Monday, August 24, 2009

சான்டினிஸ்டுகளும் விடுதலைப்புலிகளும் பகுதி - 1

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும்
தமிழர்களும்,தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு சக்திகளும்
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு முடங்கி
போய்விடுவார்கள் என்று கருதியவர்களுக்கு இன்று
ஏமாற்றமே பதிலாக கிடைத்திருக்கிறது.சிங்கள அரசின்
தடுப்பு முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி
மிக மோசமான மனித உரிமை மீறல்களின் மத்தியில்
இருத்தப்பட்டிருக்கும் மக்களை அவர்களின் சொந்த
வாழ்விடங்களில் மீள் குடியேற்ற உலக நாடுகளை
வலியுறுத்துவது.மகிந்த ராஜபக்ஸேவையும் அவரது
கும்பலை சேர்ந்தவர்களையும் போர்க்குற்றவாளிகளாக
அறிவிக்க கோருவது என்று தங்கள் செயல்பாடுகளை ஈழ
ஆதரவாளர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


இது ஒருபுறம் இருந்தாலும் ஈழவிடுதலைக் கோரிக்கை எழக்
காரணமான சூழல் இன்றுவரை மாற்றப்படாத நிலையில்
விடுதலைப்புலிகளின் மேலான விமர்சனம் என்கிற பேரில்
விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையே சிதைக்க
முனைபவர்களால் இணையத்தள விவாத மேடைகள்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.இதுபோன்ற
கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு நாம் தொடர்ந்த
எதிர்வினைகள் செய்துகொண்டிருப்பது மட்டுமே
கருத்தியல் ரீதியாக அவர்களை அம்பலப்படுத்த உதவும்.


இந்த விமர்சனப் போக்குகளில் பின்நவீனத்துவ,இடதுசாரிய
அடையாளங்களை முன்நிருத்தி பேசுபவர்களை மட்டும் நாம்
கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.


மாவட்டத்துக்கு பத்து பேர் படிக்கிற இதழை வெளியிட்டு
முப்பது பேருடன் மாபெரும் ஆர்பாட்டங்களை நடத்தி
இந்திய அதிகாரவர்க்கத்தை நடுங்க வைக்கும் தங்களை
சார்ந்திராமல் இந்திய ஆளும்வர்க்கத்தோடு புலிகள்
சமரசப்போக்கை கடைபிடித்ததால்தான் இந்த பேரழிவு
நிகழ்ந்ததாக கூறும் மக்கள கலை இலக்கிய கழகத்தினர்
அவர்களில் முக்கியமானவர்கள்.இதில் குறிப்பிடத்தக்க
விசயம் வேறு ஒன்றும் உள்ளது.இந்த இந்திய புரட்சிக்
கட்சிக்கு தமிழ்நாட்டை தாண்டி வேறு மாநிலங்களில்
ஒரு கிளை கூட இலலை என்பதுதான் அது.


தமிழகத்தில் மட்டும் கட்சி கட்ட முப்பத்தைந்து ஆண்டுகள்
ஆகியிருக்கிறது இவர்களுக்கு.இந்தியா முழுவதும் கட்சி
கட்ட எப்படியும் இவர்களுக்கு ஒரு முன்னூறு ஆண்டுகள்
தேவைப்படும்.இவர்கள் இந்தியாவில் புரட்சி நடத்தி
ஆட்சியை பிடிக்கும்வரை புலிகள் தங்கள் போராட்டத்தை
தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்களா
தெரியவில்லை.


ஒன்றே கால் கோடி சிங்களர்களில் ஒற்றைப் பெயரைக்
கூறி, அந்த நபருடன் ஐக்கிய முன்னனி கட்டி சிங்கள
பாஸிஸ்டுகளை எதிர்த்துப் போராடும் வாய்ப்பை புலிகள்
தவற விட்டதால்தான்இந்த பேரழிவு நிகழ்ந்ததாக பஜனை
பாடும் இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் என்றே
கருத வேண்டியிருக்கிறது.


