Tuesday, August 18, 2009

வன்னியில் நடந்தது என்ன?

வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் என்று பிரபாகரனே
சொல்வது போல நிகழ்சிகள் அமைந்துவிட்டதாகக் கூறி தனது
அவதூறுகளும் தர்க்க முரண்பாடுகளும் கொண்ட வன்னியில்
என்ன நடந்தது என்கிற கட்டுரையை நிறைவு செய்திருக்கிறது
இம்மாத காலச்சுவடு இதழ்.சரியாகவே சொல்லியிருக்கிறார்
பிரபாகரன் என்றே நமக்கும் தோன்றுகிறது.வென்றவர்கள்
எழுதுகிற சரித்திரத்தில் உண்மைகள் இருக்காது என்பதை
மிகத் தெளிவாக புரிய வைத்திருக்கிறது காலச்சுவடு.


நடைபெற்ற போரில் இருதரப்பும் செய்த செயல்களைப் பற்றிய
உண்மைகள் சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைசாலைகளில்
அடைக்கப்பட்டிருக்கும் மக்களிடமே தேங்கிக் கிடக்கின்றன,
இது வரையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை
படுகொலை செய்து,ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை நாட்டை
விட்டு வெளியேற வைத்திருக்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களையே மிக சாதாரணமாக சுட்டுக்
கொல்லும் அரசின் சிறைகளில் இருக்கும் மக்கள் வெள்ளை
வேன் பற்றிய பயம் இல்லாமல் இருப்பது அசாத்தியமானது.


உண்மைகளை அந்த மக்களிடம் இருந்து பெறுவது இன்றைய
சூழலில் எந்த விதத்திலும் சாத்தியமில்லாத நிலையில்
சிங்கள் அரசின் போர்க்குற்றங்களை பூசி மெழுகி முகாமில்
இருந்து எழுதப்பட்டதாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிற
கடிதம் கேலிக்குறியதாக இருக்கிறது.நாம் அறிந்தவரை
புலிகளை ஆதரித்து கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள்
தடுப்பு முகாம்களில் ஒட்டபட்ட தகவல்கள்தான் வருகின்றன.இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள்,சிங்கள அரசின் மூலம்
நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நியாயம் வழங்கப்படுவது எந்த
விதத்திலும் சாத்தியமற்றதாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில்
உலக தமிழர்களின் மனதில் புலிகளை பற்றிய அவதூறுகளை
பரப்புவதன் மூலம் புலிகள் விதைத்துச் சென்றுள்ள விடுதலை
வேட்கையை ஒழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்குவது
மிக இயல்பான ஒன்றுதான்.அந்த வகையிலேயே காலச்சுவடு
தனது வேலையை செய்திருக்கிறது.அந்த நீண்ட கட்டுரையில்
காணப்படும் தர்க்க முரண்பாடுகளை மட்டும் நாம் வெளிக்
கொண்டு வர முயலலாம்.


விடுதலைப்புலிகளிடமிருந்து பிரதேசங்களை பகுதி பகுதியாக
கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,இந்தியாவின்
மின் திட்டத்துக்கு தேவையான சம்பூர் பகுதியை ஆக்கிரமிக்கும்
நோக்கில் போரை துவக்கியதே சிங்கள ராணுவம்தான் என்கிற
உண்மையை மறைத்து விடுதலைப்புலிகளே முதலில் போரைத்
துவக்கியதாக அப்பட்டமான பொய்யை மிக இயல்பாக கூறியே
தனது பத்தியை ஆரம்பித்திருக்கிறார் முகாமில் இருப்பதாகக்
கூறப்படும் அந்த முகமில்லாத பத்தியாளர்.


புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதை அப்போது
வன்னியில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும்,
ஐ.நா உள்ளிட்டசர்வதேச நிறுவனங்களும் கண்டு
கொள்ளாததால் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை
தீவிரப்படுத்தியதாகவும்,ஆனால் மக்கள் தாமாகவே வந்து
இணைகின்றனர் என்று முரண்பட்ட தகவவல்களை
புலிகள் பரப்பியதாகவும் அடுத்த குற்றசாட்டு.போர்நிறுத்தக்
காலத்தில் புலிகளுக்கு எதிராக சிங்கள அரசின் கரங்களை
வலிமைபடுத்தும் விதமாக,அமெரிக்கா தலைமையில்
முன்னெடுக்கபட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற
முழக்கத்தின் கீழ் புலிகளை தடைசெய்த மேற்குலக நாடுகள்,
புலிகளைமேலும் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்த இந்த
கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரத்தை ஏன் பயன்படுத்திக்
கொள்ளாமல் இருந்தார்கள் என்பது குறித்து பத்தியாளர்
என்ன பதிலை வைத்திருக்கிறார்.?


சிங்கள படையினரின் தாக்குதல் உத்திகளால் புலிகள் திணற
ஆரம்பித்ததாக கூறுகிற பத்தியாளரின் உற்சாகம் நமக்கு
புரிந்தாலும்,சிங்கள அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த
தமிழர்களில் புத்திளம் பருவத்தினரில் இருந்து இளைஞர்கள்
வரை இருபதாயிரம் பேரை சிங்கள ராணுவம் கடத்திசென்று
கொலை செய்ததான தகவல்கள் தான் பெரும்பாலும் நமக்கு
கிடைக்கின்றன,மேலும் ஒரு பதினைந்தாயிரம் பேர் சரணடைந்து
தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசே
அறிவித்திருக்கிறது.நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகளை
களமுனைக்கு அனுப்பாமல் புதிதாக இணைக்கபட்டவர்களை
போருக்கு அனுப்பி புலிகள் பலிகொடுத்தார்கள் என்கிற
பத்தியாளரின் அடுத்த குற்றசாட்டும் காலாவதியாகிவிடுகிறது.


ஆயுதம் ஏந்தாத இளைஞர்களையும் இளம்பெண்களையும்
ஆயிரக் கணக்கில் பிடித்துச் சென்று சிங்கள ராணுவம்
படுகொலை செய்த செயலை மூடி மறைத்து அந்த
உயிரிழப்புகளை புலிகளின் போர் முனைச் சாவுகளாக
சித்தரிப்பதன் மூலம் சிங்கள ராணுவத்தை பாதுகாக்கும்
பத்தியாளரின் நோக்கம்தான் இந்த நீண்ட கட்டுரை
முழுவதும் இழையோடுகிறது.

புலிகளின் ஆயுதங்களை மௌனித்து சரணடையும் முடிவுக்கு
புதிதாக படையணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின்
உயிர்களும் முக்கிய காரணமாக அமைந்தன என்பதை மிக
சுலபமாக மறைத்துவிட்டு புலிகள் மீது அவதூறுகளை அடுக்கிக்
கொண்டு செல்லும் அந்த முகமிலி புலிகளுக்கும் மக்களுக்கும்
மோதல்கள் நிகழ்ந்ததாக கூறுவது நம்பதகுந்ததாக இல்லை.


சிங்கள படையினர் நெருங்க நெருங்க மக்களிடம் அச்சத்தை
பரப்பும் விதமாக புலிகள் பரப்புரையை துவக்கியதாகவும்
சிங்கள் வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட போரிட்டு
மடிவதே மேல்,உயிரினும் மேலானது நாடு,எங்கள் குலத்தமிழ்
பெண்களே உங்கள் கற்பு சிங்களுக்கென்ன பரிசா என்றெல்லாம்
கூறி மக்கள் மத்தியில் கலவரத்தை புலிகள் கிளப்பியதாகவும் 

 எழுதும் பத்தியாளருக்கு இந்த கூற்றுகள் எல்லாம் புலிகளால்
புனையப்பட்ட பொய்கள் என்று தோன்றுகிறதா?

