Saturday, July 4, 2009

புலிகள்.புரட்சி.புத்திஜீவிகள்.


புலிகள்.புரட்சி.புத்திஜீவிகள்.
மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் அவலங்களையும், பெண் உடல் மீதான காலம் காலமான ஆணிய தாக்குதல் போரின் ஊடாக எட்டும் அதிபயங்கர வக்கிரத்தையும், சிறுவர்கள்,பெண்கள்,முதியோர்கள்.தாயின் சிசுவில் இருக்கும் சிசு கூட பீரங்கி குண்டுகளால் பிளக்கப்படும் ஈழ மண்ணின் அவலம் தமிழக மண்ணில் எழுப்பியிருக்கும் உணர்வுபூர்வமான மனித நேயத்தையும்,வெவேறு நிலைகளில் வெளிப்படும் அதன் வடிவங்களையும் கணக்கில் கொள்ளாத, அல்லது முற்றாகவே புறக்கனிக்கிற, உணர்வுகளே இல்லாத தமிழக மேட்டிமைத்தனத்தின் அறிவுஜீவித்தனத்தின் இயல்பை இந்த மே மாத உயிரெழுத்து இதழில் தோழர் எஸ் வி ராஜதுரை அவர்கள் எழுதியிருக்கும் தமிழ் ஈழம் பற்றிய கட்டுரையினூடாக நாம் பரிசீலிக்க முயலலாம்.
புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களாலும்,இந்தியா மற்றும் தமிழகத்தில் வாழும் தமிழர்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் என்கிற ஈழ பிரச்சனையில் ஒபாமாவின் தலையீட்டை கோருகிற விண்ணப்பத்தில் கையெழுத்திடாமலும், அதை மின்னஞ்சல் வழியாக தனக்கும்,தன்னை ஒத்த கருத்துடையவர்களுக்கும், அனுப்புபவர்கள் மீது விமர்சனத்தை மேற்கொள்வதன் மூலம் தங்கள் ஏகாதிபத்திய எதிர்புணர்வை தக்க வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறும் எஸ்,வி,ஆர்.அவர்களின் கட்டுரை,
தமிழகத்தில்,ஈழ பிரச்சனையை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கும் ஒட்டு கட்சிகளின் மீதான விமர்சனமாக,திமுக,மற்றும்,அதிமுக, ஆகிய கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகளின், அவர்களின்,நிலைப்பாடுகளை,முரண்பாடுகளை வெளிக்கொணர்வதாக தொடங்கி,அதன் போக்கில், சி.பி.எம்.சி.பி.அய்.ஆகிய கட்சிகள் பற்றிய மார்க்சிய ரீதியிலான விமர்சனத்தில், அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை அப்படியே கீழு தருகிறேன்.

''மாவோவின் தலைமையில் சீனா மாபெரும் புரட்சிகர மாற்றங்களை அடைந்து வந்தபோது,மாவோவின் தலைமையை, அவரது புரட்சிகர கருத்துக்களை விமர்சித்து வந்தவைதான் சிபிஎம்,சிபிஅய்,கட்சிகள்,சிபிஎம் இன் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த பசவபுன்னையா,மாவோவிற்கு இயங்கியல் என்பதே தெரியாது என்று கூறும் மகத்தான கட்டுரை ஒன்றையும் எழுதினார். மாவோ காலத்தில் அதனுடைய அயல் உறவுக் கொள்கைகள் அணைத்தும் சோசலிச தன்மை வாய்ந்தவையாக இருந்தன என்று கூற முடியாது, உலகம் முழுவதிலும் முதலாளிய கட்டமைப்பு இருந்த சூழலில், அந்த கட்டமைப்புக்குள் சில சமரசங்களை செய்துகொண்டுதான் சீனா தனது நாட்டில் சோசலித்தை உருவாக்க வேண்டியிருந்தது ....... ''

என்று தொடரும் இந்த விமர்சனத்தில் இயல்பாக ஒரு கேள்வி எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லை, உலகம் முழுவதிலும் இருக்கும் முதலாளிய கட்டமைப்பை பகைத்துக்கொண்டு சோசலிசத்தை உருவாக்க இயலாத நிலையில்,மாவோவின் செஞ்சீனம் செய்துகொண்ட சமரசங்களை புரிந்துகொள்ளும் எஸ்,வி,ஆர், அவர்களால்,எவ்வாறு அதே நிலையை எதிர்கொண்டு தங்கள் தேசிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முனையும் விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள இயலாமல் போனது என்று நமக்கு புரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இன விடுதலையை அடிபடையாக கொண்ட போராட்டங்களின் முக்கியத்துவத்தையும், அதன் முற்போக்கு அம்சங்களையும் முற்றாக புறக்கணிக்கும் அலட்சிய மனப்பாங்குதான் இதற்கு காரணம் என்று கருதலாமா?