இந்திய அமைதிப்படை ஈழத்தைவிட்டு வெளியேறுகையில்
நாற்பது இலட்சம் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து
கொண்டிருந்தார்கள்என்று கூறியது.இன்றைக்கு முப்பது
இலட்சம் பேராவதுஇருப்பார்களா தெரியவில்லை.தமிழ்
மக்களை படுகொலை செய்வது,உள்நாட்டுக்குள்ளும்
வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயரச் செய்வது,
சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலங்களை
ஆக்கிரமிப்பது என்ற தனது நீண்ட கால இன அழிப்பு
திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் சிங்கள அரசு,புலிகள் இல்லாமல்
இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் என்று ஒரு
இனம் இருந்தது என்பதற்கான அடையாளம் கூட
இல்லாது அழித்திருக்கும் என்பது போன்ற விசயங்கள்
இவர்களுக்கு பரிசீலிக்க தேவையற்ற விசயங்களாக
தெரிவது நம்மால் இன்றுவரை புரிந்துகொள்ள
இயலாததாவே உள்ளது.


ஈழத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் சந்தையை
கைப்பற்றவும் கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடத்திக்
கொண்டிருந்த இந்தியாவை களத்தில் எதிர்த்து நின்றது
புலிகள்தான் என்பது போன்ற எளிய உண்மையைக் கூட
காணச் சக்தியற்ற இவர்களின் கண்களுக்கு புலிகள் இந்திய ஆளும்வர்க்கத்துடன் கடைபிடித்த பெயரளவிலான
சமரசப்போக்கை காணும்போது மட்டும் நெற்றிக்கண்ணும்
திறந்துகொள்கிற மர்மம் இன்றுவரை விளங்கவில்லை நமக்கு.


இவர்களைப் பொறுத்தவரை இயங்கியல் என்பது மனிதனில்
இருந்து குரங்கு தோன்ற வேண்டும் என்பதுதான் போல.நாம்
அறிந்தவரை குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணமித்தான்.
ஒரு தாழ்நிலை வடிவத்திலிருந்துதான் உயர்நிலைக்கு
முன்னேற்றம் நிகழ முடியுமே ஒழியே துவக்கத்திலேயே எந்த
தவறுகளும் பிழைகளும் இல்லாமல் ஒரு அமைப்பு
கட்டப்படுவது எந்த விதத்திலும் சாத்தியமில்லை.இது
புலிகளுக்கும் பொருந்தும்.


சாத்தியமான அளவுக்கு தர்க்கரீதியா அலசி ஆராய்ந்தாலும்
தற்போதைய பின்னடைவுக்கு புலிகளின் அரசியல்ரீதியான
மிகச் சில தவறுகளை மட்டுமே பொறுப்பாக்க முடியாது
என்கிற முடிவுக்குத்தான் நம்மால் வர முடிகிறது.


மார்க்சிய முன்னோடிகளின் எழுத்துக்களை அகராதியாக
பயன்படுத்துவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பைபிளாக கருதுபவர்களாக மட்டுமே இவர்களை கருதிக்
கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.சர்வதேச நாடுகள்
குறிப்பாக இந்தியா ஈழத்தின் இனபடுகொலையில் வகித்த
பாத்திரத்தை எளிமைப்படுத்துகிற போக்குக்கு உதவி
செய்கிற எழுத்துக்களுக்கு இடதுசாரிய சாயம் பூச
முயலுகிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.


அ.மார்க்ஸ் மற்றும் ஷோபாசக்தி,சுகன் போன்றவர்களை
ஏற்க்கனவே அம்பலப்படுத்தி எழுதி விட்டதால் அது பற்றி
அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.ஆனாலும்
மார்க்சிய அரிச்சுவடி நூல்களை கூட புரட்டிப் பார்க்காத
இவர்களின் ரசிகர்கள் சோசலிசத்தின் மேல் திடீர் காதல்
கொண்டு புலிகளை விமர்சிக்க புகுந்திருப்பதைப் பார்க்க
வேடிக்கையாக இருக்கிறது.மனநெருக்கடிக்கு உள்ளான
மார்க்சியர்களின் எழுத்துக்களுக்கு நேரடியாகவே இவர்கள்
தாவிவிட்டதை இவர்கள் எழுத்துகளே நமக்கு காட்டிக்
கொடுக்கின்றன.


விளிம்பு,மையம்,பெருங்கதையாடல்களை நிராகரித்து விளிம்பு
நிலையினரின் அடையாள அரசியலை உயர்த்திப் பிடிப்பது
என்று பேசும் இவர்கள்,திருநங்கைகள்,உடல் ஊனமுற்றோர்,
தலித்திய அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் என்று சகல
விளிம்புநிலையினரும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பை
தடுத்து நிறுத்தும்படி கோரியும்,அந்த குரல்களை எல்லாம்
புறங்கையால் தள்ளிவிட்ட பாசிச இந்திய அரச கட்டமைப்பு
பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள்.?


தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றான நிகராகுவாவில்
அமெரிக்க கைப்பாவையாக ஆட்சியில் இருந்த
அனஸ்டாசியோ சோமோசாவுக்கு எதிராக வீரம்மிக்க
கொரில்லா போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்ற சான்டினிஸ்டாக்களின் ஆயுத போராட்டதோடு
விடுதலைப்புலிகளை ஒப்பிடுவதன் மூலம் நாம்
ஈழ விடுதலைப் போரை புரிந்துகொள்ள முயலலாம்.


மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலைப் புரட்சிக்கு
மார்க்சிய லெனினிய கட்சி கட்டுவதா அல்லது கொரில்லா
ராணுவ அமைப்பை கட்டுவதா என்கிற கேள்விக்கு புலிகள்
கொரில்லா அமைப்பைத் தேர்ந்தெடுத்தன் நியாயம் புரிந்து
கொள்ளத்தக்கதே.கட்சிகள் தலைமைதாங்கி முன்னெடுத்த
ஆயுத போராட்ட நடவடிக்கைளின் மூலம் அரசு அமைத்த
ரஸ்ய,சீன,வியட்நாமிய,நாடுகளில் இன்றைக்கு
முதலாளித்துவம் முற்றாக மீட்டமைக்கபட்டுள்ள நிலையில்
கொரில்லா அமைப்பாக துவங்கிய கியூபாவில் மட்டுமே
இன்றைக்கு சோசலிசம் சார்ந்த அரசு நிலவிக்
கொண்டிருக்கிறது.


சமீபத்தில் கீற்று இணையத்தில் புலிகளுக்கு ஆதரவான
கட்டுரை மீது எதிர்வினையாற்றிய நண்பர் கூறிய கருத்து
ஒன்றில் புலிகளும்,இந்திய மாவோயிஸ்டுகளும்
போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களை
தள்ளி வைக்கும் குட்டிமுதலாளித்துவ மனபான்மையில்
செயல்படுவதாக கூறி இருந்தார்.


அதற்கு பதில் அளிக்கும் முன் கொரில்லா யுத்தம் பற்றி
என்னும் தனது நூலில் சேகுவேரா சொல்லியிருக்கும்
கருத்தைப் பற்றி பார்ப்போம்.


அரசமைப்பு சார்ந்த சட்டத்தன்மை கொண்ட,முதலாளித்துவ
சுதந்திரங்களை பேணும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு
அரசுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்ட வழிவகைகள்
முற்றிலும் தீராத நிலையில் புரட்சிகர இயக்கம் ஆயுதப்
போராட்டத்தை தொடங்கக் கூடாது.இத்தகைய நிலையில்
கொரில்லா இயக்கம் வளர முடியாது.


அரசியல்ரீதியான போராடங்களை சிங்கள அரசு
மூர்க்கத்தனமாக ஒடுக்கிய பிறகே புலிகள் ஆயுதங்களை
எடுத்தனர்.சட்டபூர்வ போராட்ட முறைகளில் மக்கள்
நம்பிக்கை இழந்த இடங்களில் மட்டுமே இந்திய
மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்தி இருக்கின்றனர்.நீண்டகால மக்கள் யுத்தப்பாதை என்ற மாவோவின்
சிந்தனைக்கு ஒத்திசைவாக அரசு ஒடுக்குமுறை நிலவும்
பிற்பட்ட பகுதிகளில் தளங்கள் அமைத்து நகர்புறங்களை
நோக்கி முன்னேற துவங்கையில் அரசியல் போராட்ட
வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது,பிறகு ஆயுத
அரசியல் போராட்ட வடிவங்களை தக்க விதத்தில்
பயன்படுத்தி எதிரியை ஆட்சியில் இருந்து அகற்றுவது
என்கிற் வழிமுறைகளை கடைபிடிக்கும் இந்திய
மாவோயிஸ்ட்டுகளை குட்டிமுதலாளித்துவவாதிகள்
என்று எவ்வாறு கூற முடியும்.நல்வாய்ப்பாக
மாவோவையே குட்டிமுதலாளித்துவவாதி என்று
சொல்லாமல் போனதையிட்டு மகிழ்சி அடையலாம்

2 comments:

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள்! இவ்வகையான கிழியல்கள் தேவை!

Anonymous said...

Please keep it up.

Good article.

- Kiri

Post a Comment