சிங்கள படைகள் கடந்த முப்பதாண்டுகளாக தமிழ் மக்களை
கொன்று வருவதும்,தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்ப்படுத்தி வருவதும் உலகத்துக்கே தெரிந்த விடயங்கள்.
தமிழ் இளைஞர்கள் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று

சிங்கள ராணுவத்திடம் கோத்தபையா ராஜபக்ஸேவே
அறிவித்தது கூட புலிகளால் பரப்பட்ட பொய் என்று
சொல்லாமல் விட்டாரே நம் முகமிலி அதற்காக
சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்
மாவீரர்கள் குடும்பங்கள் என்று பாராமல் ஆள்பிடிப்பில் புலிகள்
இறங்கியதை அடுத்து மக்கள் புலிகளை ஏசத்தொடங்கியதாக
அடுத்த குற்றச்சாட்டு,பிரபாகரனின் மகனும்,மகளும் கூட
அவ்வாறுதான் பிடிக்கப்பட்டார்களா தெரியவில்லை.தங்கள்
மக்களுக்காக மேலும் மேலும் இழக்க மாவீரர் குடும்பங்கள்
முன்வந்ததையே நிகழ்வுகள் காட்டுகிறது.

புதுக்குடியிருப்பை சிங்கள ராணுவம் நெருங்க ஆரம்பித்த
உடன் மக்களை புலிகள் கவசமாக பயன்படுத்தியதாக அடுத்த
குற்றசாட்டு,இது போன்ற குற்ற்ச்சாட்டை சுமத்துகிறவர்களுக்கு
நாம் முன்வைக்க வேண்டிய கேள்வி ஒன்றும் உள்ளது.1995
ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்கள ராணுவம்
முன்னேற ஆரம்பித்தபோது ஐந்து இலட்சம் மக்கள்

புலிகளோடு இடம் பெயர்ந்தார்களே அவர்களையும் புலிகள்
பணயக் கைதிகளாக கூட்டிச் சென்றார்கள் என்று சொல்லப்
போகிறீர்களா?

இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில் கிளிநொச்சியில் போர்
உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் புலிகள்
சீருடைகள் இல்லாமலேயே காணப்பட்டார்கள்,மேலும் சில
பதிவுகளில் சீருடையில் இருந்த நபர்கள் மக்களைத் தடுத்து
திருப்பி அனுப்புவதையும் காண முடிந்தது.இதன் மூலம் புலிகள்
பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை தனது கேடயமாக
சிங்கள ராணுவம் பயன்படுத்த துவங்கியது என்கிற முடிவுக்கு
வருவதில் பெரிய சிரமங்கள் இல்லை.புலிகள் பகுதிகளில் இருந்து கடைசிவரை மக்கள் உயிரைக்
காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த டாக்டர்கள் இந்த

கட்டுரையை நபருக்கு பொய்யர்களாக தெரிவது
ஆச்சரியமில்லை என்பதால் அதை தவிர்த்துவிட்டு
அவரின் மற்ற முரண்பாடுகளை அலச முயலலாம்.

வெளியேறும் குறுகிய தொகையினரான மக்களை மனித
கேடயங்களாக சிங்கள ராணுவம் பயன்படுத்துவதையும்,
கணக்கு வழக்கின்றி மக்களை கொல்லத்துவங்கியதையும்
அடுத்தே மாவீரர்கள் குடும்பங்களையும் தங்கள்
ஆதரவாளர்களையும் தவிர்த்த மக்களை இலட்சக்கணக்கில்
புலிகள் வெளியேற்றினர் என்கிற முடிவுக்கு வர முடிகிறது.


300 போர் வீரர்கள் என்கிற ஆங்கில திரைப்படத்தின்
தமிழாக்கத்தை தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு
போட்டுக் காண்பித்து தனது முடிவு இப்படி இருக்கும்
என்று பிரபாகரன் சொல்லியதாக கூறுகிறார் நம் முகமிலி.
புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களிடயே நிகழ்ந்த
ஒரு விசயத்தை இந்த நபர் எப்படி அறிந்தார் என்கிற
கேள்வி எழுகிறது.