இரண்டு தேசிய இனங்களோ அல்லது,பல் தேசிய இனங்களோ ஒரு அரச எல்லைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பெயரளவிலான ஜனநாயத்தை கொண்ட ஒரு அரசு,ஏகாதிபத்தியங்களுக்கு தனது மண்ணையும்,மக்களையும்,அடிமைகளாக்க முயற்சி செய்கையில், இறையாண்மையை தாரைவார்க்க முனைகையில்,அதை எதிர்த்து தனது தேசிய இன இறையாண்மைக்கான போராட்டத்ததை முன்னெடுக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை கோரிக்கை என்பது அடிப்படையிலேயே புரட்சிகரமானது என்பது இயங்கியலை நன்கு அறிந்த தோழர் எஸ்.வி,ஆர் அவர்களால் கூட அவதானிக்கப்பட முடியாததாக போய்விட்டது வருத்தம் அளிக்கிறது.

மேலும் தங்கள் மக்களின் மீது நிகழ்த்தப்படும் இத்தனை கொடுமைகளையும்,அவலங்களையும் தாண்டி, பெரும்பாலான சிங்கள உழைக்கும் வர்க்கத்தின் சமூக,அரசியல்,விடுதலைக்கான போராட்டத்தின் சுமையையும், அந்த சிங்கள மக்களுகானதானதாகவும், இல்லாத அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிதனத்தால் பாசிச தன்மையை அடைந்துவிட்ட இலங்கை அரசை எதிர்பதன் மூலம், தங்கள் தோளில் தூக்கி சுமக்கும் விடுதலை புலிகள்,உலகின் மிக சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாது அர்பணிப்பு மிக்க போராட்டத்தின் மூலம் நிருபித்துக்கொண்டு விட்டார்கள்.


இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது இலங்கையில்?

புலிகளையும் ஈழ விடுதலை போரையும் காரணமாக காட்டி,சிங்கள பகுதிகளின் வளங்களையும், பிராந்தியங்களையும், மேற்கு உலகு,அமெரிக்க,இந்திய,ஜப்பான், சீன ஏகாதிபத்தியங்களுக்கு திறந்து விடும் வேலையை இலங்கை அரசு செய்துகொண்டிருக்கும் நிலையில்,ஈழ தேசியத்தின் இறையாண்மையை முன்னிறுத்தி நடத்தப்படும் தமிழ் ஈழ விடுதலை போராட்டம் என்பது, அதன் இயல்பிலேயே இந்த ஏகாதிபத்திய சார்பு நிலையை மேற்கொள்ளும் நடவடிக்கையை விடுதலை புலிகளுக்கு மறுத்துவிட்டதை ஏன் நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை.

மட்டுமல்லாமல் ஒரு தேசிய விடுதலை போராளிகள்,தங்களோடு சமரத்துக்கு வந்தாலும் தங்கள் பொருளாதார ராணுவ நலன்களை பாதுகாக்கும் கூலிக்காரர்களாக அவர்களை பயன்படுத்த முடியாது என்பதையும்,விடுதலை பெற்ற தேசத்து மக்கள் நல் வாழ்வுக்கான செயல்பாடுகளும், தேச பொருளாதார கட்டமைப்புக்கான பணிகளும் மட்டுமே அவர்களால் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றப்படும் என்பதையும் புரிந்துகொண்ட உலக வல்லாதிக்கங்கள் இந்த நிமிடம்வரை பெரும் மனித அவலத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் பசியோடும்,படுகாயங்களோடும், போராடிகொண்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய கூட முன்வராமல் இழுத்து அடிப்பதன் மூலம் ஈழ விடுதலை போர் மீண்டும் எழக்கூடாது என்கிற அவர்களின் உள்நோக்கம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்,அமெரிக்க,இந்திய,அரசுகள் ஆகியவைகளோடு அரசியல் ரீதியாக இந்த நாடுகளின் அங்கீகாரத்தை ஈழ தேசத்துக்கு பெற வேண்டும் என்பதற்காக விடுதலை புலிகள் மேற்கொண்ட நகர்வுகளை மட்டுமே முன்னெடுத்து அவர்களை ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துபவர்கள் வசதியாக மறந்துவிட்ட விஷயம் ஒன்று உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழு ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசுக்கு அளித்துவந்த ஆயுத,ராணுவ,பொருளாதார,உதவிகள் எல்லாம் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்டபோது, இந்த ஏகாதிபத்தியங்களோடு சமரசம் செய்துகொண்டு ஈழ மண்ணையும்,மக்களையும்,தேசிய விடுதலை போரையும் கைவிடாமல் செயல் மூலம் அவர்கள் தாங்கள் ஈழ மக்களுக்கு கடைசிவரை நேர்மையாக இருப்போம் என்பதை காட்டிவிட்டார்கள்.


