பதாக அறிவித்திருக்கிறது.


சீன,ரஸ்ய கூட்டோடு உருவாகிவிட்ட உண்மையான
எதிரிகளுடனான தனது போரை ஒருமுகப்படுத்துவதில்
இனி தனது காலத்தை செலவிட வேண்டியிருப்பதால்
இயல்பாகவே இந்த முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கும்
அமெரிக்காவின் நிலையை ஒபாமாவின் முற்போக்கு
முகமாக சித்தரிக்கும் கருத்துக்களும் பரப்பட்டுக்
கொண்டிருக்கும் நிலையில் சாத்தியமான அளவுக்கு
ராணுவ,அரசியல் ரீதியாக இந்த இரு முகாம்களின்
பலம்,பலவீனம்,பற்றிய ஒரு ஆய்வை முன்வைப்பது
இடதுசாரிய,மற்றும் தேசிய விடுதலைப்போராட்டங்களை
முன்னெடுக்கும் குழுக்களுக்கு அவசியமாகி இருக்கிறது.


உலகில் அணு ஆயுத ஏவுகணை தாக்குதல்களிலிருந்தும்
பாதுகாப்பு பெற்ற இரண்டு நாடுகளாக அமெரிக்காவும்,
ரஸ்யாவும் மட்டுமே இருந்த சூழலில் அமெரிக்காவின்
அணு ஏவுகனை தாக்குதல் தடுப்பு பொறியமைவையும்
தாண்டி தாக்கக் கூடிய டோபோல் ஆர் எஸ் எம் 12
என்கிற ஏவுகணையை ரஸ்யா 2007 ஆம் ஆண்டு
வெற்றிகரமான சோதனை செய்து தனது ராணுவத்தில்
சேர்த்தில் இருந்தே அமெரிக்காவின் பலம் குறைய
துவங்கிவிட்டதை வழக்கம்போலவே பெரும்பாலும்
அமெரிக்க சார்புநிலையில் இருந்த ஊடகங்கள்
தொடர்ந்து இருட்டடிப்பு செய்துகொண்டே இருந்தன.


முன்னால் சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை
தனது ஏகாதிபத்திய பொருளாதார வளையத்துக்குள்
கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்
கொண்டிருந்த அமெரிக்காவுக்கு,தனது பதிலடியை
ஜார்ஜியாவின் மீதான தனது அதிரடி யுத்தம் மூலமும்
அஃப்காசியா,தெற்கு ஒசாட்டியா,ஆகிய சிறிய தேசிய
இனங்களை தேசங்களாக அங்கீகரித்ததன் மூலமாகவும்
வழங்கியது ரஸ்யா.வழக்கமான தனது பாணியில்
ஆயுத மோதலில் அமெரிக்கா இறங்குவதை தவிர்த்துக்
கொண்டத்ற்கு பின்னால் ரஸ்யாவின் ராணுவ மேலாதிக்க
வலிமையே இருந்தது என்பது மறுக்க முடியாத
உண்மையாகும்.


முன்னால் சோவியத நாடுகள்,தனது ஐரோப்பிய நட்பு
நாடுகள் வழியே போலந்தில் தனது அணு ஆயுத
ஏவுகணைளை நிறுவுவதன் மூலம் ரஸ்யாவை
முற்றுகையில் வைக்கும் திட்டத்தை அமெரிக்கா தள்ளி
வைக்கும் நிலைக்கு சென்றிருப்பதுவரை இந்த நிகழ்சிப்
போக்கே தொடர்கிறது.


உலக வர்த்தக கழகத்தில் தனது செயல்பாடுகளை தடை
செய்துகொண்டிருந்த அமெரிக்கா தனது கரங்களை மேலும்
நீட்டி முன்னால் சோவியத் ஒன்றிய நாடுகளின் மீதும் தனது
ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயன்றதற்கு எதிராக,தனது
வலிமையை சேகரித்துக்கொண்டு ஏகாதிபத்திய பாய்ச்சலுக்கு
தயாராக இருந்த ரஸ்யா கொடுத்த பதிலடியே ஜார்ஜிய
யுத்தத்தின் முலம் வெளிப்பட்டது.தற்போது ஏற்பட்டிருக்கும்
உலக பொருளாதார நெருக்கடி ரஸ்யாவின் மீது மிக அதிக
தாக்கத்தை விளைவிப்பதை,அமெரிக்கா உலக வர்த்தக
கழகத்தில் ரஸ்யாவின் செயல்பாடுகளுக்கு விதிதிருந்த
கட்டுப்பாடுகளே சாத்தியமாக்கின என்பதும் ஒரு
முரண்நகையான விசயம்.