மக்களை சந்திக்க தயாராக இல்லாத பிரபாகரன் தனது
இயக்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்தை போட்டுக்
காட்டி தனது முடிவை கூறியதை பக்கத்தில் இருந்து
பார்த்தது போல கூறுவது ஒரு சராசரி நபருக்கு எவ்வாறு
சாத்தியமானது என்கிற கேள்விக்கு கிடைகும் பதில்
போதும் பிரபாகரன் மக்களோடு கொண்டிருந்த
உறவுகளைக் காட்ட.


சிங்கள ராணுவத்தின் மிகமோசமான புதுக்குடியிருப்பு
மருத்துவமணை மீதான தாக்குதலை புலிகள் மீது சிங்கள
ராணுவம் நடத்திய எதிர்த்தாக்குதல் என்று சொல்லும்
ஈனத்தனமான செயலையும் எந்த கூச்ச நாச்சமுமில்லலாமல்
செய்யும் முகமிலி அமெரிக்காவால் வழங்கப்பட்ட உளவு
விமானம் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலை
கொண்டிருந்ததை பதிவு செய்த காட்சிகளை வெளியிட்டு
தனது தரப்பை அரசு நியாயப்படுத்திக்கொள்வதை எது

தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் அளிப்பாரா?

சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை மேற்குலகம்
எழுப்ப ஆரம்பித்த காலத்தில் மருத்துவமணையை தங்கள்
தளமாக புலிகள் பயன்படுத்துவது பற்றிய காட்சிபதிவுகள்
சிங்கள் அரசுக்கு கொடுக்கும் அரசியல்ரீதியான பலன்கள்
அபரிமிதமாக இருக்க வாய்ப்பிருந்தும் ஏன் சிங்கள அரசு
அது போன்ற செயலில் ஈடுபடவில்லை என்கிற
கேள்விக்கு இந்த பத்தியாளரின் பதில் என்ன?


மக்களின் மரணங்கள் அதிகரித்தால் மட்டுமே இந்தியாவும்
ஐ.நா சபையும் தலையிட்டு ஏதாவது நடவடிக்கை
எடுப்பார்கள் என்று கருதி சிங்கள ராணுவத்தை கோபமூட்டும்
வகையில் தாக்குதல் நடத்தியதோடு புலிகள் தாங்களும்
மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்ததாக அடுத்த
குற்றச்சாட்டு.அமைதிப்படை என்கிற பெயரில் சென்று
ஆறாயிரம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இந்திய அரசு
மக்களின் உயிரிழப்புகளை கருத்தில் எடுத்து தான்
நடத்திய யுத்தத்தை நிறுத்திக்கொள்ளும் என்று புலிகள்
அல்ல ஒரு சராசரி அரசியல் விழிப்புணர்வு உள்ள மனிதன்
கூட கருத மாட்டான் என்பதை மிக வசதியாக மறந்து
போவது இந்த முகமிலிக்கு மட்டுமே சாத்தியம்.


பாதுகாப்பு வளையம் என்று அறிவித்துவிட்டு அந்த
பகுதிக்கு வந்த மக்களை இலக்கு வைத்தே பெருமளவில்
தாக்குதல்நடத்தி தனது இனபடுகொலையை தீவிரப்படுத்தியது
சிங்களஅரசு என்பதை வசதியாக மறந்துவிடுகிற நம்
முகமிலிக்கு மக்களை புலிகள் பணயக் கைதிகளாக
வைத்திருந்ததாக தோன்றாமல் போனால்தான் ஆச்சரியம்.


மக்களின் உளச்சோர்வையும் பேரவலத்தையும் நீக்கும் விதமாக
புலிகளின் முன்னனித் தளபதிகள்,பிரிகேடியர் தீபன்,
ஆதவன்,விதுசா,துர்க்கா,மணிவண்ணன்,கேனல்
சேரலாதன்,கேனல் ராகேஸ் உட்பட பலருடன் புலிகள்
முன்னெடுத்த தீவிர எதிர்த்தாக்குதல் புலிகளின் வரலாற்றில்
பெரும் தோல்வியாகி பிரபாகரனை நிலையகுலைய வைத்தாக
கூறும் முகமிலி வசதியாக மறைத்துவிட்ட விசயத்தை நாம்
கவனிக்க வேண்டிஉள்ளது.