புலிகளையும்,நேபாள மாவோயிஸ்டுகளையும் ஒப்பிடுதன் மூலம் நாம் நமது புரிதலை மேலும் விரிவாக்கி கொள்ள முடியும்.

பத்தாண்டு கால ஆயுத போராட்டத்துக்கு பிறகு அரசியல் அணிதிரட்டல் உத்தியாக முதலாளித்துவ ஜனநாயக அரசில் பங்கேற்க முன்வந்தபோது,அந்நிய முதலீடுகள் உடனான உறவுகள் பற்றி மாவோயிஸ்ட் தலைவர் பாபுராம் பட்ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது மிக சரியான ஒரு கருத்தை அவர் முன்வைத்தார்.

நூறாண்டுகால பழமைத்தனத்திலிருந்து, பின்தங்கிய உற்பத்தி உறவுகளிலிருந்து எங்கள் சமூகத்தை மீட்க அந்நிய முதலீடுகள் தொழில் துவங்க நாங்கள் அனுமதிப்போம் ஆனால் எங்கள் நிபந்தனைகளையும் கண்காணிப்பையும் அந்த நிறுவனங்கள் ஒப்புகொண்டாக வேண்டும் என்று.

முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டத்துக்கு பின் புலிகள் முன் வைத்ததும் அதுதானே,எங்கள் தேசத்தை அங்கீகரியுங்கள்,எங்கள் தேசிய பொருளாதாரத்துக்கும்,மக்கள் வாழ்வுக்கும், பங்கம் விளைவிக்காத வகையில் எங்கள் மண்ணில் இயங்க நாங்கள் அனுமதிக்கிறோம் என்று. மாறாக மக்களை பற்றியும்,தேசத்தை பற்றியும் கவலை கொள்ளாத மகிந்த ராஜ பக்ச மற்றும் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு ஒத்துழைபதன் மூல ஈவு இரக்கமற்ற சுரண்டலையும்,பொருளாதார,ராணுவ மேலாதிக்க நோக்கங்களையும், நிறைவேற்றிக்கொள்ள உலக ஏகாதிபத்தியங்கள் மேற்கொண்ட சதிதான் இன்றைய ஈழ போராட்டத்தின் பின்னடைவுக்கு அடிப்படையான காரணம்.


புறநிலை யதார்த்தம் பற்றிய புரிதலும் ஆய்வும் இல்லாமலும் மனித அவலங்களின் மீதான் உணர்வுபூர்வமான கோபம் இல்லாமலும்,தத்துவார்த்த ரீதியாக மட்டுமே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தோழா எஸ்,வி,ஆர் போன்றவர்களையும் கூட கொண்டு வந்து விட்டிருக்கும் இடம் நமக்கு வியப்பளிக்கவில்லை.

தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில்,தேசத்தையும் புரட்சியையும் மக்களையும் பாதுகாக்க தோழர் லெனின் ஜெர்மன் அரசோடு செய்துகொண்ட உடன்படிக்கையையும்,தோழர் ஸ்டாலின் பாசிஸ்ட் ஹிட்லரோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளையும் விமர்சிப்பதன் மூலமும் அவர்களை நிராகரிப்பதன் மூலமும் தங்களை மார்க்சியவாதிகள் என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை தமிழக அறிவுதுறையினருக்கு வராது என்றே நம்புவோம்.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆசிய,ஆப்பிரிக்க,மூன்றாம்,உலக நாடுகளை சுரண்டியதன் மூலம் தாங்கள் பெற்ற லாபத்தில்,முதலாளித்துவ ஜனநாயக புரட்சி முற்று பெற்ற ஐரோப்பிய,அமெரிக்க,நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அளித்துவந்த வாழ்கை வசதிகளும்,ஜனநாயகமும்,இன்றைக்கு தீவிரமடைய தொடங்கியிருக்கும் உலக பொருளாதார நெருக்கடியால் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில்,

அந்த சமூகங்களில் வளரதுவங்கும் இனவெறிக்கும்,பாசிச கூறுக்கும் எதிராக தங்கள் ஈழ மக்கள் இனவெறியால் அனுபவிக்கும் கொடூரங்களை காட்சிபடுத்துவதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள மக்களோடு மனிதத்துவத்தோடு உரையாடல்களை துவக்கியிருக்கும் புலம் பெயர தமிழர்களின் போராட்டம் உலக அரங்கில் நிகழ்த்தியிருக்கும் தாக்கம் சமூக யதார்த்தம் பற்றிய புறநிலை பார்வை இல்லாகுறுகிய மனதுக்கு சொந்தகாரர்களால் திட்டமிட்டு இருட்டடிகபடுவதை நாம் அம்பலபடுத்துவோம்.