மறுபுறத்தில் சத்தமில்லாமல் தனது ராணுவ,பொருளாதார
வலிமையை சீனா அதிகரித்துக்கொண்டு ஒரு ஏகாதிபத்திய
வல்லரசாக ஆசியாவில் வளர்ந்துகொண்டிருந்தையும் தடுக்க
இயலாத நிலையிலேயே அமெரிக்கா இருந்தது மட்டுமல்லாமல்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் சீனாவுக்கு
எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் தனது தள்ளாடிக்
கொண்டிருக்கிற பொருளாதாரத்தை மேலும் கீழே தள்ளி
விடும் என்பதை உணர்ந்திருந்ததாலேயே,ஈழப் பிரச்சனையில்
சீனாவின் நடவடிக்கைகள் தனது அரசியல் நலனுக்கு
குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும்
எந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுக்க இயலாத
நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருந்தது.

அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கே
தொடர்ந்துகொண்டிருக்கிறது என்கிற கணிப்பில் புலிகள்
இருந்ததும்,முற்றுமுழுதாக அமெரிக்க அடிமைகளாக
இந்திய ஆளும்வர்க்கத்தை கருதியதுமே புலிகள் அரசியல்
ரீதியாக தவறான முடிவுகளுக்கு சென்றதற்கு காரணமாக
அமைந்துவிட்டன.



சமீபத்திய தனது பயணத்தின் போது,ராணுவ ஆயுதங்கள்
விற்பனை தொடர்பான இறுதி பயன்பாடு கண்காணிப்பு
ஒப்பந்தம(EUMA) மற்றும்,இந்திய அணு உலைகளுக்கு
தேவையான செறிவூட்டல் மற்றும் மறுபயன்பாட்டு
தொழில்நுட்ப்பங்களை (ENR)உலக அணு தொழில்நுட்பம்
வழங்கும் நாடுகள் இந்தியாவுக்கு வழங்குவதை தடுக்கும்
முயற்சிகள் மூலம் தனது முகாமிலேயே இந்தியாவை
தக்கவைக்க ஹிலாரி கிளிண்டன் முயற்சி செய்திருந்தாலும்
வழுவிழந்துவிட்ட அமெரிக்க கூட்டணிகளிடமிருந்து
தனது பங்கை அதிகரித்துக்கொள்வது இந்திய முதலாளித்துவ
வர்க்கத்துக்கு குறையும் என்பதால் ஓரளவு சுயசார்புடனும்
பெருமளவு ரஸ்ய,சீன முகாம்களை சார்ந்திருப்பதன்
வாயிலாகவும் மட்டுமே தனது செல்வ வளத்தை பெருக்க
இந்திய முதலாளித்துவ வர்க்கம் முயலும்.



ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தோடு உறவுகளைப் பேண
இந்திய அதிகாரவர்க்க மேற்கொணட நடவடிகைகளையும்
(BRIC) என்று அழைக்கபடும் ப்ரேசில்,ரசியா,சீனா,
இந்தியா நாடுகளின் கூட்டமைப்பை,இந்திய அதிகார வர்க்கம்
பெருமளவில் வரவற்றதையும் பார்க்கையில் நம்மால்
இந்த முடிவுக்கே வந்து சேரவே முடிகிறது.