ஆனையிறவில் தங்கள் முற்றுகைக்குள் இருந்த இருபது
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினரை
கொன்றொழிக்கிற வாய்ப்பு இருந்தும் உச்சபச்ச
மனிதாபிமானத்துடன் அவர்களை உயிரோடு வெளியேற
அனுமதித்தன் மூலம் தங்கள் அறவுணர்வையும் மனித
உயிர்களுக்கு மதிப்பளிக்கும் மாண்பையும் வெளிப்படுத்திய
புலிகளுக்கு எதிராக,இந்தியாவால் கையளிக்கப்பட்ட ரசாயன
ஆயுதங்களை பயன்படுத்தியே சிங்கள ராணுவம் எந்த
போரியல் அறமும் இல்லாமல் அந்த வெற்றியை பெற்றது
என்பது நம் முகமிலிக்கு மறந்து போனதில் ஆச்சரியமில்லை.


மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை தனது கட்டுரையின் போக்கில்
வெளிப்படுத்திச் செல்லும் முகமிலி சொல்லியிருக்கும் கருத்து
ஒன்று நம்மை புல்லரிக்க வைக்கிறது.புலிகளின் ஜனனாயக
உள்ளடக்கமற்ற போராட்டத்தின் காரணமாகவே புலிகளை
மேற்குலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையாம்,ஈராக்,
ஆப்கானிஸ்தான் என்று ஈவு இரக்கமற்ற படுகொலைளை
நடத்திக்கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள் புலிகளின்
ஜனனாயக மறுப்பின் காரணமாகவே தலையிடவில்லை என்று
முகமிலி சொல்வதை கேட்கையில் எதைக்கொண்டு சிரிப்பது
என்று தெரியவில்லை.


தமிழகத்தில் முத்துக்குமாருக்கு பிறகும்,போர் உச்சடைந்தபோது
ஐரோப்பிய நாடுகளிலும்,அரசியல்வாதிகளில் தங்கி இராமல்
மக்கள் போராட்டங்களை கட்டமைப்பதிலேயே புலிகளும்
ஈழ ஆதரவாளர்களும் இறங்கினார்கள் என்பது வழக்கம்

போலவே நம் முகமிலிக்கு மறந்து போய்விட்டது நமக்கு
வியப்பைக் கொடுக்கவில்லை.

இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாக சில விசயங்களை
தொகுத்து சொல்லலாம்.

முதலாவது கடந்த இரண்டு தாசாப்தங்களாக மூன்றாந்தர
அரசியல் தலைவர்களையே கண்டிருந்த உலகத்தமிழர்கள்
மத்தியில் வீரத்தையும் அறத்தையும் நேர்மையையும்
கொண்டிருந்த ஒரு தலைமையும் அவரின் அமைப்பும்
மக்கள் மனங்களில் விதைத்துச் சென்ற பெருமித
உணர்வுகளை களைவது.

அரசியலற்ற ராணுவ அமைப்பாக புலிகளை சித்தரிப்பதன்
மூலம் புலிகள் முன்னெடுத்த ஏகாதிபத்திய எதிர்ப்புபோரை
சிறுமைபடுத்துவது புலிகளின் பின்னடைவைக் காட்டி
தேசிய இன விடுதலைக் கோரிகைகளுக்கான
போராட்டங்களின் நியாயத்தை நிராகரிப்பது.


சிங்கள ராணுவம் நிகழ்த்திய ஆயுதமற்ற இளைஞர்கள்,
இளம் பெண்கள்,மற்றும் மக்களின் படுகொலைகளை
மூடி மறைப்பது.