அன்றாட வாழ்கையின் அவதிகலூடாக சில நிமிடங்கள் மனித நேயத்தை பற்றிய உணர்வுகளை கொடுப்பதாக, இந்தியா இந்திய தேசியம் ஆகிய கண்ணோட்டங்களால் தங்கள் அடையாளத்தை இழந்த தாய் தமிழக,தமிழ் தேசிய இனத்துக்கு அவர்களின் இன அடையாளம் பற்றிய தன்னுணர்வை வளர்ப்பதாக,பல்வேறு ஒட்டு கட்சிகளின் தலைமைத்துவங்களின் நடவடிக்கைகளையும் போலித்தனத்தையும் தோலுரிப்பதாக,போலிதனமாகவேனும் தேசிய இன அடையாளத்தை முன்னிருதுபவர்களின் தேர்தல் தோல்வியாக,ஒட்டுமொத்தமாகவே அரசியல் உணர்வு வட்டத்துக்குள் கொண்டு வரப்படாத பெரும்பாலான தமிழக மக்களின் மீது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தமிழகத்தில் ஈழமும்,ஈழ விடுதலை போரும் ஏற்படுத்திய அதிர்வுகளும், பரிணாமங்களும், புறக்கணிக்கப்படவே முடியாத நிதர்சனமான விசயங்களாக மக்கள் மத்தியில் கலந்துவிட்டன இன்று.

வன்முறை பற்றிய கருத்து கேட்கப்பட்டபோது ஓஷோ மிக அழகாக சொல்வார்.

''உங்களுக்கு இது சிக்கலாக தோன்றலாம் நீங்கள் என்னை அடிக்கிறீர்கள்,நான் உங்களை திருப்பி அடிப்பதில்லை என் மறு கன்னத்தை காட்டுகிறேன் என்ன அர்த்தம் ? தயவு செய்து என்னை அடியுங்கள் என்று அர்த்தம்.

நான் அதிமனிதன் ஆவதற்காக

உங்களை மனித தன்மைக்கு கீழே தாழ்த்தி விடுகிறேன். என்று''

சாதிய மத இன தேசிய கட்சி வர்க்க அடையாளங்களின் கீழ் நம்மை சுரண்டிக்கொண்டு இருப்பவர்களை நமக்கு தலைமை தாங்க அனுமதித்து,நம்மை அதிமானுடர்களாக அகிம்சாவாதிகளாக பாவித்துக்கொண்டு,சக மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை சகித்துக்கொண்டு, நம் எதிரிகளையும் மனித நிலைலையிலிருந்து தாழ்த்திக்கொள்ள அனுமதித்துக்கொண்டு

சராசரி வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்க போகிறோமா நாம் ?

2 comments:

தமிழ்நதி said...

இந்திய அரசும் இலங்கை அரசும் உள்நாட்டு மக்களுக்கு உரிமைகளை மறுத்து, வெளி ஏகாதிபத்தியங்களுக்கு மக்கள் நலன்களைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றன. தங்கள் மண்ணை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லும் மாவோயிஸ்டுகளும், விடுதலைப் புலிகளும் ஒரே கோட்டிலேயே நின்றிருக்கிறார்கள். அரசுகள் யாவும் சம்பந்தக்குடி ஆண்டைகள். மக்கள் இந்த அரசுகளின் கண்களில் அடிமைப்பதர்கள்.

ஸ்டாலின் குரு said...

இந்திய அரசும் இலங்கை அரசும் உள்நாட்டு மக்களுக்கு உரிமைகளை மறுத்து, வெளி ஏகாதிபத்தியங்களுக்கு மக்கள் நலன்களைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றன. தங்கள் மண்ணை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லும் மாவோயிஸ்டுகளும், விடுதலைப் புலிகளும் ஒரே கோட்டிலேயே நின்றிருக்கிறார்கள். அரசுகள் யாவும் சம்பந்தக்குடி ஆண்டைகள். மக்கள் இந்த அரசுகளின் கண்களில் அடிமைப்பதர்கள்//

உண்மை

Post a Comment