மேலும் சில விடயங்களையும் நாம் கவனிக்க வேண்டி
உள்ளது.பொதுவாகவே அமெரிக்காவின் பொருளாதாரம்
என்பது போரியல் பொருளாதாரம்தான்,அந்த வகையில்
தனது நீண்டகால எதிரியான ஈரான் மீதான போரின் மூலம்
தனது பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் முயற்சியில்
அமெரிக்கா இறங்குவதை தடுத்துக்கொண்டிருப்பது ரஸ்ய,சீன
நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமைதான்
என்பது உணர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை
ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும்
சீனாவின் எண்ணத்தை நன்றாக அறிந்தாலும் கூட வடகொரியா
மீது தனது வழக்கமான பாணியில் ராணுவ நடவடிக்கை
எடுப்பதை அமெரிக்கா மேற்கொள்ள இயலாத நிலையும்
வடகொரியாவை தாஜா செய்கிற நிலைக்கு அமெரிக்கா
இறங்கியிருப்பதும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய
விசயங்களாகும்.



ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அமெரிக்க அல்லது
அமெரிக்க முகாமை சேர்ந்த நாடுகளின் ராணுவ,
பொருளாதார வலிமை குறைந்திருக்கின்றது என்பதே
யதார்த்தப்பூர்வமான உண்மையாகும்.இந்த
முகாமுக்கு உள்ளே உள்ள நாடுகளுக்குள் இருக்கும்
முரண்பாடுகளை பற்றி விரிவாக பேச வேண்டிய
தேவை இருந்தாலும் அது தற்போதைய நிலையில
அவசியமானதாக இல்லை.



மற்றொருபுறம் சீன,ரசிய முகாம்களின் வலிமை
அதிகரித்திருக்கிறது.அணு ஆயுதங்களை குவித்து
வைத்திருக்கும் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின்
பொருளாதார சுரண்டலுக்கும்,ஆதிக்கப் போட்டிகளுக்கும்
இடையில் மனித சமூகத்தின் இருத்தலே கேள்விக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளது.


இந்த முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகளை
சரியாக கையாண்டு ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு
உள்ளாக்கப்பட்டிருக்கும் மனித குலத்திற்கு
விடுதலை தேடிக்கொடுக்கும் பணியில் இடதுசாரிய
அமைப்புகளும்,தேசிய விடுதலை இயக்கங்களும்
சார்ந்திருக்க சோசலிசம் சார்ந்த மக்கள் நல அரசுகள்
என்கிற வடிவத்தில் நிலவிக்கொண்டிருக்கிற கியூபா,
வெனிசுலா,நிகராகுவா,பொலிவியா போன்ற லத்தீன்
அமெரிக்க நாடுகளே உள்ளன.


புலிகள் மேற்குலக நாடுகளுடன் கடைபிடித்தது
பெயரளவிலான சமரசமே என்பதை இந்த லத்தீன்
அமெரிக்க நாடுகளின் அரசுகளுக்கு கொண்டு
செல்வதில் கவனம் செலுத்தாத ஈழ ஆதரவாளர்கள்
இன்றைக்கு இந்த நாடுகள் மேல் மேற்கொள்ளபடும்
வலதுசாரிய தாக்குதல்களுக்கு தாங்களும் துணை
போய்க்கொண்டிருப்பது வெட்க்ககேடான விசயமாகும்.


நுகர்வோராக வாழ்வது அல்லது மனித உயிரிகளாக வாழ்வது
என்கிற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி நம்மை
கேட்கின்ற முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுக்கு நாம்
என்ன பதில் தரப்போகிறோம் ?

2 comments:

blackpages said...

நல்ல அலசல் நண்பரே

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியபோது
தனது நாட்டில் இருந்த இஸ்ரேலின் தூதரகத்தை மூடி இஸ்ரேளிய
தூதரை உடனடியாக வெனிசுலா அதிபர் சாவேஸ் வெளியேற்றியதை
இன்றைக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளை விமர்சனம் என்கிற பெயரில்
குறை கூற புகுந்திருக்கிற பலரும் மறந்து அல்லது மறைத்துவிடுவது
அவர்களின் விமர்சன ஆக்கபூர்வமானதாக இல்லையோ என்கிற்
சந்தேகத்தையே கிளப்புகிறது.

Anonymous said...

மீண்டும் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பின்னூட்டம்

Post a Comment