ஐரோப்பிய நாடுகள்,இந்தியா,அமெரிக்கா,பாகிஸ்தான்,
சீனா,ஜப்பான், ரஸ்யா, என்று தங்களுக்குள்
முரண்பாடுகள் கொண்ட நாடுகளாக சித்தரிக்கப்பட்டவைகள்
அணைத்தும் அணிசேர்ந்து நிகழ்த்திய இனபடுகொலையின்
கோரத்தை புலிகளின் அரசியல் ரீதியான சில தவறுகள் மீது
சுமத்துவதன் மூலம் இந்த முதலாளித்துவ நாடுகளின் குற்றம்
பேசுபொருளாவதை தடுப்பது ஆகியவைகளே

ஒரு நேர்மையான அரசியல் விமர்சனத்துக்கு உதாரணமாக
இன ஒடுக்கலும் விடுதலைப்போராட்டமும் என்கிற நூலில்
தோழர் இமயவரம்பனின் வார்த்தைகளைக் கிழே தருகிறேன்.


இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய
ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே
அதன்இரு தரப்பினரதும் செயல்பாடுகளையும்
நிலைப்பாடுகளையும்நாம் விமர்சிக்க முடியும்.ஜனனாயகம்.
மனித உரிமைகள் கோட்பாடுகளை ஒரு யுத்த சூழலில்
எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது.
ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும்
ஏற்காததும் தேசிய இனபிரச்சனைபற்றி அவரது மதிப்பீடு
சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.விடுதலைபுலிகளின்
நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக்
கூடாது என்ற கருத்து நியாயமற்றது.அது போலவே,
எவரும் விடுதலைப்புலிகளது அரசியலை நிராகரிப்பதால்
அவர்களைமுற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும்
நியாயமற்றது.


வடக்கு கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை
நாம்கருத்திற் கொள்ள வேண்டும்,அரச பயங்கரவாதத்தையும்
அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கரவாதத்தையும்
ஒரே விதமாக கணிப்பதன் ஆபத்தை நாம் உணர வேண்டும்.தேசிய இனபிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில்
அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம்
நினைவிற் கொள்ள வேண்டும்.இதன் பின்னனியிலேயே
விடுதலை புலிகளது ஜனனாயக,மனித உரிமை மீறல்களையும்
அரசாங்கத்தின் மனித மீறல்களையும் நாம் ஒப்பிட
வேண்டியுள்ளது.வன்முறை அரசியல் தற்கொலை படைகள்,
அரசியற் கொலைகள் போன்றவற்றை அவை நிகழும் சூழலுக்கு
அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றை
சாத்தியமாக்கியது மட்டுமின்றி அவசியமாக்கியதுமான ஒரு
தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரண
கர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.


எந்த வித அடிப்படை நேர்மையும் இல்லாத,தர்க்க
முரண்பாடுகளால் நிரம்பியிருக்கும் இந்த கட்டுரை
காலச்சுவடின் பார்ப்பனியத்தை நாம் மீண்டும்
புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பை நமக்கு
அளித்திருக்கிறது.

இந்த கட்டுரையில் இருக்கும் தர்க்க முரண்களையும்,
முதலாளித்துவ உலகை நக்கிப் பிழைக்கும் அவல
வாழ்வில் நாடுகள்,இனங்கள்,தேசம்,தேசியங்கள்
கடந்து இணைந்து நிற்கிற மனித விரோத
கும்பல்களையும் அடையாளம் காண்கிற வேளையில்
அவர்களை எதிர்த்து நின்று வெல்வோம் என்பதிலும்
நம்பிக்கை கொள்வோம்.

5 comments:

MURUGHES said...

அருமையான தகவல் தொகுப்பு நண்பரே.

வாழ்த்துக்கள்.

!!! வாழ்க தமிழ் !!!

!!! வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். வெல்க தமிழீழம் !!!


வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

Anonymous said...

sakothara

nalla pathivu , thodarthu elluthugal.

Anonymous said...

good article. keep it up.

Anonymous said...

its a great work..... this is a very good answer to the kaalachchuvadu and some kinds of paarpaans..... mr.adhiyamaan did u read this.....

Anonymous said...

arumaiyana pathivu thozhar...

Post a Comment